செய்யக் கூடாதவை

ஜூன் 16-30

வெடி, வாணத்தால் மாசுபடுத்தக் கூடாது

பொது இடங்களில், சாலைகளில், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் வெடி வெடித்தல், வாணம் விடுதல், பாறையொலித்தல் போன்றவை செய்யக் கூடாது. காற்று மாசடைவதுடன், உலகம் வெப்பமா-தாலுக்கும், காது பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புண்டு. இதனாலும் வயதானவர்களும், நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தீபாவளி சமயத்தில் நாடு முழுக்க வெடித்துக்  கேடு செய்வதும், போகிப் பண்டிகை அன்று கண்டதையும் கொளுத்திப் புகை மண்டல-மாக்குவதும் சமூகத்திற்குச் செய்யும் தீங்காகும்.

மலிவு என்பதால் நல்லவற்றை ஒதுக்கக் கூடாது

கம்பு மாவு, கேழ்வரகு மாவில் உள்ள சத்து, டப்பாவில் விற்கும் சத்து மாவுகளில் உள்ளதைக் காட்டிலும் பலமடங்கு அதிகம். பொன்னாங்கண்ணி, நெல்லி, அத்திப்பழங்களில் உள்ள சத்து உயர்ந்தது, உன்னதமானது. விலை உயர்வானது என்றால் அது உயர்ந்தது; விலை குறைந்ததாயின் அது தரமற்றது அல்லது அற்பம் என்று எண்ணும் அறியாமை பரவலாக நம்மிடம் காணப்படுகிறது.
கீரைகள், முட்டை, பப்பாளி, நெல்லி, பீன்ஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை விலை குறைவாக இருப்பதால் அவற்றைப் புறக்கணித்துவிட்டு ஆப்பிள், பேரீச்சை, பாதம், பிஸ்தா, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று அதிக விலையுள்ளதை நாடுகிறோம். ஆனால், இவற்றில் உள்ளதைவிட மலிவானவற்றில்தான் உடலுக்கு வலிவும், நலமும் சேர்க்கும் சத்துக்கள் உள்ளன.

உள்ளாடைகளை நீண்ட காலம் பயன்படுத்தக் கூடாது

சிறியவர்களாயினும், பெரியவர்களாயினும் உள்ளாடைகளைப் பருத்தித் துணியால் அணிய வேண்டும். எல்லா ஆடைகளையும் பருத்தித் துணியால் அணிவதே உகந்தது. முடியாதபோது, உள்ளாடைகளை, காலில் அணியும் காலுறை முதலியவற்றைப் பருத்தியால் அணிவதே நலம் தரும். அப்படிப் பயன்படுத்தும் உள்ளாடை-களை நன்றாகத் துவைத்து, நீரில் அலசி, வெய்யிலில் நன்கு உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். அதுவும் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தாது ஒதுக்கிவிட வேண்டும்.

மாதவிலக்குப் பெண்ணை ஒதுக்கி வைத்தல் கூடாது

மாதவிலக்கு என்பது கழிவோ அசுத்தமோ அல்ல. கருவுறாப் பெண்ணின் சினைமுட்டை சிதைந்து வெளியேறுவதே மாதவிலக்கு. இதைத் தூய்மை செய்யவும், ஆடையில் படாமல் தவிர்க்கவும் பஞ்சுப் பட்டைகளும், கிருமிக்-கொல்லிகளும் வந்துவிட்டன. எனவே, அவற்றைப் பயன்படுத்திப் பெண்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை மேற்-கொள்ளலாம்.

அதைத் தீட்டாகவும், அசுத்தப் பொருளாகவும், வெறுக்கத் தக்கதாகவும் எண்ணக் கூடாது. நாற்றமும், தொற்றும் உடைய கழிவான மலத்தை அன்றாடம் நாம் கையால் அலம்பிச் சுத்தம் செய்துவிட்டு இயல்பாய் வாழும் போது, மாதவிலக்கை வெறுத்துப் பெண்ணை ஒதுக்குவது அறியாமை!

செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருக்கக் கூடாது

கட்டாயம் செய்ய வேண்டுவதைச் செய்யத் தவறினாலோ, செய்யக் கூடாததைச் செய்தாலும் கேடே வரும். எனவே, செய்ய வேண்டு-வனவற்றை செய்ய வேண்டிய காலத்தில், செய்ய வேண்டிய வழியில், முறையில் செய்ய வேண்டியவர் மூலம் செய்துவிட வேண்டும். காலந்தவறி செய்வதும், செய்ய வேண்டிய முறை தவறி செய்வதும், செய்யத் தகாதவர் மூலம் செய்வதும் கேடு பயக்கும். அதுபோல, செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் அது கேட்டையே தரும்.

செய்யக் கூடாதவற்றை விலக்கி, செய்யக் கூடியவற்றைத் தவறாது செய்வது நலம் தரும், உயர்வு தரும், சிறப்பளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *