அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயதான டீன் கார்னாஸெஸ் என்பவர் 80 மணிநேரம் தொடர்ந்து ஓடி 563 கி.மீ தூரத்தைக் கடந்திருக்கிறார். இந்த அதிசய மனிதரின் உடலில் உள்ள அரிய வகையான மரபியல் நிலைமையே இதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து இவர் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இப்போதும் மாரத்தான் போட்டிகளில் ஓடுவதை நிறுத்தவில்லை. 50 நாட்களில் 50 மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அப்போதும், அவருக்கு தசைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையாம்.
பொதுவாக நாம் உடற்பயிற்சிகள், ஓட்டத்தில் ஈடுபடும் போது உடலில் உள்ள குளுகோஸ் சக்தியாக மாற்றப்படுகிறது. இதனால் லாக்டிக் அமிலம் உற்பத்தியாகும். அந்த அமிலம் அதிகரிக்கும்போது தசைப்பிடிப்பு, களைப்பு ஏற்படும். இந்த நிலையில், நாம் சுவாசிக்க வேண்டியிருக்கும். ஆனால், டீன் கார்னாஸெஸின் உடலில் இவ்வாறு லாக்டிக் அமிலம் தேங்குவதில்லையாம். இதனால், அவர் தொடர்ச்சி யாக உடல் தசைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கலாம்.