அய்யாவின் அடிச்சுவட்டில்… 157

ஜூலை 01-15

சமூகரீதியாக – கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்பதுதான் இடஒதுக்கீட்டு அடிப்படை

சென்னை பெரியார் திடலில் மாபெரும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாடு 22.07.1979 அன்று நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் என்.எம். மணிவர்மா எம்.ஏ.பி.எல்., அவர்கள் தலைமை-யில் நடைபெற்றது. மாநாட்டில் ஜனதா கட்சி செயலாளர் ரமணிபாய், என்.ஜி.ஓ சங்கத்தலைவர் சிவ இளங்கோ, டி.செங்கல்-வராயன், திருமறவன் (பார்வார்டு பிளாக்), முன்னாள் சென்னை பல்கலைக்-கழகத் துணை வேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், டாக்டர் சுந்தரவதனம், முஸ்லீம் லீக் கொள்கை பரப்புச் செயலாளர் பீர்முகமது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு துணைப் பொதுச் செயலாளர் தா.பாண்டியன், காங்கிரஸ் கட்சி (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் அனந்தநாயகி பி.ஏ.பி.எல்., முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் ஆர்.பண்டரிநாதன், பேராசிரியர் ந.இராமநாதன், சென்னை மாவட்டத் தி.க.தலைவர் எஸ்.பி.தெட்சிணா மூர்த்தி, கழக அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை, கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, விவசாய அணிச் செயலாளர் ஏ.எம்.ஜோசப் உள்ளிட்ட தோழர்களும் கலந்துகொண்டனர்.

பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காப்பு மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய காங்கிரஸ் கட்சி செயலாளர் என்.எம். மணிவர்மா எம்.ஏ.பி.எல்., அவர்கள் உரை-யாற்றும் போது, “பிற்படுத்தப்பட்டவர்கள் என்பவர்கள் சமுதாயரீதியாக, கல்விரீதியாக பின் தங்கியவர்களே தவிர, பொருளாதார ரீதியில் அல்ல என்று அரசியல் சட்டம் தெரிவிக்கிறது. அரசியல் சட்டம் வழிக்காட்டும் கோட்பாடும் (கைடிங் பிரின்ஸ்பிள்ஸ்) அதைத்தான் கூறுகிறது.

காமராசர், அண்ணா, கலைஞருக்குப் புரியாத ஒன்று இப்போது நமது முதலமைச்சருக்கு புரிந்திருக்கிறது!

இப்போது முதலமைச்சராக இருக்கும் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லை, முன்னேறிய ஜாதிப்பட்டியலில் இல்லை, தாழ்த்தப்பட்டவரும் இல்லை எனவே அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்று குறிப்பிட்டார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாட்டைத் துவக்கி வைத்து டாக்டர் சுந்தரவதனம் பேசுகையில், “பிற்படுத்தபட்ட வகுப்பு என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்-பட்டிருக்கும் பட்டியலில் இடம் பெற்றிருந்-தாலும் ஒரு மாணவனுடைய தகப்பானருக்கு ஆண்டு வருமானம் 9000/_- ரூபாயும் அதற்கு மேலும் இருந்தால் அந்த மாணவன் பிற்படுத்தப்பட்டோருக்கு உண்டான சலுகையை அடையும் உரிமையை இழந்து விடுகிறான். சமுதாய அமைப்பினாலோ, கல்வியில்லாததாலோ, பின்னடைந்து கிடப்பது (ஷிஷீநீவீணீறீறீஹ் ணீஸீபீ ணிபீuநீணீtவீஷீஸீணீறீறீஹ் ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ) என்பது தான் இதுவரை இருந்தது. இனி இப்படி-யில்லாமல் பொருளாதாரத்தினால் ஒருவன் பின்னடைந்தவன் என்று கணிக்கப்படும். (ணிநீஷீஸீஷீனீவீநீணீறீறீஹ் தீணீநீளீஷ்ணீக்ஷீபீ) இது இன்றைய அரசாங்கத்தின் புதிய உத்தரவாகும்.

இது சமுதாயத்திலே மிகப் பிற்படுத்தப்-பட்டுக் கிடக்கும் மக்களுக்கு உதவி செய்யவே ஆகும் என்று சர்க்கார் தரப்பில் கூறப்படுவது மேம்போக்காகப் பார்த்தால் சரியானது போல் தோன்றும். ஆனால், இது தன்னை ஒத்த இன்னொருவருடைய உரிமையைத் தட்டி பறிக்கிறது என்பதே உண்மையாகும்’’ என்றார்.

பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது, “இன்றைய சமூக அமைப்பு எப்படி இருக்கிறது? சமூக பிற்போக்குத்தன்மை, கல்வி பிற்போக்குத் தன்மை, பொருளாதார பிற்போக்குத்தன்மை -என்று 3 வகையாகப் பிரிந்திருக்கிறது.

முதலில் உள்ள சமூக பிற்போக்குத் தன்மை! இது என்றைக்கும் மாறாதது.

செட்டியார் மகன் என்றைக்கும் செட்டியார்-தான், நாடார் மகன் என்றைக்கும் நாடார் தான், இந்தச் சமூக பிற்போக்குத் தன்மை என்றைக்கும் நிலையானது.

இரண்டாவது கல்வி பிற்போக்குத் தன்மை! சாத்திரங்களையும், வேதங்களையும் காட்டி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயம் படிக்காதவர்களாக அழுத்தி வைக்கப்பட்டுக் கிடந்தது! ஒரு குறிப்பிட்ட சமுதாயம் கல்வியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு மாபெரும் சமுதாயத்தை கல்வி அறிவு அற்றவர்களாக ஆக்கி வைத்திருந்தது. மிகப்பெரிய கல்வி வேற்றுமை உருவாகி நிற்கிறது! இப்படி அமுக்கி வைக்கப்பட்ட மக்கள் கல்வியில் சமத்துவம் பெற இன்னும் குறைந்தது 100 ஆண்டுகளாவது ஆகும்.

மூன்றாவது பொருளாதார பிற்போக்குத் தன்மை இது நிலையானது அல்ல, அவ்வப்-போது மாறிக் கொண்டிருக்கக் கூடியது. இவ்வாண்டு குறைந்த விவசாயியின் வருமானம் அடுத்த ஆண்டு உயரலாம். நிலையான சமூகம், கல்வி பிற்படுத்தப்பட்ட தன்மையில், நிலையற்ற பொருளாதார அளவு கோலைக் கொண்டு வந்து புகுத்துவது நிலையான ஆட்சியின் செயலாக இருக்க முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பி அன்றைக்கு பேராசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

மாநாட்டில் உரையாற்றிய தா.பாண்டியன் அவர்கள், “தமிழ்நாடு அரசின் 9 ஆயிரம் ரூபாய் உத்தரவை ஆதரித்து எழுதும் இந்துவுக்கு நேரடியாக ஒரு கேள்வி கேட்கிறேன்! இந்த உத்தரவுப்படி, கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த – நீ சொல்லும் கல்வி தகுதி, மார்க் தகுதி அனைத்தையும் பெற்றுள்ள நான்கு மாணவர்களை அதாவது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களை, இந்து அலுவலகத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்த நான் தயார்! இந்து அந்த மாணவர்களை அலுவலகத்தில் உள்ள ஆசிரியர் பிரிவில் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறதா? 4 மாணவர்கள் கூட வேண்டாம்; அதில் ஒரு மாணவரை சேர்த்துக் கொள்வதற்கேனும் தயாரா?

‘இந்து’வே உனது அலுவலகத்தில் நீ வேலையில் அமர்த்தியிருப்பது எல்லாம் யாரை என்பது எங்களுக்குத் தெரியாதா?’’ என்ற கேள்வியை அந்த கூட்டத்தில் தா.பாண்டியன் அவர்கள் எழுப்பினார்.

விழாவில் வரலாற்றுபூர்வமான முக்கிய உரையை அன்று நான் நிகழ்த்தினேன், அந்த உரையில், “இன்றைக்கு அரசியல் சட்டத்திலே பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால் சமுதாய ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்று சொல்லப்படுகிறது என்றால், ஷிஷீநீவீணீறீறீஹ் ணீஸீபீ ணிபீuநீணீtவீஷீஸீணீறீறீஹ் என்று வரையறுக்கப்படுகிறது என்றால், அது எப்படி வந்தது? புட்டபத்தி சாயிபாபா கையை தூக்கிக் கொண்டு வா என்று சொன்னதால் வந்ததா? அல்ல. அதற்கு ஒரு சரித்திரம் உண்டு. ஒரு போராட்டப் பின்னணி உண்டு.

அப்படிப் போராடி பெற்ற உரிமையை இன்றைக்கு தட்டிப்பறிக்க முயலுபவரைப் பார்த்து, எட்டி நில் என்று சொல்ல வேண்டிய திருப்பத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

அன்றைக்கு வகுப்புவாரி உரிமை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் பொங்கி எழுந்து ஊர்வலம் நடத்திய மணிவர்மா அவர்கள் தான் இன்றைக்கு இந்த மாநாட்டுத் தலைமை தாங்குகிறார்.

என்னதான் சர்வதேசியம் பேசினாலும் உன் வீட்டுக்கதவை அல்லவா முதலில் சாத்த வேண்டும்.

உலகத்தின் கதவுகள் முழுவதும் திறக்கப்-படும் வரை உன் வீட்டுக்கதவுகள் பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தானே நண்பர் பாண்டியன் இங்கே வந்திருக்கிறார்! இப்படி எல்லா தரப்பிலுமிருந்தும் இங்கே வந்திருக்கிறார்கள் என்றால், நாங்கள் சொல்லுகிறோம் – இந்த இணைப்பு மிக நெருக்கமான இணைப்பு என்பதை மறந்துவிட வேண்டாம்.

வகுப்புவாரி உரிமையை எதிர்த்து அன்றைக்கு நீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன் தந்தை பெரியார் சொன்னார், எனக்கு நீதி மன்றத்தின் தீர்ப்பு முக்கியமல்ல; மக்கள் மன்றத்தின் தீர்ப்பு தான் முக்கியம் என்று, நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடனேயே தந்தை பெரியார் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதை முக்கியமாக கவனிக்க வேண்டும். தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியின் காரண-மாகத்தான், தமிழகத்திலிருந்து கிளம்பிய முதல் குரலின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன் முதலாக திருத்தத்திற்கு உள்ளானது.

ஏழை பிற்படுத்தப்பட்டவர்களைக் காப்பாற்றத்-தான் இந்த வருமான வரம்பு என்று கூறுவது கொச்சைத்தனமான வாதம்! திசைதிருப்பும் விவாதம் ஏமாற்று வாதம்!

இந்த ஒதுக்கீடு எப்படி வந்தது? 5 ஆயிரம் ஆண்டுகளாக தற்குறிகளாய் கிடந்த இந்த சமுதாயத்திற்காக வந்தது என்பதை மறந்து விடக்கூடாது.

முதலமைச்சர் பேசியிருக்கிறார்! பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று சொல்லி விட்டு, நாட்டில் 70 சதவீதம்பேர் தற்குறிகளாக இருக்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்!

முதலமைச்சரைக் கேட்கிறோம்! முதல்வர் அவர்களே! இவர்களில் தற்குறியாக இருக்கும் ஒரு பார்ப்பனரை காட்ட முடியுமா? கையெழுத்துப் போடத் தெரியாத ஒரு மொட்டைப் பாப்பாத்தியைக் காட்ட முடியுமா? நம்முடைய சமுதாயத்தின் நிலை என்ன? சலங்கை கட்டிய வண்டியிலே கல் கல் என்று போகிறவன், கழுத்திலே சங்கிலியைப் போட்டுக் கொண்டிருப்பவன், கையிலே தாயத்தைக் கட்டிக் கொண்டிருப்பவன் அங்கே தாசில்தார் அலுவலகத்திற்குப் போய் கையெழுத்துப் போட வேண்டுமானால் என்ன செய்கிறான்? கட்டை வண்டியை தேடுகிறான்! இதுதானே சமூகத்தின் நிலையாக இருந்தது. எனவே தான் அவன் பிற்படுத்தப்பட்ட சமுதாயம்! கல்வி சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது இந்த அடிப்படையில் தானே!

எந்த காரணத்தால் இந்த நிலை வந்தது? சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே! என்ற மனுதர்மம் இந்த நாட்டில் கோலோச்சிய காரணத்தால் தானே இந்த நிலை வந்தது. இந்தக் கருத்தை மற்றவர்கள் இங்கு சொல்லுவதற்குத் தயங்கலாம். ஆனால் உண்மைகளை அப்பட்டமாக சொல்லுவதற்கு தந்தை பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் தயங்க மாட்டோம். இதைச் சொல்லித்தான் தீரவேண்டும். இதைச் சொல்லா விட்டால் இந்தப் பிரச்சினை தீராது. விளங்காது விளங்க வைக்க முடியாது.

இதோ இங்கே, 1918ஆம் ஆண்டிலிருந்து நமது சமுதாயத்தில் படித்தவர்கள், பார்ப்பனர்-களில் படித்தவர்களின் புள்ளி விவரங்களை எழுதி உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம்! நமது சமுதாயம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தது என்பதை நன்றாகப் பாருங்கள்.

31 சதவீத பிற்படுத்தப்பட்டோர் சலுகையை பறித்து விடவில்லையே என்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோர் நிலையே இன்றைக்கு பறிக்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாக அரசாங்கத்தின் ஆணையை எரிப்பதற்கு முடிவு எடுத்துள்ளோம்! இது முதல் கட்டம் தான். தந்தை பெரியாரிடம் ஆரியமே வெற்றிபெற முடியாமல் தோற்று ஓடிவிட்டது என்பதை மறந்து விடாதீர்கள். ஆரியமே வெற்றி பெறாமல் ஓட்டம்பிடித்து விட்டபோது அவர்களின் பாதுகாவலராக வருகிறவர்களை வெற்றி பெறவிட மாட்டோம்’’ என்று சூளுரைத்தேன். பின்னர் வெற்றியும் பெற்றேன். எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்த பிற்படுத்தப்-பட்டோர் சலுகை உத்தியோக வாய்ப்பிற்கான வருமான வரம்பு பற்றிய உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்ற என்னுடைய செயல்பாட்டை 23.07.1979 அன்று வெளியான “அலை ஓசை’’ இதழ் பாராட்டியது, அதனை இங்கே அப்படியே தருகிறேன்.
‘இந்து’
‘இதயம் பேசுகிறது’ மணியம்
கொத்தடிமை அய்யங்கார்
ஆகியோருக்குத் தமிழ்ச் சமுதாயம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறது!

பெரியாருக்கு விழா கொண்டாடியபடியே பெரியார் கொள்கைகளை புதைகுழிக்கு அனுப்பினால், ஏமாளித்தமிழர்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற நயவஞ்சக எண்ணத்தோடு,
தமிழர்களின் நெடுங்காலப் பகைவர்களின் ஆசி, ஆலோசனை, ஆதரவுடன் பிற்பட்ட மக்கள் சமுதாயத்தை -மனு காலத்து அறியாமை இருளில் கொண்டுபோய் தள்ளிவிட, முன் கை எடுத்து வைக்கும் முதல் முயற்சியாக, எம்.ஜி.ஆர் அரசு கொண்டுவந்த பிற்படுத்தப்பட்டோர் உத்தியோக வாய்ப்பிற்கு எதிரான வருமான-வரம்பு  உத்தரவை தமிழ்ச் சமூகம் இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்ளக் காரணம், இந்துவும் – மணியனும், கொத்தடிமை அய்யங்காரும், இந்த உத்தரவை ஆதரித்து எழுத இவ்வளவு அவசரமும், ஆத்திரமும் காட்டியதுதான் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை-யானதே!

தந்தை பெரியார் அவர்கள் விடுதலை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை வீரமணியிடம் ஒப்படைத்த போது, “அய்யா -நானோ அனுபவத்திலும் வயதிலும் இளையவன். தாங்கள் மாதத்தில் பல நாட்கள் வெளியூர் சுற்றுப்பயணத்திலேயே இருக்கிறீர்கள்! இந்த நிலையில் – முக்கியமான பிரச்சினைகள் பற்றி சந்தேகம் வந்தால்…’’ என்று வீரமணி கேட்க “பயப்படாதே இந்து தலையங்கத்தைப் படி; இந்து என்ன சொல்கிறது என்று பார்! இந்து சொல்வதற்கு நேர் எதிராக எழுது; அப்படி எழுதினால் அது தமிழ்ச் சமுகத்திற்கு நல்லது பயப்பதாகவே இருக்கும்!’’ என்று பளிச் சென்று பதிலளித்தாராம் தந்தை பெரியார்!

ஜாதி விஷயங்களில் சமூக நீதி பற்றிய விஷயங்களில் இந்து கூட்டத்தார் எத்தகைய சுயநல அளவுகோலை, எத்தகைய ஜாதி வெறியின் பாற்பட்ட அணுகுமுறையை கையாளுவார்கள் என்பதை இதன் மூலம் அன்றே வீரமணிக்கு சொல்லாமல் சொல்லி சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார் பெரியார்!

பெரியார் இருந்தபோதே இந்து கூட்டம் அப்படி நடந்து கொள்ளும் என்றால், பெரியாரும் இல்லை, – பெரியார் கொள்கையை பெரியாருக்கு விழாக் கொண்டாடியபடியே புதைகுழிக்கு அனுப்பும் நயவஞ்சக அரசு ஒன்றின் துணையும் கிடைத்திருக்கிறது!

எனவே இந்துவும், மணியனும், கொத்தடிமை அய்யங்கார்களும் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை ஆதரித்து, அவசர அவசரமாக விழுந்து விழுந்து எழுத ஆரம்பிக்கவே, தமிழ்ச் சமுதாயம் மீண்டும் – கட்சி வேற்றுமைகளைக் கடந்து ஒரே அணியாக திரள ஆம்பித்துவிட்டது!

தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளையே பணயமாக வைத்து போராடிப் பெற்றுத்தந்த, பிற்படுத்தப்பட்டோர் நலன்-களையும் _- உரிமைகளையும், – சலுகைகளையும் ஒரே ஒரு உத்தரவு மூலம் பறிமுதல் செய்திருக்கிற இனத்துரோக நடவடிக்கையை எதிர்க்க தமிழ்ச்சமூகம் கட்சி கடந்து ஒன்று திரண்ட காட்சியை, சேலத்திலும், சென்னையிலும் திராவிடர் கழகம் நடத்திய பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் பாதுகாப்பு மாநாடுகள் எடுத்துக்காட்டின!

பெரியார் இருந்தால் என்ன செய்திருப்-பாரோ அதனை பெரியார் வழி நின்று உடனடியாக செய்து முடிக்க பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பெரியாரின் நம்பிக்கைக்குரிய தளபதி வீரமணி முன்வந்தார்!

வீரமணியின் சீரிய முயற்சிகளின் காரணமாக குறுகிய காலத்திற்குள் இரண்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன.
“ஒரு மாத காலத்திற்குள் இந்த இனத்துரோக உத்தரவை வாபஸ் பெறாவிடில், இந்த உத்தரவை எரித்து சாம்பலை முதல்வருக்கு அனுப்புவது’’ என்று சென்னை மாநாட்டில் மாநாட்டுத் தலைவர் மணிவர்மா அறிவித்த-போது எழுந்த கையொலி கோடிகோடி தமிழ்ப்பெருங்குடி மக்களின் உள்ள உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் உணர்ச்சி முழக்கமாக அமைந்திருந்தது.

அண்ணா அவர்களால் இரட்டைத் துப்பாக்கி என்று வருணிக்கப்பட்ட தி.க., தி.மு.க. ஆகிய இரு தமிழர் நல பாதுகாப்பு இயக்கங்களில் திராவிடர் கழகம், சென்னையில் மாநாடு நடத்திய அதே தினத்தில் தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக்கழகம் நடத்திய கண்டனக் கூட்டங்கள் பிற்படுத்தப்-பட்ட மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்-புணர்வையும் – கண்டனத்தையும் பிரதிபலிப்-பதாக அமைந்திருந்தது.

இத்தனைக்குப் பிறகும் இந்த இனத்துரோக உத்தரவை, நம்பிக்கை மோசடியை எம்.ஜி.ஆர் அரசு வாபஸ் வாங்காவிடில், குலக்கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்ட காலத்துத் தமிழகத்தை, தமிழர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை அறப்போராட்டங்கள் வடிவில் இந்த அரசு சந்திக்க நேரிடும்.

அத்தகைய கசப்பு மிக்க சூழ்நிலைகளுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் ஏகோபித்த குரலுக்கு செவி சாய்த்து இந்த அக்கிரம உத்தரவை வாபஸ் பெற இந்த அரசு முன்வரும் என்று நம்புவோமாக’’ என்று அலையோசை எழுதியது.

மாநாட்டில் ஒரு மாதத்துக்குள் அரசு தனது உத்தரவை வாபஸ் பெறவிட்டால், முதற்-கட்டமாக, போராட்டம் அரசின் புதிய உத்தரவை தீயிட்டுக் கொளுத்தி, அதன் சாம்பலை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிவைப்பது என்று உரிமைகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என்னைத் தொடர்ந்து தமிழ்நாடு ஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ரமணிபாய் உரையாற்றினார். சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களும், கழக தோழர்கள் பலரும் உரை நிகழ்த்தினார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு அரசுக்கு மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டியது என்பதில் சிறிதும் அய்யமில்லை, ஏராளமான பல்வேறு கட்சித் தொண்டர்களும், கழக தோழர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *