திராவிடத்திற்கு மாற்று இல்லை தேர்தல் தந்த தீர்ப்பு

ஜூன் 01-15

திராவிடர் எழுச்சி, இயக்க செயல்பாடுகள் மூலம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, ஆரிய பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, கல்லாமை ஒழிப்பு, சமஸ்கிருத, இந்தி ஆதிக்க ஒழிப்பு, சூத்திர இழிவு ஒழிப்பு, தன்மான உணர்வு வளர்ப்பு என்று அயராத சுற்றுப் பயணத்தால், பொதுக்கூட்டங்கள், திருமணங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் மூலம் எழுச்சி ஏற்படுத்தியதோடு, பத்திரிகைகள் வழியும், புத்தக வெளியீடுகள் வழியும் பல்வேறு சிந்தனைகள் கொள்கைகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு விழிப்பும், தன்மான உணர்வும் உண்டாக்கப்பட்டன.

அறிஞர் அண்ணா தந்தை பெரியாருடன் தளபதியாய் நின்று தோள்கொடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தி மக்களின் பேராதரவை பெற துணை நின்றார். பின் நமது இலக்குகளை வென்றெடுக்க, சட்டத்தின் துணையும் அதிகார பலமும் கட்டாயத் தேவையென்பதையுணர்ந்து, அரசியலில் பங்கெடுக்க முடிவு செய்து தி.மு.கழகத்தை அண்ணா உருவாக்கினார்.

 

இரட்டைக்குழல் துப்பாக்கி: அரசியலுக்காக தி.மு.கழகம் உருவாக்கப்பட்டாலும், கொள்கை குறிக்கோள் என்ற அடிப்படையில் தி.க., தி.மு.க., இரண்டும் ஒன்றே! அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும், வேறுபாடும் இல்லை! எதிர் தரப்பை வீழ்த்த இரண்டு அமைப்புகளும் இணைந்தும் கலந்தும் செயல்படும் என்று கூறி, இரு அமைப்புகள் என்றாலும் இலக்கு ஒன்றே என்ற கருத்தை தெளிவாக்க தி.க.வும்., தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கியென்றார். தந்தை பெரியாரின் கொள்கைகளை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி செயல்படுத்தவே தி.மு.க. தொடங்கப்பட்டது என்றார்.

திராவிட ஆட்சி பெரியாருக்கே காணிக்கை!

1967இல் மிகப்பெரிய வெற்றியை அண்ணாவின் தலைமையில் தி.மு.க. பெற்றதும், இந்த ஆட்சி பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தார் அண்ணா. அது மட்டுமன்றி திருச்சிக்கு ஓடோடிச் சென்று, பெரியாரைச் சந்தித்து காணிக்கையாகவும் ஆக்கினார். பெரியாரும் அண்ணாவும் அடைந்த மகிழ்விற்கும் மனநிறைவிற்கும் அளவேயில்லை.
தமிழும், தமிழினமும் தலைநிமிர்ந்தன!

ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலையாக, “சென்னை மாகாணம்’’ என்பது மாற்றப்பட்டு “தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்டது.

சுயமரியாதைத் திருமணச் சட்டம்  தன்மானத் திருமணங்கள் எல்லாம் செல்லும் என்றாகி, தமிழகம் எங்கும் ஆரிய பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்த, மூடநம்பிக்கை ஒழிந்த, இழிவு நீங்கிய திருமணங்கள் பெருமளவு நடத்தப்-பட்டன.

இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டு தமிழுக்கு புது எழுச்சியும், வளர்ச்சியும் கிடைத்தன.

ஹிந்தி வல்லாண்மை ஒழிக்கப்பட்டு, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை சட்டமாக்கப்பட்டு, தமிழுக்கு பாதிப்பு வராமல் பாதுகாப்பரண் உருவாக்கப்பட்டது.
நோய்வாய்ப்பட்டு அண்ணா மறைந்த பின் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரின் வார்ப்பில் வந்த பிள்ளை என்பதில் அணுவளவும் பிசகின்றி அய்யாவின் கொள்கைகளை சட்டரீதியாகச் செயல்-படுத்தினார்.

இடஒதுக்கீட்டை சீர் செய்ததன் மூலம் சமூகநீதியை உறுதிப்படுத்தினார். தாழ்த்தப்-பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் கற்று, பதவி பெற்று, வளர்ந்து, உயர்ந்து ஏற்றம் பெற வகைசெய்தார்.

மனித இழிவுக்குக் காரணமான ஒவ்வொன்றையும் ஒழித்தார். மனித சமத்து-வத்திற்குக் காரணமானவற்றைச் செயல்-படுத்தினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், சமத்துவபுரம், ஜாதிமறுப்பு மண ஊக்குவிப்பு, விதவை மணத்திற்கு ஆதரவு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலன், அருந்ததியர் நலன்; சிறுபான்மையினர் நலன், கிராமப்புரங்களுக் கெல்லாம் மின்சாரம், விவசாயிகளின் நலன்,  ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேளாண்மைக்கு இலவச மின்சாரம், வேளாண்கடன் இரத்து, குத்தகையாளர் பாதுகாப்பு, நில உச்சவரம்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை, குடிசைமாற்று வாரியம், உள்ளாட்சி சீர்திருத்தம், தமிழ்வழிக் கல்வி, இலவசக் கல்வி, செம்மொழித் தகுதி, தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று எண்ணற்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தையும், தமிழரையும் தலைநிமிரச் செய்தார்.

தி.மு.கழகத்திலிருந்து பிரிந்து அ.இ.அ.தி.மு.க என்று எம்.ஜி.ஆர். அவர்கள் புதுக்கட்சித் தொடங்கி ஆட்சியைப் பிடித்தாலும் அய்யாவின் செயல்திட்டங்களை, கொள்கைகளை ஓரளவு செயல்படுத்தினார். தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்டமாக்கினார். இடஒதுக்-கீட்டில் வருமான வரம்பை ஆரிய பார்ப்பனர் ஆலோசனையின்படி கொண்டு வந்தாலும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் விளக்கத்தால் தெளிவு பெற்று வருமான வரம்பை நீக்கியதோடு, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50% உயர்த்தி மொத்த இடஒதுக்கீடு 69% ஆக ஆகக் காரணமாய் ஆனார்.

அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த செயலலிதா அவர்கள் 69% இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைக்க திராவிடர் கழகம் மேற்கொண்ட முயற்சிக்குத் துணைநின்று சட்டப் பாதுகாப்பு கிடைக்கச் செய்தார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்றுச் செயல்பட்டார்.
பிறப்பால் அவர் பார்ப்பனர் என்பதால் ‘துக்ளக்’ சோ இராமசாமி போன்றோரின் தவறான ஆலோசனையின்-பேரில், தமிழின எதிர் செயல்களை செய்ததால், திராவிடர் கழகத்தின் எதிர்ப்புக்கும், கண்டனத்திற்கும் ஆளானார்.

அவர் திராவிட இயக்கத்தின் வழியில் வந்த தி.மு.க.வினின்று பிரிந்து சென்ற, இலட்சக்கணக்கான தமிழர்களுக்குத் தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழர்களின் நலனுக்கு எதிரானவற்றையும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிரானவற்றையும் செய்யாது தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில் சென்று ஆட்சி நடத்துவதுதான் தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் செய்யும் நன்றிக் கடனாக இருக்க முடியும்.

அவ்வகையில் ஆட்சிப் பொறுப்பை மீண்டும்  ஏற்றுள்ள அவர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் ஆணையிடுதல், மதச்சார்பற்ற நிலையில் உறுதியாய் இருத்தல், திராவிட இயக்க சிந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிரான ஆர்.எஸ்.எஸ் சிந்தனைகளைப் புறக்கணித்தல்; சமூகநீதி சார்ந்த சிக்கல்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்து செயல்படல், மதுவிலக்கை உடன் அமுல்படுத்தி தமிழக மக்களைக் காத்தல் என்று தான் கொண்ட கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாய் நிற்பதுதான் பெரியாருக்கும், அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அவர் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். மற்றபடி அவர்களின் படங்களை போடுவதாலோ, மதிப்பதாலோ அவர்களுக்கு நன்றி செலுத்த முடியாது என்பதை மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் செயலலிதா அவர்கள் ஆழமாக உள்ளத்தில் உறுதியுடன் கொண்டு செயல்பட வேண்டும்.

சிக்கல் நிறைந்த தேர்தல்!

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மிகவும் சிக்கலான நேரத்தில், சிக்கலான போட்டிக்கிடையே நடந்தது.

திராவிடக் கட்சிகளின் சகாப்தம் இத்தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடும். இனி மாற்று அணிதான் ஆளும் என்று ஆர்ப்பரித்து ஆவேசப்பட்டு, ஜாதி ஓட்டுகளை மட்டுமே நம்பி, திட்டங்கள் மூலம் எல்லா மக்களையும் கவர்ந்துவிடலாம் என்ற கற்பனை நம்பிக்கையில் களம் இறங்கிய அன்புமணி போன்றோர் ஒருபக்கம்.

“திராவிடத்தால் வீழ்ந்தோம். இனி தமிழன் தலைநிமிர; தழைக்க தமிழ்த் தேசியமே ஒரே மருந்து’’ என்று தமிழத் தேசியம் பேசி, ஆரிய பார்ப்பனர்கள் தமிழ்மொழி பேசுவதால் அவர்களும் தமிழர்களே என்று இன உணர்வை நீர்த்துப் போகச் செய்து, மீண்டும் ஜாதியத்தையும் மூடநம்பிக்கையையும் தழைக்க தமிழ் உணர்வை, தமிழர் உணர்வை, தவறாகப் பயன்படுத்தி, தமிழர்களை தவறாக தடம் மாற்றிக் கொண்டு செல்ல முயன்ற சீமான் போன்றவர்கள் ஒரு பக்கம்.

விஜயகாந்தின் செல்வாக்கு என்ற மயக்க  பிம்பத்தை நம்பி தமிழக அரசியல் ஒரு மாதகாலம் கதிகலங்கி நின்ற அறியாமை மற்றொரு பக்கம்.

ஆரிய பார்ப்பன இன உணர்வோடு காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும், தமிழர்களின் ஒரே நாதியான தி.மு.கழகத்திற்கு எதிராக ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்திய மோசடிப் பிரச்சாரம் இன்னொரு பக்கம்.

சுயநலத்திற்காக சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் பிரிந்து நின்று சுயநல நோக்கில் குறுக்குசால் ஓட்டிய குளறுபடிகள் இடையிடையே.
திருமாவளவன் போன்ற கொள்கை வாதிகளைக்கூட, குள்ளநரி சிந்தனையோடு தனது தனிப்பட்ட குரோத உணர்ச்சியின் உந்துதலால் தி.மு.க.வைப் பழிவாங்க, தப்பான வழியில் இட்டுச் சென்று தானுங்கெட்டு, தன்னை நம்பிவந்தவர்களையும் கெடுத்து, நிகழவேண்டிய ஆட்சி மாற்றத்தைக் கெடுத்து மக்களின் உணர்வுகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு, தன் பெருமைகளையெல்லாம் அறவே அழித்துக் கொண்ட வைகோவின் கோமாளித்தனமான கூத்துகள் ஒவ்வொரு நாளும் நடந்த நிலையில், நடுநிலை நின்று தேர்தலை நடத்தவேண்டிய தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்குச் சார்பாக நின்று செயல்பட்ட நியாயமற்ற செயல்பாடுகளுடன் இத்தேர்தல் நடந்து முடிந்தது.

கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்புடன், அரசு இயந்திரத்தின் துணையுடன், ஆளுங்கட்சியென்ற அதிகார பதவிப் பலத்துடன் பணப்பாட்டுவாடா உட்பட பல முறைகேடுகளும் செய்து ஆளும் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், பத்திரிகையாளர் மாலனே மனம் திறந்து ஒத்துக்கொண்டு கூறியதுபோல், உண்மையில் வெற்றி பெற்றது தி.மு..கழகந்தான்!  

தேர்தல் தந்த தீர்ப்புகள்!
திராவிடத்திற்கு மாற்று இல்லை!

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக எந்தக் கட்சியும் வரமுடியாது. பெரியாரின், அண்ணாவின் கோட்பாடுகளுக்கு எதிராக இந்த மண்ணில் எதுவும் வளர்ச்சி பெற முடியாது என்பதை இத்தேர்தல் ஆணித்தரமாக அறிவித்துவிட்டது.

துடைத்தெறியப்பட்ட பி.ஜே.பி.!

மற்றவர்கள் தோள்மீது ஏறி எப்படியாவது வளர்ந்துவிடலாம் என்று திட்டம் தீட்டிய பி.ஜே.பி.யை ஒருவரும் தீண்டாதபோதே அதன் தோல்வி உறுதியானது. தமிழகத்தில் பி.ஜே.பி. இனி எக்காலத்திலும் வேரூன்றவோ, தலைதூக்கவோ முடியாது. இது பெரியார் மண். மதவாதப் பயிர் இங்கு விளைவேற முடியாது என்பதை இத்தேர்தல் உறுதிபட உணர்த்தி-விட்டது.
ஜாதியத்திற்கு சமாதி!

ஜாதி வெறியைத் தூண்டி சாதித்து விடலாம் என்று சவடால்விட்டும்; சபதம் ஏற்றும் சாதனை புரிய புறப்பட்டவர்களை யெல்லாம் தமிழக மக்கள் புறக்கணித்து தோல்வியுறச் செய்துள்ளனர். எனவே, ஜாதிய சக்திகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு, தமிழக மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்து கொள்கை வழி அரசியல் நடத்த முன்வர வேண்டும் என்ற பாடத்தை இத்தேர்தல் அவர்களுக்குத் தந்துள்ளது.

செல்லுபடியாகாத சீமான்கள்!

பெரியாரை அறவே புறக்கணித்து, நன்றியுணர்வு என்பது சிறிதும் இன்றி, நேற்றுவரை பேசியதையெல்லாம் காற்றோடு கலக்கவிட்டு, நாளும் ஒரு பேச்சு, ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு முடிவு என்று சிந்தனைத் தெளிவில்லாமலும்; யார் தமிழன் என்பதிலேயே ஒரு வரையறையும், உறுதியும் இல்லாது, மனம் போனபடியெல்லாம் முடிவு செய்து, நூற்றாண்டு வலிமைகொண்ட ஓர் இனஉணர்வை, ஒழித்துவிட்டு, இன எதிரிகளை சேர்த்துக்-கொண்டு தமிழர்க்கு விடிவு காண்பதாகக் கூறிப் புறப்பட்ட, சீமான் போன்றோருக்கு சரியான பாடத்தை இத்தேர்தல் தந்துள்ளது. வைப்புத் தொகைக்கூட வாங்க முடியாது மக்கள் நிராகரித்துள்ளனர். எனவே, அவர்கள் அரைவேக்-காட்டு ஆலோசனைகளை புறந்தள்ளி ஆழ்ந்த வரலாற்று உண்மைகளை உள்வாங்கி, யதார்த்த வழியில் தமிழர் மேம்பட இனி தங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதை இத்தேர்தல் உணர்த்துகிறது என்பதோடு, பெரியார் சிந்தனையை ஏற்காத எவரையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் மூளையில் உறைக்கச் சொல்லியுள்ளது.

சமூகநீதி, மதச்சார்பின்மை, மொழிப்ற்று, ஜாதியொழிப்பு, சமத்துவம், ஆதிக்க ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சி போன்றவற்றில் ஒத்த கொள்கையுடைய கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இயலும்; ஆளுக்கு ஒரு பக்கம் அணிவகுத்து மோதினால், ஆட்சியில் இருப்போரே மீண்டும் ஆட்சிக்கு வந்து ஆணவம் உச்சம் பெற வழிசெய்யும் என்பதையும் இத்தேர்தல் உணர்த்தியுள்ளது.

நல்ல நோக்குள்ள தலைவர்கள் இனி மேலாவது தங்கள் தவற்றையுணர்ந்து, தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி, தன் முனைப்பை அறவே விலக்கி செயல்பட்டால், தமிழகம், தழைக்கும் தமிழர் வளர்ச்சி பெறுவர். சீற்றம் விலக்கி சிந்திப்பார்களாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *