சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

ஜூன் 16-30

இந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும்  சில பக்கங்களின் மூலமே அறியலாம்.

மிண்டோ_மார்லி சீர்திருத்தம் வருவதற்கு முன்னர் சென்னை கவர்னர் கவுன்சிலுக்கு மாவட்ட போர்டுகள் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் உரிமை பெற்றிருந்தன என்பதும், வடக்கு மாவட்ட போர்டுகள் ஒன்று சேர்ந்து ஒரு பிரதிநிதியையும், தெற்கு மாவட்ட போர்டுகள் ஒன்றுசேர்ந்து ஒரு பிரதிநிதியையும் அனுப்பி வைத்தன என்பதும் உங்களுக்குத் தெரிந்த செய்திதான். வடக்கு மாவட்ட போர்டுகளின் பிரதிநிதியாக 1900லிருந்து 1902 வரையில் திவான்பகதூர் கருங்குழி ஜம்புலிங்க முதலியாரும், 1902லிருந்து 1907 வரையில் எஸ்.ஏ.கோவிந்தராகவ அய்யரும் அனுப்பப்-பட்டார்கள். பிறகு இரண்டாண்டுகள் பி.கேசவப்பிள்ளை அனுப்பப்பட்டார். இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் 5 ஆண்டு காலம் ஒரு பிராமணரும் 4 ஆண்டு காலம் இரண்டு பிராமணரல்லாதாரும் வாய்ப்புப் பெற்றுள்ளார்கள். தெற்கு மாவட்ட போர்டுகளின் கதையோ பிராமணர் கதையாகவே இருந்து வந்துள்ளது. சேலம் சி.விஜயராகவாச்சாரியார், ஜி.சீனிவாசராவ் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.

மிண்டோ_மார்லி சீர்திருத்தத்திற்குப் பிறகு சில இடங்களில் இரண்டு மாவட்ட போர்டுகளுக்கு ஒரு பிரதிநிதித்துவமும், சில இடங்களில் மூன்று மாவட்ட போர்டுகளுக்கு ஒரு பிரதிநி-தித்துவமும் கொடுக்கப்பட்டன. இப்புதிய பிரதிநிதித்துவ முறைப்படி வடக்கு மாவட்ட போர்டுகளின் பிரதிநிதியாக ஜி.இராகவராவ், பி.என்.சர்மா, எஸ்.கிருஷ்ணாராவ் போன்ற பிராமணர்களே தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தார்கள். இப்போது பிராமணரல்லாதாரின் பெருமுயற்சியால் பி.கேசவப்பிள்ளை பிரதிநிதியாக அனுப்பப்பட்டுள்ளார். தென்-மாவட்ட போர்டுகளின் பிரதிநிதியாக வி.கிருஷ்ணசாமி அய்யரும், வி.கே.இராமானுசாச்-சாரியாரும், எம்.இராம அய்யங்காருமே அதாவது அய்யர், அய்யங்கார்-களாகவே அனுப்பப்பட்டுள்ளார்கள்.

தொடர்ந்து நான் குறிப்பிட விரும்புவது டில்லி கவர்னர் ஜெனரல்கவுன்சிலைப் பற்றியதாகும். சென்னை சட்டசபையில் உள்ள அங்கத்தினர்கள் தமது பிரதிநிதியாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து டில்லி கவர்னர் ஜெனரல் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கலாம். இது மிண்டோ மார்லி சீர்திருத்தத்தினால் ஏற்பட்ட உரிமையாகும். இதன்படி இன்றுவரையில் பிராமணரல்லாதார் ஒருவர்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பதும், பிராமணரல்லாதாரின் முயற்சிகள் யாவும் தோல்வியே கண்டுள்ளன என்பதும் ஊரறிந்த செய்திகளாகும். இரண்டாண்டு-கட்கு முன் தலைவர் டாக்டர் டி.எம்.நாயர் டில்லி கவுன்சிலுக்கு வேட்பாளராக நின்றதும், பிராமணர்கள் ஒன்றுசேர்ந்து சூழ்ச்சிசெய்து அவரைத் தோற்கடித்ததும் நாடறிந்த செய்தியாகும்.

இந்தச் செய்தியுடன் வேறொரு செய்தியையும் தொடர்புபடுத்திக் கூற விரும்புகிறேன். மூன்றாண்டுகட்குமுன் சென்னைக் கவர்னர் தமது கவுன்சிலில் டாக்டர் நாயர் அவர்களை ஓர் அங்கத்தினராக நியமித்தபோது பிராமணர்கள் ஒன்று திரண்டு கூப்பாடு போட்டு அவர்களுக்கு உள்ள திராவிட எதிர்ப்பினைக் காண்பித்தார்களே, அந்நிகழ்ச்சி இன்றும் நம் கண்முன் காட்சியளிக்கின்றது! சென்னைக் கவர்னர் கவுன்சில் வரலாற்றில் நியமனமுறை மூலம் உறுப்பினர் நியமிக்கப்-படுவதில் பிராமணர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ள செய்திகளே மிகுதியாகும். எப்போதோ ஒரு சமயம் பிராமணரல்லாதார் ஒருவர் நியமிக்கப்படுவார். இப்படி அரிதாகச் செய்யப்படும் நியமனத்தைக் கூடப் பொறுக்க மாட்டார்கள் பிராமணர்கள்! கூச்சலும் கூப்பாடும் போடுவார்கள். தாம் மட்டுந்தான் அப்படிப்பட்ட பதவியை அடையத் தகுதி உடையவர் என்பதும், பிராமணரல்லாதார் தகுதியற்றவர் என்பதும் அவர்களுடைய எண்ணமாகும்! கவர்னர் கவுன்சிலுக்கு வி.பாஷ்யம் அய்யங்கார், கே.வாசுதேவ அய்யங்கார், பி.எஸ்.சிவசாமி அய்யர், வி.கிருஷ்ணசாமி அய்யர், வி.சீனிவாச சாஸ்திரி போன்ற பிராமணர்கள் நியமிக்கப்பட்ட போதெல்லாம் பிராமணரல்லாதாராகிய நாம் என்ன செய்தோம்! வாய்மூடி மவுனிகளாக இருந்தோம்!

இவைகளையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன். சொன்னால்தான் மக்களுக்கு நாட்டு நடப்பு புரியவரும்! தெரியவரும்! தெரிந்து தமது நலனைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள்! முன் வருவார்கள்! பிராமணரல்லாதார் எங்கெல்லாம் தம் உரிமை இழந்து நிற்கின்றார்கள் என்பதையும் பிராமணசாதி வெறி எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்து பிராமணரல்லாதாரைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறது என்பதையும் அறிந்து திராவிடர்களாககிய நாம் என்ன செய்தல் வேண்டும்? பிராமணரைப் போல ஒரே இன உணர்ச்சியடைதல் வேண்டும்! இது நமக்குச் சொந்தமான நாடு! இது நமக்குச் சொந்தமான அரசாங்கம்! இதன் முழு உரிமையும் நமக்குத்தான் உண்டு! என்றெல்லாம் இன உணர்ச்சியும் நாட்டு உணர்ச்சியும் அரசியல் உணர்ச்சியும் அடைதல் வேண்டும்! இவ்வாறெல்லாம் உணர்ச்சியும் ஊக்கமும் கொண்டு பிராமண ஜாதி ஆதிக்கத்தை வெட்டி வீழ்த்த வேண்டும்! இப் புனிதமான காரியத்தைச் செய்வதற்குக் கட்சி அமைப்பு மிகமிக அவசியமாகும்! இன்றே காணுங்கள் கட்சி அமைப்பை! நாளை நாளை என்று ஒத்திப் போடாதீர்கள்!’’

இந்த அரசியல் அறிஞரைத் தொடர்ந்து வழக்குரைஞர் ஒருவர் விவாதத்தைத் தொடரவைத்து ஓரிரு நிமிடங்களில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டுக் கூறிவிட்டுத் தமது பேச்சை முடித்துக் கொண்டார். “அரசியல் துறையில் பிராமணர்கள் அடைந்துள்ள ஏகபோக உரிமையை நண்பர் விரிவாக எடுத்துச் சொன்னார்! அவைகளையெல்லாம் கேட்ட நாம் மனம் கொதித்தோம்! இவைகளைவிடப் பெரியதொரு பிராமண ஆதிக்கம் கொண்ட இடம் ஒன்று உண்டு! அதைப்பற்றிக் கேட்டாலே நாம் நம்மையும் அறியாமல் குதித்து எழுவோம்! அதுதான் நீதி நிருவாகத் துறை! நீதிமன்றங்களிலும் அவைகளின் நிருவாக அலுவலகங்களிலும் நூற்றுக்கு நூறு பிராமணர்களே நிரம்பி உள்ளார்கள்! அங்கெல்லாம் மருந்துக்குக் கூட ஒரு பிராமணரல்லாதாரைக் காண முடியாது! பிராமணர்களின் பரம்பரை வாரிசு உரிமையாக இருந்து வருகிறது நீதி நிருவாகத்துறை. இந்த அநீதி எப்போது ஒழிவது? இலட்சக்கணக்கில் வரி செலுத்தி-வரும் திராவிட சமுதாயத்துக்கு எவ்வித வேலையும் கொடுத்திட மறுத்திடும் நீதி நிருவாகத் துறைக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது!  நாம் நம்முடைய பேர்க்குரலை எழுப்பாத வரையில் ஆங்கில ஆட்சியும், பிராமண ஆதிக்கமும் பணிந்து வராது! நமக்கென்று நாம் தனி ஒர் அரசியல் கட்சியை ஏற்படுத்திக் கொண்டால்தான் நாம் போராட முடியும்! உரிமையைப் பெற முடியும்!’’

அடுத்துப் பேசிய அரசியல் தலைவர் ஒருவர் அக்காலத்தில் நடந்துவந்த அரசியல் கிளர்ச்சியைப் பற்றி விரிவாகப் பேசினார்; தெளிவாக எடுத்துச் சொன்னார். அரசியல் நிலைமையையும், அவர் பேச்சுக்களையும் கூடியிருந்தோர் மிகக் கவனமாகவே கேட்டார்கள். கேட்டு மகிழ்ந்தார்கள். அதுமட்டுமல்ல! தம் உரிமையைப் பெறக் குரலும் எழுப்பினார்கள். “உலகப் போர் துவங்கி இரண்டாண்டுகள் ஆகின்றன. இப்போரில் நீதிக்கும் நேர்மைக்கும் இறங்கியுள்ள இங்கிலாந்தும் அதன் நேச நாடுகளும் வெற்றி பெற வேண்டி, திராவிடராகிய நாம் நம்மால் ஆன உதவிகளையெல்லாம் செய்து வருகிறோம். பொன்னும், பொருளும் தந்து, போரிட வீரர்களையும் அனுப்பி உலக நலனுக்கும் நம் நாட்டு நலனுக்கும் சேவை செய்து வருகிறோம். இப்படிப்பட்ட சமயத்தில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரை முன்னோடியாகக் கொண்ட ஒரு கூட்டத்தார் ஜெர்மானியர்களுக்கு ஆதரவாகக் கூப்பாடு போட்டு ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து வருகிறார்கள். இது உங்கள் யாவருக்கும் தெரிந்ததுதான். இவ்வெதிர்ப்புச் செயலுக்கென பெசன்ட் அம்மையார் ‘ஹோம்ரூல் லீக்’ என்ற ஓர் அரசியல் கட்சி அமைத்துக் கொண்டுள்ளதும்,

பிராமணக் கூட்டத்தாரைக் கொண்டு விடாமல் கூச்சல் எழுப்பி வன் செயல்களில் ஈடுபட்டு வருவதும் நாம் எல்லோரும் அறிந்ததுதான். இந்தக் கூட்டத்தார் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் “உலகப் போரில் உங்களுக்கு நாங்கள் பலவித உதவி செய்து வருகிறோம்;  அந்த உதவிகளுக்குக் கைமாறாக  நீங்கள் எங்களுக்கு சுய ஆட்சியும், சுதந்திரமும் கொடுத்திட வேண்டும்’ எனக் கோரி வருவதும் விந்தையல்லவா! தாம் செய்திடாத உதவிகளுக்குப் பிரதி உபகாரம் கோரிடும் இப் பேராசைக்காரர்களின் உட்கிடக்கைதான் என்ன? பிரிட்டிஷார் தங்களுடைய கிளர்ச்சிகளுக்கும், கூச்சல்களுக்கும் பயந்துபோய் ஆட்சியைத் தம்மிடம் கொடுத்துவிடுவார்கள்; நாம் நமது பழைய ஜாதி ஆதிக்க ஆட்சி முறையை அமைத்துத் திராவிடரை அடிமைகொண்டு சுகபோக வாழ்வு வாழலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வஞ்சகக் கூட்டத்தார். இந்த வஞ்சக எண்ணத்தைத் திராவிடர்களாகிய நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். உணர்ந்து பார்த்து அவர்களுடைய தகாத எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட வேண்டும்! அதற்கான வழிவகைகளை நாம் காணவேண்டும்! ஆட்சியின் நிருவாக உரிமையை அதன் சொந்தக்காரர்களான திராவிடர் அடையும்படிச் செய்ய வேண்டும்!

மற்றொன்றையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். தற்போதுள்ள ஆங்கில மந்திரி சபையினர் இந்தியாவுக்கு விரிவான அரசியல் சீர்திருத்தம் தர யோசித்து வருவதாகவும், அதற்கு இந்திய வைசிராயும் தமது ஒப்புதலைத் தெரிவித்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. இச் செய்தி உண்மையாக இருந்து மிண்டோ_மார்லி சீர்திருத்தத்தை விட மேலானதொரு சீர்திருத்தம் தரப்படுமானால், அச் சீர்திருத்தத்தினால் திராவிடரின் நலன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவர்களின் நலனுக்கு உகந்த வகையில் அச் சீர்திருத்தம் அமைந்திடும்படி பார்த்துக் கொள்வதும் நமது தலையாய கடமையாகும்! இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையுடன் இல்லாதிருந்துவிட்டால் பின்னர் நாம் அவதியுற  நேரிட்டு விடும்! அதிகார ஆசைகொண்ட பிராமணர்கள் ஆட்சியைப் பெற்றுச் செல்வாக்கு அடைந்திடுவார்கள்!

ஹோம் ரூல் லீக் பிராமண கூட்டத்தைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் சேர்ந்து இந்தியாவுக்கு எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தம் தரவேண்டும் என்பதை விளக்கிக் காட்டி விண்ணப்பம் ஒன்று தயார் செய்து ஆங்கில அரசாங்கத்துக்கு வைசிராய் மூலம் சென்ற மாதம் அனுப்பி வைத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளோர் அனைவரும் இந்திய சட்டசபை அங்கத்தினர்களே என்றும், மொத்தம் பத்தொன்பதுபேர் கையெழுத்துப் போட்டுள்ளார்கள் என்றும் தெரிகிறது. இப்படிப்பட்ட கோரிக்கைளின்படி அரசியல் சட்டம் இயற்றப்படும்போது பெரும்-பான்மையாய் இருந்துவரும் திராவிடர்கள் அவர்களுக்குரிய நியாயமான பங்கை மாகாண சட்ட சபையிலும் சரி, இந்தியா சட்டசபையிலும் சரி அடைந்திடும்படியான வழிகளையும், வகைகளையும் வகுத்திடும்படி செய்திட வேண்டும். ஆகவே, நாம் இப்போதிருந்தே விழிப்புடன் இருந்து செயலாற்றி வரவேண்டியது அவசியமாகும். திராவிடரின் பெரும்பான்மைக்-கேற்ப அதிகாரமும், உரிமையும் கிடைத்திடும் வகையில் தனிவாக்குரிமையும், தனித்தொகுதி உரிமையும் கொண்ட சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாம் உரிமைக்குரல் எழுப்பிட வேண்டும். அப்போதுதான் நமக்கு உரிய பங்கு சீர்திருத்த சட்டத்தில் இடம் பெறும். இவ்வுண்மையை உணர்ந்து நாம் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். இச்செயலாற்றலுக்குக் கட்சி அமைப்பு மிகமிக அவசியமாகும்.’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *