தப்பை ஒப்பத் தயங்கக் கூடாது
மனிதன் என்பவனே தவறி திருந்தி செம்மை அடைபவன்தான். எவ்வளவு உயர்ந்த, சிறந்த, நேர்மையானவர்களாயினும் தெரிந்தும், தெரியாமலும் தப்பு அல்லது தவறு செய்யக் கூடும். ஆனால், தான் செய்த தப்பை ஒப்புக் கொண்டு, சரியான பாதைக்கு வந்துவிட்டால் சிக்கல் அத்தோடு தீரும். மாறாக, தான் செய்தது தவறு என்று தெரிந்தும், அது சரிதான் என்று நிலைநாட்ட முற்படுவது கேவலத்தையும், இழிவையும் தரும். தப்பை ஒப்புக் கொள்வது பெருந்தன்மையையே காட்டும். மாறாக, அதனால் இழிவு ஏதும் இல்லை.
அனைத்தும் அறிந்தவராயினும் ஆலோசனை பெறத் தயங்கக்கூடாது
நமக்குப் பலவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், அறிவுநுட்பம் இருந்தாலும், பலருக்கு ஆலோசனை வழங்கும் ஆற்றல் இருப்பினும், நாம் ஒரு முடிவு மேற்கொள்ளும் முன் அது சார்ந்த வல்லுனர்களிடமோ அல்லது நமது நம்பிக்கைக்கு உரியவர்களிடமோ அல்லது நம் நலம் விரும்பக் கூடியவர்களிடமோ, அல்லது நமது உதவியாளர்களிடமோ, ஆலோசனை தேவைப்படும் சிக்கலைப் பொறுத்து, உரியவர்களிடம் ஆலோசனை பெறுவதும், அதைப் பரிசீலிப்பதும் கட்டாயம். சில நேரங்களில் எளிமையானவர்களிடம்கூட சிறப்பான ஆலோசனைகள் கிடைக்கும். உதவியாளர்-கூட உகந்த கருத்தைக் கூறுவார்கள். மிகவும் முதன்மையான, சிக்கலானவற்றில் முடிவு மேற்கொள்ளும்போது ஒருவருக்கு மூவராகக் கருத்து சீர்தூக்கி அவசரமின்றி, நிதானமாக முடிவு செய்வது நலம் பயக்கும்; கேடுகள் நேராது காக்கும்.
நமக்குத் தெரியாததா! நமக்கென்ன பிறர் கருத்துக் கூறுவது? என்று இறுமாப்போடு முடிவெடுப்பது சிக்கலையும் கேட்டையுமே பெரும்பாலும் விளைவிக்கும்.
அனைத்து அதிகாரம் உடைய அரசர்கள் அமைச்சர்களை வைத்திருந்ததும், நீதிபதிகள் ஜுரிகள் வைத்திருந்ததும், நிறுவனங்கள் ஆலோசனைக் குழுக்கள் வைத்திருப்பதும் இதன் அடிப்படையில்தான். எனவே, ஆலோசனைப் பெறுவதைத் தவிர்க்கக் கூடாது.
தம்பதியர் தனிக் குடும்பம் செல்லக்கூடாது
திருமணமானதும் தம்பதியர் தனியாகச் சென்று குடும்பம் நடத்துவது வழக்கமாகி வருகிறது. இது மிகவும் கேடான முடிவு. தவிர்க்க இயலாமல் செல்ல நேர்வது விதிவிலக்காக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், வாய்ப்பிருந்து வசதி என்று எண்ணிப் பெற்றோரைத் தனிமையில் விட்டுச் செல்வது சரியல்ல.
பெற்றோர் பிள்ளைகளைப் பிரிந்து வாழ வாட நேர்வது மட்டுமல்ல, தம்பதியரின் பிள்ளைகளுக்குச் சரியான பாசமும், பாதுகாப்பும், நெறியுரையும் இல்லாது போகும். குடும்ப உறவுகள் கூட்டாக இருக்கும் இடத்தில்தான், உதவுதல், பாதுகாப்பு, வழிகாட்டல், துணை என்று பல வாய்ப்புகள் கிடைக்கும்.
அக்காலத்தில் அண்ணன் தம்பி பங்காளிகள் எல்லாம் ஒன்றாக இருப்பர். அது இயலாது போனாலும் தாய் தந்தையருடனாவது இருக்க வேண்டும். தாத்தா பாட்டி இருப்பின் மிக நல்லது.
வயதான பெற்றோரைத் தனியே விட்டுச் செல்லுதல், அல்லது விடுதிகளில் சேர்த்தல் போன்றவை பெற்றோருக்குச் செய்யும் துரோகமாகும். பிள்ளைகளுடனும், பேரப் பிள்ளைகளுடனும் வாழவே எல்லா வயதானவரும் விரும்புவர். அது இல்லாத வாழ்வு அவர்களுக்கும் வெறுமைதான். வறுமையாய் வாழலாம்; வெறுமையாய் வாழ்தல் இயலுமா?