Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள்

வெற்றிகரமாக நுழைந்தது ஜுனோ தனது விடுதலை நாளில் அமெரிக்கா சாதனை.!

வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் அமெரிக்காவின் “ஜூனோ’ விண்கலம் 05.07.2016 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நுழைந்தது.

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழனில் வேதிப் பொருள்கள், அதன் ஈர்ப்பு விசை, காந்தப் புலம், அந்த கிரகம் எவ்வாறு உருவானது போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாஸா “ஜூனோ’ என்ற விண்கலத்தை கடந்த 2011-ஆம் ஆண்டு செலுத்தியது.

சூரிய சக்தியில் இயங்கும் அந்த விண்கலன் அய்ந்து ஆண்டுகளாக 2,800 கோடி கி.மீ. பறந்து சென்று வியாழன் கிரக சுற்றுப் பாதைக்குள் 05.07.2016 அன்று நுழைந்தது.

அதையடுத்து, நாஸாவின் கட்டுப்பாட்டு மய்யத்திலிருந்து அந்த விண்கலத்தின் முக்கிய என்ஜினை விஞ்ஞானிகள் உயிர்பெறச் செய்தனர்.

சுமார் 35 நிமிடங்களுக்கு அந்த என்ஜினை இயக்கி, திட்டமிட்ட வட்டப் பாதையில் ஜூனோ விண்கலத்தை நாஸா விஞ்ஞானிகள் வெற்றிகரமாகச் செலுத்தினர்.

110 கோடி டாலர் (சுமார் ரூ.7,150 கோடி) செலவில் ஜூனோ விண்கலத்தை அனுப்பிய அமெரிக்கா, தனது சுதந்திர தினமான திங்கள்கிழமை (ஜூலை 4) இரவு 11.53 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்-கிழமை காலை 9.23 மணி) அதனை வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தி-யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வியாழன் கிரகத்தைச் சுற்றத் தொடங்கியுள்ள ஜூனோ விண்கலம், அதில் பொருத்தப்பட்டுள்ள 9 ஆய்வுக் கருவிகள் மூலம் அந்த கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும். வாயுவால் ஆன அந்த கிரகத்திற்கு திட வடிவ மய்யம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை இந்தக் கருவிகள் ஆராயும்.

மேலும், அந்தக் கிரகத்தின் காந்தப் புலன்கள், நீர் மற்றும் அமோனியா வாயுவின் அளவு போன்றவை குறித்த ஆய்வுகளையும் ஜூனோ விண்கலம் மேற்கொள்ளும்.

வியாழனைப் போன்ற பெரும் கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன, சூரியக் குடும்பத்தில் பூமி போன்ற பிற கோள்கள் ஒருங்கிணைந்-திருப்பதில் அந்தக் கோள்களின் பங்கு என்ன என்பன போன்ற புதிய தகவல்களைப் பெற ஜூனோ விண்கலம் மேற்கொள்ளும் ஆராய்ச்சி உதவும் என்று நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.