சேலம் சுற்றுவட்டாரம் சுற்றுச்சூழல் மாசில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தெருவில் இறங்கிப் போராடும் களப் போராளி.
இவர் குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து குடியேறிய குடும்பம். இவர் அப்பாவுக்கு டெக்ஸ்டைல் பிசினஸ். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சுற்றுச் சூழலுக்காக போராட்டம் நடத்தியிருக்-கிறார். படிப்பு முடித்து கொசுவலை தொழிற்-சாலை தொடங்கினார். நல்ல லாபம் கிடைச்சது. சுற்றுச் சூழல் ஆர்வலராக இருந்து-கொண்டு பிளாஸ்டிக்கில் உருவாக்கும் கொசுவலையை உற்பத்தி செய்யக்கூடாது என்று முடிவெடுத்து தொழிற்சாலையை மூடிவிட்டு, முழு நேரமும் சுற்றுச் சூழல் மாசுபவடுவதை எதிர்த்து இயற்கையைக் காக்க போராட ஆரம்பித்தார்.
போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு உடனடியாக கிடைத்துவிட்டதா? என்று கேட்டதற்கு, லேசான புன்னகையுடன், “மேட்டூர் காவிரி ஆற்றின் கரையில், மிகப்பெரிய ரசாயன ஆலையின் கழிவுகளைக் கொட்டி காவிரி ஆற்றுக்கே கேடு விளைவித்தார்கள். அதை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி வெற்றி பெற்றேன். கஞ்சமலையில் தாதுக்களைச் சுரண்டி எடுக்க இரண்டு நிறுவனங்கள் ஆயத்தமான-போது மக்களைத் திரட்டி போராடினேன். அதிலும் மக்களுக்கு வெற்றி கிடைத்தது. அதன் பின்னர் மக்களின் ஆதரவும் கிடைத்தது. பல நூறு இளைஞர்கள் என்னுடன் இணைந்து கொண்டனர். தர்மபுரியில் 20 குளங்களை சீரமைத்து அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் ஆதாரங்களைப் பெருக்கியுள்ளோம்’’ என்று சொன்னார், இப்படி இவருடைய தொடர்பயணம் சுற்றுச்சூழலுக்காக சென்று கொண்டிருந்தபோது, சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் பணி ஆரம்பிக்க வேண்டாம். மக்களிடம் உரிய தகவல் தெரிவித்தபின் பணி ஆரம்பியுங்கள் என்று ஜனநாயக வழியில் சேலம் மக்கள் குழு சார்பாக போராட்டம் நடத்தினார்.
பேராடிக் கொண்டிருக்கும்போதே புல்டோசர் வாகனம் குழி பறித்தது. அவர் குழிக்குள் இறங்கிப் போராடினார். உடனடியாக அவரையும், இரு இளைஞர்களையும் போலீஸ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார்கள். சிறை அனுபவத்தை இதோ விவரிக்கிறார். சிறைக்குச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் சிறை அதிகாரி, ‘நீ என்ன பெரிய இவனா?’ என்று கேட்டு கன்னத்தில் அறைந்தார். பிறகு 10 காவலர்கள் வந்து என்னை படுக்க வைத்து இருவர் காலைப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் தொடையில் அடித்துக்கொண்டே இருந்தார்கள். வலி பொறுக்க முடியாமல் கதறினேன். ஏன் அடிக்கிறார்கள் என்று தெரியாமலே அடித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு முன் சிறைக்குப் போயிருக்கிறேன். அவை எனக்கு அனுபவமாகத்-தான் இருந்தது. இந்த முறை கடுமையாக தாக்கப்பட்டதால், இந்த மக்களுக்காகவும் சுற்றுச் சூழலுக்காகவும், போராடியதற்கு இதுதான் பரிசா என்று நினைக்க நினைக்க மனசு வெறுத்துப் போச்சு. அதற்காக இந்தத் தாக்குதல் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றி விடாது. இன்னும் இன்னும் தீவிரமாக மக்களுக்காக போராடுவேன்’’ என்றார் உறுதி குலையாமல்.