செய்யக் கூடாதவை

ஜூன் 01-15

வந்தவளை நொந்து கொள்ளக் கூடாது

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று தப்பான சொற்-றொடரைச் சொல்லி பெண்களின் மீது பழியைப் போடுவது குற்றமாகும். எந்த-வொன்றிற்கும் ஆண் எவ்வளவு காரணமோ அவ்வளவு காரணம்தான் பெண். பெண்ணே முழுப் பொறுப்பு என்பது அநீதியாகும்.

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தப்பாக நடந்து கொண்டால் அதைப் பெரிதாகப் பேசாத சமுதாயம், ஒரு பெண் தப்பாக நடந்து கொண்டால், பெண்ணால் குடும்பமே அழிந்துவிட்டது என்பது யார் குற்றம். ஆண் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், பெண் கற்போடு இருக்க வேண்டும் என்று தப்பான சமூகநீதி கூறப்பட்டதுதானே காரணம். குற்றத்தை நம்மிடம் வைத்துக் கொண்டு பெண்மீது பழி போடுவது குற்றமல்லவா?

ஆவதும் அழிவதும் அவரவர் செயலால் தானே ஒழிய இதில் பெண் காரணமல்ல. எந்தவொரு கேட்டையும் ஆராய்ந்தால் அதற்கு உரிய காரணம் புரியும், (புலப்படும்), யார் காரணம் என்பதும் விளங்கும். அதைவிட்டு பெண்ணே காரணம் என்பது தப்பான முடிவாகும். ஆவதும் நம்மாலே அழிவதும் நம்மாலே என்று அச்சொற்றொடரை மாற்ற வேண்டும்.

பிறரைப் பாதிக்கும் செயலைச் செய்யக் கூடாது

அடுத்தவரைப் பாதிக்கும் வகையில் புகைப் பிடித்தல், இருமுதல், எச்சில் துப்புதல் அதிக சத்தம் போடுதல் கூடாது, நம் பாதிப்பை ஏதும் அறியாதவர்களுக்குக் கொடுப்பது மனித எதிர் செயலாகும், கண்ட இடத்தில் துப்பும் எச்சில் பலருக்கு தொற்றுநோய்களைத் தரும். இருமும்போது துணி அல்லது கையால் மூடி இருமுதல் வேண்டும்.

பொது இடங்களில் கத்திப் பேசுதல், சண்டையிடுதல், தகாத வார்த்தைகளைப் பேசுதல், கூடாது. இதனால் அங்குள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
ஒலிபெருக்கியால் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது

கோயில் விழாக்கள், பூசை, மரபு என்று சொல்லி இரவு 12 மணி வரையிலும், காலை 4 மணி முதல் ஒலிபெருக்கியை ஓசையுடன் பயன்படுத்துவது, பாட்டுப் பாடுவது, பாட்டு போடுவது அறவே தப்பு. படிக்கின்ற மாணவர்கள், நோயாளிகள் வாயதானவர்-களை அது மிகவும் பாதிக்கும். காலையில் 4 மணிக்குத்தான் எல்லோரும் அயர்ந்து, ஆழ்ந்து உறங்குவர். அப்போது ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்து எழுப்புவது மாபெரும் சமூக எதிர்ச்செயல்.

பக்தி அமைதியுடன் செலுத்தப்பட வேண்டியது. ஆராவாரம் செய்வது இறை எதிர்ச் செயல். எந்தக் கடவுளும் இதை விரும்புவதில்லை. காவல்துறையும், அரசும் இதில் கண்டிப்பு காட்ட வேண்டும்.

பூசணிக்காயைச் சாலையில் உடைத்தல் கூடாது

பூசணிக்காய் அற்புதமான உணவுப் பொருள். உடலுக்குக் குளிர்ச்சியூட்டி, உடல்நலத்தைக் காக்கக் கூடியது. மோர்க் குழம்பு, புளிக்குழம்பு, இனிப்பு வகைகள் செய்ய ஏற்றது. இப்படிப்பட்ட அரிய பொருளை திருஷ்டி கழிக்க நடுச்சாலையில் உடைப்பது அறியாமை மட்டுமன்று, சமூக எதிர்ச்செயல் ஆகும். பூசணிக்காய் வெள்ளையாய் இருப்பதால் படம் வரைய வசதியாய் இருப்பதால் அதைத் திருஷ்டிக் கழிக்கப் பயன்படுத்தி விட்டனர். திருஷ்டி என்பதே அறியாமை. அப்படியிருக்க நடுச்சாலையில் உடைத்து விபத்தை உண்டாக்குவது மடமை, கண்டிக்கத்தக்க செயல் ஆகும் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *