பிளஸ் டூ முடித்தவர்களுக்கு கடற்படையில் பி.டெ.க் படிக்க வாய்ப்பு

ஜுலை 16-31

பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்கள் இந்தியக் கடற்படையில் இணைந்து பி.டெக். படிக்கலாம். படிக்க எந்தச் செலவும் இல்லை. படித்து முடித்த பின் இந்தியக் கடற்படையில் ரூ.75 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பும் கிடைக்கும்.

இந்தியக் கடற்படையில் பணியாற்ற விரும்பும், பிளஸ் டூ முடித்த மாணவர்கள், நான்கு ஆண்டு பி.டெக். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். படிப்பினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, பி.டெக். பட்டமும், இந்தியக் கடற்படையில் சப்-_லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியும் வழங்கப்படும். அதாவது, தொடக்க நிலையில் 75 ஆயிரம் ரூபாய் ஊதியமும் மற்ற சலுகைகளும் கிடைக்கும்.

பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் டூ வகுப்பில், ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். பிளஸ் டூ படித்துவிட்டு ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வை எழுதியுள்ள மாணவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். என்.சி.சி. மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

பதினேழு வயதிலிருந்து பத்தொன்பதரை வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். பார்வைத் திறன் குறைபாடுகள் இருக்கக் கூடாது. உடலில் பச்சை குத்தி இருக்கக் கூடாது.

மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிவாய்ந்த மாணவர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். முதல் கட்டத் தேர்வில் இன்டலிஜென்ஸ், பிக்ச்சர் பெர்சப்ஷன் ஆகியவை குறித்த தேர்வும் குழு கலந்தாய்வும் இருக்கும். இரண்டாம் கட்டத் தேர்வில் உளவியல் தேர்வு, குரூப் டெஸ்டிங் மற்றும் நேர்காணல் தேர்வு இருக்கும்.

இந்த இரண்டு கட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். இதில் தகுதி பெறும் மாணவர்கள், கேரளத்தில் உள்ள எழிமலா கடற்படை அகாதெமியில் பயிற்சிக்கு சேர்க்கப்படுவார்கள். அங்கு பி.டெக் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் அல்லது பி.டெக். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

படிப்புக் காலத்தின்போது, இந்தியக் கடற்படையில் துறை சார் பயிற்சியும் வழங்கப்படும். படிப்புக் கட்டணம், உணவுக் கட்டணம், தங்குமிடம், புத்தகக் கட்டணம், சீருடை அனைத்தும் இந்தியக் கடற்படையே பார்த்துக் கொள்ளும். வெற்றிகரமாக படிப்பினை முடித்தவர்களுக்கு, தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக். பட்டத்தை வழங்கும்.

இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து உரிய சான்றிதழ்களில் சுயகையொப்பமிட்டு  அனுப்பிவைக்க வேண்டும். இதுகுறித்த முழு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 20.7.2016.
விவரங்களுக்கு:
www.joinindiannavy.gov.in n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *