வாழ்நாளெல்லாம் தாழா உழைப்பில்
வயிரமாய் அறுகிப் புகழின் உருவாய் விளங்கும்
வைரமணியே தமிழர் தலைவர் வீரமணியாவார்!
பெயருக்கேற்ற பொருளாய் விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
பகுத்தறிவுத் தந்தை பெரியாரவர்கள் தேர்ந்தெடுத்தளித்த பெரும் பொறுப்பே விடுதலை ஆசிரியர் பணி!
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து தந்தை பெரியார் தந்த சிறந்த பொறுப்பு! சற்றும் பிறழாமல் சொந்த உழைப்பில் தோழமைத் துணையுடன் துடிப்போடு மேலும் மேலும் சிறப்புகள் சேர்த்து விடுதலை நாளிதழ் வெளிவரும் சிறப்பு, வெற்றிமுரசம் கொட்டி முழங்குகின்றது.
பெரியார்தம் பேரன்புக்குரியவர் பண்பாளர், பகுத்தறிவுப் பாசறைப் பரப்பாளர். காற்றாய் உலவுகிறார். கருத்தாய்ப் பொழிகிறார், கழகம் வளரக் காளையர் படையை _ நாளும் நாளும் ஊர்ஊராய்ச் சென்று, உள்ளம் துள்ள வெள்ளைச் சிரிப்புடன், நல்லன கூறி நட்புடன் இளைஞரை ஈர்க்கிறார்.
பகுத்தறிவுப் பேரொளி, தன்மான உணர்ச்சி, சமநீதி வாழ்க்கை நெறி, இளைஞர் இதயங்களில் பதமாகப் பதிக்கும் தலைவர். புதிய தலைமுறை பதியம் போடும் பயிற்சிப் பட்டறை தொடர்ந்திடச் செய்கிறார்.
பெரியாரியல் பயிற்சி முகாம்கள் பெரிதும் பயன்வளர்ப்பன. பரப்புரை, சிறப்புரை, பட்டிமன்றப் பேச்சுப் பயிற்சி, வாதச் சிறப்பு, கொள்கைப் பரப்பு என்று பலப்பல. இவை கொள்கை நாற்றங்கால்கள்!
தென்காசிக் குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம் வள்ளல் வீ.கே.என். வளமனையில் 2016 ஜூலை 2, 3, 4, 5 நாட்களில் சிறப்பாய் நடந்ததை நேரில் கண்டு நெஞ்சம் நிறைந்த பலருள் யானும் ஒருவன்.
தந்தை பெரியாரின் சரியான வாரிசு வீரமணியவர்களும், தோன்றாத் துணையாய்ச் சுழன்று பணியாற்றும் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனாரும், பெரியாரின் பெருங்குடும்ப உறுப்பினர்களும் அயராப் பணி புரிவது கண்டு, அளவற்ற மகிழ்ச்சியில் வியந்தோம்.
உடல்நலம் பற்றி ஒரு சிறிதும் கருதாது ஓய்வு ஒழிவின்றி ஒவ்வொரு நொடியும் உள்ளத் தெளிவும், உணர்ச்சித் துடிப்பும் கொண்டு தலைவர் வீரமணி அவர்கள் முகமலர்ந்து, அகம் மகிழ அனைவரோடும் அன்புடன் பழகிய அழகிய காட்சிகள், அயிரங்கால வளர்ச்சிக்குரிய அடித்தளமாக அமைந்தன!
உள்ளத்து துடிப்புக்கேற்ற உடல்நலம் கூடி, உலகம் போற்றிட
உத்தமத் தலைவர் உண்மைத் தலைவர் உலாவர வேண்டும் என
உளமார வாழ்த்தி வணங்கிப் போற்றுகின்றோம்.
வெள்ளையாம்பட்டு சுந்தரம்,
சேகர் பதிப்பகம், சென்னை-78.