திராவிட இனம் எழுச்சி பெறூவது உறுதி!
கே : திராவிடர் கழகம் எல்லா மதக் கேடுகளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்க்கின்ற நிலையில், இந்துமத வெறியர்கள் மட்டும் தி.க.வையும் பெரியாரையும் எதிர்ப்பதேன்?
– வ.க.மணி, பஞ்சம்பட்டி
ப : திராவிடர் கழகம் எல்லா மதக் கேடுகளையும் எதிர்ப்பதால், நம்மை ஜாதி காரணமாக சூத்திரர் _ பஞ்சமர் _ பெண்களை பாவயோனியில் பிறந்தவர் என்றெல்லாம் கூறி பேதப்படுத்தும் ஹிந்துமதம், பிறவி இழிவைப் பரப்பும் மதம் என்பதாலும், மிகப் பெரும்பான்மை 87 சதவிகித மக்கள் உள்ள பெரிய அநீதி, மற்ற மதங்களில் மூடநம்பிக்கை மட்டுமே _ பிறவி இழிவு. சூத்திரப்பட்டம் இல்லை என்பதால், அவைகளுக்குரிய விகிதாச்சார எதிர்ப் பிரச்சாரம் என்பதால் ஹிந்துத்துவாவாதிகளும், ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களும் எதிர்க்கின்றனர்.
கே : சமஸ்கிருதத்தைத் திணித்தால் இந்திய ஒருமைப்பாடு வந்துவிடும் என்பவர்கள் கருத்துக்கு தங்கள் பதில்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : ஒரே பதில் _ இந்திய ஒருமைப்பாடு வந்து விடாது; மாறாக சிதைந்துவிடும் என்பது உறுதி.
கே : திராவிடர் கழகம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கம்தானே ஒழிய, சாதி ஒழிப்பு இயக்கமல்ல என்று தமிழ் ‘இந்து’ இதழில் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளது குறித்து தங்கள் பதில் என்ன?
– சீத்தாபதி, தாம்பரம்.
ப : வேரை வெட்டினாலேயே மரமும் கிளைகளும் இலைகளும் தானே விழாதா? _ பரவாயில்லை. உயர்ஜாதி என்றாலே தாழ்ந்த ஜாதி ஒன்று உண்டு என்றாகிறதே. அதை எதிர்ப்பது தி.க.வின் அடிப்படை அல்லவா?
கே : விவேகானந்தரால் வெறுக்கப்பட்ட ஆரிய பார்ப்பனக் கூட்டம் அவரை வைத்தே தங்கள் ஆதிக்கம் வளர்க்க முயலும் சூழ்ச்சியை தமிழ் மக்களுக்கு விளக்கி ஒரு நூல் வெளியிடுவீர்களா?
– க.செல்வமணி, குடந்தை
ப : பார்ப்பனரைத் தோலுரிக்கிறார் விவேகானந்தர் என்று சிறு பாக்கெட் நூல் வெளிவந்துள்ளது. புதிய பதிப்பு தேவைப்பட்டால் வெளிவரும்.
கே : கொலைக்குற்றவாளி சங்கராச்சாரியை பார்ப்பனர்கள் தூக்கிப் பிடிக்கின்ற நிலையில், தமிழர்க்காக 80 ஆண்டுகளாக உழைக்கும் கலைஞரை வீழ்த்தத் துடிக்கும் விவரம் தெரிந்த தமிழர்களுக்குத் தாங்கள் கூறுவது என்ன?
– சு.மதியொளி, சேலம் – 2.
ப : ‘தமிழா! இன உணர்வு கொள்! தமிழா! விபீஷணன் ஆகாதே! கும்பகர்ணனைப் போல் சகோதர பாசத்துடன் வாழ்!’ என்பதே!
கே : இளைய தலைமுறையினர் தற்கொலை செய்துகொள்வது அன்றாட நிகழ்வாகி-விட்ட நிலையில் தீர்வாக என்ன செய்யலாம்?
– தமிழ்மணி, சென்னை-11
ப : ஆங்காங்கு அறிவுரை, தெளிவுரை, தன்னம்பிக்கை ஊட்டுதல் _ செய்தல் வேண்டும்.
கே : தன்னை விரும்பாத பெண் வாழவே கூடாது என்று அயோக்கியர்களும், காலிகளும் களம் இறங்கி, ஒருதலைக் காதல் தறுதலைக் காதலாய் மாறிவரும் போக்கைத் தடுப்பதெப்படி?
– ம.நரசிம்மன், தாம்பரம்
ப : தேவையான பிரச்சாரம்; கடுமையான தண்டனை.
கே : ‘சோ’க்களின் அடுத்த வாரிசுகள் குருமூர்த்திகளாய், பாண்டேக்களாய், ஜெயமோகன்களாய் அணி சேர்த்து பணி தொடங்கிவிட்டார்களே! முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?
– க.அன்பரசன், வேலூர்
ப : இன உணர்வுடன் ஓரணியில் சேர்ந்து ஒரே குரல் கொடுக்க வேண்டும்! எத்தனை பேர் சேர்ந்தாலும் திராவிட இனம் எழுச்சி பெறுவது உறுதி! தடுத்து நிறுத்தவே முடியாது!
கே : ஜாதியொழிப்பு மணங்களை ஊக்குவிக்க மாவட்டந்தோறும், ஜாதிமத மறுப்பு மணவிழாக்களை நடத்தினால் என்ன?
– க.புரட்சிமணி, புதுவை-3
ப : பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் மூலம் (‘மன்றல்’ மணவிழா) நெல்லை துவங்கி, சென்னை வரை நடந்துள்ளதே. தேவைப்படும்போது மீண்டும் துவக்குவோம். ஆலோசனைக்கு நன்றி!