நதிநீர் சிக்கல் தீர, நதிகளின் இணைப்பே நிரந்தர தீர்வு!

செப்டம்பர் 16-30

 

காவிரி நதிநீர்ப் பிரச்சினைக்கு உடனடி தீர்வுக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்க!

தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் சம்பா பயிர் விவசாயத்தைக் காப்பாற்ற போதிய நீர் ஆதாரம் தேவை என்பதாலும், ஏற்கெனவே நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கருநாடகம் நமக்கு நியாயமாக, தர வேண்டிய நீர்ப் பங்கீட்டினை அறவே மறுத்த காரணத்தால், தமிழக அரசு வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் ஏதோ ஓரளவு நீரையாவது கருநாடகம், தமிழ்நாட்டின் விவசாயிகளைக் காப்பாற்ற 13 டி.எம்.சி.  நீரை 10 நாள்களுக்குத் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றுள்ளது!

நமது டெல்டா விவசாயிகளுக்கு இது முழுமை யாக மனநிறைவு கொள்ளக் கூடியது அல்ல என்ற போதிலும், இந்த அளவுக்காவது, நீர்ப் பங்கீடு – முதல் கட்டமாக கிடைத்தது. அதற்கு தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், அதற்கு வற்புறுத்திக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் நமது  பாராட்டிற்குரியவர்கள்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவது போன்ற இந்த நீர்வரத்து இடைக்காலத் தீர்வு _  முதலுதவி போன்ற ஒன்று மட்டுமே!

இந்த முயற்சிக்கு வலு சேர்க்க, ஒன்றுபட்டு நிற்கிறது தமிழ்நாடு என்று மத்திய அரசுக்கும்,  கருநாடகத்திற்கும், உலகத்திற்கும் உணர்த்திட ஒரே வழி – அனைத்துக் கட்சி, சமூக அமைப்புகள், முக்கிய விவசாய அமைப்புகள் _- அனைவரையும் அழைத்து முதலமைச்சர் ஒரு கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, டில்லிக்கு அனைத்துப் பிரதிநிதிகளையும் நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் உள்பட பிரதமரைச் சந்தித்து, கீழ்க்காணும் தீர்வுகளை வற்புறுத்திப் பெற்று, ஓர் நிரந்தர ஏற்பாட்டினை – காவிரி நடுவர் மன்றம் தந்த தீர்ப்பினை செயல்படுத்த வைக்கவேண்டியது அவசர அவசியமாகும்.

மத்திய பி.ஜே.பி. அரசின்,  அரசியல் உள்நோக்கம்!

1. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை ஏழு ஆண்டுகள் கழித்தே மத்திய அரசு கெசட்டில் வெளியிட்டது _- அதுவும் நம் மக்களின் _- அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பிறகே! காவிரி நதிநீர் ஆணையத் தலைவர், இரண்டு உறுப்பினர்களை சட்டப்படி 90 நாள்களுக்குள் அமைத்தாக வேண்டிய கட்டாயம் என்று தெளிவாக இருந்தும், மத்திய அரசு இன்று வரை செய்யாமல், பாராமுகம், கேளாக்காது இவை களுடன் இருப்பதற்கு என்ன காரணம்?

வரும் தேர்தலில், கருநாடகத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி என்ற ஆசை நிறைவேறாமல் போவதற்கு இப்படிச் செய்வது தடையாக இருக்குமோ என்ற அரசியல் உள்நோக்கம்தான் காரணமாக இருக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அச்சந்தேகத்தைப் போக்க வேண்டியது- உடனடியாக காவிரி நதிநீர் ஆணையத் தலைவர், உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய அவசரக் கடமை பிரதமருக்கும், மத்திய நீர்ப் பாசனத்துறை அமைச்சகத்திற்கும் உண்டு.

அதையே நாம் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திட வேண்டும்.

அப்படி ஒரு நிரந்தரக் குழு தனது தீர்வை – பங்கீடுபற்றி அவ்வப்போது கூறும்போது, இரு தரப்பும் ஏற்கவேண்டிய நிலை வரும்; நியாயங்கள் தோற்காது; தேவைகள் பூர்த்தியாகும்.

மற்றொரு கண்காணிப்புக் குழு – தேவையான பணிகளில் வழிகாட்டும்.

உச்சநீதிமன்றத்திற்குப் போகவேண்டிய நெருக்குதலோ அல்லது இரு மாநில விவசாயிகள் ஒரு வருக்கொருவர் பரஸ்பர அன்பு, கனிவு, ஒத்துழைப்பு புரிதல், காட்டுவதற்குப் பதிலாக, அரசியல் தூண்டிலில் சிக்கி, ஆவேசப் போர்ப்பாட்டு பாடும் நிலையையோ ஏற்படுத்தாமல், அத்தகைய செயல்முறை தீர்வு ஏற்படுத்தும்.

இதற்குமேல் நாட்டிலுள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, நதிகள் இணைப்புத் திட்டம் செயலாக்கப்படவேண்டும்.

முதலில் மாநிலங்களுக்குள் உள்ள நதிகள் இணைப்பு ஏற்படல் வேண்டும். முன்பு தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் இதுபற்றி துவக்கப் பணிகளைச் செய்தும், அது தொடரும் நிலை இல்லாதது பெரும் கெட்ட வாய்ப்பே!

ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் தவிர்க்க இயலாதது – இயல்பும் கூட; அதனால், முந்தைய அரசின் நல்ல திட்டங்களை நிறுத்தவோ, மாற்றவோ அல்லது நசித்துப் போகச் செய்வதோ கட்சி வன்மம் என்பதைத் தவிர, சீரிய ஜனநாயகப் பண்பு ஆகாது! இப்படி சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசுக்கு 5 ஆண்டுகளுக்குமுன் கூறியதை தமிழக முதலமைச்சரும் கருத்தில் கொண்டால், அது அவருக்கும் பெருமை; ஆட்சிக்கும் சிறப்பு ஆகும்.

2. நதிகளை நாட்டுடைமையாக்கிட வேண்டும் – மத்திய அரசு. நதிகள் எந்த மாநிலத்தின் தனி உடைமையும் அல்ல; இயற்கை தந்த அருட்கொடை என்பதை அவர்களுக்கு உணர்த்தி, மாச்சரியங்களை களைந்து, மனிதநேயம் தழைக்க அம்முயற்சி பயன்படும்.

வடக்கே வெள்ளம் – தெற்கே வறட்சிக்குத் தீர்வு காணப்படும்!

அதுமட்டுமா?

ஒவ்வொரு முறையும் வடக்கே வெள்ளம்; தெற்கே பல மாநிலங்கள் நீர்ப் பற்றாக்குறையால் வறட்சி! பருவ மழை பொய்த்தால் நிலைமையைச் சீர்செய்யவும் – நதிநீர் இணைப்பு மூலம் நிரந்தர விடை காணவும்கூடும்.

இனியாவது மத்திய – மாநில அரசுகள் இதில் நடைமுறை யதார்த்தத்தினைக் கணக்கில் கொண்டு, செயல்படட்டும்!

இருபுறமும் உணர்ச்சிகளைப் புறந்தள்ளி, உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுத்து, அண்டை மாநில நல்லுறவுடன் இருப்பதே விரும்பத்தக்க அணுகுமுறையாக அமையவேண்டும். தமிழக அரசு தன் பங்கை உடனடியாகச் செய்யட்டும்!

கி.வீரமணி,
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *