சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

ஜூன் 01-15

இந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும்  சில பக்கங்களின் மூலமே அறியலாம்.
இத்தொடர் உரை மேலும் ஒரு நவநாகரிகப் பெருமகனார் அவர்களால் தொடரப்பட்டது.

“நவநாகரிகம் கற்றவர்களும் பட்டம் பதவி பெற்றவர்களும் ஏற்படுத்திக்கொண்டுள்ள சங்கங்களில்கூட பிராமணர் உயர்ந்தவராகவும் பிராமணரல்லாதார் தாழ்ந்தவராகவும் கருதப்பட்டு வருகின்றார்கள்! இது வியப்புக்குரியதாகும்! பிராமணரல்லாதவர்கள் பார்க்க முடியாதபடி பிராமணர்களுக்குத் தனி உணவு அறைகளும், சிற்றுண்டி அறைகளும் வைக்கப்பட்டுள்ளன! இதற்குத்தான் நவநாகரிகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது! இப்படிப்பட்ட அவக்கேட்டினை, படித்த பட்டம் பெற்ற திராவிடர் இனி பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்! பிராமணர்களிடம் நாம் அடையும் அவமரியாதையும் அவக்கேடும்  இக்கணமே ஒழிந்திட வேண்டும்; இதனை நானோ, நீங்களோ தனியே நின்று செய்திட இயலாது! எல்லோரும் ஒன்றுபட்டுச் செயலாற்றினால்தான் முடியும்! நாம் ஒன்றுபட்டுச் செயலாற்றினால் பிராமணரல்லாதார் தன்மானத்தோடு வாழ வழிபிறக்கும் என்பதில் அய்யமில்லை!’’

இப்பெருமகனாரின் உரையைத் தொடர்ந்து கல்வி உலகில் தாம் கண்ட அனுபவத்தை எடுத்துக்கூறி, கூட்டத்தின் வேலையைத் தொடரச் செய்தார் கல்விச் செல்வர் ஒருவர்:
“ஆங்கில மொழிதான் அரசாங்க மொழி என்றும், அரசாங்கத்தில் வேலை பார்ப்பதற்கு ஆங்கிலக் கல்வித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்றும் கூறிய மெக்காலே பிரபுவின் தீர்ப்பைப் பிராமணர்கள் சிரமேற்கொண்டார்கள்! குதூகலத்துடன் வரவேற்றார்கள்! அம்மொழிக் கல்வியியில் ஈடுபட்டு மிகவேகமாக முன்னேறத் துவங்கினார்கள்! தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசாங்க வேலைகளில் புகுந்து வருவதைத் தம் முன்னேற்றப் பாதையாகக் கொண்டார்கள்! படிப்படியே அரசாங்க அலுவலகங்களில் நிறைந்து வரலானார்கள்! பிராமணர் அல்லாதாரோ பிராமணர்களைப் போல ஆங்கிலக் கல்வியில் நாட்டங் கொள்ளவில்லை! அவர்தம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கற்பதிலும் தம் சொந்தத் தொழில்களைச் செய்து வருவதிலுமே கவனம் செலுத்தி வரலானார்கள்! ஆயினும் இவர்களில் சிலர் ஆங்கில மொழிக் கல்வியிலும் தேர்விலும் ஈடுபட விரும்பாமலும் இல்லை! ஆனால், பெரும்பாலார் தம் வறுமையின் காரணமாகவும் அறியாமையின் காரணமாகவும் எந்த மொழிக் கல்வியையும் பெற முடியாமலிருந்து வந்தார்கள்! இன்றும் இருந்து வருகின்றார்கள்!

இந்நிலையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் பல உண்டு. முதலில் பிராமணரல்லாதாரிடையே பொதுவாகக் கல்வி கற்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லிவர வேண்டும். அவர்கள் கல்வியில் பற்று கொள்ளும்படியும், பள்ளிக் கூடங்களில் பெருவாரியாகச் சேர்ந்து வரும்படியும் நாம் செயலாற்றி வரவேண்டும். பொருளுதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் பொருளுதவி செய்து வரவேண்டும். உணவு வசதியும், தங்கும் வசதியும் தேவைப்படும் மாணவர்களுக்கு உணவு வசதியும், தங்கும் இடவசதியும் ஏற்பாடு செய்து தரவேண்டும். கல்வியில் தேர்ச்சி பெற்றுவரும் மாணவர்களுக்கு அரசாங்க அலுவலகங்களில் வேலைகள் கிடைக்கும்படி செய்துவர வேண்டும். வேலைகள் கிடைப்பதில் இடையூறுகள் இருப்பின் அரசாங்கத்தாரிடம் முறையிட்டு அந்த இடையூறுகளை நீக்கி வரவேண்டும். இப்படிப்பட்ட சீர்மிகு வழிகளில் நமது நண்பர் டாக்டர் நடேச முதலியார் நடத்திவரும் திராவிடர் சங்கமும் திராவிடர் இல்லமும் ஈடுபட்டுள்ளது. நம் யாவருக்கும் தெரிந்ததே. இந்த அமைப்புக்களின் செயலாற்றலை விரிவான வகையில் நாடு முழுவதும் பரவச் செய்திட வேண்டுமானால் பெரும் கட்சி அமைப்பு ஒன்று இல்லாமல் முடியாது. கட்சி அமைப்பின் மூலம் நாம் நமது கல்வித் தொண்டையும் சமுதாயத் தொண்டையும் ஆற்றி வருவோமானால் நமது திராவிட இனத்தார் நிச்சயமாக முன்னேற்றம் அடைவார்கள்! நம் தொண்டும் பணியும் உடனடியாகப் பயனளிக்காவிட்டாலும் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் பலன் அளித்தே தீரும்! பிராமணரல்லாதார் கல்வி நலம் பெற்ற கல்வியாளர்களாகவும், அறிஞர்களாகவும் சிறப்பு அடைந்தே தீருவர்! நாம் மேற்கொள்ளப் போகும் செயலானது வருங்காலத்தை திராவிடர்களின் பொற்காலமாக மாற்றாமற் போகாது! இவ்வுண்மைகளை உணர்ந்து கட்சி அமைப்பு ஒன்று காணும் முயற்சிகளை மேற்கொள்வோமாக!

திராவிடர்களின் கல்வி அறிவைப் பெருக்கிட வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டிய இக்கல்விச் செல்வரின் வழி சென்று நாட்டு நடப்புகளை அறிந்திருந்த நண்பர் ஒருவர் கூட்டத்தாரின் கவனத்துக்குக் கொண்டு வந்து பேசலானார்: “வெகுகாலமாகவே அரசாங்க அலுவலகங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் நிலைத்து வருவது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். திராவிடர்களில் பலர் போதிய தகுதி பெற்றிருந்தும் இவ்வலுவலகங்களில் இடம் பெற முடியாமலிருக்கின்றது. இதுவும் யாவருக்கும் தெரிந்ததுதான். இவ்வுண்மை, ஆங்கில அதிகாரிகளுக்குப் பலமுறை எடுத்துக் கூறப்பட்டும் கூட எவ்வித பலனும் ஏற்படவில்லை. திராவிடர்கள் அரசாங்க அலுவல்களுக்கு வரமுடியாதபடி பிராமண அதிகாரிகள் சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள். இந்த முறைகேட்டினை இனியும் நீடிக்க விடுவதால் கேடு விளையும். நாம் ஒன்றாகக் கூடி அரசாங்கத்தைக் கேட்டாலொழிய இந்த முறைகேடு முடிவுக்கு வராது. திராவிடர்களிலும் படித்தவர்கள் இருக்கின்றார்கள். பட்டம் பெற்றவர்கள் இருக்கின்றார்கள்; தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் அரசாங்க அலுவல்களைக் கொடுங்கள் என்று நாம் ஒன்றுகூடிக் கேட்கவேண்டும். நமது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காவிட்டல் அரசாங்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இத்துணிவான காரியத்தைச் செய்வதற்கு நமக்கென்று ஒரு கட்சி அமைப்பு இருந்தால்தான் முடியும்.’’

இந்த நண்பரைத் தொடர்ந்து பேசிய அரசியல் அறிஞர் ஒருவர் நாட்டு அரசாட்சியில் போதிய பங்கு தரப்படாதிருக்கும் உண்மையை எடுத்துக்காட்டி அவ்வுரிமைக்காகத் திராவிடர்கள் போராட முன்வர வேண்டும் எனக் கோரி, கூட்டத்தின் ஆலோசனைச் செயலை நீடித்து வைத்தார்.

“இன்றைய இந்திய அரசியல் உலகம் பிராமண ஆதிக்கத்தின் பிடிப்பில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஆதிக்கம் வட இந்தியாவில் இந்து ஆதிக்கம் என்றும், தென்னிந்தியாவில் பிராமண ஆதிக்கம் என்றும் பெயர் பெற்றுள்ளது. இவ்வுண்மையை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

வடஇந்திய இந்துக்கள் ஆதிக்கத்தின் காரணமாக முகம்மதியர்கள் தங்களுக்கென ‘முஸ்லிம் லீக்’ என்ற ஒரு அரசியல் கட்சியை அமைத்துக்கொண்டு அதன் மூலம் தமது அரசியல் உரிமைக்குப் போராடி வருகின்றார்கள். இப்படிப்பட்ட விழிப்பு தென்னிந்திய பிராமணரல்லாதாரிடையே ஏற்பட்டுள்ளதாயினும் அவர்கள் எல்லாரும் ஒன்றுகூடிக் கட்சி என்ற ஒரு அமைப்பின் மூலம் போராட முன்வரவில்லை. தென்னிந்தியர்களின் நலனுக்குப் பாடுபடுவதற்காக ஏற்பட்ட சென்னை மகாசன சபாவும் அதன் முன்னோடியான சென்னை மக்கள் சங்கத்தைப் போல திராவிடர் நலனுக்காகப் பாடுபட முன்வரவில்லை. இதேபோலத்தான் அனைத்திந்திய காங்கிரசம், திராவிடர்களின் நலனைக் கவனிக்க முன்வரவில்லை. இந்நிலையில் பிராமணரல்லாதார் தாமே ஒரு கட்சியை அமைத்து அதன் மூலம் தமது அரசியல் உரிமைக்குப் பாடுபடவும் போராடவும் முன்வருவதைத் தவிர வேறு வழி இல்லை.

முகம்மதியர்கள், ஆட்சிப் பொறுப்பில், தமக்குரிய பங்கைத் தரும்படி தமது கட்சி மூலம் அரசாங்கத்தாரை நெருக்கி வந்ததன் பயனாக. 1909ஆம் ஆண்டில் மிண்டோ_மார்லி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் முகம்மதியர்களின் அரசியல் நலன் இந்துக்களின் ஆதிக்கத்தினின்றும் காப்பாற்றப்பட்டது. ஆனால், இந்தச் சீர்திருத்த சட்டத்தினால் தென்னிந்திய திராவிடர்கள் நன்மை அடைந்திடவில்லை-. இந்த அரசியல் சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்ட ‘முகம்மதியர் தொகுதிகளில்’ முகம்மதியர்கள் மட்டுமே வேட்பாளர்களாக இடம் பெற்று வருகின்றார்கள். பிராமணரல்லாதாரான திராவிடர்களோ முகம்மதியர் அல்லாதார் தொகுதிகளில், அதாவது இந்து தொகுதிகளில், வேட்பாளர்களாக நின்று வெற்றி அடைய முடியாமல் இருந்து வருகின்றார்கள். இன்றைய சென்னை சட்டசபையில் இந்தச் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்கள் 25 பேர் இருக்கின்றார்கள். இந்த 25 பேர்களில் 5 பேர்களே பிராமணரல்லாதார்.

ஆனால், பிராமணர்களோ 10 பேருக்கும் மேலாகவே இருக்கின்றார்கள். இந்நிலைமையை மாற்றி அமைத்தாலொழிய பிராமணரல்லாதாராகிய நாம் முன்னேற இயலாது. ஆகவே நாம், சட்டசபைகளில் பிராமணரல்லாதார் போதிய இடம் பெறும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டியது அவசியமாகும். தேவைப்பட்டால் அரசாங்கத்தை எதிர்த்துப் போரிடவும் வேண்டும். அதேசமயம் பிராமணரல்லாதாரிடையே திராவிட உணர்ச்சியை எழுப்பி விடுவதும் அவசியமாகும். திராவிடர்கள் அவர்களுக்கு உரிய உரிமையை அடைந்திட வேண்டுமானால் அவர்கள் ‘நாம் திராவிடர்’ என்ற உணர்ச்சியை அடைந்திட வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். பிராமணர்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது எப்படி ‘நாம் பிராமணர்’ என்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு பிராமண வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்குகளைத் தருகின்றார்களோ, அதேபோல, திராவிடர்-களும் ‘நாம் பிராமணரல்லாதார்’ என்ற உணர்ச்சியால் உந்தப்பட்டுத் திராவிட வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்குத் தருதல் வேண்டும். இவைகளையெல்லாம் செயல் உருவில் காண வேண்டுமானால் நாம் நமக்கென்று தனி ஓர் அரசியல் கட்சி அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.’’

இவ்வரசியல் அறிஞரைப் பின் தொடர்ந்தார் மற்றோர் அரசியல் அறிஞர். இவர் அப்போதைய நாட்டு அரசியலைப்பற்றிச் சற்று விரிவாகப் பேசினார். உற்சாகம் அடைந்திருந்த கூட்டத்தினர் இவருடைய பேச்சைக் கேட்க விழைந்து நின்றனர்:

“அரசியல் துறையில், பிராமணரல்லாதார், அவர்களுக்கு உரிய உரிமைகளை அடைய முடியாதிருக்கும் நிலைமையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். இங்குக் கூடியுள்ளோர் பிராமணர் அல்லாதாருக்கெனத் தனிக்கட்சி காணும் செயலைத் துரிதமாக மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையினாலேயே இச்செய்திகளைக் குறிப்பிட்டுக் கூற ஆசைப்படுகின்றேன்.

முதலில் நமது சென்னை நகர சபையை எடுத்துக் கொள்வோம். சென்னைக் கவர்னர் கவுன்சிலுக்கு ஒரு பிரதிநிதியை அனுப்பிவைக்கும் உரிமை நகர சபைக்கு இருந்து வந்தது. இவ்வுரிமையை நகரசபை பெரும்பாலும் பிராமணர்களுக்கே சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளது. இவ்வுண்மை பலருக்கும் தெரிந்ததுதான். 1900ஆம் ஆண்டிலிருந்து 1903ஆம் ஆண்டு வரையில் மிஸ்டர் எர்ட்லி ஜான் நார்ட்டன் என்ற புகழ்பெற்ற ஆங்கிலேய வாக்கறிஞரைத் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தது. பின்னர் இராயபுரம் என்.பிரகாச முதலியார் அவர்களை அனுப்பி வைத்தது.  அவர் 1904 ஜூலையில் காலமானார். நிரப்ப வேண்டிய இந்த இடத்துக்கு நகரசபை பிராமணரல்லாதார் ஒருவரையே அனுப்பி வைக்க விரும்பிற்று. ஆனால் வெம்பாக்கம் சி.தேசிகாச்சாரியார் என்ற பிராமணர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார். இவரே 1909ஆம் ஆண்டு வரையில் அய்ந்தாண்டு காலத்திற்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டார். மிண்டோ_மார்லி சீர்திருத்தப்படி சீர்திருத்தம் செய்யப்பட்ட நகரசபையில் ஓரளவுக்கு பிராமணரல்லாதார் உணர்ச்சி மிகுந்திருந்த காரணத்தால் 1909ஆம் ஆண்டு முதல் 1912ஆம் ஆண்டு வரையில் நம் வணிக வேந்தர் திரு. தியாகராய செட்டியார் அவர்களைச் சென்னை சட்டசபைக்குத் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தது. பிறகு 1913ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டு வரையில் நம் தலைவர் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களை அனுப்பி வைத்துப் பெருமையடைந்தது. ஆனால் பிராமணரல்லாதாரின் பெருமையையும் புகழையும் காணப் பொறாத பிராமண ஜாதிப்பற்று இவ்வாண்டு பலவழிகளையும் கையாண்டு சூழ்ச்சி செய்து பிராமணரல்லாத வேட்பாளரைத் தோற்கடித்து டி.அரங்காச்சாரியார் என்ற பிராமணரை அனுப்பி வைத்துள்ளது.

அடுத்து சென்னைப் பல்கலைக்கழக ‘செனேட் சபையை’ எடுத்துக்கொள்வோமாயின், நமக்குத் தெரிந்தவரையில், இந்தச் சபையானது பிராமணரல்லாதார் எவரையும் கவர்னர் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்ததே இல்லை. செனேட் சபையின் வரலாறே பிராமணரின் ஆதிக்க வரலாறாக இருந்து வருகிறது. அதன் கடந்த 15, 16 ஆண்டு சரித்திரத்தைப் பார்த்தால் இவ்வுண்மை புலப்படும். 1900லிருந்து 1903 வரையில் சென்னைக் கிறித்தவ கல்லூரியைச் சேர்ந்த ரெவரெண்ட் மில்லர் என்ற ஆங்கிலேயரும், 1904லிருந்து 1907 வரையில் பி.எஸ்.சிவசாமி அய்யரும், 1907லிருந்து 1909 வரையில் வி.கிருஷ்ணசாமி அய்யரும் 1910லிருந்து 1913 வரை வி.சேஷகிரி அய்யரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். 1914இல் பிட்டன்ட்ரிக் என்ற ஆங்கிலேயர் அனுப்பப்-பட்டு இன்றும் அதன் பிரதிநிதியாக இருந்து வருகின்றார்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *