தந்தை பெரியார்
மக்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறுபடுவது கருத்து, கொள்கை, நடப்பு வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு. அது இயற்கையானது. சாதாரணமாக தகப்பனுக்கும், மகனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதன் காரணமாகக் கொலை முயற்சிகள் கூட ஏற்படுகிறது. அதுபோலவே கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சண்டை ஏற்படுகிறதை நாம் பார்க்கிறோம். இப்படி குடும்பங்களிலேயே இந்த அளவுக்கு கருத்து வேற்றுமை ஏற்படுகிறபோது, மற்றும் நமக்கே சில விஷயங்களில் நாம் செய்தது தவறு, நினைத்தது தவறு என்கின்ற எண்ணம்
தோன்றும் போது மற்றவர்களுடன், மற்ற காரியங்களில் கருத்து வேற்றுமை ஏற்படுவது என்பது மிகச் சாதாரண காரியந்தான் ஆகும். ஆதலால் மக்களில் ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதமுடையவர்களாக இருப்பது என்பது அதிசயமல்ல; ஆனால் என்ன இப்படிப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும் மனிதன், மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். மனிதனின் இயற்கை குணம், சுயநலமேயாகும். அது எந்த உருவில் இருந்தாலும் அதற்கு ஆக மனிதத் தன்மையில் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமாகும் என்பதான ஒரு படிப்பினையாவது ஏற்பட்டு அதன்படி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். இதைத்தான் பெரியார் ஆச்சாரியார் அவர்களும் எடுத்துச் சொன்னார்.
தோழர்களே! இன்று நாம் நபி பிறந்த நாள் விழா என்கிற பேரால் இங்கு கூடியிருக்கிறோம். நபி பிறந்த நாள் இன்றுதானா? அல்லது வேறு நாளா என்பது பற்றித் தெரியாது. நபிகள் பிறந்த தினம் என்னும் பேரால் இங்கு நாம் அனைவரும் கூடியுள்ளோம்.
தோழர்களே! ஒரு பெரியாரைக் கொண்டாடுவது என்பது எதற்காக? பக்தி செலுத்தவா? வரம் பெற வேண்டு-மென்ற ஆசைக்காகவா? அல்லது அந்தப்படி ஒரு பெரியாரை நாம் கொண்டாடுவதன் காரணமாக பலன் கிடைக்கும் என்பதற்காகவா? இல்லை. அநேகமாக இன்றைய தினம் கொண்டாடப்படுவது போல இதுமாதிரி நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுவதெல்லாம் அவர் நடத்தை, அவர் மக்களுக்குச் சொன்ன போதனைகள், மக்களுக்காக அவர் ஆற்றிய தொண்டு முதலியவற்றை நினைவுப்படுத்திக் கொண்டு, அவற்றைப் பாராட்டியும், போற்றியும், மற்ற மக்கள் அப்பெரியார்களின் போதனையைப் பின்பற்றுமாறும், அவர்களின் நடத்தையையும், செயலையும் நாங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தவு-மேயல்லாமல் வேறில்லை.
நபி பிறந்த தின விழா என்பது நீண்ட காலமாக இந்த நாட்டில் நடைபெற்று வருகிறது. நபி அவர்களின் போதனைகளில் எல்லா போதனைகளையும் எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடியதாக, பின்பற்ற முடியாததாக இருந்தாலுங்கூட இந்த விழாவில் அப்படிப்பட்ட பல தரப்பினரும், பிரிவினரும் தன்மையாளர் களும் கலந்து கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம் என்னவென்றால், வெவ்வேறு நிலைமை, வாழ்வு, எண்ணம் உடைய பல்வேறு பட்ட மக்களால் பின்பற்ற, ஒப்புக் கொள்ள முடியாதன என்று பல இருந்தாலும் யாரும், எப்படிப்பட்டவர்களும், எந்த நிலை, தன்மை எண்ணம் உடையவர்களாய் இருந்தாலும் அவர்களாலும் மறுக்க முடியாத அவர்களும் ஒப்புக் கொள்ளக் கூடியதான சில கருத்துகள், நீதிகள், கொள்கைகள் நபி அவர்களின் போதனையிலே அடங்கியிருக்கின்றது. அதோடு கூடவே இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் நண்பர்கள் தங்களின் நபி அவர்களின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். பிரசாரம் செய்ய வேண்டும் என்ற காரியத்தில் தாராளமாக மற்றவர்களையும் சேர்த்துக் கொண்டு, கலந்து கொள்ள வாய்ப்பளித்து, அவர்களைச் சொல்லச் செய்து, அவர்கள் நபி அவர்களின் போதனைகளைப் போற்றிச் சொல்லுவதைக் கேட்டு மிகவும் திருப்தி கொள்ளுகிறார்கள்.
எந்த ஒரு கொள்கையும் உலகத்து மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகிற மாதிரி எல்லா தரப்பு மக்களுக்கும் பொருத்தமாக இருக்குமா? என்றால் உள்ளபடி அந்தக் கொள்கைகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாயும், எல்லோருக்கும் நியாயமான தன்மையில் இருக்கிறது என்றாலும்கூட அந்தக் கொள்கைக்கும் எதிர்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இது இயற்கை. ஏன் என்றால், உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் இயற்கையில் ஒரு நோக்கம், குணம், பண்பு கொண்டவர்களாய் இருக்க முடியாது. மாறுபட்டுத்தான் இருப்பார்கள். அதற்கான காரணங்கள் வேண்டுமானால் மாறுபட்டு இருக்கலாமே தவிர, மாறுபாடு, வேறுபாடு இருப்பது இயற்கை. உலகத்து
200 கோடி மக்களும் ஒரே நோக்கத்தோடு ஏற்றுக் கொள்ளுகிற மாதிரி இருக்க முடியாது.
மற்றொன்று ஒரு கொள்கை, அல்லது திட்டம், நியாயம் என்பது எந்தக் காலத்துக்கும், என்றைக்கும், எந்த நிலை, தன்மைக்கும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுவர், எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகிற மாதிரியில் அமைக்கப்-பட்டது – வகுக்கப்பட்டது என்பதாகச் சொல்லி விட முடியாது. ஏனென்றால், எக்காலத்திற்கும் பொருந்துகிற மாதிரி கொள்கை சொன்னார்கள் என்பதானவர்களின் சக்தி, முக்காலமறிந்த ஞானபாவமென்பதாகச் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும்கூட, மக்கள் அக்காலத்தில் இருந்த அதே நிலையில் இருக்கிறார்களா? காலம் பழங்காலத்தைப் போலவே மதங்களை உண்டு பண்ணுகிறதா? பழக்க வழக்கம், ஆசாபாசம், அறிவு நிலை அப்படியே இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும்?
நாளுக்கு நாள் மக்கள் மாறிக் கொண்டுதான் போகிறார்கள். கால மாறுதலும் அதற்கேற்ப வழி செய்கிறது. 1000, 2000 வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் நிலைமை எண்ணங்கள், ஆசாபாசங்கள், அபிலாசைகள் வேறு; இன்றைக்கு இருக்கிற மக்களின் மனோபாவம், ஆசாபாசங்கள் வேறு. அதுபோலவே 500 வருடங்களுக்கு முன் மக்கள் இருந்த நிலையில் இல்லை. 300 வருடங்களுக்கு முன்பு, போன நூற்றாண்டில் ஏன் 50 வருடங்களுக்கு முன்பு மக்கள் இருந்த நிலையில் இன்று மக்கள் இல்லை. 50 வருடத்துக்கு முந்தைய மக்களினின்றும் சகல தன்மைகளிலும், துறைகளிலும் இக்கால மக்கள் மாறுபட்டிருக்-கிறார்கள். அத்தகைய எண்ணங்கள், ஆசை, அபிலாசைகளுக்கு ஏற்பவே மக்களின் செயல்கள், நடப்புகள் இருக்கின்றன.
சென்னை கடற்கரையில் 20.12.1953 அன்று நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை (‘விடுதலை’ 20.12.1953, 21.12.1953 மற்றும் 22.12.1953)