பெண்ணால் முடியும்!
ரஷ்யாவில் 1980இல் நடந்த போட்டியில் பி.டி.உஷா ஓடியதுதான் இந்தியா சார்பாக ஒருவர் ஒலிம்பிக் 100 மீட்டர் பந்தயத்தில் கடைசியாகக் கலந்துகொண்டது. அதன்பிறகு 36 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து யாரும் இதற்கான தகுதிகூட பெறவில்லை. இந்த வருடம் ஒலிம்பிக் 100 மீட்டர் பந்தயத்தில் ஓட இருப்பதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆதங்கத்தைத் தீர்த்து வைத்துள்ளார் டுட்டி சந்த்.
2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கு பெறுவதற்குத் தயாராகி வந்தார் டுட்டி.
அப்போதுதான் இடியாக வந்தது அந்தச் செய்தி. தடகளக் கூட்டமைப்பு சர்வதேசச் சங்கம் (மிகிகிதி) டுட்டிக்கு ஆண் தன்மைக்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதாகவும், இனிமேல் டுட்டி போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தடை விதிப்பதாகவும் கூறியது. டுட்டியின் கனவுகளை எல்லாம் தகர்த்துவிட்டனர்.
இதுபோல தடை விதிக்கப்பட்டவர்கள் ஒன்று விளையாட்டில் இருந்து விலகி ஓய்வு எடுக்க வேண்டும் அல்லது ஹார்மோன் மாற்று தெரபி சிகிச்சை செய்ய கட்டாயப்-படுத்தப்படுவார்கள்.
ஆனால், அதனாலெல்லாம் டுட்டி முடங்கிப் போய்விடவில்லை. தடகள கூட்டமைப்பு சர்வதேசச் சங்கத்திற்கு (மிகிகிதி) எதிராக சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். சர்ச்சைக்குரிய மிகிகிதிஇன் விதியை நீக்க வேண்டும் என்ற இவரது நியாயமான போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. இதன்மூலம் வரும் காலங்களில் எந்த ஒரு பெண் வீராங்கனைக்கும் இயற்கையாக டெஸ்-டோஸ்டிரோன் அதிகமாக இருக்கும் பட்சத்தில் போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்க முடியாது என்ற தீர்ப்பு விதிக்கப்பட்டது.
ஒரு வருடப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியை டுட்டியின் குடும்பத்தினர் மற்றும் தடகள விளையாட்டு உலகமும் கொண்டாடியது. ஆனால், டுட்டியோ ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கான அடுத்த இலக்கை நோக்கி ஓடினார்.
கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி நகரில் ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டி சென்ற மாதம் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் சுற்றில் 11.32 விநாடிக்குள் பந்தய தூரத்தைக் கடந்தால்தான் தகுதிபெறலாம். டுட்டி 11.30 விநாடியில் இலக்கை அடைந்தார். அதற்குப் பின் அதே அல்மாட்டி நகரில் நடந்த இறுதிச் சுற்றில் 100 மீட்டரை 11.24 விநாடியில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தன் தேசிய சாதனையான 11.38 விநாடியை ஒரேநாளில் இரண்டு முறை தகர்த்-தெறிந்துள்ளார் டுட்டி.
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் ஒரு சாதாரண நெசவுத் தொழிலாளிக்கு மகளாகப் பிறந்தவர் டுட்டி. இவருக்கு மூன்று சகோதரிகள். அதில் அக்கா சரஸ்வதியும் தடகள வீராங்கனை. இவரைப் பார்த்துதான் டுட்டிக்கு தடகளத்தில் ஆர்வம் துளிர்விட்டது. தனது பதினாறாம் வயதிலேயே 100 மீட்டர் பிரிவில் தேசிய சாம்பியன். 2013இல் நடந்த உலக இளைஞர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியர் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் டுட்டி.
தளராத முயற்சி, உழைப்பு இவற்றால் இந்தியாவிற்கு மட்டுமல்ல, பெண்களுக்கே பெருமை சேர்த்துள்ளார்.