23 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 45 பதக்கங்கள் வென்று சாதனை!
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலை சிலம்பம். இன்று உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இதற்காக முழு மூச்சுடன் உழைத்து வரும் இந்திய சிலம்பாட்ட பெடரேஷனின் பொதுச் செயலாளர் பவர் பாண்டியனின் பயிற்சியாலும் முயற்சியாலும், ஆசிய அளவில் நடத்தப்பட்ட சிலம்பப் போட்டிகளில் 23 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களை வென்று திரும்பியுள்ளது இந்திய அணி. இந்திய அணியில் மொத்தம் 55 பேரில் தமிழ்நாட்டவர் 34 பேர். இதுவே, தமிழர் பெருமைக்குச் சான்று!
இத்தனை பெரிய வெற்றி எப்படி சாத்தியப்-பட்டது?
சிலம்பக்கலை இனி அழியாது! பாரம்பரியக் கலையாகவும் வீர விளையாட்டாகவும் இருந்த சிலம்பாட்டம் மாறி 30 ஆண்டுகளாகிவிட்டன. 1994இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மேலும் அது வளர்ந்துள்ளது. உலக சிலம்பக் கழகமும் அனைத்திந்திய சிலம்ப கழகமும் செயல்படாமல் இருந்த சூழ்நிலையில் களறி செல்வராஜ் உள்ளிட்ட சிலரது முயற்சியால் இந்திய அளவில் கவனிப்பைப் பெற்றது.
பள்ளிக் கூடங்களில் சிலம்பம் சேர்க்கப்-பட்டுள்ளது. மாணவர்களிடையே சிலம்பம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகி வருகிறது. எந்த ஒரு கலையிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுத் தரும்போதுதான் அதில் சாதனையை அடைய முடியும். அப்படியான மாணவர்களுக்கு பயிற்சி அளித்துதான் ஆசியப் போட்டிகளில் பங்கேற்கச் செய்தோம்.
மொத்தம் 11 நாடுகள் கலந்துகொண்டன. இதில் பாண்டியனின் மாணவர்கள் மட்டும் 12 பேர். சீனியர் பிரிவில் ஐஸ்வர்யா என்பவர் 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களுடனும், மினி ஜூனியர் பிரிவில் சொர்ணபிரபா 4 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களுடனும், ஜூனியர் பிரிவில் சுபவாணி 3 தங்கம், 2 வெள்ளிகளுடனும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களைப் பெற்றனர்.
சர்வதேச அளவில் போகும்போது சிலம்பாட்ட விதிமுறைகளில் மாற்றம் உள்ளது. வண்ணப்பொடிகளை கம்பின் முனையில் தொட்டு அதை எதிராளியின் நெற்றியில் பொட்டாக வைப்பதை அடிப்படையாக வைத்து வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்-படுவதுதான் நமது விதிமுறை. இதே முறைதான் சர்வதேசப் போட்டிகளில் கடைபிடிக்கப்-படுகிறது என்றாலும், காலத்திற்குத் தகுந்தாற்-போல் நவீன மாற்றங்கள் செய்யப்-பட்டுள்ளன.
கம்பு சுற்றும்போது எதிராளியின் தலையிலோ உடம்பிலோ அடிபட்டால் சுயநினைவை இழப்பதோ, உறுப்புகள் செயலற்றுப் போகும் ஆபத்தோ இருக்கிறது. அதனால் போட்டியின்-போது தலை, மார்பகக் கவசத்தைப் போட்டியாளர்கள் அணிந்து கொள்கிறார்கள். சிகப்புக் கம்பு வைத்து விளையாடுபவரின் நெற்றியில் நீலக் கம்பு வைத்திருப்பவர் பஞ்ச் வைத்தால் எலெக்ட்ரானிக் திரையில் நீல நிறம் காட்டப்-பட்டு அவருக்கு பாயிண்ட் வழங்கப்படுகிறது. இதை லைவ்வாகப் பார்க்கும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன. அதேபோல் சிலம்பப் போட்டியில் நெடுங்கம்பு, வாள்வீச்சு, சுருள், வேல்வீச்சு, மான்கொம்பு மடுவு, கம்பு சண்டை என 8 வகையான தற்காப்புக் கலைகளும் அடங்கும்.
தமிழ் பாரம்பரியக் கலை, இப்படி வடிவம் மாறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உலகின் மூத்த மொழி தமிழ் மொழி. அதேபோல் பல தற்காப்புக் கலையின் பிறப்பிடம் தமிழ்நாடுதான். சிலம்பக் கலையே இன்று உலக நாடுகள் முழுக்க வெவ்வேறு பெயரில் வெவ்வேறு வடிவத்தில் பரவியுள்ளது. போர்ச்சுகலில் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. மேற்கிந்தியத் தீவில் பயாஸ் என்ற பெயரில் விளையாடுகிறார்கள். இதற்கெல்லாம் மூலம் தமிழகம்தான். இதனை ஒருங்கிணைப்பது-தான் இப்போது முக்கியப் பணியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறவர்கள்கூட சிலம்பம் கற்பதற்கு ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதுவரை மூன்று உலக சாம்பியன் சிலம்பப் போட்டிகள் நடந்துள்ளன. நம் வீரவிளையாட்டு இந்த அளவுக்கு வளர்ந்துவருவது நமக்குப் பெருமையளிப்பது.