நுழையாமல் தடுப்பதே நுழைவுத் தேர்வு!

மே 16-31

1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒடுக்கப்பட்ட மாணவர் நலத்திற்கு எதிரான ஒரு முறையை நடைமுறைப்படுத்தினார். 1979ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டில் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். பல்வேறு எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் எதிர்கொண்டார். தேர்தலில் தோல்வியும் கண்டார். இறுதியில் தமிழர் தலைவர் அவர்கள் எடுத்துவைத்த பல்வேறு வாதங்கள், விளக்கங்களைக் கூர்மையாகச் செவிமெடுத்த எம்.ஜி.ஆர். தாம் சொல் பேச்சக்கேட்டு, மாபெரும் வரலாற்றுப் பிழை செய்துவிட்டதை உளப்பூர்வமாக உணர்ந்தார். அந்த உணர்ச்சி உந்தலின் விளைவாய் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கியதோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% உயர்த்தினார்.

 

\ஆத்திரமடைந்த பார்ப்பனத் தலைவர்கள் எம்.ஜி.ஆரைச் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தபோது, உங்களுக்கு ஏதாவது விளக்கம் வேண்டுமானல் வீரமணியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நறுக்காகப் பதில் சொல்ல, பார்ப்பனக் கூட்டம் பரிதாபமாய்த் திரும்பியது.

ஆக, எம்.ஜி.ஆர் தப்பான வழிகாட்டுதலில் சமூகநீதிக்கு எதிரான தவறுகளைச் செய்தார் என்பது தெளிவானது. அப்படிப்பட்ட தவறுகளுள் ஒன்றுதான் நுழைவுத்தேர்வு. மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகத் தோன்றுபவை, ஆழமாக, யதார்த்தமாக, சமுதாய வரலாற்றுக் கண்கொண்டு அணுகினால் அவை அநியாயமானவை, ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் அடி ஆழத்தில் அழுத்தக் கூடியவை என்பது விளங்கும். இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள் போலி நியாயங்கள் அப்படிப்பட்டவையே!

சமுதாய அடுக்குகள், அவற்றின் பின்புலங்கள், அவற்றின் நீண்டகால பாதிப்புகள், விளைவுகள், அதிலிருந்து மீட்டு சமூகநீதியை நிலைநாட்டு வதற்கான வழிகளை நுணுகி நோக்குகின்றவர் களுக்கே இவற்றில் தெளிவும், உண்மையும், நீதியும் நேர்மையும் துலங்கும். அவ்வகையில் இவற்றில் தனித்து சிறப்புத் தேர்ச்சி பெற்ற இயக்கம் திராவிடர் கழகமே! தந்தை பெரியாரும், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் இவற்றில் இந்தியாவிற்கே வழிகாட்டிகள், சாதனையாளர்கள்.

69% இடஒதுக்கீட்டை அரசியல் சாசன அங்கீகாரத்திற்கு உட்படுத்திய நுட்பத்திற்கும் சாதுர்யத்திற்கும் உரியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கல்வி, இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு, சமூகநீதி போன்றவற்றில் இந்தியா முழுக்க மத்திய அரசானாலும், மாநில அரசுகளானாலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆலோசனைப் பெற்று செயல்படுவதே சமுதாயத்திற்கும், ஆட்சியாளர் களுக்கும், மாணவர்களுக்கும் நலன் பயக்கும். இதை நன்குணர்ந்துதான் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் பீகாருக்கு அடிக்கடி வாருங்கள்! எங்களுக்கு வழிகாட்டுங்கள்! என்று பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வந்தபோது திராவிடர் கழகம் ஆணை எரிப்புப் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியது. வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்ற எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு விஷயத்தில் தன் தவற்றைத் திருத்திக் கொள்ளவில்லை. அதன்பின் வந்த ஜெயலலிதாவும் மாற்றவில்லை.

ஆனால், தந்தை பெரியாரின் கொள்கைப் பாசறையில் வளர்ந்து, தமிழர் தலைவரின் கருத்தறிந்து, விடுதலையின் வழி நடக்கும் கலைஞர் அவர்கள் 2006ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 2007ஆம் ஆண்டு நுழைவுத்  தேர்வை இரத்து செய்து பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வழிசெய்து, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார். இதனால் கிராமப்புறத்து மாணவர்கள் பெரிதும் பயன்பெற்றதோடு, தேவையற்ற உளைச்சலும், உழைப்பும் நீங்க, பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டது. நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்ய ஒவ்வொரு பெற்றோரும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிடும் கட்டாயம் அகன்றது.

மருத்துவக் கவுன்சிலிங் தலைவராய் இருந்த ஊழல் பெருச்சாளியான கேதன் தேசாய் என்ற ஆரிய பார்ப்பனரின் நரித்தனத்தின் செயலாக்கமே இந்த நுழைவுத் தேர்வு.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றி 1975இல் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதிலிருந்து, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனர்களின் இந்தச் சதி வேலைகள் தொடர்கின்றன. எனவே, மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வர வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இனி அதற்கான முயற்சியும் போராட்டங்களும் இந்தியா முழுக்க நடைபெற வேண்டியதும் கட்டாயமாகிவிட்டது.

குறிப்பாக உயர்கல்வி, மருத்துவம் போன்றவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நுழைந்துவிடாமல் தடுக்க என்னென்ன தடைகளை, தொல்லைகளைத் தரமுடியுமோ அவ்வளவையும் ஆரிய பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

அதன் ஒரு அங்கமாக மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பு முறை ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். இடங்களில் 15% இடங்களை அகில இந்திய அளவில் பொதுத் தொகுப்பிற்குக் கொண்டு சென்றனர். மருத்துவ முதுகலைப் படிப்பில் 50% இடங்களை மத்திய தொகுப்பிற்குக் கொண்டு சென்றனர். இப்படி வஞ்சகமாய் அபகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வியின் மத்திய தொகுப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லை என்பது எல்லாவற்றிலும் கொடுமையான நிலை.

பிளஸ்2 தேர்வின் மதிப்பெண்ணைப் புறக்கணித்து, நுழைவுத் தேர்வு அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும் என்ற முறையில், மாநில கல்வித் திட்டத்தில் பயிலும், குறிப்பாகத் தமிழ்வழிப் பயிலும் மாணவர்கள் அறவே மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல முடியாதச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காரணம், இத்தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. இதனால், மாநிலக் கல்வித் திட்டத்தில் பயிலுவோரால் அதில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே எழுதவேண்டும் என்ற கட்டாயத்தால் தாய்மொழியில் பயின்றவர், ஹிந்தி பேசாத மாநில மாணவர்கள் இப்போட்டித் தேர்வில் வெற்றிபெற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளியில் உயர்தட்டு பிள்ளைகளும், ஆரிய பார்ப்பன பிள்ளைகளும் பெரும்பாலும் படிப்பதால், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டே இந்த நுழைவுத் தேர்வு புகுத்தப்படுகிறது.

ஆரிய பார்ப்பன சூழ்ச்சிதான் இப்படி இருக்கிறது என்றால், இந்தியா முழுதும் நீதியை நிலைநாட்ட வேண்டிய, குறிப்பாக சமூக நீதியை நிலைநாட்ட வேண்டிய உச்சநீதிமன்றம், நுழைவுத் தேர்வு விஷயத்தில் மிக மோசமான, அநியாயமான ஒரு தீர்ப்பை, ஆழ்ந்து அலசாமல் வழங்கியுள்ளது.

நுழைவுத் தேர்வின் பாதிப்புகளை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல், 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தாமளித்த தீர்ப்பையும் புறக்கணித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் 19(1), 30(1) பிரிவுகளை திருத்தாமல் நுழைவுத் தேர்வை கொண்டுவர முடியாது என்று உச்சநீதிமன்றம் 2013இல் கண்டிப்புடன் கூறியதையும் தற்போது கவனத்தில் கொள்ளாமல், அவசர அவசரமாக அள்ளித்தெளித்தார்போல் நுழைவுத் தேர்வை நுழைக்க முயல்வது உச்சநீதிமன்றத்தின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குரியாக்கியுள்ளது.

2013இல் நன்கு ஆய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பை, அவசர கதியில் வழங்கப்பட்டது என்றும், தற்போதுதான் சரியாக வழங்குகிறோம் என்றும், அவசர அவசரமாக இரண்டுநாள் தேர்வு அவகாசம் கூடத் தராமல் தீர்ப்பு வழங்குவது உச்சநீதிமன்றத்தின் ஒருதலைச் சார்பை உணர்த்துவதாய் உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அவசரத் தீர்ப்பால் 8% மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதே உச்சநீதிமன்ற தீர்ப்பின் பாதிப்பை உணர்த்துகிறது.

உச்சநீதிம்னறத் தீர்ப்பை, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், கருநாடகா  எதிர்ப்பதோடு, பொது நுழைவுத் தேர்வையும் நீக்கக் கோரியுள்ளன. தமிழ்நாட்டுக்கு தனி விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் இந்த ஆண்டு மட்டும் அனுமதியளிக்கப்பட்டாலும் அது பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஆகாது.

இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியுள்ளபடி, மத்திய அரசு அவசரச்சட்டம் ஒன்றைக் கொண்டுவருவது ஒன்றே தீர்வாக அமையும்! ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு சமுதாய இயக்கத்தின தலைவர் மட்டுமல்ல; அவர் தேர்ந்த, தெளிந்த சட்ட அறிஞருமாவார் என்பதை மத்திய அரசு கருத்தில் கொண்டு, அவரது கோரிக்கையை உடனே ஏற்றுச் செயல்படுத்தி கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பிற்குரிய வழித்தடையை அகற்ற வேண்டும். அவர்களை நுழையாமல் தடுக்கும் இந்த நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும். 

முன்னர் மோடி சொன்னதை இன்று நிறைவேற்ற வேண்டும்!

இந்த நுழைவுத் தேர்வு என்பது

(1) திணிக்கப்படக் கூடியது (Imposition)
(2) இந்தியக் கூட்டமைப்புத் தத்துவத்துக்கு விரோதம் (Violation of federalion)
(3) மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு (Over centralisation) (4) ஆங்கிலத்திலும், இந்தியிலும் தேர்வு எழுதப்படுவதானது மற்ற மொழிகள், பண்பாடுகள் மீது அதிகாரத்தைச் செலுத்தக் கூடியது என்று குஜராத் முதலமைச்சராக இருந்த நிலையில் குறிப்பிட்டு இருக்கிறார். அன்று அவர் சொன்னதை இன்று நிறைவேற்றுவதுதானே நேர்மை, நீதி, வாய்மைக்கு அழகு!

நுழைவுத் தேர்வு; பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் மனக்குமுறல்

பாடத்திட்டங்கள் பலவகையாக இந்தியாவில் இருக்க, ஒரே பாடத் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எப்படி நடத்தமுடியும்? சி.பி.எஸ்.இ மட்டுமே பாடத்திட்டமா?

முன்பு தமிழ்நாட்டுக்கு என தனி நுழைவுத்தேர்வு இருக்கும் போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களிலிருந்து 50% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இப்போது அகில இந்திய நுழைவுத்தேர்வாக மாற்றிய பின்னர் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  மதிப்பெண்கள் தேவையற்றுப் போய்விடும். அப்படி இருக்கையில் நாங்கள் 12ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு எழுதியதே அவசியமற்றுப் போனதாகவே தெரிகிறது. மாணவர்கள் மனநிலை இன்னும் துயரமே.. மே1  அன்று எழுதிய தேர்வுக்கு முன்பாக படிக்கவும் முடியாமல், பொதுத் தேர்வு முடிவுகளை எண்ணிக் கலங்கவும் முடியாமல், நுழைவுத்தேர்வு உண்டா இல்லையா 12ஆம் வகுப்பு மதிப்பெண் பயன்படுமா படாதா  என்பன போன்ற கேள்விகளால் இன்னும் பல மனக் குழப்பங்களுக்கும், மனநிலை பாதிப்புகளுக்கும், இதர பல துன்பங்களுக்கும் ஆளாகி அமைதியாகப் படிக்கும் சூழ்நிலையையும் இழந்து தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றமும் அதனை ஆதரித்த மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் என்ன பதில் வைத்துள்ளன??? கிராமப்புற மாணவர்களைக் கருத்தில் கொள்ளும் போது அவர்கள் அடிப்படையில் மிகவும் திணறுவர். பெரும்பாலான  தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பாடம் எடுப்பதில்லை.. நுழைவுத்தேர்வுக்கு 11ஆம் வகுப்பு பாடமே அடிப்படை.

நாங்கள் 11ஆம் வகுப்பு பாடம் கட்டாயமாக நடத்த வேண்டும் என உத்தரவு இட்ட பின்னும் பள்ளிகள் நடத்தாமல் விட்டதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என உச்சநீதிமன்றம், மத்திய அரசு, பள்ளிக்கல்வித் துறை முதலியவை கூறினாலும் அதனை அனைத்து தனியார் பள்ளிகளும் முறையாகப்  பின்பற்றுகின்றனவா என்பதனை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். அதனை முறைப்படி கண்காணிக்காமல் தவறவிட்டது அரசின் தவறே ஆகும். இதற்கு மாணவர்கள் வீணாகப் பலியிடப்படுவது கவலையளிக்கிறது. அடித்தட்டு மக்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். லஞ்சம், பணம் கொடுத்து தனியார் கல்லூரிகளில் சீட் வாங்குவது முதலிய எத்தனையோ சீர் கேடுகள் இந்தியாவில் இருக்க, நுழைவுத்தேர்வு நடத்துவதால் மட்டுமே கல்வித் தரம் உயரும் என்பது மடத்தனம். நுழைவுத்தேர்வுக்கான சாத்தியக் கூறுகள் சிலவே இருப்பினும் உத்தரவை திடுதிப்பென வெளியிட்டது பயத்தை அளிக்கிறது. இதனையும் தாண்டி தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

_ நெல்லை தி.மதி,
(12ஆம் வகுப்பு எழுதிய மாணவி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *