அய்யாவின் அடிச்சுவட்டில் – 161
– கி.வீரமணி
தமிழ்நாட்டின் தலைநகரத்திலே 1978 செப்டம்பர் 16இல் துவங்கிய நூற்றாண்டு விழா, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மிக எழுச்சியுடனும் சிறப்புடனும் நடைபெற்றுக் கொண்டு வந்தது!
சென்னையில் துவக்கப்பட்ட இவ்விழா தமிழகம் முழுவதும் இந்த நூற்றாண்டில் தந்தை பெரியாரின் கொள்கைகளை இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும், பிரச்சாரம் அடைமழைபோல் நடைபெறும் என்று நான் சென்னையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கொடுத்த அறிவிப்பு செயல் வடிவங்கள் பெற்று ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் வெகுசிறப்போடு நடை-பெற்றது.
இயக்க வரலாற்றில் இந்த நூற்றாண்டு ஒரு பிரச்சார ஆண்டாக கொள்ளப்பட்டு, நூற்றாண்டு விழா பணிகளோடு தமிழர் சமுதாயத்திற்கு பாதுகாவலனாக இயங்கும் இயக்கச் செயல்பாடுகளும் நடைபெற்றன.
இந்த அடிப்படையில் தருமபுரி (30.08.1979) மற்றும் நெல்லையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இரு மாநாடுகளிலும் கலந்துகொண்டார்.
பின்தங்கிய மாவட்டம் என்று பொதுவான கண்ணோட்டத்தில் தருமபுரி சொல்லப்-பட்டாலும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கை உரத்தில் சளைத்ததாக அதை எவரும் கூறிவிட முடியாது! இயக்கத்தின் முன்னணி வீரர்களையெல்லாம் ஈன்று புறந்தந்த புகழ்வாய்ந்த மாவட்டம் தருமபுரி மாவட்ட-மாகும். இந்த விழாவில் கலந்து-கொண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதாவது…
“வருமான அடிப்படை ஆணைபற்றிய வழக்கில் _ எம்.ஜி.ஆருக்குத் தோதாக நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மூன்றிலே இரண்டு பேர் நமக்கு பாதகமான தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். தீர்ப்பு, நமக்குப் பாதகமானது. தீர்ப்பு சரியா அல்லவா என விவாதிக்க நான் விரும்பவில்லை.
இப்படிப்பட்ட தீர்ப்பைத்தான் 1951ஆம் ஆண்டு தமிழ்நாடு சந்தித்தது. ஆனால், தீர்ப்பு வந்துவிட்டது, அடங்கிவிடுவோம் என்று தமிழ்நாடு அடங்கிப் போய்விடவில்லை. தீர்ப்புக்குப் பிறகுதான் 1951இல் தீப்பொறி பறந்தது.
இப்பொழுது தீர்ப்பு வந்திருக்கிறது. தீப்பொறி கிளம்பும் “பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே சில மக்கள் முன்னேறி விட்டார்கள்.’’ _ தீர்ப்பிலே இது ஒரு வாசகம்.
உண்மை என்ன? எங்கோ _ அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உயர்ந்திருக்கிறார்கள்.
திராவிடர் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பெரியாரைப் பயன்படுத்திக் கொண்டு, அண்ணாவைப் பயன்படுத்திக் கொண்டு எங்களையெல்லாம் பயன்படுத்திக்-கொண்டு ஒரே வீட்டில் ஒரு டாக்டர் வர முடிந்தது; ஒரு ஜட்ஜ் வர முடிந்தது; ஓர் என்ஜினீயர் வரமுடிந்தது; ஒரு கலெக்டர் வரமுடிந்தது; ஒரு டி.எஸ்.பி. வரமுடிந்தது; ஒரு ரிஜிஸ்ட்ரார் வரமுடிந்தது.
ஆனால், அவர்களில் சிலர் இன்று, இந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை நாசமாக்குகிற வேலையைச் செய்வதற்குமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
அதையெல்லாம் நாம் மறந்துவிட முடியுமா?
இப்படி எங்கேயோ ஒரு வீட்டிலே நாலைந்து பேருக்கு உயர் பதவி கிடைத்திருக்கிற காரணத்தால் தமிழ் நாட்டிலே இருக்கிற எல்லா பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற வீட்டிலும் ஒரு டாக்டர், ஒரு வக்கீல், ஒரு ஜட்ஜ், ஓர் என்ஜினீயர், ஒரு கலெக்டர் இருக்கிறார் என்று அர்த்தமா?
இங்கே பல்லாயிரக்கணக்கிலே குழுமி இருக்கிறீர்கள், எத்தனை பேருடைய வீட்டுப் பிள்ளைகள் இன்று மெடிக்கல் காலேஜிலே படிக்கிறார்கள்? கைதூக்கச் சொன்னால் இரண்டு பேர்கூட தூக்க மாட்டார்கள்.
நாலுகோடி மக்கள் தமிழ்நாட்டிலே இருக்கிறோம். அதிலே இரண்டரை கோடி மக்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டு ஒன்றுக்கு மூவாயிரம் பேருக்குத்தான் தொழில் கல்லூரியிலே இடம்.
பெரும்பான்மை என்பது தலைகளின் எண்ணிக்கை. “தலைகளை எண்ணினால் மாத்திரம் போதாது. தலைக்குள்ளே என்ன இருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்’’ என்பது
அண்ணாவின் பொன்மொழி.
அப்படி எண்ணிப் பார்த்த தலைகள்தான், சாக்ரடீஸ் சாகக்கூடாது, அவனுக்கு மரணதண்டனை கூடாது என்று தீர்ப்பளித்த தலைகள்.
அப்படி எண்ணிப் பார்க்காத தலைகள்தான் சாக்ரடீஸ் கொல்லப்பட வேண்டும், அவன் விஷம் கொடுத்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பெழுதிய தலைகள். அந்தத் தலைகள் இன்று யாருக்கும் ஞாபகத்தில் இல்லை.
சாக்ரடீசின் தலைதான் நம்முடைய ஞாபகத்தில் இருக்கிறது.
அதைப்போலத்தான் _ இன்றைக்கும் பெரியாருக்கு எதிராக எப்படித் தீர்ப்-பெழுதினாலும், அவருடைய கொள்கைக்கு எதிராக எந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் _ பெரியாருடைய கொள்கைகள் வாழ, இலட்சியங்கள் வாழ _ அதற்காகப் போராட நாம் என்றென்றும் தயாராக இருப்போம்.
மேன்மைமிகு நீதிபதிகளின் தீர்ப்பை நான் மதிக்க மறுப்பதாக யாரும் கருத வேண்டாம். சுப்ரீம் கோர்ட்டிலும் பெரும்பான்மையான நீதிபதிகள் அரசியல் சட்டத்தை இந்த நிலையில் அணுகினால், அது அரசியல் சட்டத்திலே உள்ள கோளாறு என்று அர்த்தம்.
அந்த அரசியல் சட்டத்தையே திருத்து-வதற்கு நாம் போராட வேண்டும்.
இப்படிப் போராடித்தான் முதல் திருத்தம் அரசியல் சட்டத்தில் வந்தது. மீண்டும் போராடி அரசியல் சட்டத்தை பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மாற்றுவோம்.’’ _ இவ்வாறு கலைஞர் முழக்கமிட்டார்.
விழாவில் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். அப்பொழுது, பிற்படுத்தப்-பட்டோருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று குறிப்பிட்டுப் பேசினேன். பிற்படுத்தப்-பட்டோருக்கு உத்தரவுபற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பற்றி நான் பேசுகையில்,
“மி ணீனீ தீஷீuஸீபீ தீஹ் tலீமீ பீமீநீவீsவீஷீஸீ, தீut மி ஷ்வீறீறீ ஸீஷீt க்ஷீமீsஜீமீநீt tலீமீ sணீனீமீ.” “நான் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்; ஆனால், இந்த முடிவை என்னால் மதிக்க முடியாது’’ என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒருமுறை எப்படிக் குறிப்பிட்டாரோ, அதே கருத்தைத்தான் இப்பொழுது நாமும் கொண்டிருக்கிறோம்.
1950ஆம் ஆண்டில் வகுப்புரிமை உத்தரவே செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதிய-போது அதை ஏற்றுக்கொண்டு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் பேசாமல் இருந்திருப்பார்களேயானால், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கான சட்டத் திருத்தம் வந்திருக்க முடியுமா? மக்கள் மன்றத்திற்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்வோம்! மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கட்டும்’’ என்று எடுத்துக்கூறி என்னுரையை நிறைவு செய்தேன்.
கரூர் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தந்தை பெரியார் படத்திறப்பு விழா நிகழ்ச்சி நிகழ்ச்சி 07.09.1979 அன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.
தந்தை பெரியார் அவர்-களின் படத்தை கர்நாடக அமைச்சர் பகுத்தறிவு வீரர் பசவலிங்கப்பா திறந்து வைத்து உரை-யாற்றினார். அந்த விழா-வில் நானும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். விழா-விற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேதாச்சாரியார் தலைமை தாங்கினார். வழக்-கறிஞர் கோ.கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.குப்புசாமி அவர்கள் நன்றி-யுரையாற்றினார்.
நிகழ்ச்சி துவங்கியவுடன் தந்தை பெரியார் அவர்கள் படத்தை அமைச்சர் பசவலிங்கப்பா அவர்கள், திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
அதில், குறிப்பிட்டதாவது, “இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தினை திறந்து வைக்கும் பெரும்பேற்றினை பெற்ற நான் மிகவும் பெருமைப்-படுத்தப்பட்டதாக உணர்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மத வேறு-பாட்டை ஒழிப்பதில் பெரும்-போர் நடத்தியுள்ளார்கள். ஜாதிப் பிரிவினை என்பது உலகிலேயே மிக மோசமான ஒன்றாகும். அதனை பெரியார் தனித்து நின்று எதிர்த்துப் போராடியிருக்கிறார் அது சாதாரணமான காரியமல்ல.
வரலாற்றில் பார்த்தால் ஜாதி வெறியர்களின் ஆதிக்-கத்தின் கொடுமை நன்கு புரியும், நாட்டில் புத்தமதத்திலோ, இஸ்லாம் மதத்திலோ, கிறிஸ்தவ-மதத்திலோ ஜாதிப் பிரிவினை கிடையாது. ஆனால், இந்து மதத்தில்தான் ஆயிரக்-கணக்கில் ஜாதிகள், அதே எண்ணிக்-கையில் கடவுள்கள், எத்தனை ஆயிரம் கடவுள்கள் உண்டோ, அத்தனை ஆயிரம் ஜாதிகள் உண்டு.
ஜாதியைப் பாதுகாக்க இந்து மதத்தில் எத்தனையோ ஏற்பாடுகள் உள்ளன. இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதியை அகற்றிட எத்தனையோ வழிமுறைகள் இருந்தும், நடைமுறையில் அவை செயல்படாதவாறு நீதிமன்றங்களின் தலையீடுகள் உள்ளன.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெங்களூர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் பேசியபோது, எங்களை எல்லாம் பார்த்து, “நீங்களெல்லாம் சாகும் வரையில் வெறும் வழக்கறிஞராகவே இருந்து சாகப்போகிறீர்களா? அல்லது சமூகத்தை நாசமாக்கும் ஜாதிகளை எதிர்த்துப் போராடப் போகிறீர்களா?’’ என்று கேட்டார்.
ஆம்! ஜாதி அமைப்பை எதிர்த்துப் போராடும்போது உயர்ஜாதி ஆதிக்கத்துக்கு நீதிமன்றங்கள் துணையாக நின்று உதவும் சம்பவங்களும் உண்டு. யாரும் இனிமேல் தலையில் மலம் சுமக்கக் கூடாது என்று எங்கள் மாநிலத்தில் ஒரு சட்டம் இயற்றினோம்.
உடனே, உயர்ஜாதிக்காரர்கள் எங்கள் மலத்தைப் சுமப்பது தாழ்த்தப்பட்டவர்களின் கடமை என்று கூறி உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிட்டனர்.
கடவுள், உருவ வழிபாடு போன்ற ஏற்பாடுகள் ஜாதியை வளர்க்கவும் சமூகத்தை கெடுக்கவுமே பயன்படக் கூடியதாகும்’’ என்று உரையாற்றினார்.
“கடவுள் மறுப்பில் தீவிரங்காட்டும் நீங்கள் கர்நாடக மாநிலத்திலும் அரசு சார்பில் இந்தக் கொள்கையைப் பரப்ப முயற்சி செய்வீர்களா?’’ என்று ஒரு நிருபர் கேட்டதற்கு பசவலிங்கப்பா,
“தனிப்பட்ட முறையில் பெரியாரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன் நான். பல மக்களுக்கான ஒரு அரசு மூலம் நாத்திகக் கொள்கையை யார்மீதும் அரசு திணிக்க முடியாது என்றாலும் பெரியாரின் கொள்கை-களை தயக்கமின்றி நான் எங்கெங்கும் சொல்லி வருகிறேன்.
பகுத்தறிவுப் பிரச்சாரம் பல்வேறு பெயருள்ள அமைப்புகளால் செய்யப்படுகிறது.
இதுபோன்ற கொள்கைகளில் நான் தீவிரமாக இருந்தாலும், எதையும் படிப்-படியாகச் சொல்லித்தான் மக்களைத் திருத்த முடியும்; கட்டாயப்படுத்தி திருத்த இயலாது’’ _ இவ்வாறு பசவலிங்கப்பா கூறினார்.
சிறப்புரையாற்றிய நான்,
“இந்த விழாவில் தந்தை பெரியார் படம் வழக்கறிஞர் சங்கத்தில் திறக்கப்பட வேண்டும் என்று அரும்பாடுபட்ட நமது நண்பர் வீர.கே.சின்னப்பன் இன்று நம்மிடையே இல்லாதது ஒரு பெருங்குறையே.
தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதும், அவரது நினைவைப் போற்றுவதும் அவருக்குக் காட்டும் நன்றியாகும் என்றும் இந்தக் கரூருக்குச் சார்பு நீதிமன்றம் வரவேண்டும் என்பதில் அய்யா அவர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சிதான் காரணம் என்றும் இந்த விழாவின் தலைவர் குறிப்பிட்டார்.
நன்றியுணர்வு அருகிவிட்டிருக்கிற இந்த நாளில், இந்த நாட்டில் சாதனைகளை நினைத்துப் பார்க்காத இந்தச் சமூகத்தில் நன்றிப் பாராட்டுகின்ற உணர்வு வெளிப்பட்டது சற்று இதமாகத்தான் இருந்தது.
ஆனாலும், தந்தை பெரியார் அவர்கள் எங்களுக்கெல்லாம் சொல்வார்கள். ஒரு காரியத்தை நன்றி எதிர்பார்த்துச் செய்யக் கூடாது. அது தேவை என்று உணருவா-யேயானால் அதற்காக நன்றியை எதிர்பார்க்காது தொண்டு புரிவதே பெருமை; நன்றியை எதிர்பார்த்துச் செய்வது சிறுமை என்று.
அதுபோல்தான் அன்றைய தினம் கரூருக்குச் சார்பு நீதிமன்றம் வேண்டுமென்ற கோரிக்கை இங்கிருந்து கட்சி சார்பற்ற முறையில் ஒரே குரலில் எழுந்தபோது அய்யா அவர்கள் தலைமை நீதிபதியிடம் இந்தக் காரியம் மிகமிகத் தேவை; நீதிமன்றங்கள் பரவலாக்கப்பட வேண்டும்; அப்போதுதான் ஏழை எளிய பாமர மக்கள் பயன்பட முடியும்’’ என்று வலியுறுத்-னார்கள்; என்னிடமும் விடுதலையில் இதுகுறித்து ஒரு துணைத் தலையங்கம் கூட எழுதச் சொன்னார்கள்.
அய்யா அவர்கள் எப்போதும் தமது மனதில் சரியெனப் பட்டதைத் துணிந்து சொல்வார். சொல்லியவண்ணம் செய்தார்; அவர் செய்த புரட்சிப் பிரசாரம் எல்லாமே அவர் வாழ்-நாளிலேயே நடைமுறைக்கு வந்து சட்டமாகிப் பலன் தந்ததையும் கண்டார்.
இதனைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்காவில் இருந்து அய்யாவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி இந்த வாய்ப்பு உலகில் தத்துவ மேதைகள் யாருக்கும் கிட்டியிராத வாய்ப்பு என்பதையும் கூறியிருந்தார்கள்.
சிலருக்கு அவரவர்கள் இருக்கும் நிலையி-லிருந்து குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு அந்த நாள்களில் பெரியார் அவர்-களைப் பார்த்தார்களே தவிர உண்மையை உணரவில்லை.
அய்யா அவர்கள் பக்தியைப் பற்றிச் சொன்ன தத்துவம் மிக அழகானதும் ஆழமானதுமாகும்.
பக்தி ஒருவனுக்கு உண்டா இல்லையா என்பதைவிட ஒழுக்கம் இருந்தாக வேண்டும் என்றார்; ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் தருகிறார் பாருங்கள்.
மற்ற மனிதர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொளள் வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ, – விரும்புகிறீர்களோ அதே-போல் நீங்களும் நடந்துகொள்ள வேண்டும்; அதுதான் ஒழுக்கம்.
அதனால் கர்னாடகத்தில் இருந்து வந்து நமது மாண்புமிகு பசவலிங்கப்பா அவர்கள் அய்யா படத்தைத் திறக்கிறார்கள். அவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதால் எத்தனை எதிர்ப்புகளை சமாளிக்கிறார்?
சில ஆண்டுகளுக்கு முன்பு பகுத்தறிவு பிரசாரத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சினையில் தீவிரம் காட்டியதற்காகப் பதவியையே துறக்க வேண்டி வந்தது.
கொள்கையா? பதவியா? என்ற கேள்வி வந்தபோது கொள்கைதான் பெரிதே தவிர, பதவியல்ல என்று உதறித் தள்ளியவர் அவர்.
ஆனால், இருபத்திநாலு மணி நேரமும் பதவியிருந்தால் போதும் கொள்கைபற்றிக் கவலை-யில்லை என்கிற மனிதர்கள் மலிந்து-விட்ட நாள்களில் பசவலிங்கப்பாக்களையும் பார்க்கிறோம்; ஓரளவு ஆறுதல் பெறுகிறோம்.
அய்யா அவர்கள் ஒழுக்கத்தின் சின்னமாக, மனிதாபிமானத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் வாழ்நாள் பூராவும் திரட்டிய செல்வத்தையெல்லாம் வாழ்வில் வழி தவறியவர்களால், வறியவர்களால், ஆற்றாதவர்-களால் உருவாக்கி-விடப்பட்ட குழந்தை செல்வங்களைக் காக்க திருச்சியிலும் மற்ற இடங்களிலும் விடுதிகளை அமைத்து அதைக்கூட அனாதை இல்லம் என்று கூறிவிடாதே என்று கூறி அந்த உணர்வே வராது தடுத்து ‘குழந்தைகள் இல்லம்’ என்றே அழைக்கக் கோரினார்.
வழக்கறிஞர் அல்ல அவர். ஆனால், வழக்கறிஞர்களாகிய நீங்கள் படமாகத் திறந்து வைத்து அவரைப் பாடமாக்கிக் கொண்டுள்ளீர்-கள்.
கல்லூரியில் -_ பல்கலைக்கழகங்களில் நுழைந்ததில்லை அவர்; ஆனால், அந்த அறிவாலயங்கள் இன்று அவர் கருத்துக்களை ஆராய்ந்து தகுதியை உயர்த்திக் கொள்கிறது; எனவே, அய்யா அவர்களை படமாக, நல்ல பாடமாக, அறிவாக, ஆற்றலாக, ஒழுக்கமாக, மனிதாபிமானத்தின் சின்னமாக வாழ்கிறார்கள்’’ என்று நான் குறிப்பிட்டு என்னுடைய உரையை நிறைவு செய்தேன்.
திருவையாறு சிலை திறப்பு
08.09.1979 அன்று மூடநம்பிக்கைகளுக்கு முடிசூடிக் கொண்டிருந்த திருவையாறு நகரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் “திருஉருவ வெண்கலச் சிலை’’ திருவையாறு பேரூராட்சி காமராஜ் பேருந்து நிலைய நுழைவு வாயிலில், கடவுள் மறுப்பு வாசகம் அமைந்த பீடத்தில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. சமூகநீதி வழங்கிய தந்தை பெரியாரின் சிலையை ‘பெரியார் வாழ்க’ என்ற ஒலி முழக்கங்களுக்-கிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.
சிலை திறக்கப்பட்டவுடன் யானை உரத்த பிளிறளுடன் அய்யா அவர்களின் சிலைக்கு மாலையணிவித்து, நூற்றாண்டைக் குறிக்கும் வகையில் நூறு வெடிகள் முழங்கின. அதனைத் தொடர்ந்து நீதிபதி வேணுகோபால் அவர்களையும், என்னையும் கழகத் தோழர்கள் வரவேற்புக் குழுவின் சார்பாக வரவேற்றார்கள். நீதிபதி வேணுகோபால் அவர்கள் உரையாற்றும்-போது, “நன்றி காட்டத் தெரியாத சமுதாயத்துக்காக அறுபது ஆண்டுகாலம் பாடுபட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.
இப்போதுள்ள இளைஞர்கள் பெரும்-பாலோருக்கும் அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலே நம்முடைய நாடு எப்படி எப்படி இருந்தது? எந்த நிலையில் அவரது சிந்தனை, உழைப்பு இந்த சமுதாயத்திற்கு கிடைத்தது? அவருடைய உழைப்பால் நாம் எப்படிப்பட்ட உருமாற்றம் அடைந்திருக்கிறோம் என்பது தெரியுமா?
பெரியார் அவர்கள் தோன்றிய காலத்தில் படிப்பதற்கு என்று ஒரு ஜாதி இருந்தது. வேலைக்கு என்று ஒரு ஜாதி இருந்தது. படித்தால் பாவம், படிப்பு சொல்லிக் கொடுத்தால் பாவம் என்று நீதி சொல்லப்-பட்டிருந்த காலத்தில்தான் பெரியார் தோன்றினார்கள்.
படிப்பதற்கு என்று ஒரு ஜாதி இருந்த நிலைமையினால்அவர்கள் சமுதாயத்தில் உள்ள சலுகைகள், சவுகரியங்கள் எல்லாவற்றையும் அவர்கள் அனுபவித்தார்கள்.
அவர்களுக்கு மட்டும்தான் அந்த உரிமை இருந்தது என்பதைக் கொண்டு அவர்கள் எங்கேயும் இருந்தார்கள். எதிலும் இருந்தார்கள்; எப்போதும் இருப்போம் என்று கனவு கண்டு கொண்டு இருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கீழானவர்கள் என்று சொல்லி எல்லா இடங்களிலும் பிரித்தே வைத்திருந்தார்கள்.
ஆற்றங்கரையில் குளக்கரையில் எல்லாம் தனி இடம்; பள்ளிக்கூடத்தில் மருத்துவ-மனையில் எல்லாம் மனித ஜாதியைத் தனித்தனியாக உயர்ந்த ஜாதிக்கென்று ஒரு இடம், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு இடம் என்பதாகப் பிரித்து வைத்திருந்தார்கள். 1943ஆம் வருடத்தில் தஞ்சையில் வழக்கறிஞர்-களாக நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும். அங்கே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தண்ணீர் குடிப்பதற்குக்கூட தனித்தனியாகப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன.
எல்லா இடங்களிலும் மக்களை ஒன்றுசேர முடியாமல் பிரித்துத்தான் வைத்தார்கள்.
ஏன் இப்படி இந்த பாகுபாடுகளை யெல்லாம் பராமரித்து வந்தார்கள் என்றால் அதைப் பார்க்கின்ற ஒவ்வொரு நிமிடமும் தாம் மேல் ஜாதிக்காரர்கள் என்பதை நிரூபிக்கவும், நிலைநாட்டிக் கொள்ளவுமே அப்படி செய்து வந்தார்கள்.
அந்த நிலைமையில்தான் பெரியார் வந்தார்கள். அவர்கள் சமுதாயத்துக்கு தொண்டாற்ற துவங்கிய காலத்தில் நம்மில் பலர் பிறந்திருக்க மாட்டோம். நினைத்தாலே நடுங்கக் கூடிய பல செய்திகளை பெரியார் அவர்கள் அந்தக் காலத்திலே சொன்னார்கள்.
அன்றைக்கு அவர்கள் சொன்ன ஜாதி ஒழிப்பு, பெண்களுக்கு சம உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற காரியங்களை-யெல்லாம் அப்போது நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
அவரது உழைப்பால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அளவிட்டுச் சொல்ல-முடியாதது: அந்த மாற்றங்கள் இங்கேயே இருக்கின்ற காரணத்தினால்அது பெரியதாகத் தோன்றாது; வெளியில் இருந்து பார்த்தால்-தான் தெரியும். குறிப்பாக வடநாட்டில் இதுபோன்ற ஜாதி வேறுபாடு, தீண்டாமையற்ற நிலைமையை இங்கு இருப்பதுபோலக் காணமுடியாது. வடநாட்டில் நான் 15 ஆண்டுகாலம் இருந்தவன். வடநாட்டிலும் நகரங்களில் பார்த்தால் அந்த மாற்றங்கள் தெரியாது. அங்கேயும் கிராமப்புறங்களில் சென்று பார்க்க வேண்டும். ஜாதி வித்தியாசம் தலைவிரித்தாடு-கின்ற நிலைமைதான் இன்னமும் அங்கே இருக்கின்றது.
வடநாட்டிலே இங்கே இருப்பதைப்போல தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்-களும், கல்வி வாய்ப்பு பெற முடியாது. உத்தியோக வாய்ப்பும் பெறமுடியாத நிலைதான் அங்கு உள்ளது.
இன்னமும் இந்த நாட்டில் தாழ்த்தப்-பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமைதான் உள்ளது.
சமூகத்தில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே தலைவர் பெரியார் அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சுவரை வாழ்ந்தார்கள். அவர் தமிழர் சமுதாயத்-திற்குத் தலைவர் என்றால் தலைவர்களுக்கெல்லாம் இலக்கணம் தந்தை பெரியார் அவர்கள்’’ என்றார்.
இவரைத் தொடர்ந்து பகுத்தறிவு பேராசிரியர் இராமநாதன் அவர்கள் ஆற்றிய உரை,
“தஞ்சை மாவட்டத்திலே அய்யாறு என்று அமைந்த இந்த நகரத்திலே பெரியாருடைய சிலை திறக்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகவும் வியக்கக்கூடிய ஒன்றாகும்.
இந்த நாட்டு மக்களுடைய அறிவை மதம் என்ற பெயராலும் கடவுள் என்ற பெயராலும், இந்த மதம் கடவுள் என்பவற்றின் பெயரால் எழுதப்பட்டுள்ள கதைகள், புராணங்கள் அதையொட்டி நிகழ்கின்ற விழாக்கள் இவைகட்கெல்லாம் புகழ்பெற்று விளங்குகின்ற இந்த திருவையாற்றிலே அய்யாவுடைய சிலை திறக்கப்படுவது என்பது ஒரு வியப்பேயாகும்.
அய்யாவுடைய சிலையானது ஒரு பெரிய அறிவுச் சின்னமாக நமக்கு விளங்குகின்றது’’ என்று குறிப்பிட்டார்கள்.
விழாவில் என்னுரையை மிகவும் சுருக்கமாக எடுத்துக்கூறி முடித்துக் கொண்டேன்.
விழாவில், திருவையாறு பகுத்தறிவாளர் கழகக் செயலாளர் அ.இளவழகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றிய பின்னர், பேரூராட்சியின் சார்பாக தலைவர் டி.ஈ.கனகசபை. பழனிச்சாமி ஆகியோர் ஜஸ்டிஸ் வேணுகோபால் அவர்களுக்கு வரவேற்பு இதழ்களை வாசித்து அளித்தார்கள். விழாவில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் கோ.இளங்கோவன் எம்.எல்.ஏ., திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, செயலாளர் அமர்சிங், அம்மன்பேட்டை தலைமையாசிரியர் அப்பாசாமி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டார்கள். ஆஸ்திகமே அதிர்ந்தது அன்று.
(நினைவுகள் நீளும்)