ஆசிரியர் பதில்கள்

ஆகஸ்ட் 01-15

கே :    திராவிடர் இயக்க வரலாற்று நாயகர்கள் மற்றும் திராவிடர் இயக்க முக்கிய சாதனைகள் பற்றிய நிரந்தரக் கண்-காட்சியை பெரியார் திடலில் அமைப்பீர்களா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா

ப :    நல்லயோசனைதான் _ பெரியார் திடலில் இடப்பிரச்சினை ஒரு சிக்கலாக தற்போது உள்ளது. சில கட்டிடங்கள், நூலக விரிவாக்கத்திற்குப் பின் இது சாத்தியப்-படலாம்!

கே :    ‘திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்’ என்று ஓங்கி முழங்கியவர்களை இனி கூட்டு சேர்க்காமல் உறுதியாய் இருப்பதுதானே சரியாகும்?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப :    ‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை’ என்பதுதானே அரசியல் கட்சிகளின் முழக்கம் _ மறந்துவிட்டதா?

கே :    “மனித உரிமை ஆணையம் பல் இல்லாத புலி’’ என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.தத்து கூறியது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– நாத்திகர் சா.கோ., பெரம்பலூர்

ப :    நூற்றுக்கு நூறு உண்மை _ தண்டனைதரும் சட்ட வலிமை அதற்குத் தரப்பட்டால்தான் அந்தப் புலிக்குப் பல் முளைக்கும்!

கே :    அந்தமானில் அர்ச்சகராக இருக்கும் ரமணி அய்யர் திரைப்பட கதை, வசனம், பாடல் எழுதுகிறாராம். (தினமலர் _13.7.16) ஆகம விதிகள் அவாளுக்குக் கிடையாதோ?
– நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

ப :    அவாளுக்கு சட்டம், சாஸ்திரம், ஆகமம் எல்லாம் வளைந்து கொடுக்குமே!

கே :    கங்கை நீரை அஞ்சலகத்தில் விற்கும் மத்திய அரசுச் செயலை தடுத்து நிறுத்த, தமிழகம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமல்லவா?
– சீத்தாபதி, சென்னை-45

ப :    நிச்சயமாக. ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஓரணியில் குரல் கொடுக்க வேண்டும்.

கே :    திராவிடக் கட்சிகளை ஒழிக்க நினைத்து பாடம்பெற்றவர்கள் இனி எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
– வி.கே.மணி, பஞ்சம்பட்டி

ப :    பாடம் கற்றுக்கொண்டவர்களாக இனி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

கே :    பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ். கூட்டி-யுள்ளதை குடியரசுத் தலைவர் அனுமதிக்கலாமா?
– டி.வி.அருள்மொழி, சென்னை-70

ப :    பச்சையான சட்டவிரோதச் செயல் இது! தவறான முன்மாதிரியும்கூட!

கே :    அணு உலையின் அழிவை நன்கு அறிந்த பின்பும் அணு உலைகளை அமைப்பது சரியா?
– க. இனியன், சென்னை-114

ப :    வல்லரசாகும் ஆசை இங்கேயும் பிடித்தாட்டுகிறதே; எனவேதான் கெஞ்சல், கொஞ்சல்  எல்லாம்!

கே :    அய்.ஏ.எஸ். தேர்வில் தேறியவர்களை, ‘கிரீமிலேயர்’ அடிப்படையில் தகுதியிழக்கச் செய்வதைத் தடுத்து நிறுத்தத் தங்கள் செயல்திட்டங்கள் எவை?
– கெ.நா.சாமி, சென்னை-72

ப :    அறப்போர்தான் _ எத்தனைக்குத்தான் செய்வது? நாள்தோறும் செய்ய வேண்டும். நடைமுறையில் சாத்தியமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *