பிற்படுத்தப்பட்டோரை ஒடுக்கும் அ.தி.மு.க. அரசின் ஆணையை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ‘விடுதலை’யில் தினந்தோறும், வகுப்புவாரி உரிமைக் குறித்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் கட்டுரை-களையும், பேச்சுகளையும், அவ்வப்போது வெளியிட்டு வந்தோம். இந்த நிலையில், சென்னையில் உள்ள மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறை (பி.அய்.பி) இருக்கிறதே அது பார்ப்பனர்களின் கோட்டையாக மேலும் மேலும் இறுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
அவசர நிலை காலத்தில் பத்திரிக்கை தணிக்கையை தம் வசம் வைத்துக் கொண்டு தலைகால் தெரியாமல் ஆட்டம் போட்டார் ஓர் பார்ப்பனர்! அவருக்குப் பிறகு இப்போது ஒரு ஆந்திர பார்ப்பனர் அப்பதவிக்கு வந்திருக்கிறார்! பதவி வந்தவுடன் அவன் செய்திருக்கும் வேலை ‘விடு¬லை’யை மெயிலிங் லிஸ்டிலிருந்து நீக்கியிருப்பதுதான். அதாவது, மத்திய அமைச்சர்கள் பேட்டி, பத்திரிகை-யாளர்களுக்கு அளிக்கப்படும் பேட்டிகள், பத்திரிகையாளர்கள் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக அழைக்கப்படும் பத்திரிகைகள் பட்டியலிலிருந்து ‘விடுதலை’யை நீக்கி விட்டார்கள். இதுபற்றி அன்றே நாடாளு-மன்றத்திலும், மாநிலங்களவையிலும், பிரச்சினைகள் எழும்பியிருக்கின்றன. பார்ப்பனர்கள் தங்கள் பூணூல்களை சுருட்டி வைத்துக்கொள்ளவில்லையானால், மேலும் பல விவரங்களை வெளியிட நேரும் என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்கிறோம்! என்று ‘விடுதலை’யில் 14.07.1979 எச்சரிக்கை செய்தியை பாக்ஸ் கட்டி வெளியிட்டோம்.
“சேலம் செயலாற்றும் காலம்!’’
மேலே குறிப்பிட்டுள்ள தலைப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் 1944இல் சிறப்பான தலையங்கம் ஒன்றினை ‘திராவிட நாடு’ ஏட்டிலே தீட்டியிருந்தார்.
அதில் நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட, தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தினை, திராவிடர் கழகமாக மாற்ற தந்தை பெரியார் அவர்கள் திட்டமிட்டு அதை அண்ணா அவர்கள் மூலமாகச் செய்து, திராவிடர் பேரியக்கமாக மாற்றிய வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாநாடு எப்படி நமது இயக்கச் சரித்திரத்தில் ஓர் புதிய திருப்புமுனையாக அமையும் என்பதை மிகச் சிறப்பான கருத்து ஓவியமாக படம் பிடித்துக் காட்டினார்.
தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் தனது ‘தாய்வீடு’ என்றே சேலத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
இயக்க வரலாற்றில், சேலம் எப்பொழுதும் ஒரு சரித்திரம் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. வரலாற்றுத் திருப்பங்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட சேலம் நகரத்திலிருந்து சமுதாய அநீதியை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் குரல் வளையை நெறிக்கப்படுவதைக் கண்டித்து உரிமைக்குரல் எழுப்புவதற்காக, சூலை 14, 15 ஆகிய தேதிகளில் “பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு’’ வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் மரண அடி கொடுக்கும் புதிய ஆணையை உருவாக்கியுள்ள தமிழக அரசின் பொருளாதார கண்ணோட்டத்தில் கல்வி உத்தியோக சலுகை வழங்கும் ஆணையை எதிர்த்து, அனைத்துக் கட்சியினரும் கலந்து-கொண்ட “பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு” பெருங்குரல் எழுப்பியது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாகக் கூடிவிட்டனர். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் போராட்ட உணர்ச்சியுடன் குழுமியிருந்தனர்.
தற்போது பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடியாக விழுந்துள்ள அரசு ஆணையினால் பாதிக்கப்பட்ட கோடானு கோடி பிற்படுத்தப்-பட்ட சமுதாய மக்களின் குமுறலுக்கு வடிவம் கொடுத்து, ஏற்பட்டுள்ள பேராபத்திலிருந்து அவர்களை மீட்க திட்டமிட்டுச் செயலாற்றும் அவசர அவசியத்துடன் அன்று சேலத்தில் கூடியது.
சேலம் தி.க. சார்பில் அய்யா நூற்றாண்டு விழா அன்று காலை சேலம் நேரு கலையரங்கில் முன்னாள் அமைச்சர் முத்தையா அரங்கில் எழுச்சியுடன் துவங்கியது.
கோவை புலவர் நெறிமுடியார் இன்னிசை-யோடு துவங்கிய இம்மாநாட்டில் ஜே.கே.கே. அங்கப்பனார் வரவேற்புரை ஆற்றினார். திருமதி அனந்தநாயகியை தலைமை ஏற்று நடத்திக் கொடுக்க தி.க. அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை கேட்டுக் கொண்டார். மாநாட்டில் நான் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினேன். திரு.ஜே.கே.கே. அவர்கள் தனது வரவேற்புரையில் “எந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய நலங்காக்கப் பெரியார் அவர்கள் பாடுபட்டார்களோ, அந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் அதன் பயனை முழுதாக அடையும் முன் ஒரு பேரிடர் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. அந்தக் கேட்டிலிருந்து நாட்டை மீட்க நடக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்ச்சிக் கூர்மை எத்தகையது என்பதற்கு சேலம் எடுத்த ஊ£வலம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மாநாடு துவங்குவதற்கு முன்பாகவே, வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்-பட்ட டிராக்டரில் என்னை உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
என்னுடன் தி-.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் அமர்ந்து வந்தார். வழிநெடுக இரு மருங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளம் போல் கைகளை அசைத்து வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.
பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து-கொண்ட ‘பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு’ மாநாட்டில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் சிலவற்றை மட்டும் இங்கு தருகிறேன்.
தீர்மானம் 1: இந்திய மத்திய அரசு திரு.பி.பி.மண்டல் அவர்களது தலைமையில் நியமித்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷன், பிற்படுத்தப்பட்டோரை நியமிப்-பதில், ஜாதி அடிப்படையே பிரதானமாகக் கொள்ள வேண்டும் எனவும், பொருளாதார அடிப்படையைக் கொள்ளவே கூடாது என்றும் மண்டல் கமிஷனை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2: ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 9000க்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மட்டுமே, கல்வி, உத்தியோக ஒதுக்கீடுகள் பொருந்தும் என்றும், தமிழக அரசு ஆணை பிறப்பித்து 2.7.1979 முதல் அவ்வாணை அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த ஆணை பிற்படுத்தப்-பட்ட சமுதாயத்தின் மீது விழுந்த மிகப்பெரும் பேரிடியாகும்; கடந்த 50 ஆண்டு காலமாக தந்தை பெரியாரும், நீதிக் கட்சித் தலைவர்களும், கல்வி வள்ளல் காமராசரும், அறிஞர் அண்ணாவும் பாடுபட்டுப் பெற்றுத் தந்த வகுப்புவாரி உரிமையின் அடிப்படையைத் தகர்க்கும் முதற்கட்டம் ஆகும்.
மேலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையே இரு கூறுகளாகப் பிரித்து, அவர்களை மோதவிடும் சூழ்ச்சியாகும். எதிர்காலத்தில் வெறும் பொருளாதார அடிப்படைக் கண்ணோட்டத்தோடு மட்டும் இடஒதுக்கீடு செய்ய மேற்கொள்ளும் ஒத்திகையுமாகும்.
முதல் தலைமுறை படித்துவிட்ட காரணத்தாலேயே அவர்கள் பிற்படுத்தப்-பட்டவர்களல்ல; அவர்கள் பல தலைமுறை-களாக, ஆண்டாண்டு காலமாக படித்து முன்னேறிய சமூகத்துடன் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் என்று கூறுவது, சமூக நீதித் தத்துவத்திற்கே விரோதம் என்பதாலும், கடந்த 50 ஆண்டுகாலமாக பிற்படுத்தப்பட்ட சமுதாயம் போராடிப் பெற்ற வாய்ப்புகள் பறிபோகும் என்பதாலும் தமிழக அரசு இதனை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காது, மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக, கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்டவர்களின் மனிதாபிமான, உரிமைப் பிரச்சினையாகக் கருதி தமிழக அரசின் புதிய உத்திரவை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்து ரத்து செய்ய வேண்டுமென்று இம்மாநாடு தமிழக அரசினை கேட்டுக்-கொள்கிறது.
(ஆ) பிற்படுத்தப்பட்ட மக்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் புதிய உத்திரவினை தமிழக அரசு ரத்து செய்யாமல், அதனை நியாயப்-படுத்தும் பிடிவாதமான போக்கினை மேற்கொள்ளுமானால் தமிழ்நாட்டில் சமூக நீதியில் பெரிதும் அக்கறை உள்ள அனைத்து மக்களும், குறிப்பாக அனைத்துப் பிற்படுத்தப்-பட்ட மக்களும் கட்சி வேறுபாடும், கருத்து வேறுபாடும் இன்றி ஒரே அணியில் திரண்டு நின்று, தமிழக அரசின் புதிய உத்திரவினை எதிர்த்திடவும், அறப்போர் தொடுத்திடவும் சிறிதும் தயங்கார் எனவும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்ளுவதுடன் இதற்கான ஒரு போராட்டத் திட்டத்தை வகுக்க மற்றவர்-களுடன் கலந்து அறிவிக்கும் பொறுப்பினை ஏற்றிட வேண்டுமென திராவிடர் கழக பொதுச் செயலாளர் திரு.கி.வீரமணி அவர்களை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3: பிற்படுத்தப்பட்டவர்கள் மக்கள் தொகையில் சுமார் 75 சதவிகிதத்திற்கு மேல் இருந்தாலும், அவர்களுக்கு 31 சதவிகித அளவுக்குத்தான் இடஒதுக்கீடு தற்போது தரப்படுவ-தானது, சமூக நீதி கண்ணோட்டத்தில் பெருத்த அநீதியாகும். சமவாய்ப்புச் சமுதாயம் அமைய வேண்டுமானால், மேடு பள்ளங்கள் சமன் செய்யப்பட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசரம், அவசியம் என்பதை இம்மாநாடு ஒருமனதாக தெரிவித்துக்கொள்ளுகிறது.
தீர்மானம் 4: பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்-பட்டவர்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக சமுதாயத்தில் கல்வி அறிவு வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படையை இன்றைய தமிழக அரசு அறவே மறந்துவிட்டு தொழிற்படிப்புகளான மருத்துவம், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் அனைத்துப் படிப்புகளிலும் சேருவதற்கு அதிகபட்ச மார்க் என்பதை வற்புறுத்துவது அவர்களுக்கு வாயிற்கதவை அடைக்கும் அக்கிரமமாகும்.
மேற்கண்ட கல்வி வாய்ப்புகளைப் பெறு-வதற்கு, மார்க் வரம்பை குறைக்க வேண்டுமாய் இம்மாநாடு தமிழக அரசை ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.
பிற்படுத்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களிலும் ஒரு சிலர் அதிகமாக மார்க் வாங்குவது என்பது விதிவிலக்கான ஒன்றாகும். இந்த விதிவிலக்கையே அடிப்படை-யாக வைத்துக்கொண்டு விதிகளை தமிழக அரசு உருவாக்குவது தலைகீழ் முறையாகும் என்பதை எடுத்துக்காட்டுவதோடு, இந்தத் தலைகீழ் முறையானது பெரும்பாலான பிற்படுத்தப்-பட்டோர் நலனை மிகக் கடுமையாக பாதிக்கச் செய்யும் என்பதை இம்மாநாடு உறுதியாக தமிழக அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது
நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட கலைஞர் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் கொண்டு வந்துள்ள இடஒதுக்கீடு கொள்கை-களை ஒப்பிட்டு நீண்டதோர் விளக்கத்தை எடுத்துக்காட்டினார்கள். இதனை ‘விடுதலை’யில் “அர்சிடம் போய் பாடங் கேட்கட்டும் முதல்வர்’’ என்ற தலைப்பிட்டு வெளியிட்டிருந்தோம். அதனை இங்கு தருகிறேன்.
அர்சிடம் போய் பாடங் கேட்கட்டும் முதல்வர்
‘31 சதவிகிதத்தில் ஏழை பிற்படுத்தப்-பட்டவர்களான வன்னியர், முக்குலத்தோர், சலவைத் தொழிலாளர், சிகை அலங்காரத் தொழிலாளர் இருக்கலாம். ஒன்பதாயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறவர்களாகவும் இருக்கலாம். ஒன்பதாயிரத்துக்கு மேல் வருமானம் என்று முன்னேறிய சமுதாயமாக மாற்றப்பட்டவர்கள் யாரோடு மோதவிடப்படுகிறார்கள்?
படிப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று உலகத்தில் அவதரித்திருப்பதாகச் சொல்லப்-படுகின்ற ‘பிராமண’ சமுதாயத்தினரோடு -_ படிப்பது பாவம் என்று யார் சொல்லியும் கூட அல்ல; இவனே எண்ணிக் கொண்டு படிக்காமலேயே இருந்துவிட்டானே _ இப்படிப் பாழாய்ப் போனவன் வீட்டுப் பிள்ளைக்கு நடைபெறுகின்ற போட்டி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
31 சதவிகிதத்தில், உழக்குக்குள்ளே கிழக்குமேற்கு பார்ப்பது என்பார்களே; அதுபோல இன்றைக்கு எம்.ஜி.ஆர். பார்த்து இதில் ஏழைக்குத்தான் இடம் ஒன்பதாயிரத்திற்கு மேல் வருமானம் உள்ள யாவருக்கும் இடமில்லை போ என்று பொதுத் தொகுதியிலேயே (Open Competition) தூக்கி எறிகிறார்கள்.
எப்படிப்பட்ட இடம் _ இவனோ நோஞ்சான் _ ஏதோ ஒரு சில நாட்களில் சுறுசுறுப்பாகக் காணப்படுகிறான்; அவ்வளவுதான் இந்த நோஞ்சானைத தூக்கி பயில்வானிடத்திலே நிற்கவைத்து நீயும் அவனும் மோதிக்கொண்டு யார் ஜெயிக்கிறீர்களோ அவர்கள் அந்த 51 இடத்திலே ஓரிடத்தைப் பெறலாம் _ என்று மோதவிடுகிறார்.
இதைத்தான் நாங்கள் இன்று தவறு என்று சொல்லுகிறோம்.
கிராமங்களில் சொல்லுவார்கள், வெல்லத்தில் பிள்ளையார் செய்து அந்த வெல்லத்தையே கிள்ளி பிள்ளையாருக்கே படைப்பது என்று, அதைப் போலத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கியிருப்பதே போதாது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 25 சதவிகிதமாக இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தினேன். நான், 16 சதவிகிதமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருந்ததை 18 சதவிகிதமாக உயர்த்தினேன்.
31 சதவிகிதமும் 18 சதவிகிதமும் மொத்தம் 49 சதவிகிதம். அதற்குமேல் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உயர்த்தவோ _ தாழ்த்தப்பட்டவர்களுக்காக உயர்த்தவோ அரசியல் சட்டம் இடம் தரவில்லை. அது இடந்தந்திருக்குமேயானால் இன்னும் பத்து சதவிகிதத்தை என்னால் உயர்த்தி இருக்க முடியும்.
அதை உயர்த்த கர்நாடக மாநில முதலமைச்சர் தேவராஜ் அர்சு ஒரு புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்.
அந்த புது வழி என்ன?
தேவராஜ் அர்சுக்கும் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் எவ்வளவோ நட்பு உண்டு. இந்த வழியை அவரிடம் கேட்டு அறிந்திருக்கக் கூடாதா?
உங்கள் மாநிலத்தில் ஏதோ சட்டம் கொண்டு வந்தீர்களாமே _ வகுப்புரிமையைப் பொறுத்து _ பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அதுகூட கோர்ட்டுக்குப் போயிற்றாமே அதனுடைய விவரங்களென்ன என்று தெரிந்து கொள்கின்ற வாய்ப்பை நண்பர் எம்.ஜி.ஆர். தேவராஜ் அர்சு அவர்களிடம் பெற்றுக் கொண்டிருக்கக் கூடாதோ?
தேவராஜ் அர்சு என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
இதோ என் கையில் கர்நாடக மாநில கெசட் இருக்கிறது. இது கர்நாடக மாநில அரசு பிறப்பித்த ஆணை.
அந்த உத்திரவின்படி நூறு இடங்களில்.
((Backward Community)-க்கு நூற்றுக்கு 20 சதவிகிதம்.
((Most Backward Caste) 15 சதவிகிதம்.
(Backward Tribes) 5 சதவிகிதம்.
தாழ்த்தப்பட்டோர்க்கு 18 சதவிகிதம்.
அதோடு நிறுத்தாமல் மீதமிருக்கின்ற பொதுத் தொகுப்பில் அந்த சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்டோர்க்கு என்று ஒதுக்கினால் அரசியல் சட்டம் இடம் தராது என்று தேவராஜ் அர்சு சாமர்த்தியமாக அதிலே ஒரு 5 சதவிகிதம் 4500 ரூபாய்க்கு குறைவாக சம்பளம் வாங்குவோராக உள்ளவர்களுக்கு என்று ஒதுக்கினார்.
உடனே சில பேர் கோர்ட்டுக்குப் போனார்கள். கோர்ட் தீர்ப்பளித்து _ 5 சதவிகிதம் போதாது. அதை 15 சதவிகிதமாக ஆக்குங்கள் என்று தீர்ப்பளித்தது. தேவராஜ் அர்சு அதை 15ஆக உயர்த்தினார்.
ஆக மொத்தம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவிகிதம்.
மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 10 சதவிகிதம்.
பிற்படுத்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு 5 சதவிகிதம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம்.
பொருளாதார அடிப்படையில் 4500 ரூபாய்.
வருமானத்திற்கு குறைவாக இருப்பவர்களுக்கு தனித் தொகுப்பு என்ற பட்டியலில் 15 சதவிகிதம். ஆக, மொத்தம் 65 சதவிகிதத்தை அந்தப் பகுதியில் எடுத்துக்கொண்டு மீதம் 35 சதவிகிதத்தைத்தான் எல்லோரும் போட்டியிடக்கூடிய விகிதாச்சாரமாக தேவராஜ் அர்சு ஒதுக்கியிருக்கிறார்.
அதைத்தான் தி.மு.கழகப் பொதுக்குழு தீர்மானம் வாயிலாக நண்பர் எம்.ஜி.ஆருக்கு சுட்டிக்காட்டி இருக்கிறது. 31இல் கை வைக்காதே, 51 மிச்சம் இருக்கிறதே அதிலே கைவை!
அந்த 51 சதவிகிதத்தில் செட்டியார், முதலியார், அய்யங்கார், அய்யர், சர்மா, சாஸ்திரி இப்படிப்பட்ட உயர்ஜாதிக்காரர்கள் மாத்திரமல்ல; பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இருக்கிறார்கள்.
அவர்களில் யார் ஏழையாக இருந்தாலும் அந்த ஏழை ஒரு வன்னியர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் ஒரு கள்ளர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் _ ஒரு அய்யர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அவர்களுக்கென்று பத்தோ பதினைந்தோ என்ற சதவிகிதத்தை அந்த 51 சதவிகிதத்தில் வைக்க வேண்டு-மேயல்லாமல் இந்த 31இல் கை வைக்காதே, ஏற்கனவே நொந்து போயிருப்பது பிற்படுத்தப்-பட்ட சமுதாயம் என்றுதான் தி.மு.கழகப் பொதுக்குழுவில் ஒரு தீர்மானத்தை நிறை-வேற்றியிருக்கிறோம்.
பல சமுதாயப் பெரியவர்கள் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய நலனைக் காப்பாற்று-வதற்கு இந்தக் கருத்தைத்தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிவித்து கர்நாடக அரசையாவது பின்பற்றி பொரளாதாரக் கொள்கையை வகுத்திடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.
இல்லையேல் நாம் மீண்டும் 1914ஆம் ஆண்டுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
(சேலத்தில் 15.7.1979ல் நடந்த அய்யா நூற்றாண்டு விழாவில் கலைஞர் பேசியது.)
விழாவில், தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் கட்சி செயலரும், மேலவை உறுப்பினருமான திண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில் குறிப்பிட்டதாவது:
இன்றைக்கு இந்தியா முழுவதிலும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டு தந்தை பெரியாரை நினைக்கும் காலம் உருவாகிறது என்றும், இந்திய அரசியல் சட்டத்திலே பிற்படுத்தப்பட்டவர்கள் என்பவர்கள் கல்வி _ சமூகரீதியாக பிற்படுத்தப்-பட்டவர்களே என்று திருத்தம் வந்தது என்றால் அதற்கான முதல் குரல் இந்த தமிழ் நாட்டிலிருந்துதான் எழும்பியது என்பதனை மறந்துவிடக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களின் துவக்ககால வளர்ச்சியை குப்புற தள்ளிவிடும் உத்தரவு இது என்று குறிப்பிட்டார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் டி.என்.அனந்தநாயகி ஆற்றிய தலைமை உரையில், அரசியல் சட்டத்தின் 15(நி)வது பிரிவான வகுப்புவாரி பிரதிநித்துவத்துக்குத் காரணமான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு காரணமாக இருந்ததே தமிழ்நாடுதான். தமிழ் நாட்டிலிருந்து சென்ற வழக்கு காரணமாகத்தான் இப்படி ஒரு சட்டத் திருத்தமே வந்தது.
30ஆம் தேதி மண்டல் கமிஷன் தமிழகம் வருகிறது. 3ஆம் தேதி முதலமைச்சர் இப்படி ஒரு உத்திரவைப் போடுகிறார். எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நமது சமுதாயம் கல்வி, உத்தியோக வாய்ப்பின்றி அடக்கி வைக்கப்-பட்டிருந்தோம் என்பதனை மறந்து விடக்-கூடாது. இப்போதுதான் முன்னேற தலை எடுத்துக்கொண்டிருக்கிறது. “போதும், போதும் நிறுத்து’’ என்கிறார்கள் என்றால், இது முன்னேறிய ஜாதியின் திட்டமிட்ட சதியாகும் என்று குறிப்பிட்டார்கள்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட கம்யூனிஸ்ட் கட்சி தோழர் தா.பாண்டியன் தன் உரையில்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த எங்களுக்கு ஜாதியில் மதத்தில் நம்பிக்கை-யில்லை. ஆனால், பிற்படுத்தப்-பட்டவர்களை பெரிய வட்டத்தினுள் தள்ளிவிட்ட முதலமைச்சர், எந்த வட்டத்திற்கு உட்பட்டவர் என்பதை சொல்லிவிட்டு பேசினால் அவர் சொல்லுகின்ற பதிலைப் புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். ஏனென்றால், பேசுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் பேசுகின்றவர் யார் என்பதினாலும் தனி அர்த்தங்கள் உண்டு.
நாம் சொல்லுவதற்கும் ஒரு பெரிய விஞ்ஞானி சொல்லுவதற்கும் வேற்றுமை இல்லையா? உண்டல்லவா? அதுபோல் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி எம்.ஜி.ஆர். சொல்லு-வதற்கு என்னைப் போன்ற சாதாரணமானவன். சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கலாம்.
எனவே, அவர் அந்த வட்டத்திற்குள் எந்த வட்டம்? பிற்படுத்தப்பட்டவரா? முற்படுத்தப்-பட்டவரா? அப்பாற்ப்பட்டவரா?
இந்த மூன்றுக்குள்ளே ஏதாவது ஒரு “பட்டவராக’’ இருக்க வேண்டும்.
அது எது என்று சொன்னால் அவர் பேசுகின்ற பொருள் என்ன என்பதை நாம் சொல்லிவிடலாம். அதுவே சந்தேகத்திற்கு உரியது. அதையே தெளிவுபடுத்த முடியாதவர்கள் அடுத்தது அகப்பட்டுக் கொண்டவர்களைப் பார்த்து உன்னை முன்னேற்றச் சொல்கிறேன்; அதைச் சொல்கிறேன் என்று ஒரு புத்தியைச் சொல்லுவதற்கு முன்னால் யோசிப்பது நல்லது என்று குறிப்பிட்டார்கள். விழாவில், பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.
(நினைவுகள் நீளும்)