சமஸ்கிருத இந்தித் திணிப்பை அகற்ற அனைவரும் போராட வேண்டும்!

ஜூலை 01-15

இந்தியென்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத் தவிர அதில் எவ்விதஉண்மைத் தன்மையும் இல்லை என்பதை அறிவுள்ள எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.  இந்திய நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரிகம், பல நடை உடை பாவனைகளாக இருந்து வருவதை யாவரும் மறுக்கமுடியாது அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும் போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம்.

இந்த  நிலைமையிலுள்ள சமுகங்களைப் பிரிவினைக்கு ஆதாரமாய் இருப்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் கண்மூடித்தனமாய் எல்லோரையும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்று அரசியலின் பேரால் நிர்ப்பந்திப்பது எப்படி ஒழுங்காகும்? என்று கேட்கின்றோம்.  இந்தி என்பது அநேகமாக வடமொழியின்  சார்போ அல்லது திரிபோ ஆகும்.  இந்த நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட வடமொழிக்கு உயர்வு கொடுக்க பல  வழிகளிலும் சூழ்ச்சி  செய்து உலக வாழ்க்கையில் ஒரு ஒடிந்து போன குண்டூசிக்கும் பயன்படாத பாஷையாகிய அவ்  வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது வெகுநாளாக தமிழ்மக்கள் கவனித்து வரும் சங்கதியாகும்.

இப்போது  மறைமுகமாய் வடமொழியை ஆதரிக்கவும் ஆரிய நாகரிகம் சமயக்கொள்கை ஆகியவைகளை நிலை நிறுத்தவும்  இந்தியை அரசியல் விஷயமாக ஆக்கி அதைக் கதரைப் போல் ஏன் கதரைவிட அதிகமாக ஒவ்வொருவருக்குள்ளும் புகுத்தப்பார்ப்பது எவ்வளவு வஞ்சமான  காரியம் என்பதை நமது சோணகிரிகள் அநேகர் இன்னும் உணரவே இல்லை.  தமிழ்ப் பண்டிதர்கள் சாம்பலையும் மண்ணையும் குழைத்து சூடுபோட்டதுபோல் மேலெல்லாம் தீட்டிக்கொண்டு சிவ,சிவ,சிவ என்பதற்கும் ராம, ராம,ராம என்பதற்கும் உதவுவார்களே தவிர மற்றபடி நமது மக்கள் மீது அனாவசியமான ஒரு பாஷை சூழ்ச்சித் திறத்தில் சுமத்தப்படுகின்றதே என்கின்ற அறிவும், கவலையும்  சிறிதும் கிடையாது என்றே சொல்ல  வேண்டியிருக்கின்றது.  இன்றைய தினம் இந்திய மக்களுக்கு அவரவர்கள் சொந்த பாஷை தவிர வேறு பாஷை தெரியவேண்டுமானால் அது இங்கீலிஷ் பாஷை என்றே நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.

உலகமே தங்கள் கிராமம்தான் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறி இப்போது நிலப்பரப்பு, நீர்பரப்பு முழுவதும் தெரிந்து 200 கோடி மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்போது உலக செலாவணி பாஷை எதோ அதை மனிதன் அறியாமல் கபீர்தாஸ் இராமாயணத்தைப் படிக்க வேண்டிய இந்தி பாஷை எதற்குப் படிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்களுக்குச் சுயமரியாதை என்பது பல துறைகளில் வரவேண்டியிருப்பதை இந்தியின் ஆதிக்கமும் இனியும் அதிகமாய் வலியுறுத்துகின்றது என்றே சொல்லுவோம். தமிழ் பாஷை  பாண்டியத்தியம்  என்பது இப்போதே அநேகமாய் பார்ப்பனர்களிடமே யிருக்கின்றது. தமிழ் பாஷையின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனர்களாய் இருக்கின்றார்கள் என்பதோடு இந்தப் பார்ப்பனர்கள்  தமிழர்களை இந்தி  படிக்கக் கட்டாயப் படுத்துகின்றார்கள் என்றால் தமிழ் பாஷைக்காரர்களின்  சுயமரியாதை எவ்வளவு  என்பதை தமிழர்களே உணர்வார்களாக.
அரசியல் தத்துவத்தின் பயனாய் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள்  பார்ப்பனரல்லாதார் பணத்தில் இந்தி கற்று இந்தியத் தலைவர்களாகிய வடநாட்டுத் தலைவர்கள் இடமெல்லாமல் பார்ப்பனர்களே போய் காரியதரிசிகளாய்  அமர்ந்து அவர்களே தென்னாட்டு பிரதிநிதிகளாகி அவர்களது ஆதிக்கத்திற்கே இந்திய அரசியலைத் திருப்பி பயன்படுத்திக்கொண்டு வருகின்றார்கள்.

ஆகவே அரசியல் துறையில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அறிவு இருந் தாலும் அதை பார்ப்பனர்களுக்குத் தக்க விலைக்கு விற்றுவிட்டார்கள் என்றாலும் அரசியலில் இல்லாத பார்ப்பனரல்லாதார்கள் அறிவையாவது தக்க வழியில் உபயோகிக்கத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
– ‘குடிஅரசு’, துணைத் தலையங்கம், 10.05.1931

***

இந்நாட்டில் பார்ப்பனியம் தாண்டவமாடத் தொடங்கிய காலம் முதல் ஏதாவது ஒரு வகையில் புராணங்களையும், பார்ப்பனியங் களையும், பரப்பும் நோக்கத்துடனேயே எல்லாப் பாஷைகளும் ஆதிக்கம் பெற்று வந்திருக்கின்றன.  உலக வழக்கில் ஒரு சின்னக் காசுக்கும் பயன்படாத சமஸ்கிருத பாஷைக்கு இன்றைய தினம் இந்நாட்டில் இருக்கும் ஆதிக்கமும் அதற்கெனவே பல ஏற்பாடும் செலவும், மெனக்கேடும் பார்ப்பனியத்தைப் பரப்பவே செய்யப் பட்டு வருகின்றன.  சமஸ்கிருத காலேஜ், சமஸ்கிருத பாடசாலை மற்றும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகள் முழுவதும் சமஸ்கிருதம் வாழ்க்கைக்கு சிறிது பாகமும் வேண்டிய அவசியமில்லாத மக்களின் செலவிலேயே நடைபெற்று வருகின்றன.  இது இந்த நாட்டு மக்களின் சுயமரியாதையற்ற தன்மைக்கு ஒரு பெரும் உதாரணமாகும்.  இதைத் தட்டிப்பேச இன்றைய சட்டசபை, மந்திரி சபை ஆகியவைகளில் ஒரு சிறு மூச்சு விடவும் ஆள்கள் இல்லை.  போதாக்குறைக்கு இன்று இந்தி பாஷை ஒன்று புதிதாக முளைத்து இந்தியமக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிகள் வெகு பலமாய் செய்யப்பட்டு வருகின்றது.  இது இந்நாட்டு மக்களுக்கு பாஷை விஷயத்திலும் சுயமரியாதையில்லையென்பதற்கும் ஒரு உதாரணமாகும்.

தமிழ்நாட்டுக்கு இந்தி என்ன அவசியத்திற்கு? என்று கேட்க ஒரு தேசபக்தராவது இன்று தேசிய வாழ்வில் இல்லை . தேசபக்த குழாம் பெரிதும் கூலிக்கு மாரடிப்பவர் களாலேயே நிரப்பட்டுவிட்டதால் பார்ப்பனத் தலைவர்களுக்கும், பார்ப்பனர் களால் பிடித்து வைக்கப்பட்ட தலைவர்களுக்கும் அடிமைகளாய் இருந்து அவர்கள் உபதேசித்த தேசிய மந்திரத்தை உருப்போட்டு, ஜெபித்து வயிறு வளர்ப்பதைவிட வேறு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது.

இந்த நாட்டில் இன்றைய தமிழ் பாஷையே தமிழ் மக்களின் சுயமரியாதைக்கும், மனிதத் தன்மைக்கும். சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாக விருக்கின்றது என்பதைப் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம்.  இன்றைய தமிழ் பாஷையில் பெரிய இலக்கியமாய் பாவிக்கப்படுவதாகிய கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகிய இவ்விரண்டும் கூட மானமுள்ள, சுயமரியாதை வீரம் ததும்பிய, இரத்த ஓட்டமுள்ள,  தமிழ் மக்களால் சுட்டுப் பொசுக்க வேண்டிய புஸ்தகமாகும்.

தமிழ் மக்கள் என்று சொல்லிக் கொள்ளு கின்றவர்களுக்கு போதிய மான உணர்ச்சி இல்லாததாலேயே அவற்றிற்கு தமிழ் நாட்டில் இன்னமும் இடமிருக்க வேண்டியதாகிவிட்டது.  இன்றைய தினம் தமிழ் படித்து, தமிழ் பாஷையில் பற்றுக்கொண்டு, தமிழைத் தாய் பாஷையாய் கொண்ட ஒருவனாவது  தன்னுடைய தமிழ்த்தாய் வடமொழிப் புருஷனுடன் சோரத்தனம் செய்து கொண்டி ருக்கின்றாளா? இல்லையாவென்றும், பிள்ளைகளையெல்லாம் கூட வடமொழிப் புருஷனுக்கு உதவும்படியாகவே அவனைப்போலவே பெற்றுக் கொண்டு மிருக்கின்றாளா? இல்லையாவென்றும் அப்படிச் சோரத்தனம் செய்ததில், முதல் தரப்பிள்ளைகளாயும் சிரஞ்சீவி பிள்ளைகளாயும் இந்தக் கம்பராமாயணமும் பெரிய புராணமும் இருக்கின்றதா இல்லையா? என்றும் கேட்பதோடு, இந்த வடமொழிப் புருஷனுக்கு தங்களது தமிழ்த்தாயை கூட்டிவிட்டு பெருமையடைவதன் மூலமே தமிழ்ப் பண்டிதர்கள் இன்று உயிர் வாழ்ந்து ஜீவனம் செய்து வருகின்றார்களா? இல்லையா வென்றும் கேட்கின்றோம்.

– ‘குடிஅரசு’, தலையங்கம் -_ 14.06.1931

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *