பெரும் சிக்கல்களைப் பிள்ளைகளிடம் மறைக்கக் கூடாது
குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது பெரியவர்கள் மட்டத்திலே பேசுவார்கள். பிள்ளைகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்-தாலும், நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்க என்று அனுப்பிவிடுவார்கள்.
பிள்ளைகளிடம் பேசத் தகுதியற்ற, தேவையற்றவற்றை அவர்களிடம் பேசாமல் தவிர்ப்பது சரி. ஆனால் எதிர்காலத்தில் அவர்களையும் பாதிக்கும் சிக்கல் என்றால், பெரிய பிள்ளைகளுக்கும் அதைப் பற்றி அறியச் செய்வது அவர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது. அப்போதுதான் நமக்கு என்ன எதிர்ப்புகள் உள்ளன. யார் யார் எதிரிகள்; நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்; நாம் எந்த வகையில் இதில் பெரியவர்களுக்கு உதவலாம் என்பதை அவர்களும் சிந்தித்துச் செயல்-படுவார்கள்.
உள்ளம் பாதிக்கும் வார்த்தைகளை உபயோகிக்கிக் கூடாது
ஒருவர் விடிவதற்குள் ஊருக்குப் போனதை அவரிடமே மறுநாள் ஒருவர். விடியாம போயிட்டீங்களாமே! என்றார். அவர் கேட்க நினைத்தது வேறு. ஆனால், அவர் கேட்ட விதம் பயன்படுத்திய சொற்கள் விடியற்காலையில் போனவரை என்ன பாடுபடுத்தியிருக்கும் எண்ணிப் பாருங்கள்!
நேற்று அதிகாலையிலே (விடியற்காலை-யிலே) புறப்பட்டுப் போனீர்களா? என்று கேட்டாலும் அதே பொருள்தான். ஆனால், இது அவரைப் பாதிக்காது. விடியாம போயிட்டியா? என்றால் உருப்பாடாம போய்ட்டதா பொருள்தரும் அல்லவா! இந்த வேறுபாடு உணர்ந்து வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆட்டுமூளையைப் பரிமாறியவரிடம் விருந்து கொடுப்பவர் கேட்டார், டேய்! அவருக்கு மூளையிருக்கா! இது எப்படியிருக்கு பாருங்க! அவருக்கு இலையில் வைக்க ஆட்டுமூளை இருக்கிறதா என்பதே அவர் கேட்க நினைத்தது. ஆனால் அவர்கேட்ட விதம் என்ன விளைவை ஏற்படுத்தும்? சிந்திக்க வேண்டும். அவருக்குப் போட மூளைக்கறி இருக்கா என்றல்லவா கேட்க வேண்டும்.
முழுமையாகத் தெரியாத ஒன்றைச் சொல்லக் கூடாது
சிலர் தனக்குப் பலவும் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகத் தனக்கு முழுமை-யாகத் தெரியாதவற்றை எல்லாம் தெரிந்தது-போல் சொல்வர். இது சொல்பவர்க்கும் சிறப்பளிக்காது, கேட்பவர்க்கும் பயன் அளிக்காது. எனவே, நன்றாகத் தெரியாத-வற்றைப் பிறருக்குச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவம் சொல்வது பலருக்கும் வழக்கம், ஆனால், அதை முழுமையாக அறிந்து சொல்வது இல்லை. அரைகுறையாகத் தனக்குத் தெரிந்தவற்றைச் சொல்வர். இது தப்பு மட்டுமல்ல, கேடு தரக் கூடியதுமாகும்.
மருத்துவம் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். நாட்டு மருத்துவம் நன்றாக அனுபவம் உள்ளவர்கள் சொல்ல வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு நன்கு அறிந்தவர்கள் மருத்துவம் பார்ப்பதே சரியான செயல். மருத்துவத்திற்கு மட்டுமல்லாது மற்றவற்றிற்கும் அரைகுறை அறிவுரை சொல்வது சரியல்ல.
தெளிவாக விளங்கிக்கொள்ளாமல் செயல்-படக்கூடாது
பிறர் சொல்வதைச் சரியாகப் புரிந்து-கொள்ளாமல் செயல்படுவது பாதக விளைவுகளை உருவாக்கும். புரியவில்லை-யென்றால் மீண்டும் ஒருமுறை கேட்டு தெளிவாக்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.
மீண்டும் கேட்டால் நமது தகுதி குறையும் என்று இவர் நினைப்பதும், திரும்பச் சொன்னால் தன் மதிப்புப் போய்விடும் என்று சொல்பவர் நினைப்பதும் சரியல்ல.
தெளிவோடு செய்தால்தான் குழப்பம் இருக்காது; புரிந்து செய்தால்தான் குறை-யிருக்காது.
சர்க்கரைக்கு வெந்தயம் சாப்பிடு என்று ஒருவர் சொன்னதை வைத்துச் சாப்பிடக் கூடாது. அது தெளிவான செய்தியல்ல.
வெந்தயத்தை வறுத்துப் பொடியாக்கிச் சாப்பிடவா? ஊற வைத்துச் சாப்பிடவா, உணவில் சேர்த்துச் சாப்பிடவா? காலையில் சாப்பிடவா? சாப்பாட்டிற்கு முன்னா பின்னா? எந்த அளவிற்குச் சாப்பிட வேண்டும், சர்க்கரை இல்லாதவர்களும் சாப்பிடலாமா என்பன அறிந்து, புரிந்து செய்ய வேண்டும்.