அய்யா, அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு அ.தி.மு.க. அரசு மோசடி செய்கிறது!

மே 16-31

வருமான வரம்பாணைக் குறித்து சென்ற இதழில் வெளிவந்த 4.7.1979 அன்று வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சி:

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு கல்வி உத்தியோக வாய்ப்புகளுக்கு இடஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் விதிக்கு மாற்று விதியாக குறிப்பிட்ட அளவு வருமானத்திற்குக் கீழ் உள்ளவர்களைத்தான் “தாழ்த்தப்பட்டவர்களாக’’ கருத முடியும். மற்றவர்கள் முன்னேறிய ஜாதியினராக கல்வி, உத்தியோகத்தில் போட்டியிட வேண்டும் என்று தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்தால் அது எப்படிஅரசியல் சட்ட விரோதமோ அது போன்றதுதானே, பிற்படுத்தப்பட்டோருக்குத் தற்போது, பிறப்பித்துள்ள ஆணையும்? தமிழக அரசு மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய பிரச்சினை இது; கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ந்துவரும் முன்னேற்ற வாழ்வில் கோடரியைப் பாய்ச்சும் ஆணை இது!

 

வேலையில்லாதவர்கள் பட்டியலை எடுத்து ஓர் புள்ளிவிவரத்துடன் அரசு பார்க்கட்டும். முன்னேறிய ஜாதியினராகிய பார்ப்பனர்களில் படித்து வெளியேறியவர்களில் எவ்வளவு சதவிகிதம் வேலையில்லாதவர்கள்? பிற்படுத்தப்பட்டவர்களில் எவ்வளவு பேர் வேலையில்லாதவர்கள்?- என்று பார்க்கட்டும்.

100க்கு 3 சதவிகிதம் அவர்கள் என்றால் அந்த 3 சதவிகிதத்தில் நூற்றுக்கு 97 சதவிகிதம் வேலைவாய்ப்புகளை அடுக்கடுக்காக பெறுகின்றவர்களாகத் தானே இருக்கிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில் முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறையாக படித்துவிட்டு பல ஆண்டுகளாக வேலையில்லாதவர்களாக அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் 90 சதவிகிதத்தினர் அல்லவா?

கிராமாந்திரங்களிலிருந்து வந்து படித்து பட்டம் பெற்ற பல பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்களில் ‘எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில்’’ எப்படி பதிவு செய்து கொள்ளுவது என்பதுகூடத் தெரியாதவர்கள் பலர் இருக்கிறார்களே.

பார்ப்பனர் நிலை அப்படியா? கருவில் உள்ளபோதே உத்தியோகங்கள் காத்து இருக்கின்றனவே!

எனவே பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார அடிப்படை என்றுகூறி, பிற்படுத்தப்பட்டோரில் 9000 ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களை, நீங்கள் “முன்னேறிய ஜாதியினரோடு போட்டியிடுங்கள்’’ என்று கூறுவது கொடுமை; மிகப் பெரிய சமுதாயக் கொடுமை ஆகும்!

தமிழக அரசு இதில் பிடிவாதம் காட்டாமல் மறுபரிசீலனை செய்து, பெரியார் வழியை, அண்ணா வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இன்றைய ‘இந்து’ ஏடு (4-_7_1979) அதன் துணைத் தலையங்கத்தில் “முற்போக்கானதும் பொருள் பொதிந்ததும்’’ ‘Progressive and
Meaningful’ என்ற தலைப்பிட்டு, தமிழக அரசின் புதிய ஆணையை மிகவும் பாராட்டி வரவேற்று எழுதியுள்ளது.

இதை ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’ இவ்வளவு விரைவில் ஆதரித்து வரவேற்று எழுதுவதிலிருந்தே இது தமிழர்கள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கு எவ்வளவு கேடானது. முன்னேறிய ஜாதிக்காரர்களான பார்ப்பனர்கட்கு எவ்வளவு வாய்ப்பானது என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே!

இது பொதுவாக எல்லோராலும் வரவேற்கப்படுமாம்! கட்டியங் கூறுகிறது ‘இந்து ஏடு!’ பிற்படுத்தப்பட்டவர்கள் கருத்து தெரிவிப்பது இதில் முக்கியமா? முன்னேறிய சமூகத்தினர் வரவேற்பது முக்கியமா? அருள்கூர்ந்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமல்ல; நாம் எந்த அச்சத்தை நேற்று வெளிப்படுத்தினோமோ அதை ‘இந்து’ ஏடு ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

“It should have salutary effect on reducing number of persons entitled to special privileges.”

“தனிச்சலுகைக்கு தாங்கள் உரிமை படைத்தவர்கள் என்று கருதுவோர் எண்ணிக்கையைக் குறைக்கும் விளைவை _ உறுதியான விளைவை இது ஏற்படுத்தி விடும்.’’

இந்த ஒரு வாக்கியத்தின் மூலம் ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.’’ அக்கிரகாரம் எவ்வளவு குதூகலம் அடைகிறது பார்த்தீர்களா?

அது மட்டுமல்ல; அடுத்து (எம்.ஜி.ஆர்.) தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் “பூச்சூட்டி’’க் கூறத் தவறவில்லை ‘இந்து’ ஏடு!

“The Tamil Nadu Government could perhaps have gone a step further and thrown open the concessions to any one who is economically backward, irrespective of one’s caste and community.”

தமிழ்நாடு அரசு மேலும் ஒருபடி மேலே சென்றிருக்கிறது. ஜாதி, சமூகம்பற்றி கவலைப் படாமல், பொருளாதார அடிப்படையில் யார் யார் பின்தங்கியிருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சலுகைக் கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.

_ இவ்வாறு “மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’’ (‘ஹிந்து’), இனி அடுத்து இடஒதுக்கீடு என்பதே தேவை இல்லாத நிலை வரவேண்டும் என்று எழுதியிருக்கிறது என்றால், அரசின் இந்த உத்தரவு யாருக்குப் பலன் கொடுக்கப் போகிறது என்பது தெளிவாக விளங்கவில்லையா?

பிற்படுத்தப்பட்டோருக்கு பேராபத்தான நிலை உருவாகியிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் சேர்ந்து இந்த ஆபத்தை முறியடித்தாக வேண்டியது அவசரமும் அவசியமுமான காரியமாகும்.

பிற்படுத்தப்பட்டோருக்கு பேரிடியாக வந்த தமிழக அரசின் உத்திரவு இதுதான்!

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் _ வருமான வரம்பு விண்ணப்பம் _ உத்தரவு.

 

சமூக நலத்துறை

ஜி.ஓ.எண்.1156

உத்தரவு        தேதி: 2-_7_1979

 

கல்வி சமூக பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் மற்றும் இனங்கள் தொடர்பாக அவர்களுடைய ஒப்புமையாக அறியும் வண்ணம் _ ஒரு நிபந்தனையை இப்போதுள்ள நிபந்தனைகளுக்கும் மேலாக போடவேண்டும் என்று அரசு சில காலமாகவே சிந்தனை செய்து வந்திருக்கிறது. இப்படி மேலும் ஒரு நிபந்தனை போடுவதற்கான தேவையை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு (AIR 1976 SC 2381) ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் திரு.ஏ.என்.சட்டநாதன் தலைமையில் கடைசியாக அமைக்கப்பட்ட பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன் இந்தப் பிரச்சினைபற்றி பரிசீலித்து பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள பல்வேறு ஜாதிகளின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வளர்ச்சி அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும், இவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் என்ற பாதுகாப்பு தேவை இல்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது. அதற்காக இந்தக் கமிஷன், ஒவ்வொரு ஜாதியிலும் வருமான வரம்பை அடிப்படையாக வைக்கலாம் என்று ஒரு குறிப்பிட்ட யோசனையை தெரிவித்து அதன் மூலம் ஒவ்வொரு ஜாதியிலும் முன்னேறியவர்களை நிர்ணயிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது. அரசு வேலைகளில் வருமான வரம்பு அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு கோருபவர்களை நீக்கிவிடும் முறை தொழிற்படிப்புகளுக்கும் பொருந்தக் கூடியதே என்று கமிஷன் குறிப்பிட்டிருக்கிறது.

(2) அரசு இந்தப் பிரச்சினையை இந்தக் கமிஷன் தயாரித்துள்ள தகவல்களின் அடிப்படையிலும், கமிஷன் சிபாரிசை முழுமையாக பரிசீலித்த பிறகும், சமூக கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் இனங்களைக் கொண்ட பிற்படுத்தப் பட்டோரை பாகுபடுத்துவதில், பெற்றோர்களின் ஆண்டு மொத்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, எல்லா துறைகளிலிருந்தும் கிடைக்கும் மொத்த ஆண்டு வருமானம் ரூ.9 ஆயிரத்தை அதிகரிக்காத பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பெற்றோர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே. அரசியல் சட்ட 15 (4)வது பிரிவின்படி, சமூக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களாக கருதப்படுவார்கள் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. உத்தரவிட்ட தேதியிலிருந்து எல்லா கல்வி நிலையங்களிலும் நிறுவனங்களிலும், தொழிற்கல்விக் கல்லூரிகளிலும் இந்த இடஒதுக்கீடு உத்தரவு அமுலுக்கு வருகிறது.

(3) ஆண்டு மொத்த வருமானம் ரூ.9 ஆயிரத்துக்கு மேல் இல்லாத _ பிற்படுத்தப்-பட்டோர் பட்டியலில் உள்ள ஜாதி, இனங்களைச் சார்ந்த பெற்றோர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாய குடிமக்கள் ஆவார்கள் என்று அரசு அறிவித்துக் கொள்கிறது. அவர்கள் மாநிலஅரசுப் பணிகளிலும் அரசியல் சட்டம் 16(4) விதிப்படி போதுமான இடங்களைப் பெறவில்லை. எனவே, இந்த உத்தரவு வேலைவாய்ப்புக்கும் பொருந்தும் என்பதோடு, உத்தரவிட்ட தேதியிலிருந்தே அமலுக்கு வருகிறது.

(4) எல்லா வகையிலும் வரக்கூடிய பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுக்கும்போது,
(வீ) பெற்றோருக்கு எல்லா வகையிலும் வரக்கூடிய ஒட்டுமொத்த வருமானம். (வீவீ) கணவன் அல்லது மனைவி அல்லது இருவரும் சேர்ந்த எல்லா வகையிலும் வரக்கூடிய மொத்த வருமானம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

(5) ஆண்டு மொத்த வருமானம் என்பது, இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியோடு கணக்கிடப்பட வேண்டும். வேலைக்கோ, கல்விக்கோ மனுப்போடும் தேதிக்கு முன்னால் எடுக்கப்பட்ட கணக்காக இருக்க வேண்டும்.

(6) ‘பெற்றோர்கள்’ என்ற வார்த்தைக்கு, மனு செய்பவரின் “கார்டியன்’’களும் என்பதும் பொருந்தும்.
(7) இதற்குமுன் வெளியிடப்பட்ட, சமூக, கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்டோருக்கான எல்லா உத்தரவுகளும் இந்த உத்தரவு மூலம் தள்ளப்படுகிறது.

7_6_71இல் பிறப்பிக்கப்பட்ட ஜி.ஓ.எண் 695படி. இடஒதுக்கீட்டுக்கான சதவீதத்தை இந்த உத்தரவு பாதிக்காது.
(கவர்னர் உத்தரவுப்படி)

(ஒப்பம்)
என்.ஹரிபாஸ்கர்,
அரசு செயலாளர்

அய்யாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு, அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சி மோசடி செய்கிறது. அவரது கொள்கைகளை திரிபுவாதம் செய்கிறது என்று நாம் சுட்டிக்காட்டுகிறோம். பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சலுகை என்பது அண்ணாவின் கொள்கைக்கு விரோதம், என்று நாம் கூறினோம். இல்லை, இல்லை _ அண்ணாவின் கொள்கைப்படிதான் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறோம் என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அன்று திட்டவட்டமாகக் கூறினார்.

“திராவிட நாடு’’ (12.06.1949) என்ற ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையை அப்படியே இங்கு எடுத்து காட்டுகிறேன்.

‘வகுப்புக்கு ஏற்ற நீதி’ என்ற தலைப்பில்,

“அரசாங்க அலுவல்களில் ஆட்களை அமர்த்தும்போதும், கல்லுரிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வ முறையைக் கையாளுவதென்று சென்னை அரசாங்கம் உறுதிபூண்டு வருகிறது. அரசாங்கம் கையாண்டிருக்கும் இந்த உறுதியைக் கண்டிக்க, வகுப்புவாத நச்சுநீரை, ஓய்வு ஒழிவில்லாமல் மறைமுகமாகப் பொழிந்து கொண்டிருக்கும் சில பத்திரிகைகளும், பிறரும் சீறிப்பாய்ந்த வண்ணம் இருக்கின்றனர். வகுப்பு நலன்கள் எவ்வகையிலும் குறைந்துவிடாமல் பாதுகாத்து தம்முடைய இனத்திற்குச் சேவை செய்வதிலே அல்லும் பகலும் அயராது முனைந்து நின்று பாடுபட்டுவரும் பத்திரிகைகளிலே, தலைசிறந்து விளங்கும் ‘இந்து’வும், ‘சுதேசமித்திர’னும் இப்பொழுது சினம் மேலிட்டுத் தலை துள்ளிக்குதிக்கின்றன.

நம் நாட்டின் அமைப்பில் சாதிப் பிரிவுகள் தோன்றி, உயர்ந்த சாதிக்காரகளெனப் பெயர் பெற்ற ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் வாழ்க்கை வசதிகளனைத்தும் பெறும்படியான நிலைமையும், இடைத்தர ஜாதிக்காரர்கள் பிற்போக்கு வகுப்பினர்கள் எனக் கருதப்பட்டு வாழ்க்கை வசதிகளிலே பல மறுக்கப்படும்படியான நிலைமையும், தீண்டப்படாத ஜாதியினர் என்று சிலர், தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டு, வாழ்க்கை வசதிகள் அனைத்தும் மறுக்கப்படும்படியான நிலைமையும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலவி வரும்படியான முறை ஏற்பட்டுவிட்டது.

ஜாதியின் காரணமாக ஒரு கூட்டம் உல்லாச வாழ்வு வாழவும், ஜாதியின் காரணமாகவே மற்றொரு கூட்டம் அடிமைவேலை செய்து உழலவும் ஆன நிலைமையை அறிந்த நீதிக்கட்சி ஜாதியின் காரணமாக வீழ்த்தப்பட்டவர்களை உயர்நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின், அந்த ஜாதியின் காரணத்தைக் காட்டித்தான் உயர்நிலைக்கு ஏற்ற முடியும் என்ற பேருண்மையைத் தெளிந்து கொண்டு, தான் ஆட்சிப்பீடம் அமரும்போது, வகுப்புகளுக்கு நீதி வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்வ முறையை அமலுக்குக் கொண்டுவந்தது.

எல்லா வகுப்பினரையும், ஏற்றத் தாழ்வின்றி, ஒரே நிலைக்குக் கொண்டுவர, வீழ்ந்துகிடக்கும் சமுதாயத்திற்கு, அவையவை வீழ்ந்துகிடக்கும் அளவுக்கு ஏற்ப நீதி வழங்க வேண்டும் _ சலுகை காட்ட வேண்டும் _ கைகொடுக்க வேண்டும் _ இடமளிக்க வேண்டும் என்று கருதியே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் துறைகளிலெல்லாம், வகுப்புவாரி முறையைக் கொண்டுவரத் திட்டம் தீட்டியது நீதிக்கட்சி. தன் ஆற்றலுக்கு ஏற்ற அளவுக்கு அந்தத் திட்டத்தை நடைமுறையில் கொண்டு வரவும் பாடுபட்டது.

வகுப்புவாரி முறையைக் கல்லூரிகளிலும், அரசாங்க அலுவல்களிலும், நீதிக்கட்சி புகுத்திய பிறகுதான், பிற்போக்கு வகுப்பினர் ஓரளவுக்குக் கல்வி பெறவும், சமுதாயத்தில் ஓரளவுக்குச் சமநிலை பெற்று மதிப்படையவும் வழி ஏற்பட்டது. இந்த முறையை அமலுக்குக் கொண்டுவந்தபோது, அதன் உட்கிடக்கையை அறியமாட்டாத காங்கிரஸ்காரர்கள் நீதிக்கட்சியை வகுப்புவாதக் கட்சி என்று தூற்றினர்; கேலி செய்தனர்; வசைமாரி பொழிந்தனர். உயர்ஜாதி வகுப்பினர் காங்கிரஸ்காரர்களின் இந்தப் போக்குக் கண்டு அகங்குளிர்ந்தனர்; புளகாங்கிதம் கொண்டு மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்.

பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள், இன்று, ஆட்சிப் பீடம் ஏறிய பிறகு, வகுப்புவாரி முறையின் உண்மையையும், அவசியத்தையும், முக்கியத்வத்தையும் உணருகிறார்கள். சூழ்நிலை அந்த நிலைமைக்கு அவர்களைக் கொண்டுவந்து வைத்துள்ளது. வகுப்புவாரி முறை இருந்து தீரவேண்டியதன் அவசியத்தை மந்திரி கோபால்ரெட்டியும், பக்தவத்சலமும் அண்மையில் வற்புறுத்தியதை நன்கு அறியலாம். நீதிக்கட்சியின் இந்தக் கொள்கையைக் காரசாரமாக, மட்டரகச் சொற்களால்கூட, திட்டித்தூற்றி வந்த ‘தினசரி’யார் இன்றுள்ள நிலைமையைத் தெரிந்து வகுப்புவாரி முறைக்கு வாதாடி நிற்கிறார். காங்கிரஸ்காரர்களின் உள்ளம் இந்த அளவுக்குப் பண்பட்டது கண்டு நாம் மகிழ்கிறோம்.

வகுப்புவாரி முறையை அரசாங்கம் கையாள வேண்டியதன் இன்றியமையாமையையும், சிலகாலம் வரையில் அரசாங்க ஏடுகளில் ஜாதிப் பெயர் குறிக்க வேண்டியதன் அவசியத்தையும் குறித்துச் சென்னை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிடுவதைக் காணுங்கள்.

“வகுப்பு வேற்றுமைகளை ஒழிப்பது என்பது, சமுதாயம் மேற்கொள்ள வேண்டியதொரு சீர்திருத்தமாகும். சமுதாயத்தில் வளரும் எண்ணங்களின் முற்போக்குக்கு ஏற்றபடி, அரசாங்கம் இவ்விஷயங்களில் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை படிப்படியாகக் கொள்ளக்கூடியதாகத் தானிருக்கும். அரசாங்கம் மட்டும் தன் ரிகார்டுகளில் ஜாதிப் பெயரைக் குறிக்காமல் விட்டுவிடுமேயானால், ஆனால், அதே சமயத்தில் வெளியுலகில் ஜாதிப் பெயரைக் குறிப்பிடும் பழக்கம் இருந்து வருமேயானால், அது ஒழுங்கற்ற முறைகளிலும், ஆட்சி முறைச் சங்கடங்களிலும் கொண்டுபோய்விடும்.’’

சமுதாயத்தில் மக்கள் சமநிலை அடையவேண்டுமானால், வகுப்புகளுக்குச் சமசந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். சமசந்தர்ப்பங்கள் ஏற்பட வகுப்புகளுக்கு ஏற்ற நீதி கொடுக்கப்பட வேண்டும். ஏற்ற நீதிகொடுக்க ஒவ்வொரு ஜாதியின் நிலைமையை அரசாங்கம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. ஆகவேதான் வகுப்புகளைப் பிரித்துக் காணவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இருக்கிறது என்று அரசாங்க அதிகாரி கூறும் காரணத்தை நாம் போற்றுகிறோம்.

எந்த ஜாதிப் பெயர்களின் காரணமாகச் சமுதாயத்தில் பலர் வீழ்ச்சியுற்றார்களோ அதே ஜாதிப் பெயரின் காரணமாக அவர்களுக்கு மீட்சி தரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். இந்நாட்டில், சமுதாயத்திலுள்ள மேடு பள்ளங்கள் சமதரை ஆகும் வரை, வகுப்புவாரி முறை அரசாங்கத்தால் கையாளப்பட்டே தீரவேண்டும்.

சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகளைப் போக்கி, சமுதாயத்தைச் சீர்திருத்தும் பெரும்பணியைத் திராவிடர் கழகம் செய்துவருகிறது, அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு, திராவிடர் கழகம் சமுதாயம் முழுவதையும் சீர்திருத்தி வெற்றிக் கொடியை நாட்டும்போது, அரசாங்கம் வகுப்புவாரி முறையைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்படாது. வகுப்புக்களுக்கு ஏற்ற நீதி கிடைத்து, சமுதாயம் உயர்நிலையடையத் திராவிடர் கழகத்தின் தொண்டும், அரசாங்கத்தின் அணைப்பும் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. எனவேதான் நாட்டிலுள்ள ஜாதிப் பாகுபாடுகள் அனைத்தும் ஒழிந்து, மக்கள் அனைவரும் சமுதாயத்-துறையில் (பொருளாதாரத் துறையில் அல்ல) ‘ஒன்றே குலம்’ என்ற நிலை ஏற்படும் வரையில் இந்த வகுப்புவாரி முறை _ அதாவது வகுப்புக்கு ஏற்ற நீதி வழங்கப்பட வேண்டுமென்ற ஏற்பாடு இருந்தே தீரவேண்டு-மென்று வற்புறுத்துகிறோம்.’’
(நினைவுகள் நீளும்)

——————————————————————————————————————————————————————

யுனெஸ்கோ பட்டியலில் அகஸ்திய மலை

அண்மையில் பெருவில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் 120 நாடுகளில் உள்ள உயிர்க்கோள காப்பகங்களின் எண்ணிக்கை 669ஆக உயர்த்தப்பட்டது. புதிய பட்டியலில் தமிழக _ கேரள எல்லையில் அமைந்துள்ள அகஸ்திய மலையும் இடம் பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் அகஸ்திய மலை அமைந்துள்ளது. பெரும்பாலும் வெப்பமண்டலக் காட்டுப் பகுதியான இங்கு 2,254 வகையான தாவரங்கள், சுமார் 400 ஓரிட வாழ்விகள் உள்ளன. இங்கு களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகம், செந்துருனி, பெப்பாரா, நெய்யாறு ஆகிய சரணாலயங்கள் உள்ளன.

2,000க்கு அதிகமான பூக்கும் தாவர இனங்கள், நூற்றுக்கணக்கான அரிய தாவர வகைகள், சிங்கவால் குரங்கு, காந்தக் கீரி, நீலகிரி வரையாடு, 273 பறவையினங்கள், 200 வகையான ஊர்வனங்கள் இம்மலையில் உள்ளன. இது உயிர்க்கோள காப்பகமாக 2001ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்களில் நீலகிரி, நந்தா தேவி, நோக்ரெக், மன்னார் வளைகுடா, சுந்தரவனக் காடுகள், கிரேட் நிகோபார் உள்ளிட்ட 9 மட்டுமே யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *