அய்யாவின் அடிச்சுவட்டில் 158 கி,வீரமணி
பிற்படுத்தப்பட்டோர் தலைமை இந்திய அரசியலை கைப்பற்றப் போகும், “பிரதமர் சரண்சிங் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை ‘விடுதலை’ இதழின் வாயிலாக தெரிவித்துக்கொண்டோம்.
“திரு. சரண்சிங் அவர்கள் பிரதமராவதன் மூலம் பெரியார் நூற்றாண்டில் சரித்திரத்தில் ஒரு புதிய திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 33 சதவீதம் எல்லா உத்தியோகத்திலும் வழங்கப்படல் வேண்டும் என்ற ஜனதா தேர்தல் அறிக்கையின் (1977) கர்த்தா இவர்தான் என்பதும், அவருக்கு இருந்த கட்டுக்கள் நீங்கி அவர் சுதந்திரமாக செயல்பட்டால் அது லட்சியம் என்ற நிலையிலிருந்து மாறி நடைமுறையாகி விடும் நல்ல மாற்றத்தை நாம் காணமுடியும்.
கர்நாடக மாநில முதல்வர் திரு.தேவராஜ் அர்ஸ் அவர்கள் துவக்கியபடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் பொற்காலம் இனி உதயமாகிறது என்ற நிலையில் இந்திய அரசு சமூகநீதி கண்ணோட்டத்தில் செயல்பட வேண்டும் என, நாம் விரும்பும் சவுத்திரி திரு.சரண்சிங் அவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக நமது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ராம் நரேஷ் யாதவ், கர்ப்பூரி தாகூர், மற்றும் தேவிலால் போன்றவர்களது அமைச்சரவையை நிலைக்கவிடாமல் செய்த பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் திரு.சரண்சிங் அவர்கள் தலைமையில் அமையும் அமைச்சரவையை விட்டு வைத்து விடும் என்று எதிர்பார்க்க முடியுமா?
புதிய பிரதமர் இதனை அறியாதவர் அல்ல. ஆனால், எப்படி எது நிகழ்ந்தாலும் இந்திய துணைக் கண்டத்தில் ஏற்பட்டுவரும் பிற்படுத்தப்பட்டவர்களின் எழுச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது.
முன்பே, “இராவணன் சரண்சிங்” என்று இவரை வர்ணித்தவர்கள் இனி எப்படி நடப்பார்கள் என்பதை விளக்க வேண்டுமா?
மத்தியில் ‘இராமன்’ ஆட்சிமாறி, ‘இராவணன்’ ஆட்சி வருவது என்ன சாதாரணமான மாற்றமா? மிகப் பெரிய ‘மவுனப் புரட்சி’ அல்லவா?
தென்திசையைப் பார்த்து சிந்தைக-ளெல்லாம், தோள்கள் எல்லாம் பூரித்ததுபோல், இப்போது வடதிசையை பார்த்தும் பூரிப்பும், பெருமிதமும் கொள்ளும், புதிய சரித்திரம் படைக்கும் இராவணன் ஆட்சிக்கு நாம் முதல் வாழ்த்துக்களை சொல்லாமல் வேறு யார் சொல்வது?’’ என்று அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருந்தேன். இதனை ‘விடுதலை’ இதழில் 27.07.1979 அன்று இரண்டாம் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். மேலும், ஒரு வாழ்த்துத் தந்தியும் அனுப்பியிருந்தோம். சில நாட்களில் சரண்சிங் அவர்கள் இராஜினாமா செய்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் தேரடி வீதியில் வகுப்புரிமைப் பேரணி பொதுக்-கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். இந்த நிகழ்ச்சி 14.08.1979 அன்று நடைபெற்றது. நான் உரையாற்றும்-போது, “இந்த தேதிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் உண்டு. 1925இல் அய்யா காஞ்சிபுரம் மாநாட்டில் வகுப்புரிமைக்காகப் போராடி, -காங்கிரஸ் கட்சியிலே பார்ப்பன ஆதிக்கம் மிகுந்துவிட்டது என்பதைக் சுட்டிக்காட்டி வெளியேறி வகுப்புரிமைக்காகவே போராடினார்கள். 60 ஆண்டுக்கால சரித்திர பின்னணி இந்த வகுப்புரிமைக்கு உண்டு.
அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவிலே 4 பார்ப்பனர்கள் இருந்தார்கள்! அதிலே ஒருவர்தான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே, அரசியல் சட்டப் பிரிவை எதிர்த்து வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து தனது பார்ப்பன இனத்துக்காக நீதிமன்றத்தில் வழக்குரைஞராக வந்து வாதாடினார். அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரே நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வாதாடினால் நீதிபதி நிலையில் இருப்பவர்கள் எனன செய்ய முடியும்? வகுப்புவாரி உரிமை செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார்.
14.8.1950 இதே நாளில் 1950ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கடற்கரையிலே வகுப்புரிமை கோரி தந்தை பெரியார் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசினார். மாபெரும் ஊர்வலம் ஒன்றும் இதே நாளில் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் தந்தை பெரியார் அவர்களே நடந்து வந்தார்! எனவே, இந்த நாளுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் உண்டு.
1951இல் தந்தை பெரியார் கொடுத்த குரலால், அன்றைக்கு அரசியல் சட்டம் முதன்முதலாக திருத்தப்பட்டது! அந்தத் திருத்தத்தை நேருவும் ஆதரித்தார்! தமிழ்நாட்டில் காமராசரும் ஆதரித்தார்! தநதை பெரியாரின் பெரு விருப்பப்படி வந்ததுதான் அரசியல் சட்டத்தில் 15(4) பிரிவு!
இந்த அடிப்படையிலே ‘பிற்படுத்தப்-பட்டவர்கள்’ யார் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்! “கல்வி மற்றும் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் தான்’’ பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டது.
இந்த “கல்வி மற்றும் சமூக ரீதியாக’’ பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற திருத்தம் ஏதோ திடீரென்று வந்துவிட்டது அல்ல! மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி. சட்டப்பிரிவிலே சமூக ரீதியாகவோ அல்லது கல்விரீதியாகவோ என்றுகூட கூறப்பட-வில்லை, சமூக ரீதியாகவும் என்று கூறப்பட்டிருக்கிறது. இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது. இன்றைக்கு தமிழ்நாடு அரசு போட்டிருக்கும் 9 ஆயிரம் ரூபாய் உத்தரவு இருக்கிறதே அது சமூகநீதிக்குப் புறம்பானது, நியாயத்துக்கும் புறம்பானது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பிறவியின் பெயரால் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. உலக நாடுகளில் வர்க்கப் பிரிவுதான் இருக்கிறது. ஆனால், இந்த நாட்டில்தான் பிறக்கும்போதே பார்ப்பான் பிறக்கிறான். பிறக்கும்போதே ‘சூத்திரன்’ பிறக்கிறான். செத்த பிறகும் இங்கே ஜாதி விடுவதில்லை.
சுடுகாட்டில்கூட இங்கே ‘பார்ப்பான் சுடுகாடு’, ‘பறையன் சுடுகாடு’ இருக்கிறது!
32 ஆண்டுகால “சுயராஜ்யத்’துக்குப் பிறகும் இன்னும் இந்த நாட்டில் ‘பார்ப்பான்’ பிறக்கிறான், ‘சூத்திரன்’ பிறக்கிறான்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த டாக்டர் அம்பேத்கார் அரசியல் சட்டமேதை-தான்! ஆனாலும், ஜாதியில் அவர் தாழ்த்தப்பட்டவர்தான்! உயர்ஜாதியினர் வாழும் பகுதியிலே அவர் குடியிருக்க வீடு கிடைக்கவில்லை. இதுதான் சமூக பிற்போக்குத் தன்மை என்பது.
ஒரு சலூன்காரருக்கு மாதம் 800 ரூபாய் வருமானம் கிடைக்கலாம். அதனால் சமூகத்தில் அவர் முன்னேறியவராக ஆகிவிடுவாரா? சென்னையிலே நவீன சாதனங்களுடன் ஏர்கண்டிஷன் வசதியோடு முடிவெட்டும் நிலையங்கள் இருக்கின்றன. முடிவெட்டிக் கொள்கிறவன் வீட்டுக்குப் போனவுடன் குளிக்கிறான். எதற்காக? தூய்மைக்காகக் குளிப்பதாகச் சொல்லலாம் ஆனால், காரணம் அதுவல்ல. சமூகத்தில் ஜாதியால் “தாழ்த்தப்-பட்டவர்’’ கடைக்குச் சென்றுவந்ததால் பலர் குளிக்கிறார்கள்.
ஒரு அம்பேத்கார் உயர்ந்திருக்கலாம்! ஒரு ஜோதி அம்மாள் இன்றைக்கு கவர்னராக இருக்கலாம். அதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயம் முழுதுமே முன்னேறி விட்டதாகவே அதனால் சொல்ல முடியுமா?
இந்த ஜாதி காரணமாகத் தானே நமக்கு கல்வி மறுக்கப்பட்டது? இந்த ஜாதி காரணமாகத்தானே இந்த சமுதாயம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது!
இதைச் சொன்னால் பார்ப்பனரில் ஏழைகள் இல்லையா என்கிறார் நமது முதலமைச்சர்! உண்மைதான்! பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கிறார்கள், குடந்தையில் “பிச்சை பிராமண தெரு’’ என்று ஒரு வீதியே இருக்கிறது! ஆனால், தற்குறிப் பார்ப்பான் எவனாவது இருக்கிறானா?
கையெழுத்துப் போடத் தெரியாத மொட்டைப் பாப்பாத்தி யாராவது உண்டா?
நமது ஆட்களிலே பலர் லட்சாதிபதியாகக்-கூட இருக்கலாம்; ஆனால், பலர் கைநாட்டுப் பேர்வழிகளாகத்தானே இருக்கிறார்கள்.
இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
‘சூத்திரன் படிக்கக் கூடாது’ என்றுதானே மனுநீதி கூறியது! ‘படிப்பது அவன் கடமை, உழைப்பது நமது கடமை’ என்ற நிலைதானே இருந்தது?
கடின உழைப்புக்கு ஈடுஇணையில்லை என்று இன்றைக்கு அவன் _ உழைக்காத அந்தக் கூட்டம் நமக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது அதுதான் வேடிக்கை.
விவசாயம் செய்வதே பூமாதேவிக்கு செய்யும் பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டது! அதன் காரணமாகத்தான் பார்ப்பான் ஏர் பிடிக்கவில்லை. இன்றைக்கு ஏர் பிடிக்கும் பார்ப்பான் எங்கேயாவது இருக்கிறானா? நாற்று நடும் பாப்பாத்தி உண்டா?
நமது சமுதாயம் கல்வியில் பின்னடைந்து கிடக்கிறது என்றால் என்ன காரணம்? அதற்கு ஒரு சரித்திரப் பின்னணி உண்டு. இதோ, என் கையில் இருக்கிறது. “ஒப்பியமொழி’’ நூல்! தேவநேய பாவாணர் அவர்கள் இதை எழுதியிருக்கிறார். இதிலே ஒரு செய்தி வருகிறது 1610 ஆண்டு மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் இருந்த நிலைபற்றி ராபர்ட் டி.நொபிலி என்பவர் ஒரு குறிப்பை எழுதி வைத்திருக்கிறார். 1610ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி எழுதப்பட்ட குறிப்பு இது இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
மதுரை நகரத்திலே 10 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு வகுப்புகளிலே படித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வகுப்பிலும் 200 முதல் 300 வரை மாணவர்கள் படித்தனர். அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்களே! இந்த 10 ஆயிரம் மாணவர்களிலே ஒருவர்கூட பார்ப்பனரல்லாதவர் கிடையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமும் அதிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்ன காரணமென்றால் உயர்கலைகளை கற்க பார்ப்பனர்களுக்குத்தான் உரிமை உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் நமது சமுதாயத்தின் சரித்திரம்!
சரசுவதி பூஜை கொண்டாடும்போது கூட அதைப் பார்ப்பனர்கள்தான் வைத்துக் கொண்டார்கள். நமக்கு உடைந்துபோன அரிவாளைக் கொடுத்து ஆயுத பூசை கொண்டாடச் சொல்லிவிட்டார்கள். கோயிலிலே-கூட வெளியே இருக்கும் பெரிய மணியை, நமது ஆள்தான் படாதபாடுபட்டு இழுத்துக் கொண்டிருப்பான்! உள்ளே கர்ப்பகிரகத்திற்குள் நிற்கும் பார்ப்பான் சிறிய மணியை கையிலே வைத்துக்கொண்டு சுலபமாக ஆட்டிக் கொண்டிருப்பான்! இப்படி கடினமான வேலை எல்லாம் நமக்கு, உடல் உழைப்பில்லாத சொகுசான வேலைகள் எல்லாம் அவனுக்கு இப்படிப்பட்ட மக்களாக இருந்ததுதான் நமது சமுதாயம்! இதைத் தட்டிக் கேட்கத்தான் நீதிக்கட்சி வந்தது. சமுதாய நீதியை நிலைப்படுத்துவதற்குத்தான் தந்தை பெரியார் வந்தார்!
50 ஆண்டுகளுக்கு முன் நமது சமுதாயத்தில் இருந்த மிகப் பெரிய உத்தியோகம் கான்ஸ்டபிள்தான்! அதற்கு மேலே இருந்தால் ஏட்டு அய்யா! இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் அய்.ஜி.க்களாகவும், நீதிபதிகளாகவும் உயர்ந்த பதவிகளிலும் இருக்கிறார்கள் என்றால் தந்தை பெரியாரின் இடையறாத கடும் உழைப்பு! கம்யூனல் ஜி.ஓ. என்ற படிக்கட்டு தந்த ஏற்றம்! அந்தப் படிக்கட்டு இன்றைக்கு அடித்து நொறுக்கப்-பட்டிருக்கிறது. ஒரே ஒரு உத்தரவால், போராடிப் பெற்ற உரிமை, மின்னல் வெட்டு கண்ணைப் பறித்தது போல் ஒரே உத்தரவில் பறிக்கப்-பட்டுவிட்டது.
பொருளாதாரத்தையும் கணக்கில் எடுக்கும் காலம் வந்துவிட்டது என்கிறார் எம்.ஜி.ஆர்! சட்டத்தை மீறியே இந்த உத்தரவு போடப்-பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டிருக்-கிறார். இருக்கிற சட்டத்தின்மீது மேலும் ஒரு சட்டம்“Super-impose” என்றாலே இருக்கிற அடிப்படையை பறிக்காமல்இருக்க வேண்டும் என்பதுதானே பொருள்? அடிப்படையையே பறித்துவிட்டு “Super-impose” என்று சொல்ல முடியுமா?’’ என்று அன்று தமிழக அரசின் ஆணைக்கு எதிராக அன்று கேள்வியை எழுப்பினேன்.
கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்னை மாவட்ட திராவிடர் கழக மாணவர் கழக தலைவராக இருந்த வழக்குரைஞர் வீரசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்காரவேல் மாவட்டத் துணை அமைப்பாளர், கோ.அன்பு பி.ஈ., வந்தியத்தேவன் பி.ஏ., சுதர்னன் (தி.மு.க.), எஸ்.குமார் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்), வழக்குரைஞர் சத்தியேந்திரன், எஸ்.பி.தட்சிணாமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் ரகுமான்கான், தா.பாண்டியன், தலைமைக் கழகப் பொறுப்பாளர் நெல்லிக்குப்பம் சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், பல்வேறு கட்சி தொண்டர்கள், கழக தோழியர்கள், தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பு செய்தனர் அன்று.
கடற்கரை முழுவதும் மக்கள் கடல் போல் கருஞ்சட்டைகள் கூட்டமும், கழக முன்னணியினர்களும், பொதுமக்கள் பெருந்திரளாகவும் கலந்துகொண்டனர். தி.மு.க. தோழர்கள் பெருமளவில் கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடியாக 9000 ரூபாய் வருமான வரம்பு கட்டி போடப்பட்ட புதிய ஆணைக்கு சில சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளைக் காட்டி நேரிடையாக நமது தமிழ்நாட்டின் நிலைமைக்கு அவை பொருந்தாவிட்டால்கூட நியாயப்படுத்த தமிழக அரசு முயன்றது. இதனை தெளிவுபடுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்தினை இங்கு பதிவு செய்வது நியாயமாக இருக்கும் என்பதால் 23.8.1979 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறோம். அதனை அப்படியே இங்கு தருகின்றேன்.
“பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தரப்படும் சலுகையை ஏதோ அரசு போடும் பிச்சை என்பது போலவும்கூட வாய்ப்பு நேரிடும்போது அரசினர் கூறுகின்றனர். அரசியல் சட்டப்படி உள்ள நிலவரம்பற்றி முன்னாள் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி திரு.சுப்பராவ் அவர்கள் (A.I.R.) 1964 ஷி.சி. 179) என்பதில் 189ஆம் பக்கத்தில் 23ஆவது பாராவில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கருத்தினை இங்கு அதற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவது, படித்தவர்களிடையே உள்ள மயக்கம் நீங்க வழியாகும்.
அதுபோலவே சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு. சி.கி. வைத்தியலிங்கம் அவர்கள் (A.I.R. 1972 S.C பக்கம் 1375) குறிப்பிட்டிருப்பதும் முக்கியம் ஆகும்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த திரு.சுப்பாராவ் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:
Chief Justice Subba Rao. as he then was, observed in a Judgment reported in AIR 1964 SC 179 at Page 189 in Para 23:
Para-23: Article 14 lays down the General Rule of Equality. Article 16 is an instance of the application of the General Rule with special reference to opportunity or appointments under the State. It says that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State. If it stood alone, all the Backward Communities would go to the walls in a society of uneven basic social structure. The said rule of equality will remain only a utopian conception unless a practical content was given to it. Its strict enforcement brings about the very situation it speaks to avoid. To make my point clear, take the illustration of a Horse Race. Two horses are set down to run a race-one is a first class race horse and the other is an ordinary one. Both are made to run from the same starting point. Though theoretically they are given equal opportunity to run the race, in pratice, the ordinary horse is not given equal opportunity to compete with a race horse. Indeed, that is denied to it, so a handicap may be given either in the nature of extra weight, or to start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one. The same difficulty has confronted the makers of the Constitution at the time it was made. Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom. It would be well neigh impossible to raise ther standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance, if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is why the makers of the Constitution introduced clause 4 in Article 16. The expression “nothing in this article” is a legislative devise to express is intention in a most emphatic way that the power conferred thereunder is not limited in any way by the main provision but falls outside it. It has not really carved out an exception. but has preserved a power untramelled — other provisions of the Constitution.”
தலைமை நீதிபதி சுப்பாராவ் அவர்களின் தீர்ப்பின் தமிழாக்கம்
“பிரிவு 14, சமத்துவத்தைப் பற்றி மட்டும் குறிக்கிறது. விதி 16, சமத்துவம் பற்றிக் குறிப்பிடுவதோடு அரசால் அளிக்கப்படும் வாய்ப்புக்களையும் உத்தியோகங்களையும் சிறப்பாகக் குறிப்பதாகும்.
அந்த விதி அரசுப் பதவிகளில் எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்பு உண்டென்று அறிவிக்கிறது.
இந்த விதி மட்டும் நடைமுறையில் இருக்குமானால் எல்லாப் பிற்படுத்தப்பட்ட மக்களும் சம நிலையில்லாத உயர்வு தாழ்வு கொண்ட சமுதாய அமைப்பிலே ஒதுக்கித் தள்ளப்படுவார்கள். இந்த விதிக்கு ஒரு பயனுள்ள நடைமுறை வழி அமைக்கப்பட வில்லையென்றால் அது நடப்புக்கு வராத ஒரு கற்பனைக் கருத்தாகவே நிற்கும். இந்த விதியைக் கண்மூடித்தனமாக நடைமுறைப்படுத்தினால் இது எதைத் தவிர்க்க வேண்டுமென்று வற்புறுத்துகிறதோ அதே நிலையை நிரந்தரப்-படுத்திவிடும்.
என்னுடைய கருத்தைத் தெளிவுபடுத்த ஒரு குதிரைப் பந்தயத்தை உதாரணம் காட்ட விரும்புகிறேன். இரண்டு குதிரைகள் ஓட்டப் பந்தயத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஒன்று முதல்தரமான பந்தயக் குதிரை, மற்றொன்று மிகச் சாதாரணமானது, இரண்டும் ஒரே இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்குகின்றன. தத்துவப்படி இரண்டுக்கும் சமவாய்ப்பு கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்-பட்டாலும் நடைமுறையில் சாதாரணக் குதிரையும், பந்தயக் குதிரையும் போட்டியிடுவது சமவாய்ப்பு ஆகாது. உண்மையில் அந்த வாய்ப்பு சாதாரணக் குதிரைக்கு மறுக்கப்படவே செய்கிறது. ஆதலால் பந்தயக் குதிரை மேல் அதிகமான சுமையையேற்றியோ, சற்றுப் பின்னுக்குத் தள்ளி நிறுத்தி ஓடவைத்தோ பந்தயத்தை நடத்தவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சமத்துவமாக சம வாய்ப்புடன் நடத்தப்படுவதாகக் கூறப்படும் போட்டி எனும் கூத்து உண்மையான போட்டியாகச் செய்யப்படும்.
இதே பிரச்சினை அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் முன்னாலும் வந்தது. பல்லாயிரம் ஆண்டுகாலமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொடுமையும் பழகிப்போன அடிமைத்தன்மையும், நமது சமுதாயத்தின் பெரும்பான்மையான மக்கள் பிரிவினரை கொத்தடிமை நிலைக்கே தள்ளிவிட்டது. இந்த சமவாய்ப்புத் தத்துவத்தை இங்கு பயன்-படுத்தினால் இவர்களை முன்னேற்றுவ-தென்பது நினைக்கவே முடியாததாகிவிடும். தங்கள் கால்களிலேயே இவர்கள் நிற்கும் காலம் வரும்வரை திறந்த போட்டியில் மற்ற ‘பந்தயக் குதிரைகளோடு’ போட்டியிட்டு வெற்றியடையும் வாய்ப்பு இவர்களுக்கென்று தனிச்சலுகைகளை கொடுத்தாலொழிய கிட்டாது.
அதனால்தான் அரசியல் சட்டத்தை வரைந்தவர்கள் 16ஆம் விதியில் 4ஆம் உட்பிரிவைச் சேர்த்தார்கள். “இந்த விதியில் எதுவும்” இல்லை என்னும் குறிப்பு, 16ஆவது விதியை மட்டும் அப்படியே நடைமுறைப் படுத்தாமல் அதற்கு அப்பாலும் சென்று உதவ வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் அழுத்தமாக வற்புறுத்தும் ஒரு சட்டக் கருவியாகும். அரசியல் சட்டத்தில் இது ஒரு விதிவிலக்காக கருதப்படக் கூடாது. மற்ற அரசியல் சட்ட விதிகளால் கட்டுப்படுத்த முடியாத அதிகாரமாகும்.’’
இதைவிட தெளிவான விளக்கம், பிற்படுத்தப்-பட்ட சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு வேறு வேண்டுமா?
(நினைவுகள் நீளும்)