இடுப்பில் கயிறு கட்டினர். அதன் உண்மையான காரணம் கோவணம் கட்டு-வதற்கு பிடிமானம் தேவைப்பட்டதால். ஆண்கள் மட்டுமே இடுப்புக் கயிறு கட்டுவர். பெண்கள் கட்டுவதில்லை என்பதே இதனை தெளிவுபடுத்தும், சிவத்த உடலுக்கு கறுப்புக் கயிறு கருத்த உடலுக்கு சிவப்புக் கயிறு என்று கவர்ச்சியாய் கட்டப்பட்டது. அதிலும் மூடநம்பிக்கை நுழைந்து குலவழியாக கருப்புக் கயிறா, சிவப்புக் கயிறா என்று முடிவு செய்தனர்.
அதன்பின் அக்கயிறு வெள்ளியில், தங்கத்தில் என்று செய்து அலங்காரமாய் ஆக்கப்பட்டது.
ஆனால், கையில் கயிறு கட்டுவது எந்தக் காரணமும் இன்றி மூடநம்பிக்கையின் அடிப்படையிலேதான் கட்டப்பட்டது.
தொடக்கத்தில் காப்பாகவும், பின் கங்கணமாகவும் கட்டினர். கடவுளை வேண்டி கையில் கட்டிக்கொண்டால் பாதிப்பு வராது என்ற மூடநம்பிக்கையில் கயிறு கட்டப்பட்டது காப்பு நோக்குடையது. ஒரு செயலை முடிக்கும்வரை மனஉறுதியுடன் கையில் (கங்கணம்) கட்டிக்கொண்டது கங்கணக் கயிறு எனப்பட்டது. இந்த இரண்டும் கடவுள் சார்ந்தே கட்டப்பட்டன.
ஆனால், காலப்போக்கில் வெவ்வேறு நிகழ்வுகளுக்கு கயிறு கட்டுவது வழக்கில் வந்தது. ஆடிப்பெருக்கின்போது வெள்ளை நூலில் மஞ்சள் தடவி கையில் கட்டி, விழா முடிந்ததும் அவிழ்த்து ஓடும் நீரில் வீசப்பட்டது.
அடுத்து சகோதரியை காப்பேன் என்ற உறுதியில் உடன்பிறந்தோன் அவள் கையில் கயிறு கட்டும் வழக்கம் புகுத்தப்பட்டது. காலப்போக்கில் பெண்களை தங்கையாகக் கருதி ஆண் அவள் கையில் கட்டும் “ரட்சயா பந்தனம்’’ கொண்டாட்டமாக ஆக்கப்பட்டது.
தற்போது பெண்களும் ஆண்களை சகோதரர்களாக நினைத்து அவர்கள் (ஆண்கள்) கையில் கயிறு கட்டும் வழக்கமும் வந்துள்ளது.
பிற்காலத்தில் நண்பர்கள் தினம் என்று கொண்டாடி அப்போது நட்புக் கயிறு (பிரண்ட்ஷிப் பாண்ட்) கட்டுவது செய்யப்பட்டது.
தற்போது, எந்தக் காரணமும் இன்றி ஆளுக்கு ஒரு கயிறை அல்லது பட்டையை, பல வண்ணங்களில் கட்டிக் கொள்வது இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் நாகரிகமாகிவிட்டது.
படிப்புக்கும் அறிவிற்கும் தொடர்பில்லை, கல்வி சிந்தனைக்கு உதவவில்லை. தொடர்-பில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
இந்த கயிறுகட்டும் விருப்பத்தைத் தனக்குச் சாதமாக்கி, மூடநம்பிக்கையைப் புகுத்தி, அதில் மதச்சாயம் பூச ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா பேர்வழிகள் முயலுகின்றனர்.
இந்தக் கயிறு, “தேசத்தைக் கட்டும் இழை, ஹிந்துத்துவம் தந்த கொடை’’, “அந்த மெலிதான கயிற்றுக்குத்தான் என்ன வலிமை!’’ என்று அதற்கு மகிமையும் பெருமையும் சேர்க்க அவர்கள் முழு முயற்சியில் இறங்கியுள்ளனர். இதை அவர்களே ஒத்துக்கொண்டு,
“வீட்டில் தொடங்கிய ரட்சாபந்தனம் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடர் முயற்சியால் வளர்ச்சி பெற்றுவிட்டது’’ என்று கூறியுள்ளனர்.
இது இந்திய நாட்டை ஒருங்கிணைக்கும் கயிறு என்று ஏமாற்றுகின்றனர். கையில் கயிறு கட்டுவதால் எப்படி ஒருங்கிணைப்பு வரும்?
ஒவ்வொரு ஜாதி மாணவருக்கும் ஒரு வண்ணக் கயிற்றை கையில் கட்டும் செயல் தென்மாவட்டங்களில் வழக்கில் வந்து, ஜாதிப் பிரிவினையை வலுப்படுத்தி, மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் கொடுமையை மறைத்து இக்கயிறு கட்டும் முறை ஒருமைப்பாட்டை உருவாக்குகிறது என்று கூறுவது பித்தாலாட்டம் அல்லவா?
கோவணம் கட்டும் முறை மாறி கால்சட்டையும், ஜட்டியும் போடும் வழக்கம் வந்ததால் இடுப்புக் கயிறு கட்டுவது தற்போது வழக்கொழிந்துவிட்டது.
அப்படியிருக்க, காரணமே இன்றி கையில் கயிற்றைக் கட்டிக்கொண்டு, அதுவும் பல சுற்று சுற்றிக்கொண்டு அலைவது அறிவுக்கு அழகா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து கையில் கயிற்றைக் கட்டிக்-கொண்டிருப்பதால், நாள்தோறும் அதில் அழுக்கும், கிருமியும் சேர்ந்து உடல்நலத்தைக் கெடுக்கிறது என்ற உண்மை சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. வேண்டுமானால் சோதித்துப் பாருங்கள். அதில் எவ்வளவு கிருமிகள் உள்ளன என்பது தெரியும்.
இது பற்றிய ஒரு தகவலைத் தருகிறோம்.
மூடநம்பிக்கையாக கையில் கட்டும் கயிறை சோதனைக் கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது எண்ணற்ற கிருமிகள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையின்போது முதல்வர் கொடுத்த அறிவுரையின்படி, மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்கள் தாமாகவே ஆர்வமாக முன்வந்து தன் கையில் இருக்கும் கயிற்றினை அறுத்து, ஆராய்ச்சி செய்தபோது எண்ணற்ற கிருமிகள் இருந்ததை கண்டறிந்தனர். அந்த கிருமிகள் எவ்வாறு தம் கையில் வந்தது என்று வினவும்பொழுது அவை தாம் மலம் கழித்த பின் கைக்கழுவிய நீரின் மூலமாகவும், சில கிருமிகள் காற்றின் மூலமாக அல்லது தூசி, அழுக்கு போன்றவை நம் கையில் படும்போதும், சில கிருமிகள் அந்த மாணவரின் தோலில் இருந்தும் வந்திருக்கும் என தெரிந்தபோது உடனே அவர்கள் கயிற்றினைக் கழற்றி எறிந்தனர்.
இந்த நோய்க் கிருமிகளால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு, தோலில் கட்டிகள் போன்றவை வரக்கூடும் என்று தெரிந்ததும் மற்றெல்லா மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்களும் அவரவர் அணிந்திருந்த கயிறுகளை கழற்றி எறிந்துவிட்டனர்.
கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் பெயர்கள்:
1. ஸ்டெப்பைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aweus)
2. ஸ்டெப்பைலோகாக்கஸ் ஆல்பஸ் (Staphylococcus albus)
3. எஸ்செரிச்சியா கோலி (Escherichia coli)
நாம் செய்யும் எந்த ஒன்றுக்கும் ஒரு காரணம் வேண்டும். காரணமில்லாமல் செயல் செய்கின்றவர்களை பைத்தியக்காரர்கள் என்று அழைக்கிறோம். அப்படியென்றால் காரண-மின்றி கண்மூடித்தனமாய் கையில் கயிற்றைக் கட்டிக்கொண்டு திரிவது பைத்தியக்காரச் செயல் அல்லவா?
அறிவியல் கற்கும் இன்றைய இளைய தலைமுறை மூடநம்பிக்கைகளால் அறிவுக்கு ஒவ்வாதவற்றைச் செய்வது சரியா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கற்றவர்கள்தான் மற்றவர்களுக்கு விழிப்பூட்டி, அறிவார்ந்த வாழ்க்கை வாழ வழிகாட்ட வேண்டும். அப்படி-யிருக்க அறிவியல் கற்று, சிந்திக்கும் திறன் பெற்றவர்களே அறிவிற்குப் புறம்பானவற்றைச் செய்வது சரியா? ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.