பெண்ணால் முடியும் :

ஆகஸ்ட் 01-15

 

மடையாம்பட்டு கிராமத்திலிருந்து துருக்கிக்கு!

“சாதனைங்கிறது பெரிய விஷயம். ஆனா, முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் இல்ல’’ என்று ஹேமமாலினி சொல்லும்போது, நமக்கும் சில துளிகள் நம்பிக்கை தருகிறார். வேலூர் மாவட்டம், மடையாம்பட்டு கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஹேமமாலினி. ஒடுக்கத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, மாநில, தேசிய அளவிலான ஈட்டி எறிதல் சாம்பியன் என்ற அடையாளத்தை தனதாக்கிக்-கொள்ள, இந்தக் கிராமத்துச் சிறுமிக்குத் துணையாக, அவர் திறமையைத் தவிர வேறெதுவும் இல்லை.

 

“சின்ன வயசுல இருந்தே விளையாட்டுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். எட்டாவது படிச்சப்போ நான் த்ரோ பால் விளை-யாடினதைப் பார்த்த எங்க உடற்பயிற்சி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ‘நல்லா பவரா த்ரோ பண்ணுற’னு சொல்லி, ஈட்டி எறிதல் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சார். ஒன்பதாவதுல இருந்து என்னை மாவட்டப் போட்டிகளுக்கு கூட்டிட்டுப் போனார். போட்டிகளில் விளையாடினப்ப-தான் பொறுப்பு புரிஞ்சது. கடுமையான பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

எங்க பள்ளியில நவீன பயிற்சிக் கூடங்கள் எல்லாம் இல்ல. இருந்தாலும், அப்படி உயர்தரப் பயிற்சி பெற்று வர்றவங்களையும் வெல்லும் திறன் நமக்கு வேணும்னு எனக்கே நானே சொல்லிக்குவேன். இந்த மூணே வருஷத்துல மாநில அளவு, தேசிய அளவுப் போட்டிகளில் தங்கம் வரை ஜெயிச்சது மட்டுமில்லாம, பல சாதனைகளையும் நிகழ்த்தினேன்’’ என்று சொல்லும் ஹெமமாலினியின் வெற்றி புரொஃபைல், பிரமாதம்.

2014இல் அய்தராபாத்தில் நடந்த அய்ந்து மாநிலங்கள் கலந்துகொண்ட தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் 38.05 மீட்டர் சாதனை.

2015இல் ஜார்கண்டில் நடந்த 16 வயதுக்கான ஸ்டூடன்ட் ஜூனியர் நேஷனல் அத்லெட்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் 39.69 மீட்டர் சாதனை.

2015இல் கும்பகோணத்தில் நடந்த ஜூனியர் ஸ்டேட் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் 40.98 மீட்டர் சாதனை.

2015இல் கோயம்புத்தூரில் நடந்த ஜூனியர் ஸ்டேட் போட்டியில் தங்கம்.

2015இல் ஆந்திரப்பிரதேசம், காக்கிநாடாவில் நடந்த சவுத் ஸோன் போட்டியில் தங்கம்.

இப்படியாக 8 தங்கம், 3 வெள்ளி உள்பட இதுவரை 13 பதக்கங்கள் வென்றுள்ளார் ஹெமமாலினி.

“போட்டிகளுக்காக தமிழ்நாடு தாண்டி இந்த மாநிலங்களுக்கு எல்லாம் போனதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த முயற்சிக்கும், வெற்றிகளுக்கும் பரிசாதான் அடுத்த மாதம் துருக்கியில, சர்வதேச அளவில் நடக்கவிருக்கிற பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டியில கலந்துக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. சந்தோஷம், பெருமை எல்லாத்தையும்விட, பொறுப்புதான் அதிகமாகி-யிருக்கு. எங்க ஸ்கூல் கிரவுண்ட்லதான் கடுமையா பயிற்சி எடுக்கிறேன். நிச்சயமா ஜெயிச்சு எங்க பள்ளிக்கூடத்துக்கு, கிராமத்துக்கு, நம்ம நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்!’’ என்கிறார்.

வெற்றி தொடரட்டும்… வழியெங்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *