அதிகாலை ஆறு மணி. ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியிலுள்ள கே.ஓ.எம். அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் அறுபதுக்கும் அதிகமான மாணவிகள் உற்சாகத்துடன் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளியில் மாணவர்கள் ஹாக்கி விளையாடுவதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? கடந்த பதினான்கு ஆண்டுகளாக மாநிலப் போட்டி-களிலும் கடந்த பத்தாண்டுகளாக தேசியப் போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்திருக்கிறார்கள். அண்மையில் நெல்லையில் நடந்த தேசிய சீனியர் விளையாட்டுப் பிரிவில் முதல் பரிசு வாங்கி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி-யில் ஹாக்கி அணி கேப்டனும் தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள சூப்பர் சீனியர் பிரிவைச் சேர்ந்த பானுப்பிரியா கூறுகையில்,
“எனக்கு சொந்த ஊர் புளியம்பட்டி. கே.ஓ.எம். அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்களுக்கு புதிய உடற்கல்வி ஆசிரியராக, அருள்ராஜ் சார் வந்தாங்க. அவர் ஒரு ஹாக்கி வீரர். அவர் வழியாகத்தான் எங்களுக்கு ஹாக்கி விளையாட்டு அறிமுகமாச்சு.
‘ஹாக்கியில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் கிரவுண்டுக்கு வாங்க’ன்னு உடற்கல்வி ஆசிரியர் சொன்னதும், விளையாட்டுத்தனமாக அங்கு சென்றோம். முதலில் கிரவுண்ட சுத்தம் செய்ய சொன்னதைப் பாத்து கொஞ்சம் கோபமாகத்-தான் இருந்தது. ஆனால் ஓர் ஆண்டு பயிற்சியில் நாங்கள் ஹாக்கியை முறையாகக் கற்றிருந்தோம். அந்தப் பயிற்சிதான் எங்களை ஒழுங்கு-படுத்தியது. பயிற்சியின்போது ‘இது நமக்கெல்லாம் சரிப்படாது’ என்று சொல்லி விலகியவர்களும் உண்டு. அதன் பிறகு பள்ளி நிர்வாகம் எடுத்த முயற்சியால் பயிற்சி ஆரம்பித்த அடுத்த ஆண்டே எங்களை ஸ்டேட் லெவல் போட்டிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்கள்.
நாங்கதான் எங்க ஸ்கூல் ஹாக்கி டீமோட முதல் பேட்ச். ஸ்டேட் லெவல் போட்டிக்குப் போகிறோம் என்பதை நெனச்சு எங்க எல்லாருக்குமே பெரிய ஆச்சரியம். அதைவிட எங்க பெற்றோர்கள் ரொம்ப எதிர்பார்ப்பு-களோடு இருந்தாங்க. ஏழ்மையான வாழ்க்கை. தோட்ட வேலை, மரவேலை, டெய்லர் போன்ற தொழில்களைச் செய்து வருபவர்கள்தான் எங்கள் பெற்றோர்கள். அவர்களின் பிள்ளை-களான நாங்கள் முதல்முதலாக ஹாக்கிப் போட்டியில் கலந்துகொள்ளப் போவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது’’ என்று ஆர்வம் பொங்கப் பேசுகிறார் பானுப்பிரியா.
மாணவிகள் பங்கேற்ற முதல் போட்டியி-லேயே வெற்றி. அது அவர்களை மேலும் ஊக்கப்படுதியது. பள்ளியும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்தது. அன்று தொடங்கி இன்று வரையில் 14 ஆண்டுகளாக வெற்றி தொடர்கிறது. எந்தப் போட்டியாக இருந்தாலும் முதல் மூன்று இடங்களில் ஓர் இடம் இவர்களுக்கு நிச்சயம்.
தற்போது பானுப்பிரியா, கோபிச்செட்டி-பாளையத்திலுள்ள பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் எம்.பில். படித்துக் கொண்டிருக்-கிறார். இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில். படிப்புகளை விளையாட்டுப் பிரிவிற்கான உதவித்தொகை மூலமாக எந்த செலவுமின்றி படித்துவருகிறார். இவர் உட்பட மொத்தம் 26 மாணவிகள் இந்தக் கல்லூரியில் ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப் மூலமாக பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். இவர்களின் படிப்புக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவு போன்ற அனைத்-தையும் இலவசமாக வழங்குகிறது கல்லூரி.
“எங்கள் பள்ளியில் 1,500 மாணவிகள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமன்றி, 2012ஆம் ஆண்டு தொடங்கிய சி.எம்.டிராபியில் முதலிடம் பிடித்து 18 லட்சம் ரூபாய் பரிசு பெற்றோம். 2013ஆம் ஆண்டு இரண்டாமிடமும் அதற்-கடுத்த இரண்டு ஆண்டுகள் மீண்டும் முதலிடத்தையே பிடித்தோம்’’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் உடற்கல்வி ஆசிரியர் அருள்ராஜ்.
“ஹாக்கி விளையாட விரும்பும் மாணவிகள் கண்டிப்பாக கல்வியிலும் சிறந்த மாணவிகளாக வரவேண்டும் என்பதுதான் எங்கள் பள்ளியின் விருப்பம். அதற்காகவே காலாண்டு, அரை-யாண்டுத் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அந்த மாணவிகள் கிரவுண்டுக்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதித்திருக்கிறோம். இதனால், விளையாட்டின் மேல் தீவிரமாக உள்ள மாணவிகள் நன்கு படிக்கவும் செய்கிறார்கள்’’ என்கிறார் அவர்.
உண்மையான ஈடுபாடும் உறுதியான உழைப்பும் இருந்தால் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான். இதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு புளியம்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள். ஸீ