”உண்மை”க்கு “விடுதலை” தந்த மண்!

செப்டம்பர் 16-30

கவிஞர் நந்தலாலா

இது _- பெரியாரின் மண் என்று சொல்லுகிறோமே உண்மையா?

தண்ணீரில் சர்க்கரையும், உப்பும் கலந்த பிறகு சர்க்கரையும், உப்பும் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் தித்திப்பும், உவர்ப்பும் சுவை நரம்புகளை தூண்டுவதும் அதை நாம் உணர்வதும் உண்மைதானே.

இந்த உண்மையை போலத்தானே பெரியார். இன்றைய இளம் தலைமுறையினர் சிலருக்கு பெரியாரின் பெயர் தெரியும் _ உருத் தெரியும்-  _ முழுமை தெரியுமா? தெரிந்தால் நல்லது.

 

இந்த நல்லதை எப்படி சொல்லலாம்?

ஒவ்வொரு சமூகமும் கட்டமைக்கப்படும் விதம் முக்கியமானது. அந்த கட்டமைப்புதான் அதன் வளர்ச்சியை, வீழ்ச்சியை தீர்மானிக்கிறது. இங்கு தீர்மானிக்கும் சக்தி எது? _ சாதி. இந்திய சாதிய கட்டமைப்பை ஆய்ந்ததும், விளக்கியதும்-தான் அம்பேத்கரின் சாதனை.

அந்த சாதனையின் புரிதலில் நாம் அறிந்தது என்ன? இந்திய சாதிய கோபுரத்தின் கலசம் தான் பிராமணியம். அந்த கலசமாம் பிராமணியத்தின் கூர் முனையின் மினு-மினுப்புத்தான் சங்கராச்சாரி.

சங்கராச்சாரியார் _ தனி மனிதரல்ல. அவர் ஒரு சாதிய ஆதிக்க சக்தியின் குறியீடு.கேள்விக்கு அப்பாற்றப்பட்ட கடவுளை போன்றவராக, ஏன் கடவுளுக்கு மேலானவராக கட்டி எழுப்பப்-பட்ட பிம்பம்.

தேர்தல் ஆணையராக இருந்த சேஷனை எல்லாம் ஆதி சேஷனாக சுருட்டி அதன்மீது படுத்திருக்க முடிந்த சக்தி வந்தது எங்கிருந்து?

அந்த பிம்பம் தந்த சக்தி எது? அந்த சக்தி (சங்கராச்சாரி), கைது செய்யப்படுகிறது _ கொலை வழக்கில்.
மடம் எதிர்பார்த்தது _ ஊடகங்கள் ஊகித்தன _ அரசியல் ஆசைப்பட்டது. திருவிளையாடல் சினிமாவின் ‘பாட்டும் நானே’ பாடல் காட்சியை போல  மலை பிளக்கும், அலை எழும்பி நிற்கும், கடல் கொந்தளிக்கும், சூரியன் சுருட்டிக் கொள்ளும் என்று.

ஆனால் நடந்தது என்ன? தமிழர்கள் காலையில் டீ குடித்தார்கள். டிவி பார்த்தார்கள். வேலைக்கு போனார்கள். சினிமா பார்த்தார்கள், பிறகு தூங்கினார்கள்.

ஏன் திருவிளையாடலின் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்பது போல் காட்சிகள் உருவாகவில்லை? சாதிய கட்டமைப்பின் உச்சியில் இடி விழுந்தும், அஸ்திவாரம் ஆடவில்லை ஏன்? பெரியாரின் கேள்விகள் இந்த மண்ணுக்குள் மண் புழுவாய் நெண்டி, நெண்டி உரமாக்கி மண்ணை பதப்படுத்தியது புரிகிறதா.

சங்கராச்சாரியாரை கேராளவில் கைது செய்திருக்க முடியாது என்றும், தமிழ்நாட்டில்தான் இதெல்லாம் முடியும் என்றும் மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா, தமிழ்நாடு குறித்து பெருமை படுகிறார் (முல்லை பெரியார் அணை பிரச்சினையில் கேரளம் செய்வது பாவம் என்றும், உணவு தருகிற தமிழ்நாட்டுக்கு அது துரோகம் என்றும் தைரியமாய் சொன்ன மலையாள எழுத்தாளர் அவர்). இந்த பெருமையை தமிழன் சுவாசிக்க அந்த கிழவனின் மூச்சுக்காற்று நம்மோடு கலந்து கிடப்பதுதான் காரணம்.

சிவாஜி யார்? (சிவாஜி கோன்ஹாட்டா) என்று கேள்வி எழுப்பி புத்தகம் எழுதிய கோவிந்த பன்சாரே என்ற பொதுவுடமை இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். மராட்டியத்தில்.

சிவாஜி என்ற மன்னன் ஒரு சூத்திரன் என்பதையும், அவன் பார்ப்பனியத்துடன் செய்து கொண்ட சமரசம்தான் அவனை அரியணை ஏற்றியதையும் சொல்லும் அவர், சிவாஜியை இசுலாமியர்களின் எதிரியாக சங்பரிவார் சித்தரிப்பது உண்மையல்ல என்றும், வீதியில் கிடந்த குரானை எடுத்து, முறையாக பள்ளி வாசலுக்கு அனுப்பிய மன்னன் என்றும் ஆதாரங்களோடு எழுதினார்.

சங்பரிவாரங்கள் கட்டி எழுப்பிய சிவாஜி என்ற இந்து பிம்பம் நொறுங்கியது. சிவாஜியின் பிறந்த நாளை இந்துக்களின் எழுச்சியாக கொண்டாடிய அவர்களின் அறிவு திகைத்தது. விளைவு _ துப்பாக்கி பேசியது, பன்சாரே கொல்லப்பட்டார். இது மராட்டியத்தில் நடந்தது 2015இல்.

சுருக்கமாக சொன்னால் – சிவாஜியை உரித்து உண்மையை சொன்னதற்காக பொதுவுடமை சிந்தனையாளர் பன்சாரே கொல்லப்பட்டார். மராட்டியத்தில்.

சற்று தமிழ்நாட்டை பாருங்கள், சிவாஜியின் பிறப்பை _ காலச் சூழலை _ பார்ப்பனியம் ஏற்படுத்திய தடையை _ அந்த தடையை அதே பார்ப்பனியத்தை விலைக்கு வாங்கி சிவாஜி அரியணை ஏறியதை _  சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்று அண்ணா நாடகமாக்கினார். எப்போது? 65 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நாடகத்தில் அவர் காகுபட்டராக நடித்தார்.

சிவாஜி சூத்திரன் என்ற ‘உண்மையை சொல்லி நன்மையை செய்த’ பன்சாரே சுடப்படுகிறார் _  சிவாஜி பிறந்த மராட்டியத்தில்.

அதே சிவாஜியை முன்னிறுத்தி பார்ப் பனியத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய அண்ணா முதலமைச்சராகிறார் – தமிழ்நாட்டில்.

இது எப்படி சாத்தியமானது தமிழ்நாட்டில் மட்டும்? இது பெரியார் மண்.

ஆம் – உண்மைக்கு விடுதலை தந்த மண்ணல்லவா இது.
இதோ புதிய கல்வி கொள்கை.

மோடியின் மனதின் குரல். இதுதான் குலக்கல்வியின் புது தோற்றம். ராஜாஜியின் குஜராத் வடிவம். ஏன் இப்படி சொல்கிறோம். கொஞ்சம் யோசிக்க வேண்டும் தமிழ்நாடே.

காமராசர் ஆட்சியை தொட்ட 1953 – 54 இல் இந்த நாட்டில் படித்தவர் சதவீகிதம் 8. ஆட்சியை விட்ட போது, (தானாக விட்டார்) 1963 – 64 இல் அது 58 சதவீதம் ஆக உயர்ந்தது. எட்டு அய்ம்பத்தெட்டாக உயர்ந்தது எப்படி? வெறும் 9 ஆண்டுகளில் 50 சதவீகிதம் அதிகமான அதிசயம் யாரால்?

ஜாதிய சிமிழுக்குள் சிக்கி சரஸ்வதியின் வீணை நாதம் வீணாக கிடந்தது போக – வயல்வெளியில் உழைத்து திரிந்த கோடான கோடி தமிழர்களின் காதில் நுழைய யார் காரணம்?

தலைவர் காமராஜ் _ நெ.து.சு என்னும் ஆளுமைகள்.

சரிதான். ஆனால் பதில் போதாதே.

பொதுக்கல்வி _ அரசுப்பள்ளி _ பகல் உணவு _ அருகாமை பள்ளி _ சீருடை _ அரசு உதவி பெறும் பள்ளி என்று சரஸ்வதி தேவியின் வீணை தமிழ்நாட்டில் மட்டும் ஏழையின் வீட்டிற்குள் வந்ததே எப்படி?

இந்தியா முழுதும் காங்கிரஸ் தானே ஆண்டது. அது ஏன் சரஸ்வதிக்கு தமிழ்நாட்டின் மீது இவ்வளவு பாசம்?
காமராசருக்குள் இருந்த பெரியார் தான் காரணம். அதனால்தான் அந்த வெள்ளை மனிதன், பெருந்தலைவன் இதெல்லாம் பெரியார் யோசனை எனச் சொன்னது.

கல்வி என்பதை வேலைக்கானது என்று புரிந்து கொள்ளாமல் வாழ்வின் வாசல் திறப்பது  என்று புரிந்து கொண்டால் _ தமிழ் மக்களின் வாசல் கதவை தட்டி திறக்க வைத்தது பெரியாரின் கைதடி என்பது புரியும்.

இன்று நம் ஊரில் வீட்டுக்கு ஒருவன் அமெரிக்காவில். ஸ்கைப்பில் ஆண்டிப்பட்டி கிழவி பேரனோடும், பேத்தியோடும் பேசுகிறாள். நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு என்று ஹோட்டலில் வேலை செய்யும் சின்னதம்பி சொல்கிறான். இதுதான் பொதுவான கல்வி வளர்ச்சியின் விளைச்சல்.

இந்த விளைச்சலை அனுபவிக்க தெரியும் ஆனால் இது யாரால் கிடைத்தது என்று தெரியாது. ஆம் உப்பும், சர்க்கரையும் கண்ணுக்கு தெரியாதது போல். உண்மையில் பெரியார் வியர்வையால் வந்த விளைச்சல் இது.
அரசு பள்ளியை மூடி – உயர் கல்வியில் முற்றாக அரசு விலகி – தரம் என்ற பெயரால் எளியவர்களின் கல்விக் கண்ணை கட்டி – வடமொழிக்கு வடம் பிடிக்கும் இந்த புதிய கல்வி கொள்ளையை (கொள்கை அல்ல) ஏன் எதிர்க்க வேண்டுமென்பதை தமிழ்நாடு புரிந்தே வைத்திருக்கிறது. ஆம் இது பெரியாரின் மண். உண்மைக்கு விடுதலை தந்த மண் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *