கே : சமஸ்கிருதத் திணிப்பை முறியடித்து ஆரிய பார்ப்பன ஆதிக்க முயற்சியை வீழ்த்த திராவிடர் கழகத்தின் செயல்திட்டங்கள் யாவை?
— கெ.நா.சாமி, பட்டாபிராம், சென்னை-_72
ப : விரைவில் ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிப்பு முதல் கட்டமாக வெளிவரும்.
கே : நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தலைவர்களை அவன் -_ இவன் என்று ‘துக்ளக்’ எழுதும்போது இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்கள் அமைதி காப்பது சரியா?
– அனலரசன், தெ.பரணம்.
ப : மிகவும் வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது! வன்முறையைத் தூண்டிவிடக்கூடிய விபரீத விளையாட்டு!
கே : யோகா பயிற்சியை மோடி அரசு முனைப்புடன் நடத்தும் உள்நோக்கம் என்ன? ஆண்டுக்கொருமுறை விளம்பர நோக்கில் செய்தால் யோகா வளருமா?
– கி.மாசிலாமணி,
மதுராந்தகம்
ப : விளம்பரம் இதிலாவது கிடைத்தால் போதும் என்பதே. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சொன்ன மாதிரி, மதுவிலக்கு நாடுதழுவிய அளவில் கொண்டுவராமல் இம்மாதிரி செயலோ வீண் விளம்பர உத்தியே!
கே : கச்சத்தீவு குறித்து கலைஞர் மீதான குற்றச்சாட்டு மோசடிதானே? அதுகுறித்து விளக்கச் சிறுநூல் வெளியிடுவீர்களா?
– அ.சிவசுப்பிரமணியன், காஞ்சி
ப : தி.மு.க.விடம் நினைவூட்டுவோம்!
கே : மதுக்கடை மூடல் மதுவிலக்கு நோக்கிய முயற்சியைக் காட்டவில்லையே! சரியான வழியைக் கூறுங்களேன்?
– தெ.திருவாய்மொழி, திருவரங்கம்
ப : ஒட்டகத்தின்மீது ஏற்றிய வைக்கோலில், சிலவற்றை பெயரளவுக்கு எடுப்பதாக இல்லாமல், இன்னும் வேகமாக கடைகளை ஊருக்கு அப்புறம் கொண்டுசென்று வெகுவாகச் சுருக்க வேண்டும். சில கடைமூடல் விற்பனையை பாதிக்காது என்றே தெரிகிறது.
கே : உருப்படாத திட்டங்கள் மூலம் எல்லா நிலையிலும் தோல்வியடைந்த -மோடி சர்க்கார் -_ சரிந்த மாய செல்வாக்கை நிலைநிறுத்த –_ 2017 உ.பி. தேர்தலுக்காக மதவெறி கலவரநாயகர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்களே?
– இல.சங்கத்தமிழன், செங்கை
ப : உ.பி.யில் _ பீகார்போல பாடம் பெறுவார்கள்!
கே : கும்முடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாம் கொடுமைகள் _ சிறைச்சாலையைவிட மோசமான நிலைமை _ தீர தாங்கள் முயற்சி செய்தால் என்ன?
– தமிழ்இனியன், சென்னை_114
ப : தங்கள் தகவலுக்கு நன்றி! அதுபற்றி நமது வழக்கறிஞர் குழுவை அனுப்பி நடவடிக்கைக்கு முயற்சிப்போம்.
கே : கோயிலுக்குள் இருக்கும்போது கடவுளாக இருப்பவை, கடத்தப்பட்டால் சிலைகளாகி விடுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
_ நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : தங்கள் கேள்வியே அருமையானது! கடவுள் கடத்தப்படலாமா? என்று எந்த பக்தனும் சிந்திப்பதில்லையே? மந்தைகள் கூட்டமாக இருக்கின்றனவோ?
கே : பள்ளிகளில் மாணவர்களின் ஜாதிமதம் பற்றிய பதிவைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு பற்றி தங்கள் கருத்து என்ன?
– சீத்தாபதி,
சென்னை_45.
ப : ஜாதியை இடஒதுக்கீட்டிற்காக மட்டும் பயன்படுத்த அனுமதிப்பது அவசியம் _ இன்றைய சூழலில்!
கே : ‘நமது குறிக்கோள்’ என்ற கழக நூலில் 1949 வரையிலான மாநாட்டுத் தீர்மானங்கள் உள்ளன. அதன்பின் நிறைவேற்றிய தீர்மானங்களை அறிய நூல் வெளியிடுவீர்களா?
– கண்ணன், திராவிடன்
ப : அம்முயற்சி பல ஆண்டுகளாக செயல்வடிவம் பெறாது உள்ளது. நினைவூட்டலுக்கு மிக்க நன்றி!