ஆசிரியர் பதில்கள்

ஜூன் 01-15

கே :    கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் உள்ளடக்கி ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, இனஉணர்வு இவற்றை ஊட்டும் பயிற்சி முகாம்களை நாம் நடத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிர்வினையாற்றினால் என்ன?
– சிலம்பரசன், தர்மபுரி
ப :    நல்ல யோசனைதான் _ பரிசீலிக்கலாம். ஏற்கனவே நாம் நடத்திய திராவிடர் விழிப்புணர்வு மாநாடே அத்தகைய தன்மையதே!

கே :    சங்க காலத்தில் குறிக்கப்படும் நடுகல் வணக்கம் கடவுள் நம்பிக்கையா?
– சோ.இளங்கோ, அரியலூர்
ப :    முதலில் மறைந்த பெரியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வைக்கப்பட்டது. பிற்காலத்தில் அது கடவுள் வணக்கமாக மாறியது!

கே :    ‘விடுதலை ஞாயிறு மலர்’, ‘உண்மை’ போன்ற இதழ்களில் வாசகர் கேள்விகளுக்கு சிந்திப்பதற்குரிய சிறப்பான பதில்களை வழங்கி இருக்கிறீர்கள். வருங்கால இளைஞர்-களுக்குப் பயன்படும் வகையில் அவைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் என்ன?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப :    தங்களது அருமையான யோசனைக்கு நன்றி! இயக்க வெளியீட்டுப் பொறுப்பாளர்கள் அதனை ஏற்று விரைந்து செயல்படக் கூடும்.

கே :    சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் அடிப்படையில் மனிதர்களுக்கு அடைமொழி தேவையா?
– தயாளன், வேலூர்
ப :    தேவையில்லைதான். இன்றைய மாறிய சூழலில் இளைஞர்களின் எழுச்சிக்கு இவை சற்று உதவக் கூடும்! வெளிநாட்டில் அவரவர் பெயருக்கு முன்னால் எதுவுமே அடைமொழி இல்லையே; அந்தச் சூழல் வேறு.

கே :    நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கிராமப் புறங்களில் வாக்கு சதவீதம் உயர்வாக இருந்தளவிற்கு நகர்ப்புறங்களில் இல்லாதது ஜனநாயக சீர்கேட்டின் அடையாளமா?
– இலட்சுமிபதி, தாம்பரம்
ப :    ஆம் என்க! ‘மெத்தப் படித்த மேதாவிகளால் வாக்குச் சாவடிக்கு வரமுடியுமா என்ன?

கே :    தந்தை பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழ்நாடு எப்படி இருக்கும்?
– இரா.அகஸ்டியன்
ப :    அசல் காட்டுமிராண்டி நாடாக இருக்கும்!

கே :    இன்று அதிகமாக பெண்கள் மூடநம்பிக்கைக்கு ஆளாகிறார்கள். எனவே, பெண்களுக்கு தனிப் பயிற்சி முகாம் கிராமம் தோறும் நடக்குமா?
– கவிமுரசு கண்ணன், கரூர்.
ப :    நடத்திட எதிர்காலத் திட்டங்களில் ஒன்று உள்ளது!

கே :    ஹிந்தியைத் தமிழ்நாடு புறக்கணிப்பதால் தமிழர்கள் பல வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர் என்பது பற்றி தங்கள் கருத்து?
– கி.மாசிலாமணி, செங்கை
ப :    அப்படியா? பீகார்காரர்கள்தானே வெளிமாநிலங்களுக்கு பறக்கிறார்கள். அவர்கள் தாய்மொழி ஹிந்திதானே! பின் ஏன் அங்கே அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இங்கே அலைகிறார்கள்?

கே :    மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் தன்னம்பிக்கையைப் பார்க்கும்போது ‘பெரியாரின் தொண்டன்’ என்று நிரூபிக்கிறாரா?
– இல.சங்கத்தமிழன், காஞ்சி
ப :    ஆம். அதில் என்ன அட்டி?

கே :    அய்யா பெரியார் முட்டாள்தான் வேண்டும் என்று சொன்னார். அப்போ நாம் முட்டாள்களா அய்யா தங்களது பதில்?   
– த.திலீபன்
ப :    அவரது “முட்டாள்’’ என்ற சொல்லாட்சி, ‘கடமையை கட்டுப்பாட்டுடன் செய்யும் தொண்டன்’ என்றே பொருள்! அப்பொருளில் நான் ‘முதல் முட்டாள்’ என்பதைப் பெருமையுடன் கூறுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *