Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தேசிய ஒப்பாரி

அய்யோ பதறுதுங்க

அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்துதிக்கு வௌங்கலங்க

கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?

 

 

பெத்த மக அழுதுகிட்டே
பேசாம நடக்கயில
கத்தியழ ஒருத்தருமே
கடுகளவும் நெருங்கலயே

பொட்டியில காசிருந்தா
போயிருப்பா கவுரமா
துட்டில்லா புருசனுக்கும்
தோள் வலியக் கொடுக்காம

என்னங்க நாடு இது
எழவெடுத்த ஆட்சி இது
பொட்டுன்னு போனாலும்
பொத குழியும் கிடைக்காம
கோடி ரூவாய்க்கு
கோட்டு தைக்கும் பிரதமரு
கோடித் துணியக் கூட
கொடுக்கலையே சனங்களுக்கு

வாய் கிழிய பேசுறாரு
வருமானம் ஒசந்ததுன்னு
நாய் பொழப்பா போன நாம
நடுத்தெருவில் கெடக்கயிலும்

தூய்மை இந்தியான்னு
தொண்டையில செருமுறாரு
ஓய்வறியா பந்தாவுல
ஊர் ஊரா அலையிறாரு

அம்பானிக்கம் அதானிக்கும்
அக்கறையா நடப்பவரு
கும்பி எரிஞ்ச ஏழைகள
கொஞ்சமாச்சும் நெனக்கிறாரா?

எழுபதாண்டு சுதந்திரத்த
புகழுறாரு கொடியேத்தி
விழுந்துவிட்ட நம்பிக்கைய
விரும்பலையே நிமுத்திவைக்க

மாட்டுக் கறிக்கெல்லாம்
மனசொடஞ்சி போறவரு
ஒட்டளிச்ச பராரிகள
உசுராவே பாக்கலையே

நவ நாடே சுடுகாடா
நட்டுக்கிட்டு நிக்கயிலே
சவக்குழி வேணுன்னாலும்
சம்மனு கொடுக்கணுமா?

போறது பொருளா? உசுரா?
புரிஞ்சிக்க முடியலைங்க
பாரத மாதாவான்னு
பிரிச்சிப்பாத்து வெளியிடுங்க!

நன்றி : ‘ஜூனியர் விகடன்’
04-09-2016

யுகபாரதி