டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 5451 பேருக்கு வேலை

செப்டம்பர் 01-15

தமிழ்நாடு அரசில் குரூப்_4 பணிகளில் 5,451 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் சார்நிலைப் பணி

உள்ளிட்ட குரூப்-_4 பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கு 5,451 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்-களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றிருந்தாலும் இப்பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தட்டச்சர் பணியில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை அளவில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்விலும், சுருக்கெழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் வழங்கப்படும் ‘‘Certificate course in Computer on Office Automation’-இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கம்ப்யூட்டர் பயிற்சியை முடிக்காதவர்-களும் விண்ணப்பிக்கலாம். அப்படி, அவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால், அவர்களின் தகுதிகாண் பருவத்திற்குள் இந்த கம்ப்யூட்டர் பயிற்சியைப் பெறவேண்டும். நில அளவர் பணியைப் பொருத்த அளவில், நில அளவர் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி  அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளாக இருப்பின், அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் ஆகியோர் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளைப் பொருத்த அளவில், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பின், அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், மிகவும் பிறப்டுத்தப்-பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தோர் குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும், அதற்கு மேற்பட்ட தகுதியைப் பெற்றிருப்பின் அதாவது, மேல்நிலைப் பள்ளி, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
மத்திய அல்லது மாநில அரசில் முறையாக அய்ந்தாண்டுகள் பணிபுரிந்து, இப்பதவிக்குரிய வயது வரம்பிற்குள் இருந்தாலும் பொதுப் போட்டிப் பிரிவினரைச் சார்ந்த விண்ணப்-பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்?

இப்பணியில் சேர விரும்புவோருக்கு வருகிற நவம்பர் 6ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை தேர்வு நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறும் இத்தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாளில் பொது அறிவிலிருந்து 75 கேள்விகள், திறனறிவு பிரிவில் 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.
பொது அறிவு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும். இரண்டாம் தாளில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும். இதிலும் மொத்தக் கேள்வி எண்ணிக்கை 100. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து மொத்த மதிப்பெண்கள் 90. எழுத்துத்தேர்வு மதிப்-பெண்களின் அடிப்படையில் தகுதியுடையவர்-களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கவுன்சலிங் மூலம் பணியில் சேர்க்கப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு செய்திருப்பவர்கள் இணைய வழி விண்ணப்பத்தில் அவர்களது பதிவு எண், கடவுச் சொல்லை உள்ளீடு செய்து, இப்பணி-களில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான இதர விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள் முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்-பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும், பதிவுக் கட்டணம் 50 ரூபாயும் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவு செய்தவர்-கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். வங்கிக் கிளைகளிலும், தபால் அலுவலகங்களிலும் செலான் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். தாழ்த்தப்பட்-டோர், பழங்குடியினர், அருந்ததியர், ஆதரவற்ற விதவையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படும்
.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்-தால் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். முன்னாள் படைவீரர்களுக்கு 2 முறை கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் கட்டணம் செலுத்த கடைசி நாள் செப்டம்பர்11.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.9.2016
தேர்வு நடைபெறும் தேதி: 6.11.2016
விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

உதவிக்கு:

தொலைபேசி எண்: 044- – 2533 2833, 2533 2855
கட்டணமில்லா சேவை எண்: 1800 425 1002
வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *