தபோல்கர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீரேந்திர தாவ்டே 20,000 தீவிர இந்து மதப்பற்றாளர்களைக் கொண்டு தானவ் சேனா (அரக்கர்களை அழிக்கும் படை) உருவாக்கும் திட்டத்தில் இருந்ததாகவும், இதற்காக கருநாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து தனது படையில் சேருவதற்கு இணங்க வைத்ததாகவும், அவரிடமிருந்து கைப்பற்றிய ஆவணங்கள் கூறுகின்றன. இவர்களுக்கு சில காவல்துறை அதிகாரிகள் ஆயுதப் பயிற்சி அளிக்க உதவியதாகவும் சி.பி.அய். விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்து ராணுவம்
இந்தியாவில் இந்து மத விரோதிகளைக் கொல்லுவதற்கு வீரேந்திர தாவடே புதிய ராணுவம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவரிடம் கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து சுமார் 17,000 பேர்கள் கொண்ட பட்டியல் ஒன்று உள்ளது.
பகுத்தறிவாளர்கள் பெயர்கள்
மேலும் சி.பி.அய். வசம் உள்ள ஆவணங்களில் கொலை செய்யப்பட வேண்டிய நபர்களின் பட்டியல் ‘தானவ் அரக்கர்கள்’ என்ற சுட்டுப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள பிரபல பகுத்தறிவுவாதிகள் பெயர்களும் உள்ளன. இந்தப் பட்டியலையும் சி.பி.அய். அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக்க சில காவல்துறையினர் முன்வந்துள்ளது அறியப்பட்டுள்ளது. அந்தக் காவல்துறையினரின் பட்டியலும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பன்சாரே, தபோல்கர், கல்புர்கி கொலையில் தொடர்புடைய இந்து தானவ் சேனாவிற்கான ஆயுதம் மற்றும் இதர செலவுகளுக்கு இந்து அல்லாத தொழிலதிபர்களைக் கடத்தியும், தொழில் நிறுவனங்களில் கொள்ளையடித்தும் நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளதும் தெரியவருகிறது.