சுவடுகள்

ஜுலை 16-31

சமூகநீதிக் களத்தில் சரித்திர நாயகர்கள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புதிய கட்டுரைத் தொடர் ‘விடுதலை’ நாளேட்டில்…
சரித்திரம் என்பது திராவிட இயக்கம் உருவான 100 ஆண்டுகளாக ஒரு தனித்தடத்தில் சென்று கொண்டுள்ளது. அந்தத் தடம் ஒரு பயணப் பாதையல்ல; அது முழுவதும் போராட்டக் களம்! சாதனையின் மைல்கற்கள், வாகையூர்கள் என்று வழிநெடுக ஏராளம்!

அப்படிப்பட்ட சரித்திரமும், சாதனையும், வெற்றியும் அதுவாக வந்தவையல்ல. அரிய வியூகங்கள், பெரிய தியாகங்கள், உரிய முயற்சிகள் அரும்பெரும் தலைவர்களால் மேற்கொள்ளப் பட்டமையால் கிடைத்தவை.
காடும் கரம்பும், மலையும் மடுவும், குண்டும் குழியும், ஓடை உடைப்புமாய் ஒழுங்கற்றுக் கிடந்ததையே, பீடுநடைபோடும் வகையில் ஆக்கித் தந்தனர். அந்தத் தடத்தில் சுகமாய் பயணம் செய்யும் இன்றைய இளைஞர்களுக்கு, இது உருவாகும் முன் இருந்த அவலம், ஆதிக்கம், அடிமைத்தனம், இழிவு, கேவலம், இழப்பு, பாதிப்பு, கொடுமை, கோரம் எதுவும் தெரியாமையால், புரியாமையால், இன்று “மாற்றம்’’, “வளர்ச்சி’’ என்ற மாய வலையுள் எளிதில் சிக்கி, எதிரிகளையே ஆட்சி பீடத்தில் அமர்த்தும் பிழையைச் செய்கின்றனர். எதிரிக்குத் துணை நிற்பதோடு, தம்மவரையேத் தாக்குகின்றனர்!

எனவே, இந்த மாயத்திரையை அகற்றி, அவர்களுக்கு உண்மை ஒளி, உகந்த வழி காட்டிட, நமக்குற்ற இழிவு நீக்கி ஏற்றம் தந்த, மடமை நீக்கி மாற்றம் தந்த, ஆதிக்கம் ஒழித்து சமவுரிமை அளித்த சரித்திர நாயர்களைப் பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், கட்டாயத் தேவைகருதி ‘விடுதலை’ நாளேட்டில் ஞாயிறு, புதன் கிழமைகளில் எழுதும் ஒப்பற்ற, உன்னத வரலாற்றுப் பதிவே (பாடமே) இத்தொடர். தவறாது படியுங்கள்; பரப்புங்கள்!

——————————————————————————————————————————————————————————

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.  முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் சென்றவர் – முதன்முதலில் சட்டமன்றத் துணைத் தலைவர் என்ற பெருமைகளுக்கு உரியவர்.

நீதிக்கட்சியின் பிரதமர் பனகல் அரசரின் உதவியால் லண்டன் சென்று மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்டார். சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலேயே அவுஸ் சர்ஜனாகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆட்சியில், சுப்ராயன் பிரதமராக இருந்தபோது 1929 பிப்ரவரி 2ஆம் நாள் பெண்களைக் கோயில்களில் பொட்டுக் கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்தார். சத்தியமூர்த்தி போன்ற தேசியப் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். தந்தை பெரியாரோ பேராதரவு காட்டினார்.

“தொன்று தொட்டு வருவது தேவதாசி முறை; தேவதாசியாக இருப்பதால் அடுத்த ஜன்மத்தில் மோட்சம் கிடைக்கும்’’ என்றார் சத்தியமூர்த்தி அய்யர். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “இதுவரை எங்கள் சமூகம் மோட்சம் பெற்றது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து மோட்சத்தை அடையலாமே!’’ என்று பதிலடி கொடுத்தார் முத்துலட்சுமி அம்மையார். சத்தியமூர்த்தி அய்யர் வாயடைத்து நின்றார். சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அவர் அடிக்கல் இட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அடையாறு ஆலமரம் போல ஆதரவு கரங்கள் நீட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கிறது. இத்தனை சிறப்புகளுக்கும் உரிய அம்மையார் அவர்கள் 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 இல் உயிர் நீத்தார்

——————————————————————————————————————————————————————————

ஓ.தணிகாசலம்

ஓ.தணிகாசலம் செட்டியார் 1875ஆம் ஆண்டில் வடசென்னையில் பிறந்தவர். மிகச் சிறந்த வழக்குரைஞர்.
நீதிக்கட்சியின் முக்கிய தலை வராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும், நீதிபதி யாகவும் ஒளி வீசிய பெருமகனார் இவர்.  இவர்தான் முதன்முதலில் 1921இல் வகுப்புரிமை தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். சென்னை தியாகராயர் நகர் பகுதியில் ஒரு தெரு ஓ.தணிகாசலம் (செட்டியார்) என்ற பெயரில் விளங்குகிறது.

1875இல் பிறந்த தலைசிறந்த நீதிக்கட்சித் தமிழரான இவர் 29.7.1929 மறைவுற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *