வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

செப்டம்பர் 01-15

அம்பரம்

ஆடைக்கும், வானுக்கும், திசைக்கும், கடலுக்கும், மன்றத்திற்கும், துயிலிடத்திற்கும், உதட்டுக்கும் பெயராகிய அம்பரம் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர்.

அம்முவது என்றால் சூழ்ந்திருப்பது. அரம் உறுவது என்ற பொருள் பட்டு வருவதோர் கடைநிலை. இடையில் ‘ப்’ விரித்தல். இந்தக் கடைநிலை ‘ப’ கரத்தையும் இழுத்துக் கொண்டு (பரம்) கடைநிலையாய் வருவதும் உண்டு. விளம்பரம் என்பதிற்காண்க. எனவே, அம்பரம் சூழ்ந்திருப்பது. ஆடை உடலைச் சூழ்ந்திருப்பது காண்க. திசையும் அவ்வாறே, கடலும் அவ்வாறே. மன்றம் அமைந்திருப்பாரைச் சூழ்ந்திருப்பதைக் காண்க! துயிலிடமும் அவ்வாறே! உதடு உள்வாயைச் சூழ்ந்திருப்பதைக் காண்க!
இவ் வம்பரமே அம்பலம் என வேறுபட்டு வரும்.
(குயில் : குரல் : 1, இசை : 52, 2-6-59)

ஆகுலம்

ஆகுல நீரபிற என்ற குறளடியில் வரும் “ஆகுலம்’’ வடமொழி என்று என் நண்பர் கூறுகிறார். அதுபற்றி விளக்கியுதவுக என நமக்கு ஓர் அஞ்சல் கிடைத்துள்ளது. ஆகுலச் சொல்பற்றி முன்னொரு முறை விளக்கினேன் ஆக நினைக்கிறேன். இருப்பினும் தெளிவுறுத்த எண்ணுகிறேன். அகங்கலித்தல், அங்கலித்தல், அங்காலித்தல், அங்கலாய்ப்பு, ஆகலித்தல், ஆகுலித்தல், ஆகுலம் அனைத்தும் ஒரு பொருளுடையவை. அகம் கலித்தலின் மரூஉக்களே. உள்ளக் கருத்தே வெளியில் ஒலிப்பது என்பது பொருள். ஆகுலம் ஒலி என்பது காண்க. வருத்தமுமாம் எனவே ஆகுலம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்று கடைபிடியுங்கள்.

“ஆகுலம் வருத்தம் ஓசை” நாநார்த்ததீபீகை 55, இதன் உரையில் ஆகுலம் என்ற சொல் வடமொழியில் இல்லாமை குறிக்கப்பட்டதும் காண்க.

உஷட்ர

இது வடமொழியில் ஒட்டகத்தின் பெயர். இப்பெயர் வடவர்க்கு எங்கிருந்து கிடைத்தது? தமிழில்  இருந்த ஒட்டகத்தையே இவ்வாறு திரிந்து மேற்கொண்டனர். ஒட்டகம் குளிர்ந்த காடாகிய வடநாட்டில் இல்லை. தமிழில் ஒட்டகம் உண்டா? ஒட்டகம் என்ற பெயரால் குறிக்கப்படும் பொருள் தமிழகத்தில் உண்டா? இரண்டும் உண்டு.

“ஒட்டகம் அவற்றோடு ஒரு வழிநிலையும்’’ என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா.

இதனால் ஆராயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய தொல்காப்பியத்தில் ஒட்டகம் என்ற சொல் காணப்படுகின்றதல்லவா?

இனி, ஒட்டகம் தமிழகத்தில் இருந்ததா எனில், கூறுவோம்.

இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் கடலால் விழுங்கப்பட்ட தென்தமிழ்க் குமரி நாட்டினிடையில் இருந்த பாலை நிலத்தைக் கடக்க உதவும் பொருட்டு இயற்கை தர இருந்தது ஒட்டகம். இதன் விரிவை மறைமலை அடிகளார் அருளிச் செய்த ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்ற நூலின் 762,763,764 ஆம் பக்கங்களில் கண்டு மகிழ்க.

எனவே உஷட்ர என்பது ஒட்டகம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயரின் சிதைவே என்பது பெறப்பட்டது.

ஒட்டகம், ஒட்டு+அகம் எனப் பிரிந்து, உதவும் உள்ளமுடையது எனப் பொருள் பயப்பது. இதுஒட்டை எனவும் வழங்கும். இது இழிவழக்கு.

(குயில் : குரல் : 1, இசை : 53, 9-6-1959)

மங்களம், மங்கலம்

மங்களம் என்பது மங்கலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயர். வடவரால் திரிக்கப்பட்ட சொல்.

மங்கு+அலம், மங்குதல் அல்லாத நிலை என்பது பொருள், இலம் வறுமை, இல்லாத நிலை என்பதிற்போல,
எனவே மங்கலம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்பதும், மங்களம் அதன் திரிபு என்பதும் நினைவிற் கொள்க.

(குயில் : குரல் : 1, இசை : 53, 9-6-1959)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *