சிலர் யாரேனும் எச்சில் துப்பியிருப்பதைக் கண்டால், அசுத்தமான, அருவருப்பான இடங்களைப் பார்த்தால் மிகவும் பதட்டம் ஆகி விடுவார்கள். வீட்டுக்கு வந்து உடனே குளிப்பார்கள். குளிப்பதற்கே ஒரு மணி நேரம் எடுப்பார்கள்.
துணிகளைத் துவைத்தால்கூட ஓரிரு முறைக்கு பதிலாக நான்கைந்து முறை அலசுவார்கள். ‘வீட்டில் ஒரு சிறுதூசு, துரும்பு இருந்தால்கூட ரொம்பவும் கோபப்படுவார்கள். சில நேரங்களில் ஒரே நாளில் நான்கைந்து முறை வீட்டை துடைத்து சுத்தம் செய்வார்கள். கையை அடிக்கடி அலம்புவார்கள். குடிக்கும் நீரை உற்று உற்றுப் பார்ப்பார்கள்.
வயது வித்தியாசம், பாலின பாகுபாடு எதுவும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடிய மன அளவிலான ஒரு பாதிப்பு இது.
சுகாதாரம், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை கடைப்பிடிக்கையில் அளவிற்கு அதிகமாக அக்கறையும் பயமும் கொள்ளும்போது, அதுவே எதிர்மறையா செயல்பட்டு நம்முடைய மன நலத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துவிடுகிறது.
கிருமிகள் இருக்குமோ, அதனால வியாதி வந்துடுமோ, அதனால நமக்கு கஷ்டம் வந்துடுமோ அப்படின்னு ‘தொடர் எதிர்மறை சிந்தனைகள்’ ஒண்ணு நம்ம உள்ளத்தில் உருவாகும். அப்ப மிகவும் முன்னெச்சரிக்கையோடு ‘சுத்தம் பண்ணு’ ‘சுத்தம் பண்ணு’ன்னு மனசு சொல்லும். ‘வியாதி வந்து சரிபண்றதைக் காட்டிலும் இப்படி முன்னெச்சரிக்கையா இருப்பது மிகவும் நல்லது’ என்று மனது சொல்லும்.
எல்லோரிடமும் இந்த இயல்பு ஓரளவுக்கு இருக்கும். ஆனால், இது அதிகமாகும்போது இந்த மாதிரியான பாதிப்பு வருகிறது. இதற்குப் பெயர், ‘எண்ணச் சுழல் நோய்’. அதாவது O.C.D. (Obsessive Compulsive Disorder) என்று அழைப்பர்.
சிலருக்கு மட்டும் வரக் காரணம்
விஞ்ஞானரீதியா பெரிய அளவில் இதுபற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. மூளையில் ஏற்படுற அமில மாறுதல்களால் இப்படி ஆகிறது என்று ஒரு கருத்து இருக்கிறது. எண்ணப் புரிதலில் உண்டான ஒரு மாற்றம். இந்தப் பிரச்சினையை கொண்டு வருவதாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘ரொம்ப பாதுகாப்பா இருந்தா பிரச்சினையை தவிர்க்கலாம்’ என்கிற நினைப்பு அதிகமா வருவதால் இந்த பிரச்சினை வருவதாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியாக O.C.D.க்கான காரணங்கள் இரண்டு விதமா வகைப்படுத்தப்பட்டிருக்கு.
மிகக் குறைவான பாதிப்பு என்கிறபோது ஆலோசனை மூலமே சரிசெய்து விடலாம். பாதிப்பு சற்று அதிகம் என்றால், மருந்துகளுடன் ஆலோசனையும் தேவைப்படும்.
சமயத்தில் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் மனநலம் சார்ந்த மருந்து எடுத்தால், அதுகூட பக்க விளைவு என்று நினைத்து அதைத் தவிர்க்கப் பார்ப்பர். இவர்களில் சிலர் ‘அதிக பாதுகாப்பு உணர்வு’டன் மாற்று மருத்துவ முறையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த எண்ணச் சுழல் நிலை பற்றி விஞ்ஞானரீதியா விளக்கம் தரப்பட்டிருப்பதை எளிமையாக மனநல வல்லுநர்கள் எடுத்துச் சொன்னாலும் அவற்றைப் புறம்தள்ளி விடுவார்கள். தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி மாதிரியான வேறு விஷயங்களில் இதை சரிசெய்துவிட முடியும் என்பதில் தீவிரமான கருத்துடன் இருப்பார்கள். யோகா, தியானப் பயிற்சிகள் நல்லவைதான். எல்லா மனிதர்களுக்கும் அவை உதவி செய்யும். அதனால் உடல் _ மன ஆரோக்கியம் கூடும். ஆனால், அது மட்டும் தீர்வு ஆகாது. உதாரணமாக, நடைப்பயிற்சியால் உடல் ஆரோக்கியம் கூடும். ஆனால், இதய நோய்க்கு ‘நடைப்பயிற்சி’ மட்டுமே தீர்வாகாது. மருந்துகள் எடுப்பது மிக முக்கியம். அப்படித்தான் இதுவும்.
இம்மாதிரி பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அவங்களே சில சித்தாந்தங்களை உருவாக்கி அதற்குள்ளே போய் மாட்டிக்கொள்வர். நாளடைவில் ஓ.சி.டி.யுடன் ஒருவித குழப்ப நோய்க்கும் ஆளாவர். சிலருக்கு இதனால் ஆளுமைத்திறன் மாறுபட்டு இருக்கும். மன அழுத்தம் உண்டாகும். சமயத்தில் அது தீவிரமாக வெளிப்படலாம். ஒரு துறுதுறு தன்மையோட கலந்து இந்நோய் வெளிப்படலாம். வறட்டு பிடிவாதம் அல்லது இறுமாப்பாகக்கூட வெளிப்படலாம். சில நேரங்களில் பலவிதமான கலவையாக வெளிப்பட வாய்ப்பு உண்டு.
‘மத்தவங்க சரியாக இல்லை…. எதையும் சரியாக செய்றதில்ல…’ அப்படிங்கிற நினைப்பு இவர்களுக்கு அதிகப்படியாக வரலாம். “செல்ஃப்ல புக் ஏன் சரியாக இல்ல…? ஸோஃபா எப்படி இருக்கு பாரு…? இந்த சேர் ஏன் இங்கே கிடக்கு..?’’ இந்த மாதிரியான கேள்விகள் அடிக்கடி அவங்ககிட்டே இருந்துவரும். அதற்காக இப்படி கேட்கிறவங்க எல்லாரையும் எண்ணச் சுழல் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக நாம் நினைக்கக் கூடாது. (சமயத்தில் மிகத் தெளிவான நம்மில் பலர் கூட அப்படி கேட்பதுண்டு.)
சிலருடைய பாதிப்பை எண்ணச் சுழல் நிலைன்னு சொல்லணும். சில நிலைகளில் அதை எண்ணச் சுழல் நோய்னு சொல்லணும். இன்னும் சில நேரங்கள்ல எண்ணச் சுழல் அதிதீவிர நோய்னு சொல்லணும். ரொம்ப மிக அரிதாக எண்ணச் சுழல் ஊனமுற்ற தன்மைகூட வரலாம். பாதிப்பு எத்தகையது என்பதை முதலில் ஆராய்ந்து காணவேண்டும்.
இது சரியாகுமா?
குடும்பச் சூழ்நிலை, அவர்களோட வேலையின் தன்மை, மரபுக் காரணிகள் இதெல்லாம் பொறுத்து பிரச்சினை சரியாகும். காலம் ஆளுக்கு ஆள் மாறுபடும். குறிப்பாக சிகிச்சை எடுக்கிறவர்களுக்கு மனநலம் மருத்துவத்தைப் பற்றிய ஆரோக்கியமான பார்வை இருந்தா விரைவில் குணமடைவர்.
பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றியிருக்கும் குடும்பத்து உறவினர்களின் பக்கத்துணை மிகவும் தேவை. பாதிக்கப்பட்டவர் மனநல மருத்துவரிடம் தொடர் சிகிச்சை எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்களும் கலந்தாய்வு பெற வேண்டியதிருக்கும். பாதிக்கப்பட்டவரை எப்படிக் கையாள்வது? என்கிற எளிய ஆலோசனைகள் அவர்களுக்கு தரப்படும். பாதிக்கப்பட்டவர் மிகவும் விரைவாக இப்பாதிப்பிலிருந்து வெளியே வர அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் கட்டாயத் தேவையாகும்.