– சரவணா இராசேந்திரன்
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சேலம் இரும்-பாலை கொண்டுவரப்பட்டது. அப்படிப்பட்ட ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?
காமராஜர் முயற்சி
அன்றைய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் நீலம் சஞ்சீவ ரெட்டி மத்திய அரசில் உருக்குத் தொழில் அமைச்சராக இருந்தார். தன்னுடைய மாநிலமான ஆந்திரத்திலுள்ள விசாகப்-பட்டினத்தில் இந்த இரும்பாலையை அமைக்க விடாப்பிடியாக முயன்றார் அவர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராய் இருந்த காமராஜர், அன்றைய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் சாஸ்திரியை சந்தித்து சேலத்துக்கு இரும்பாலை வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சாஸ்திரியைச் சந்தித்து இது-குறித்து தமிழக அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர். அதன்பின்பு காமராஜ் அவசியம் இரும்பாலை சேலத்துக்கு வேண்டும் என்று சாஸ்திரியிடம் கேட்டுக்-கொண்டார். அதன் காரணமாகத்தான் சேலத்தில் இந்த இரும்பாலை அமைந்தது.
திராவிடர் கழகத்தின் பெரும் போராட்டத்-தின் விளைவாக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி 1970 செப்டம்பர் 16 அன்று உருக்காலையைத் துவக்கி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சேலத்து இரும்பின் சிறப்புகள்:
சேலம் கிழக்கிந்திய கம்பெனியின் குடிமைப் பணியில் இருந்த ஜோஷியா மார்ஷெல் கீத் என்பவர்தான் சேலம் கஞ்சமலை பகுதிகளில் இரும்புத் தாது இருப்பதை முதலில் கண்டிறிந்தவர்.
அதன்பிறகு அவர் சேலம் அருகிலுள்ள பூலாம்பட்டியில் 1847இல் இரும்பு தயாரிக்கும் ஆலை ஒன்றை நிறுவி, நிதி நெருக்கடியின் காரணமாக 1858இல் அந்த ஆலையை மூடிவிட்டார். கீத்தால் தயாரித்து இங்கிருந்து அனுப்பப்பட்ட இரும்பால்தான் இங்கிலாந்தில் பிரிட்டானியா டியூப்ளார் பாலமே (குழந்தைகள் பாடலில் வரும் லண்டன் பிரிட்ஸ்) கட்டப்பட்டது என்ற செய்தி இப்போதைய தலைமுறையினருக்கு வியப்பாக இருக்கும். சேலம் உருக்காலை உலக அளவில் புகழ் பெற்றது. மலேசியா-வின் ரெட்டை கோபுரம், மெல்பேர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டுதான் அமைக்கப்பட்டுள்ளன.
சேலத்தைச் சேர்ந்த அருணாசலம் தயாரித்த உருக்கு வாள் லண்டன் தொல்பொருள் காட்சியகத்தில் அவரது பெயரோடு சேலம், தமிழ்நாடு என்று எழுதப்-பட்டு காட்சிக்கு வைக்கப்-பட்டுள்ளது. 1893இல் தாமஸ் ஷொலாண்டு, 1917_18இல் டாக்டர் வி.எஸ்.துவே, 1944இல் எம்.கே.என். அய்யங்கார் ஆகியோர் கஞ்சமலை இரும்புத் தாதுவை ஆய்வு செய்து அரசிடம் அறிக்கைகள் வழங்கினர். ஆனால், உருக்கு உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி அப்போது கிடைப்பதற்கு பெரும் பிரச்சினையாக இருந்தது என்பதால், உருக்காலை முயற்சி அடுத்த கட்டத்தை எட்டவில்லை.
கலைஞரின் கடும் முயற்சி
கலைஞர் அவர்களின் ஆணைக்கு இணங்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் அய்ரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே இரும்பாலை எப்படி உள்ளது என்று கவனித்து அதுபோன்ற உருக்காலையை நெய்வேலி நிலக்கரி கொண்டு சேலத்தில் அமைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினர். அதன்பின் மேற்கு ஜெர்மனி நிபுணர்கள் கஞ்சமலை வந்து சேலத்தில் உருக்காலை அமைக்க முடியுமா என ஆய்வு செய்தனர்.
1960க்குப் பின் தமிழக அரசால் இந்த உருக்காலைக்கு 24,000 ஏக்கர் நிலம் கையகப்-படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து ஜப்பான் நாட்டோடும் ஆலோசனை மேற்கொள்ளப்-பட்டு 2.5 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யலாம் என்று 1966இல் தமிழக அரசு ஓர் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. 1970இல் சேலம், விசாகப்பட்டினம் விஜயநகரில் உருக்காலைகள் அமைக்க, மத்திய அரசு முறைப்படி அறிவிப்பு செய்தது. 1973இல் சேலம் உருக்காலை இந்திய உருக்காலை ஆணையத்தின் சார்பு நிறுவனமாக அறிவிக்கப்-பட்டு முதல் கட்டமாக ரூ.136 கோடி மூதலீட்டில் 32 ஆயிரம் டன் திறன்கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யும் குழு உருட்டாலை திட்டத்துக்கு மத்திய அரசு 1977இல் ஒப்புதல் அளித்தது.
சேலம் இரும்பு உருக்காலைச் சிறப்புகள்:
சேலம் இரும்பாலை விரிவுபடுத்த மன்மோகன் சிங் அரசு 2006-ஆம் ஆண்டு ரூ.1,553 கோடி ஒதுக்கீடு செய்தது. உலகின் சராசரி தனிநபர் உருக்கு நுகர்வு ஆண்டுக்கு 170 கிலோ ஆகும். நம் நாட்டில் மட்டுமே 35 கிலோ வரை கணக்கு உள்ளது. இந்தியாவின் உற்பத்தி மொத்தம் 3.8 லட்சம் டன் ஆகும். உலக உற்பத்தியில் நாம் 3.4 சதமாக இருக்கிறோம்.
சேலம் உருக்கு ஆலைக்குப் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்-பட்டுள்ளது. இந்த உருக்காலை தயாரிக்கும் தகடுகளை உலகின் 37 நாடுகள் வாங்குகின்றன. சேலம் உருக்காலை ரூ.800 கோடி அன்னிய செலாவணியும், எக்சைஸ் வரி, இறக்குமதி வரி என்ற வகையில் ரூ.1,200 கோடியும் இதுவரை ஈட்டித் தந்துள்ளது. நீண்டகால கோரிக்கை-யான வெப்ப உருட்டாலை 1995இல் அமைக்கப்பட்டு மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் டன்கள் முதல் 25 ஆயிரம் டன்கள் வரை இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
பெருகிவரும் எவர்சில்வரின் தேவையைச் சமாளிக்க சேலம் இரும்பாலை முக்கிய பங்காற்றி வருகிறது. இங்கு உற்பத்தியாகும் இரும்புத் தகடுகள் ஜப்பான், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், ஸ்பெயின், போர்ச்சுக்கல், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்த எவர்சில்வர் தகடுகள் உற்பத்தியில் பன்னாட்டு அளவில் 12 பெரிய உற்பத்தி-யாளர்களில் சேலம் ஆலையும் ஒன்றாகும். சென்சிமிர் தாதுவின் மூலம் உருக்கு எவர்சில்வர் தகடுகளை உற்பத்தி செய்ய மோடி அரசு அக்கரை காட்டாமல் தனியாருக்கு வழங்குவதில் முனைந்து நிற்கிறது.
இந்த ஆலை அமைய 60களில் ஏற்பட்ட பல சிரமங்கள் போன்று ஆலை அமைந்த பின்பும் பல சோதனைகளைச் சந்தித்தது. சந்தித்து வருகிறது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு கட்டமைப்புகள் கொண்ட இந்த ஆலையின் தற்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ. 8,000 கோடி.
சேலம் இரும்பாலையில் ரூ. 18 கோடி செலவில் நாணயங்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் நிறுவப்பட்ட பிறகும், மும்பை, கொல்கத்தா, அய்தராபாத் ஆகிய இடங்களில் அரசு நாணயங்கள் தயாரிக்க மிண்ட்களுக்கு 40 டன் எவர்சில்வர் தகடுகளை சேலம் ஆலை நிர்வாகம் அனுப்பியுள்ளது. . மத்திய அரசிடம் வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலை இரண்டையும் பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் போராடி, பிறகு காலதா-மதத்துடன்தான் சேலம் உருக்காலையில் இவை நிறுவப்பட்டன. இந்தக் கஞ்சமலையில் 30 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை இரும்பு செறிவு உள்ளது. அதுமட்டுமல்ல, வடக்குப் படுகையில்தான் இரும்புத் தாது வளம் அதிகம் என்பதும் ரிலைன்ஸ் நிறுவனத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அம்பானி கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக பொருளாதர வளத்தின் ஒரு ஊற்றான சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு தாரைவார்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் மோடி.
இதற்கு தமிழக பாஜக என்ன பதில் சொல்லப் போகிறது? காமராஜரும், அண்ணாவும், கலைஞரும் போராடிப் பெற்ற சேலம் இரும்பாலையின் நிலைமை கவலைக்-கிடமாக இருக்கிறது. ஒரு பொதுத்துறை நிறுவனம் பாஜக ஆட்சியாளர்கள் மூலம் பெரும் தனியார் முதலாளிகளின் கையில் செல்லவிருக்கிறது, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், திருச்சி பாரத் கனரக மின் நிறுவனம், கல்பாக்கம் அணுமின் உற்பத்தி நிலையம், ஆவடி ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனம் மற்றும் சேலம் இரும்பு உருக்காலை ஆகியவை தமிழகத்திற்கு முக்கியமானவை. மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த நிறுவனங்கள் வளர்ச்சிக்கு நிதி கொடுக்காமல் நிறுவன அதிகாரிகளை முடக்கி வைத்து செயற்கையான இழப்பைக் காட்டி தனியாருக்குக் கொடுக்கத் துடிக்கிறார். அனைவரும் ஒன்றுசேர்ந்து இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது கலைஞர் வலியுறுத்தல்
சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
“சேலம் உருக்காலை இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் புகழ் பெருக்கி நிற்கிறது. இந்த ஆலையில் 2,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறைமுக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கார்பன், சாதாரண ஸ்டீல், சுருள், நாணய வில்லை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகிய பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு மட்டும், ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
சேலம் உருக்காலை தொடங்கப்பட்டது முதல் லாபகரமாக இயங்கி வந்தது. 2003-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக ரூ.100 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதன் பின்பு ரூ.2 ஆயிரம் கோடியில் அங்கே எஃகு உற்பத்திக் கூடம் அமைத்ததால் கடன் சுமை அதிகரித்தது. இந்த ஆலையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பலர் குறைந்துவிட்டதாகக் காரணங்காட்டி, தனியாரிடம் இந்த ஆலையை ஒப்படைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து திறமை மிக்கவர்களை பணியமர்த்த வேண்டும்.
மேலும், ஆலையில் 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.7.70 வரை செலவு ஏற்படும். ஆனால் உருக்காலையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4க்கு உற்பத்தி செய்யலாம்.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எண்ணிப் பார்த்து, இந்தப் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று கலைஞர் தெரிவித்துள்ளார்.