புதிய கோள்கள் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகள் முறியடிப்பும்!

செப்டம்பர் 01-15

– மஞ்சை வசந்தன்

நாட்டில் புரையோடிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளில் சோதிட நம்பிக்கை முதன்மையானது. வானில் உள்ள கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்வைத் தீர்மானிக்-கின்றன என்பதே சோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். “இதுவொன்றும் மூடநம்பிக்கை-யில்லை; அறிவியல் அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது’’ என்று இதற்கு வக்காலத்தும், சப்பைக்கட்டும் தொடர்ந்து செய்யப்படுகின்றன. எப்படி இது அறிவியல் சார்ந்தது என்று அவர்களால் விளக்க இயலவில்லை; ஆனால், அறிவியல் சார்ந்தது என்று மட்டும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

முரண்பட்ட நம்பிக்கைகள்:

கடவுள் நம்பிக்கை, சோதிட நம்பிக்கை, வாஸ்த்து, இராசிக்கல், பெயர் நம்பிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பதைக்-கூட சிந்தித்துத் தெரிந்து _ தெளிந்து _ கொள்ளாமல் அரைவேக்காட்டு, அரைகுறைச் சிந்தனைகளைக் கூறி வருகின்றனர்.

கடவுள் தத்துவப்படி சென்ற பிறவியின் செயல்பாட்டைக் கொண்டு இப்பிறவி வாழ்வு இறைவனால் விதியாகத் தீர்மானிக்கப்பட்டு, அதன்படி மனித வாழ்வை கடவுள் அமைக்-கிறது. அதன்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்பது கடவுள் கோட்பாடு.

ஆக, கடவுளை நம்புகின்றவன், கடவுள் விதித்த விதிப்படிதான் வாழ்வு அமையும் என்று நம்ப வேண்டும். அப்படியாயின் சோதிடத்தை நம்புகின்றவன், கடவுளை மறுக்கிறான் என்றே பொருள். சோதிடம், கிரகங்களின் இயக்கப்படி வாழ்வு என்பதால், கடவுள் விதிப்படிதான் வாழ்வு என்பதை மறுப்பதாகப் பொருள். அப்படியாயின் கடவுளையும் மறுப்பதாகவே பொருள். எனவே, சோதிடத்தை நம்புகிறவன் கடவுளை மறுக்கிறான் என்பதே உண்மை!

வாஸ்த்து நம்பிக்கையாளன் கடவுளையும் மறுக்கிறான், சோதிடத்தையும் மறுக்கிறான் என்பது பொருள். காரணம், வாசல்படியை (வாசகால்), மாற்றி வைத்தாலே வாழ்வு மாறிவிடும் என்கிறான். அப்படியாயின் வாழ்வை கடவுளும், கிரங்களும் தீர்மானிக்கின்றன என்பவற்றை வாஸ்த்து நம்பிக்கையாளன் மறுக்கிறான் என்றே பொருள். ஆக, வாஸ்து நம்பிக்கையாளன் கடவுள் மறுப்பாளன், சோதிட மறுப்பாளன் என்பதே உண்மை!

பெயர் மாற்ற நம்பிக்கையாளன் கடவுள், சோதிடம், வாஸ்து எல்லாவற்றையும் மறுக்கிறான் என்பது பொருள். பெயரை மாற்றினால் ஒருவனின் வாழ்வே மாறிவிடும் என்று நம்பினால், கடவுளின் விதிப்படி வாழ்வு, கிரகங்களின் இயக்கப்படி வாழ்வு, வாஸ்த்துப்படி வாழ்வு என்பதை அவன் மறுக்கிறான் என்பது-தான் உண்மை.

இராசிக்கல்லை நம்புகின்றவன் மேற்படி எல்லாவற்றையும் மறுக்கிறான் என்று பொருள். பச்சைக் கல்லை மாற்றி நீலக்கல்லை அணிந்தால் வாழ்வே மாறிவிடும் என்று இவன் நம்புவதால், மற்றவற்றை இவன் மறுக்கிறான் என்பதே உட்பொருள்.

ஆக, வாழ்வை தீர்மானிப்பது கடவுளின் விதியா? கிரங்களின் இயக்கமா? வாஸ்தா? இராசிக்கல்லா? பெயரா? என்பதைக் கூட உறுதியாகக் கூறமுடியாமல் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வதும், நம்புவதும் இவை எதுவும் உண்மையல்ல என்பதை உறுதி செய்கின்றன.

சூரியன் இடம்பெயருகிறதா?

சோதிடம் கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. கிரகங்கள் மாறும்போது (இடம்பெயரும்போது) வாழ்வு மாறும் என்கின்றனர். இவற்றுள் சூரியனையும் சேர்த்து, சூரியன் இடம் பெயருவதாக சோதிடம் கணிக்கின்றனர்.

நிலையாக உள்ள சூரியன் இடம் பெயர்-வதாகத் தவறாகக் கருதிக்கொண்டு, சோதிடம் கணிக்கப்படுகிறது. அடிப்படையே தவறு என்னும்போது, சோதிடம் எவ்வாறு உண்மை-யாகும்?
அது மட்டுமல்ல, சூரியன் ஒரு கோளும் (கிரகம்) அல்ல. அது ஒரு நட்சத்திரம். நட்சத்திரத்தை கோளாகக் கூறி, சோதிடம் கணிப்பதும் அறியாமையின் அடையாளமாகும். அப்படியாயின் தவறான நம்பிக்கையின்படி கணிக்கப்படும் சோதிடம் எவ்வாறு சரியாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

புதிய கோள்கள் கண்டுபிடிப்பு
மூடநம்பிக்கை முறியடிப்பு!

ஒன்பது கோள்களின் இயக்கம் நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று கருதி, கணக்கிட்டு சோதிடம் கணித்தனர். வெறுங்கண் களால் பார்த்து கண்டறியப்பட்ட கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு, சோதிடம் கணிக்கப் பட்டது. ஆனால், அறிவியல் வளர வளர புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

கிரங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடம் எப்படிச் சரியனாதாகும்?

சில கோள்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடத்தில், விடுபட்ட கோள் களின் தாக்கம், பங்கு விடுபட்டுவிட்ட நிலையில் சோதிடமே தப்பாகிறதே.
அப்படிப்பட்ட சோதிடத்தைக் கணித்து எண்ணற்றோரின் வாழ்வைப் பாழடிப்பது குற்றச் செயல் அல்லவா?

இதிலே செவ்வாய் தோஷம் வேறு. செவ்வாய் தோஷத்தைச் சொல்லி எவ்வளவு பெண்களின் வாழ்வு பாழாக்கப்படுகிறது.

1930க்கு முன் எத்தனை கிரகம்?

அமெரிக்க வானியல் அறிஞர் கிளைட்-டோமா என்பவரால், “புளூட்டோ’’ என்ற கிரகம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் 8 கிரகங்கள்-தானே இருந்தன. அதன்பின்தானே ஒன்பதானது.

 

நவகிரகம் என்பதே நவீன அறிவியலின் பிச்சையல்லவா? சிந்திக்க வேண்டாமா?

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 24.08.2006இல் புளுட்டோ ஒரு கோளே அல்ல என்று மறுக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க நவக்கிரகம் என்பது நகைப்பிற்குரியது அல்லவா? அவற்றை வைத்துச் சொல்லப்படும் சோதிடம் கேலிக்குரியது அல்லவா? உண்மைக்கு மாறான பித்தலாட்டம் அல்லவா?

சூரியனை விட பெரிய விண்மீன் கண்டுபிடிப்பு:

சூரியனைவிட 30 மடங்கு அதிக எடையுள்ள விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் இதைக் கணக்கில் கொள்ளாமல் கணக்கிடப்படும் சோதிடம் எப்படிச் சரியான-தாகும். கிரகங்களின் இயக்கம் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால் எல்லா கிரகமும் கண்டறியப்படாமல், சில கிரகங்களைக் கணக்கில் கொள்ளாமல் கணிக்கப்படும் சோதிடம் எவ்வாறு உண்மையாக, சரியாக இருக்க முடியும்?

அண்டக்(Universe) கோட்பாடுகளை மாற்றும் சிறு விண்மீன் மண்டலங்கள் கண்டுபிடிப்பு

புதிதாக உருவாகும் பால்வெளி மண்டலங்-களை, பொதிந்து கிடக்கும் பெருவெளி தோற்றத்தின் உண்மைகளை மூன்று விண்வெளி ஆய்வாளர்கள் அடங்கிய குழு ரேடியோ தொலைநோக்கி மூலம் ஆய்ந்ததில் 850 புதிய பால்வெளி மண்டலங்களை கண்டறிந்துள்ளது.

நாம் இரவில் பார்க்கும் கண்சிமிட்டும் விண்மீன்கள் அனைத்தும் விண்மீன்கள் அல்ல, அதில் பல எண்ணிலடங்கா விண்மீன்கள் அடங்கிய பால்வெளி மண்டலமாகவும் (Galaxies) இருக்கலாம். இப்பெருவெளி (Universe) எங்கும் ஹைட்ரஜன் வாயு நிரம்பிக் கிடக்கிறது.

புனே நகரில் இந்திய விண்வெளி ஆய்வாளர்-களால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தபோது புதிதாக உருவாகும் பால்வெளி-மண்டலங்களை கண்டுபிடித்துள்ளனர்.  பூமியில் இருந்து 1330 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் குட்டி பால்வெளி மண்டலங்கள் அமைந்துள்ளன.

ராமன் விண்வெளி ஆய்வு நிறுவனம் பெங்களூர், டாடா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் மும்பை, இந்த இரண்டு அறிவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினரின் இந்த அறிய கண்டுபிடிப்பானது இப்பெருவெளி தோற்றத்தின் பின்னால் மறைந்துள்ள பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.

இந்தக் குழுவைச் சேர்ந்த விண்ணியல் பேராசிரியர் சிவசெத்தி இக்கண்டுபிடிப்பு பற்றி கூறும் போது, “பால்வெளி மண்டலங்கள் முழுவதும் கடுமையான வெப்பம் கொண்ட ஹைட்ரஜன் வாயுக்களால் ஆனவை. நாங்கள் கண்டறிந்த பால்வெளி மண்டலங்கள் 900 கோடி ஆண்டுகளில் இருந்து 1300 கோடி ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியவை களாகும். ஆகவே, இவை புதிதாக பிறந்த பால்வெளி மண்டலங்கள் என்று அட்டவனைப் படுத்தியுள்ளோம்.

இந்தப் புதிதாக உருவாகும் பால்வெளி மண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் வாயுக்களின் அழுத்தம் காரணமாக புதிய விண்மீன்கள் தோன்றுகின்றன.

பெருவெளி தோன்றும் போது ஆரம்ப கட்டத்தில் விண்மீன்கள் தோன்றவில்லை. பால்வெளி மண்டலங்கள் உருவாகி  அம்மண்டலத்தில் உள்ள தூசுகள் மீது படிந்த  அதீத அழுத்தம் காரணமாக மய்யப்புள்ளி ஒன்று உருவாகி அம்மய்யப் புள்ளியை சுற்றி பெரிய வாயுக்கோளங்கள் உருவாகிறது. தொடர்ந்து நாங்கள் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம். இதன் மூலம் நமது பெருவெளி தோற்றம் பற்றிய பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.

விண்மீன்களின் பிறப்பு

பால்வெளி மண்டலங்களில் ஒளிர்முகில் கூட்டங்கள் (Nebulae) என்று அழைக்கப்படும் இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே உள்நோக்கி சுருங்கத் தொடங்கு-கின்றன. அவ்வாறு சுருங்கும்போது வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன.

இதனால் மிகபெரிய வாயுகோளங்கள் உருவாகின்றன. இந்த வாயுக் கோளங்களில் இருந்து வெப்பம் மற்றும் கதிர்வீச்சு அடங்கிய மின்காந்த அலைகள் தோன்றுகின்றன. இவை புதிதாக துவங்கிய விண்மீன்களின் அடையாளங்-கள் ஆகும்.  இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே விண்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது.

1988_1992 கம்மா, செபல் என்ற இரட்டை விண்மீன்களைச் சுற்றி வரும் கோள்கள் பற்றி ஆய்வு செய்து மொத்தம் 8 கோள்கள் இருப்பதை உறுதி செய்தனர். இதற்கு HD 114762 A, B, C, D.. என்று பெயர் சூட்டியுள்ளனர். இதில் ஞி என்று பெயர் சூட்டப்பட்ட விண்மீன் நமது வியாழனை விட மிகப்பெரிய கோள் ஆகும்.

1995_1998 எஸ் 1 பகாசி என்ற விண்மீனைச் சுற்றியும் 4 கோள் குழுமத்தைக் கண்டறிந்துள்ளனர்.

பெருங்கரடி விண்மீன் குழுமத்தில் லாம்டா மொஜாரீஸ் என்ற விண்மீனைச் சுற்றி பல கோள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

1998ஆம் ஆண்டு கண்டுபிடித்த விண்மீன் கல்லீஸ் 876 இந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் உள்ளன.

2003ஆம் ஆண்டு HD 209458 என்ற பெயர் கொண்ட விண்மீன் சுமார் 5 கோள்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும் 2005 முதல் 2015 வரை பல வீண்மீன்-கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் இயக்கம் மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க வேண்டு-மல்லவா? எவை தீர்மானிக்கும்? எவை  தீர்மானிக்காது என்பதற்கு என்ன அளவுகோள் உள்ளது? ஆக, சோதிடம் ஒரு மோசடி என்பதை புதிய கண்டுபிடிப்புகள் புலப்படுத்துகின்றன.

எனவே, நம் மீது நம்பிக்கை வைத்து அறிவு வழி செயல்பட்டு வாழ்வை நடத்த வேண்டுமே ஒழிய, சோதிடம், விதி, இராசிக்கல், வாஸ்த்து, பெயர் மாற்றம் என்று ஏமாற்றும் எத்தர்களின் பின்னே அலைவதும், அவர்கள் கூறும்படி நடப்பதும் அறிவிற்கு உகந்த செயல் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *