– மஞ்சை வசந்தன்
அயல்நாட்டவரான ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது பிழைக்கத்தான் என்றாலும், பிற்காலத்தில் மண்ணின் மக்களை மடையராக்கி, ஆதிக்கம் செலுத்தினர்.
வணிகம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி, பின்னாளில் நாட்டையே ஆண்ட வரலாறைப் போன்றதே இது.
தொடக்கத்தில் பிச்சையெடுப்பது மட்டுமே ஆரியர்களின் தொழிலாய் இருந்தது. பின்னர் கடவுளையும் சடங்குகளையும் உருவாக்கி அவற்றின் வழி வாழ்ந்தனர்.
உடமை ஏதும் இன்றி வந்து இங்குள்ள உடமைகளை அபகரித்து தமதாக்கியது போலவே, இந்தியாவெங்கும் பரவி வாழ்ந்த தமிழர்களின் அறிவையும், கலையையும், மொழியையும் அபகரித்து, சில மாற்றங்கள் செய்து தமதாக்கி, மூலத்தை முடிந்தவரை அழித்தனர்.
ஆரியர்கள் தமக்கென்று எழுத்து இல்லா நிலையில், தமிழின் தொன்மை வடிவ (பிராமி) எழுத்துக்களையே பயன்படுத்தினர்.
செங்கம் நகருக்கு அருகில் ஆண்டிப்பட்டி என்ற ஊரில் கிடைத்த 120 கி.பி.2ஆம் நூற்றாண்டுக் காசுகளில் திண்ணன் எதிரான சேந்தன் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் பின்புறம் பிராகிருத எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ‘எ’ என்ற குறில் எழுத்தின் உள்ளே புள்ளி உள்ளது. தொல்காப்பியத்தில் எகரக் குறிலுக்குப் புள்ளி இடவேண்டும் என்ற விதி இதில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தும் தமிழுக்காகப் பயன்படுத்திய பிராமி எழுத்துக்களையே பிராகிருத மொழியும் பயன்படுத்தியது என்று தெரிகிறது.
இந்த பிராமி எழுத்துக்களையே சமஸ்கிருத எழுத்தாக ஆரிய பார்ப்பனர்கள் கையாண்டனர். ஆக, அவர்களின் சமஸ்கிருத எழுத்தே தமிழின் பிச்சை. ஆக, எதுவும் தமக்கு உரிமையில்லா ஆரியர்கள் பிறரிடம் அபகரித்தவற்றை தனதுபோல் காட்டி அதைத் திணித்து, உண்மையான மூலத்தை அழித்தும், மறைத்தும், இல்லாது செய்தனர். மொழி, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றிலும் இதே அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றனர்.
தொன்மை மொழிகளாகக் குறிக்கப்பட்ட இலத்தின், கிரேக்கம் போன்றவற்றிற்கு தமிழே மூலமொழி என்பதை நுட்பமான மொழி ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மத்திய தரைக்கடல் பகுதியில்உள்ள கிறீத் தீவு பழங்காலத்தில், கிரேக்கர்கள் வாழ்வதற்கு முன் தெர்மிலை என்ற இனத்தவர் வாழ்ந்ததாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அவர்கள் பேசிய மொழி தொன்மைத் தமிழோடு ஒத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மொழியியல் வல்லநர் சுனித் குமார் சட்டர்ஜி தெர்மிலை மக்களின் மொழி தமிழே என்கிறார்.
ஆக, உலகின் பல மொழிகளும் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி உட்பட பலவும் தமிழ் தந்த கொடைகள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் 70% மேல் தமிழ்ச்சொற்களின் திரிபுகளே உள்ளன என்று ஆங்கில அறிஞர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
கிலேட்டர் என்ற அறிஞர் குமரிக்கண்ட தமிழர்கள் அங்கிருந்து பெயர்ந்து, அமெரிக்கா, வடஆசியா, சீனம், கடாரம், அய்ரோப்பா போன்ற பகுதிகளுக்குச் சென்று பேசிய துரேனிய மொழிக் குடும்பத்தின் திரிபே ஆரிய மொழிகள். பால்டிக்கின் வடபாகங்களில் பின்னிசு என்னும் துரேனியர் மொழி வழங்கியதும், சுவிடிஷ், டேனிஷ் முதலிய மொழிச் சொற்களின் மூலமாய் தமிழ்மொழி இருப்பதும் ஆட்டோ சிரேதர் என்பவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
(ஆதாரம்: உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுன வெளியீடு, பக்கம்: 128.)
இப்படி உலக மொழிகள் பலவற்றின் மூலமொழியாகவும், இலக்கண, இலக்கிய வளமையும், வேர்ச்சொல் உரிமையும், பல்துறை சிந்தனை நூல்களும் ஒருசேரப் பெற்ற தமிழ்மொழி இருக்க, அசோகர் காலத்திற்கு மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியான சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக திணிக்க முயல்வது நகைப்பிற்குரிய செயலாகும்.
சமஸ்கிருதம் என்பது வழக்கொழிந்த செத்த மொழி. ஆயிரக்கணக்கானோர் மட்டுமே பேசும் மொழி. அப்படிப்பட்ட மொழியை 120 கோடி மக்கள் மீது திணிக்க முயல்வது ஆதிக்க வெறி மட்டுமல்ல, அராஜக, அக்கிரம அணுகுமுறையாகும்.
இந்தி வரும் முன்னே சமஸ்கிருதம் வரும் பின்னே
சமஸ்கிருதத்தை நுழைப்பது, திணிப்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கை.
“இந்தியா என்ற நாட்டில் நிலவும் மொழி சம்பந்தமான பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழி என்பதுதான் அதற்கான தீர்வு. அதுவரை இந்திக்கு முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழி யாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வர்க்கர். (Bunch of Thoughts)
இவரது இந்தக் கொள்கைதான் இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி முதலில் இந்தியை நுழைத்து அதைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தை திணிக்க முயலுகின்றனர்.
பி.ஜே.பி. ஆட்சியின் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சிகள்
நவம்பர் 2014
ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஸ்மிருதி இரானியை நவம்பர் 29-ஆம் தேதி சந்தித்து சமஸ்கிருதம் பள்ளிப்பாடங்களில் சேர்ப்பது தொடர்பாக பேசினார்கள். இதனை அடுத்து அடுத்த ஒருவாரத்தில் (டிசம்பர் 5) மத்திய அரசுப் பள்ளிகளில் கேந்திர வித்யாலயாவில் மூன்றாவது மொழியான ஜெர்மன் மொழியை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார், மாதிரி வகுப்புகள். உடனடியாக துவங்க உத்தரவிட்டு அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
டிசம்பர் 24 ஆம் தேதி கீதா பிரேரனா மகோத்சவம் என்ற நிகழ்ச்சியில் பேசிய சுஷ்மா சுவராஜ் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சமஸ்கிருதத்தை இந்தியாவின் பொது மொழியாக பாதுகாக்க வேண்டும், என்று பேசினார்.
ஜனவரி 2015
குடியரசு தின விளம்பரம் அரசின் சார்பில் அனைத்துப் பத்திரிகைகளிலும் இந்தி மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களாக வெளிவந்தன.
பிப்ரவரி 2015
ஜூலை மாதம் பாங்காங்கில் நடை பெறும் சமஸ்கிருத மொழி மாநாட்டிற்காக கலந்து கொள்பவர்கள் என்று வெளியிட்ட பட்டியலில் சாமியார்களே அதிகம் இருந் தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது, சமஸ்கிருத மொழியின் பாதுகாவலர்களாக சாதுக்கள் உள்ளனர்; அவர்களுக்கு மரியாதை செலுத்தப்போகிறோம் என்று சுஷ்மா சுவராஜ் சமாளித்தார்.
சமஸ்கிருதத்திற்கென விளம்பரத் திரைப்படம் ஒன்றை மத்திய அரசே தயாரித்து வெளியிட்டது, இந்தப் படத்தில் பசுமாட்டை தெய்வமாகவும், அது மிகவும் புனிதமாக கருதப்பட வேண்டும் என்பதும், மாமிசம் சாப்பிடுபவர்கள் கோபக்காரர்கள் குற்றம் செய்பவர்கள் என்பதும் அந்த சமஸ்கிருதப் படத்தின் மய்யக் கருத்தாகும்.
ஜூலை 2015
மாநிலப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கற்றுத்தர மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும், விருப்பப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி ஆவன செய்து தருவோம் என்றும் மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிக்கை விட்டது. அதன்படி, அரியானா, மாநிலத்தில் முதல் முதலாக சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைக்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
செப்டம்பர் 2015
டில்லி பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம், வேதம் தொடர்பான படிப்பிற்கு என்று சிறப்புப் பிரிவுகள் துவங்கப்பட்டன. இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலத்தை விரட்டியடிக்கும் சக்தி ஹிந்தி மொழிக்கு உண்டு, நாட்டை ஒற்று மைப்படுத்த வேண்டுமானால், ஹிந்தி பங்களிப்பு அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது பாஞ்சஜன்யா பத்திரிகையில் தெரிவித்தது.
இதன் உள்நோக்கம், அடுத்து இந்தியையும் விரட்டிவிட்டு சமஸ்கிருதத்தை நுழைப்பதே!
அக்டோபர் 2015
2014-_15ஆம் ஆண்டில் அரசின் ஒரு அங்கமான சமஸ்கிருத பிரச்சார நிறுவனம் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.270 கோடி செலவிற்கான கணக்கை இன்றுவரை ஒப்படைக்கவில்லை என்று மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி கூறினார். இருப் பினும் 2015——16 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்கில் சமஸ்கிருத பிரச்சார நிறுவனத்திற்கு மேலும் 740 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றால் புரிந்துகொள்ளுங்கள்.
நவம்பர் 2015
லண்டனில் பேசிய மோடி சமஸ்கிருதத்தில் படித்தால் இந்தியாவில் நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை விரும்பாதவர்கள் சமஸ்கிருதம் குறித்து பேசினாலே குற்றம் என்று சொல்கிறார்கள் என்று அயல் நாட்டில் கேலி செய்யும் விதமாக பேசினார். இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு வெளியிட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்திலேயே இருந்தன.
சமஸ்கிருத மொழி வளர்ச்சி தொடர்பாக அமைக்கப்பட்ட என். கோபால்சாமி அய்யங்கார் தலைமையில் அமைந்த கமிட்டி மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் என்ன தெரியுமா?
கணிதம், வேதியல், பவுதீகம் போன்ற வற்றுக்கு இணையாக சமஸ்கிருதப் பாடம் இருக்கவேண்டும்
தற்போதைய சூழலுக்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நவீன முறையில் கற்க ஆய்வுகள் நடத்தி, வரும் கல்வி யாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். வரும் 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிபெற நீண்டகால செயல் திட்டம் ஒன்று வகுக்கப்படவேண்டும் என்கிறார்.
ஜனவரி 2016
ஆர்.எஸ்.எசை சேர்ந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து கல்வி குறித்த புதிய திட்டத்தை ஸ்மிருதி இரானியிடம் கொடுத்து அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பிப்ரவரியில் இந்த விவகாரம் வெளிவந்த பிறகு முதலில் இது ஒரு கோரிக்கையே என்று கூறிய ஸ்மிருதி இரானி – ஜூன் 9-ஆம் தேதி விசாகப் பட்டினத்தில் பேசிய போது வேதிக் போர்ட் ஜூன் 16 ஆம்தேதி உருவாக்கப்படும் என்றும், இந்த பிரிவின் மூலம் பள்ளிமாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் வேதங்கள் கற்றுத்தரப்படும் என்றும் நமது கலாச்சாரத்தை பலப்படுத்த சமஸ்கிருதம் மிகவும் தேவையான ஒன்று என்றும் பிரச்சினையைக் கிளப்பினார்.
மேலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், இதுவரை இருந்த, நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத கல்விமுறையில் மாற்றம் செய்து, நம் கலாச்சாரத்தின் வழியாக புதிய உலகை எதிர்கால சந்ததியினர் சந்திக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயற்படுத்த முடிவெடுத்துள்ளோம்’’ என்று பேசினார்.
என்ன இவர்களது பழைய கலாச்சாரம்! இவர்களின் வேதமும், மனுஸ்மிருதியும், கீதையும் என்ன சொல்கின்றன.
ஆரிய பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் சூத்திரர்கள். பெண்கள் படிக்கக் கூடாது. கணவனை இழந்தால் மறுமணம் கூடாது. முண்டச்சியாய் மூலையில் கிடக்க வேண்டும். குழந்தைப் பருவத்திலே திருமணம் முடித்துவிட வேண்டும்.
பரம்பரைத் தொழிலையே பிள்ளைகள் செய்ய வேண்டும். கல்வி கற்கக் கூடாது; உயர் பதவிக்கு வரக்கூடாது.
ஆரிய பார்ப்பான் மட்டுமே கடவுளை நெருங்கலாம். மற்றவர்கள் சென்றால் கடவுள் தீட்டாகிவிடும். சமஸ்கிருதம் மட்டுமே கோயில்களில் ஒலிக்க வேண்டும். தமிழ் நீசபாஷை. இவை போன்றவைதானே இவர்களின் பழைய கலாச்சாரம். அதைத்தான் மீண்டும் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். அதன் முதல் முயற்சிதான் சமஸ்கிருதத் திணிப்பு.
இந்திய கலாச்சாரத்தை வேதங்கள் பிரதிபலிக்கின்றன. எனவே, அவை பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்கின்றனர். வேதங்களில் என்னவுள்ளது? எல்லாம் ஆரிய பார்ப்பனர்களுக்குப் பயன்பட வேண்டும். மற்றவர்களுக்கு விஷமாகப் போகவேண்டும். அவர்கள் மட்டுமே வாழவேண்டும், வளம்பெற வேண்டும்; மற்றவர்களெல்லாம் அழிந்துபோக வேண்டும் என்பதுபோன்ற கருத்துக்களைத் தவிர அவற்றில் வேறு என்னவுள்ளது?
அந்த வேதம் இருப்பதுகூட சமஸ்கிருத மொழியல்ல. அது “சந்தஸ்’’ என்ற மொழியில் உள்ளது என்கிறார் செத்துப்போன சந்திரசேகர சங்கராச்சாரி. இதைக்கூட அறியாது சமஸ்கிருதத்தை பரப்ப, வேதத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர். ஆக ஆரியர், ஆரியர் அல்லாதார் போர் தொடங்கிவிட்டது.
சமூக நீதியாயினும், ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாயினும் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பாயினும் முதலில் முனைப்புடன் நின்று முறியடிப்பது பெரியார் இயக்கமாம் திராவிடர் கழகம்.
பெரியார் மண்ணாம் தமிழகம் இவற்றிற்கு இந்தியாவிற்கு என்றும் வழிகாட்டியல்லவா! அந்த அடிப்படையில் சமஸ்கிருத எதிர்ப்பிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கருஞ்சட்டைப் படை களம் காண முன்வந்துவிட்டது. கலைஞர் அவர்களும் போர்முரசு கொட்டிவிட்டார். மானமுள்ள தமிழர்களும், ஆரிய ஆதிக்க எதிர்ப்பாளர்களும் இந்தியா முழுவதும் ஓரணியில் நின்று சமஸ்கிருத திணிப்புச் சதியை முறியடிக்க வேண்டும்; முறியடிப்போம்!