அசிரியர் பதில்கள்

மே 01-15

கேள்வி :    தலைமை தேர்தல் அதிகாரி தமிழரல்லாதவராக இருந்தாலும் தேர்தல் காலத்தில் வள்ளுவர்     சிலையை மூடுபவர்கள் தமிழர் அதிகாரிகள்தானே! அவர்களுக்கு வள்ளுவரைப் பற்றி தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாமா?
– இன்பத்தமிழன், பொன்பரப்பி

பதில் :    தேர்தல் கமிஷனின் சில விதிகளை, அவைகள் பொதுஅறிவுக்கு அப்பாற்பட்டுள்ள நிலைமையில், அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தலாம்; அவர்கள் மதிக்கத் தவறினால், உயர்நீதி-மன்றத்தில் பொதுநல வழக்கோ, சம்பந்தப்பட்ட பொது அமைப்புகளோ வழக்காடி, சரியான நிலைப்பாட்டை எடுக்க இயலும்.

எடுத்துக்காட்டாக, பெரியார் சிலையை மூடக்கூடாது என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பை நமது இயக்கம் பெற்றது. அதன் காரணமாக பெரியார் சிலை மூடப்படவில்லை!

கேள்வி :    உச்சநீதிமன்றம் கடுமையாக உத்திரவிட்டும் நடைபாதைக் கோயில்கள் அகற்றப்படவில்லையே. நாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன?
– சத்தியபாமா, சோழன்குறிச்சி

பதில் :    தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளர், ஹிந்து அறநிலையத் துறை ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.

கேள்வி :    அம்பேத்கர் அவர்களைத் தூக்கிப்பிடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக சிந்தனையாளர்களில் சிலர் அய்யா பெரியாரை மட்டும் மறுதலிக்க (அ) புறக்கணிக்கக் காரணம் என்ன?
– ச.துணைவேந்தன், சாந்தோம்

பதில் :    1. அறியாமை. 2. விஷமப்புத்தி 3. ஆரியத்தின் வில்லுக்கு அம்பாக மாறுவது.

கேள்வி : ஜாதி ஒழிப்பிற்கு அரசியல் அதிகாரம் தீர்வா? சமூக விழிப்புணர்வு தீர்வா?
– மு. முருகன், வேலூர்

பதில் :    இரண்டும் இணைந்த அணுகு-முறையே சரியான தீர்வாக அமையும்.

கேள்வி :    எதிர்த்து அழிக்க முடியாவிட்டால், பகைவரை அணைத்து அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். முயற்சி, அம்பேத்கர் மீதும் படரத் தொடங்கிவிட்டதே. முடியுமா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் :    எனவேதான், இனி அம்பேத்கரை பரப்புவது முக்கியமல்ல; அது இயல்பாக நடக்கும். ஆனால், பாதுகாப்பதே மிகவும் முக்கியம் ஆகும்!

கேள்வி :    அன்று, தி.மு.கவின் போர்வாளாக இருந்த, இன்றைய ம.தி.மு.க. தலைவர் வைகோ அவர்கள், தனது சொல் அம்பால், கலைஞரின் இதயத்தை ரணமாக்கிவிட்டு, உடனே மன்னிப்பும் கேட்கிறேன் என்றால்… இதை எப்படி எடுத்துக்கொள்வது?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் :    வள்ளுவரின் குறளே தக்க பதில் இதற்கு “தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’’ – (குறள் 129)

கேள்வி : ஜாதி மறுப்பு மணம், ஜாதி ஒழிப்புக்குத் தீர்வாய் அமைந்து, அதைப் பல இளைஞர்கள் பின்பற்றுவதற்கு அச்சுறுத்தலாய் உள்ள ஜாதி வெறிக் கொலைகளைத் தடுக்க தீர்வு என்ன?
– சீத்தாபதி, சென்னை-45

பதில் :    1. கூலிப்படைகளை அடையாளம் கண்டு களைதல். 2. ஜஸ்டிஸ் ராமசுப்ரமணியம் அவர்களின் சென்னை உயர்நீதிமன்ற ஆணை-யான 9 வழிமுறைகளை உடனே செயல்படுத்துதல்.

கேள்வி :    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டி தி.க. நடத்திய மறியல் போராட்டத்தை ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக மறைத்த உள்நோக்கம் என்ன?
– க.கலிவரதன், திருச்சி

பதில் :    பார்ப்பனர் ஊடகங்கள் மட்டுமல்ல, ‘சூத்திரர்கள்’ நடத்தும் ஊடகங்கள்’ தொலைக்காட்சிகளும் துணை போனதுதான் வேதனை _ வெட்கம் _ திராவிடர் கழகம் வளர்ந்து-விட்டதைக் கண்டு வயிற்றெறிச்சல்.

கேள்வி :    இன்றைய இளைஞர்கள் ஊடகங்-களால் எளிதில் மூளைச்சலவை செய்யப்படும் மோசடிக்கு தீர்வு என்ன? இளைஞர்களுக்குத் தங்கள் அறிவுரை என்ன?
– அ.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம்

பதில் :    இணையம், டிவிட்டர், பேஸ்புக் போன்ற பலவற்றில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் அவர்களது ‘மூளைச்சாயம்’’ (மூளைச் சலவை என்பதைவிட) கரையும் வண்ணம் பல்வேறு உண்மைகளைப் பரப்ப  போதிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *