புதிய கல்விக் கொள்கையா? புதுப்பிக்கப்படும் குலகல்வித் திட்டமா?

ஜுலை 16-31

மஞ்சை வசந்தன்

மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை-யிலான வல்லுநர் குழு தயாரித்துள்ள கல்விக்கொள்கை மத்திய அரசால் வெளியிடப்-பட்டுள்ளது.

கல்வியென்பது மக்களின் உயிர்மூச்சான உரிமை! உயர்வு தாழ்வு, எழுச்சி மீட்சி, விழிப்பு விவேகம், பதவி பணிகள், சமூகத்தில் தனக்கான இடம், தலைமுறையின் எதிர்காலம், அறிவு, ஆற்றல், திறன், நுட்பம், ஆய்வு, படைப்பாற்றல் என்று பலவும் கல்வி சார்ந்தே வருகின்றன; பெறப்படுகின்றன.

 

ஆரிய பார்ப்பனர்கள் இதை நன்கு அறிந்தே கல்வியைத் தனக்கு மட்டுமே உரியதாக்கிக்-கொண்டு, மற்றவர்களுக்கு பல நூற்றாண்டு-களாக ஆட்சியாளர்களின் துணையுடன் மறுத்து வந்தனர். படிக்க ஒரு ஜாதி, பாடுபட ஒரு ஜாதி, உயர்வு ஒரு ஜாதிக்கு, இழப்பு பல ஜாதிக்கு என்ற அதர்ம சட்டங்களே மனுநீதி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஓரளவு இக்கொடுமை தகர்க்கப்பட்டது என்றாலும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராசர் போன்ற எளிய மக்களின் தலைவர்கள் இந்தியாவெங்கும் கிளர்ந்தெழுந்து போராடியதன், தீர்வு கண்டதன், திட்டம் தீட்டியதன் விளைவாக எல்லா மக்களுக்கும் கல்வியென்ற நிலை வந்தது. அப்போதுகூட ஆரிய சூழ்ச்சி இராசகோபாலாச்சாரியார் வடிவில் குலக்கல்வியைக் கொண்டுவர முயன்றது.

பெரியாரின் பெருங்கோபமும், போராட்டமுமே அந்தச் சதியை வீழ்த்தி எளிய மக்களும் படித்து முன்னேற வாய்ப்பளித்தது. இதன்படி ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் கல்வியிலும், பதவியிலும் ஆரிய பார்ப்பனர்-களை ஓரந்தள்ளி உயரங்களை எட்டினர்.

கல்வியிலும், உயர்பதவியிலும் எளிய மக்கள் சாதனை படைத்தனர். இதைக் கண்டு பொறாத ஆரிய பார்ப்பனர்கள், தங்களுக்குள்ள வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி, வருமான வரம்பு, நுழைவுத்தேர்வு, இடஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு என்று பல தடைகளை இடையிடையே ஏற்படுத்தினர்.

இந்தியாவிற்கே வழிகாட்டி, உணர்வூட்டும் திராவிடர் கழகம், பல்வேறு போராட்டங்களை, பிரச்சாரங்களைச் செய்து, அத்திட்டங்களை யெல்லாம் முறியடித்து, கல்வியும், வேலை-வாய்ப்பும், இடஒதுக்கீடும் பறிபோகாமல் பாதுகாத்து வருகிறது. என்றாலும், ஆரிய பார்ப்பன ஆதிக்கக் கூட்டம் மத்தியில் தங்களின் ஆதரவு மதவாத பா.ஜ.க. ஆட்சி வந்தது முதல், மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களை ஓரங்கட்டி தங்கள் மனுதர்ம ஆட்சியை நிறுவத் துடிக்கின்றனர்.

அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்கின்ற அவர்கள், எதிர்ப்பு வலுக்கும்போது, பதுங்குவதும், சந்தர்ப்பம் வாய்க்கும்போது தலைகாட்டுவதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்-கரும் இந்தியாவெங்கணும் ஊட்டிச் சென்றுள்ள உணர்வுகள் உயிர்த் துடிப்புடன் இருப்பதால், அவர்களின் சூழ்ச்சி அவ்வப்போது முறியடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடாது அவ்வப்போது புதுப்புது வடிவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பெரும்பான்மை-யினரான ஒடுக்கப்பட்ட மக்களை ஓரம் தள்ளி, அடிமைகளாக்கவும் முயலுகின்றனர்.

அதன் ஒரு செயல் வடிவந்தான் இன்றைய மத்திய அரசின் இந்தப் புதிய கல்வித் திட்டம். தேனைத் தடவி விஷத்தை உட்செலுத்த அவர்கள் முயற்சிப்பது. இத்திட்டத்தின் மூலம் புலப்படுகிறது. ஒருசில நல்ல திட்டங்களைக் காட்டி, பல சதித் திட்டங்களை செயல்படுத்த அவர்கள் முயல்வது அப்பட்டமாகப் புரிகிறது.
நிபுணர் குழுவே சரியானதல்ல

முதலில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவே அவர்கள் சதித் திட்டத்திற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது.

புதியக் கல்விக் கொள்கையை உருவாக்கு-வதற்காக மத்திய அரசு கடைபிடித்த வழிமுறையிலேயே குறைகள் உள்ளன.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்கு-வதற்கான குழு கல்வியாளர் தலைமையில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 1964 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தியக் கல்விக் குழு, பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவராக இருந்த கோத்தாரி தலைமையிலும், 1993ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கல்விக்-கான தேசிய ஆலோசனைக்குழு கல்வியாளரும், விஞ்ஞானியுமான யஷ்பால் தலைமையிலும் தான் அமைக்கப்பட்டன.

புகழ்பெற்ற கோத்தாரி குழுவுக்கு முன் 1948ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழக ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட சர்வபள்ளி இராதா-கிருஷ்ணனும், 1952 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அனைத்திந்திய இடைநிலைக் கல்வி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்-பட்ட ஆற்காடு லட்சுமண சாமி முதலியாரும் கல்வியாளர்கள் தான். ஆனால், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அய்வரில் 4 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஆவர்; ஒருவர் மட்டுமே கல்வியாளர் ஆவார். அதனால் தானோ என்னவோ இக்கொள்கை-யில் கல்வியை விட நிர்வாகத்திற்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

தேன் தடவிய நஞ்சு

ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% நிதி கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். கோத்தாரி குழு பரிந்துரை ஏற்கப்பட வேண்டும். மழலையர் பள்ளி, பாலின பாகுபாடு களைதல், மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது. மழலையர் உளநிலையில் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். 25% கல்வி உரிமைச் சட்டத்தை சிறுபான்மை-யினரும் பின்பற்ற வேண்டும் என்ற தேனைத் தடவி, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறித்து, குலக்கல்வியை கொண்டு வந்து உயர்பதவிகளில், ஆசிரியப் பணிகளில் ஒடுக்கப்-பட்ட மக்கள் செல்லமுடியாதபடி செய்யும் கொள்கைகளை இப்புதியக் கல்வித் திட்டம் கொண்டுள்ளது.

டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகள்:

1. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.

2. ஆசிரியர் தேர்வானது வெளிப்படைத் தன்மையுடனும், நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.

3. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும்.

4. அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதிச் சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

5. ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதை மாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக மாற்றலாம்.

6. முன்பள்ளி கல்வி என்று சொல்லப்-படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

7. அய்ந்தாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதேபோல் நடுநிலைப்  பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிரூபிக்க 2 வாய்ப்புகள் வரை வழங்கலாம்.

8. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் 2 வகையாக கலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், மற்றவர்கள் 2ஆம் தர தேர்வுகளையும் எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.

9. போர்டு தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பை எந்த முறையிலும் கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிறைய பொது தகுதித் தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை குறைக்க முடியும்.

10.    அய்நதாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடம் கற்கலாம். பிரைமரி வகுப்புகளில் இரண்டாம் மொழியையும், செகண்டரி வகுப்புகளில் 3ஆம் மொழியையும் அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

11. மத்திய உணவுத் திட்டமானது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும் . ஏனென்றால் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் ஆகியவை இளம் தலைமுறை மாணவர்களிடையே அதிக அளவில் உள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

12. கல்வி உதவித் தொகைகள் சரியாகப் பிரித்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்-கழகங்களுக்கான மானியக் குழு ஆணையம் (யூஜிசி) எளிமையான வரைமுறைகளை உருவாக்க வேண்டும்.

13.  உலகின் தலை சிறந்த 200 வெளி-நாட்டுப் பல்கலைக் கழகங்கள், நம் நாட்டில் தங்களது கிளையினை உருவாக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

14. பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பிரச்சினை உடனைடியாக தீர்க்கப்பட வேண்டும். சம அளவிலான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

15. கல்வி ஊக்குவிப்பு அட்டவணை இன்னும் அறிவியல் பூர்வமாக தகுதி உயர்த்தப்பட வேண்டும்.

16. கல்விக் கொள்கைகள் தொடர்பான சவால்களை எதிர் கொள்ளவும், சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவார்ந்த உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
உயர்கல்விக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் வேண்டும். அப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாநில அரசின் கல்வி உரிமையை அறவே பறித்துவிடும்.

நாடு முழுவதும் ஒரே தரமான பாடத்-திட்டம் என்பது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்பது நடைமுறைக்கு உகந்ததல்ல. பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடு, இலக்கு, கொள்கையுடைய மாநிலங்களைக் கொண்டுள்ள இந்தியாவில் ஒரே பாடத்திட்டம் என்பது ஒவ்வாத ஒன்றாகும், ஏற்க முடியாததாகும்.

ஆறாம் வகுப்பு குழந்தை தேர்ச்சியடையா-விட்டால் அத்தோடு அதன் படிப்பு தடைப்பட வழி செய்யும் இக்கொள்கை ஏற்க முடியாதது. எட்டாம் வகுப்புவரை பிள்ளைகளின் கல்வி, தேர்வால் தடைபடக் கூடாது. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கிற்கு இது எதிரானது; அதைச் சிதைக்கக் கூடியது.

பின்லாந்து நாட்டில் ஏழு வயதில்தான் கல்வி தொடங்கப்படுகிறது. 16 வயதுவரையான ஒன்பது ஆண்டுகள் தேர்வு என்பதே மாணவர்களுக்குக் கிடையாது. அனைவருக்கும் தேர்ச்சியளிக்கப்படுகிறது. அந்த நாடுதான் உலகில் கல்வியில் உயர் இடத்தில் உள்ளது.

குலக்கல்விக்கு வழிவகுப்பதா?

படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான குறுக்கு வழியாகும்; குள்ளநரித் தந்திரமாகும்.

மாறாக, எல்லா மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெறும் வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும் வகையில் தொழிற்கல்வி உருவாக்கப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அரசு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற பரிந்துரை, ஏழை மாணவர்களின் கல்வியை அறவே பறித்துவிடும். அவர்கள் உயர்கல்வி பெற முடியாத நெருக்கடியை உருவாக்கும்.

அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவக்க அனுமதிப்பது கல்வி வணிகத்திற்கு வழிவகுத்து, கட்டண உயர்வுக்கு காரணமாய் அமைந்து, கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கப்படும் அவலம் ஏற்படுத்தும்.

முதன்மையானவற்றைச் செய்யவில்லை!

மாணவர் ஆசிரியர் விகிதம் எப்படியிருக்க வேண்டும்? பள்ளிகள் அனைத்தும் ஒரே தரமான வசதிகளைப் பெற என்ன செய்ய வேண்டும்? அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு தரம் உயர்த்திக் கொண்டுவர செயல் திட்டங்கள் என்ன? நகர்ப்புரம், கிராமப்புரம் என்ற குழு வேறுபாட்டிற்குத் தீர்வு என்ன? வறுமையில் பயிலும் மாணவர்களுக்கு நதி உதவி எப்படி? போன்றவற்றைப் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை! தீர்வு கூறவில்லை. எனவே, இக்குழு பரிந்துரை ஒருதலைச் சார்பானது, ஏற்க இயலாதது.

பலதரப்பு கருத்து அறியப்படவில்லை!

நாடு முழுவதும் கருத்துக் கேட்கப்-பட்டதாகக் கூறும் அவர்கள் அதற்கான விவரத்தை வெளியிடவில்லை. எனவே, மீண்டும் முறையாக கருத்துக் கேட்கப்பட வேண்டும். பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்துக்களை முறையாகப் பெற்று, அறிக்கை தயார் செய்து, அதை மாநில அரசுகளுக்கு அனுப்பி அவற்றின் கருத்தறிந்து அதன் பின்னே முடிவெடுக்க வேண்டும்.

இலவசக் கல்வி: கல்வியென்பது எளியப் பிரிவு மக்களுக்காவது இலவசமாகக் கட்டாயம் கிடைக்க வேண்டும். மொழித்திணிப்பு அறவே கூடாது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் வரவேண்டும். அருகமைப் பள்ளிகள் அதிகம் வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் தமிழகம், மற்ற மாநில மக்களை ஒன்றுசேர்த்து போராடும்! சூழ்ச்சியை முறியடிக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *