வெள்ளிப் பனிமலை :
அலாஸ்கா கப்பல் பயணத்தின் மறக்க முடியாத காட்சி, கப்பலில் இருந்து வெள்ளிப் பனிமலையைப் பார்ப்பதுதான்! கப்பல் அங்கு செல்வதற்கு முன்னர் அமெரிக்க அரசின் பூங்கா காப்பாளர்கள் படகில் வந்து கப்பலில் ஏறிக்கொள்வார்கள். அவர்கள் அந்தப் பனிமலை பற்றிய முழு விவரங்களையும் தெரிவிப்பார்கள். வெறும் பனிமலையைப் பார்ப்பதைவிட அதைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அந்தப் பனிமலை உருவாகி வளர்ந்து வருகின்றது. அதன் அருகே கப்பல் சென்று அந்தப் பனிப்பாறை உடைந்து விழுவதைப் பார்த்தோம். பெரிய மாடமாளிகை ஆயிரம் அடி கீழே விழுந்தால் எப்படி இருக்கும்? கிலேசியர் பே என்ற அந்தப் பனிமலை விரிகுடா இருக்குமிடமே மிகவும் அழகான இடம். ஆண்டுக்கு எவ்வளவு பனி உடைந்து விழுகின்றது, எவ்வளவு உயரம் வளர்கின்றது போன்ற விவரங்களை அறிந்து கொண்டோம். இந்த மண்ணுலகமே ஒரு காலத்தில் பனியால் மூடப்பட்டுப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி கல் தோன்றி, மண் தோன்றி பின்னர் நாமும் வந்துள்ளோம்! இயற்கையைப் பாதுகாத்து இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டியது மனித சமுதாயத்தின் கடமை!
கப்பல் பயணத்தின் முடிவிற்கு வந்து விட்டோம்! மனிதனின் மகிழ்ச்சிக்குக் கற்பனை மிகவும் முக்கியம். அதை முழுதும் பயன்படுத்தி மகிழ்விப்பவர்கள் இந்த மகிழ்வுக் கப்பலின் மகிழ்ச்சியூட்டும் குழுவினர்! பலவிதமானப் போட்டிகள் நடைபெறும். பரிசுகள் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். ஒரு இடத்தில் நிறைய கும்பல் இருந்தது. அங்கே சென்றோம். அங்கே புதுவிதமான கால்ப்ஃ விளையாட்டுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கால்ப்ஃ விளையாட்டு ஒரு சிறு பந்தை மட்டைகளால் அடித்து 3 அங்குல வட்டமான குழிக்குள்ளே போட வேண்டும். மிகவும் நல்ல விளையாட்டு. பல நாடுகளில் உள்ளது போல செல்வந்தர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக இல்லாமல் அமெரிக்காவில் பலரும், பள்ளி மாணவர்கள் கூட விளையாடும் விளையாட்டாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் இருவரும் சனிக் கிழமைகளில் காலையில் விளையாடியுள்ளோம். அந்த அழகிய புல் தரையில் கையில் மட்டைகள் உள்ள வண்டியை இழுத்துக் கொண்டு 300 முதல் 1500 அடிகள் வரை தொலைவில் உள்ள குழிக்குள் மூன்று முதல் ஆறு முயற்சிகளில் பந்தைப் போட்டு விட வேண்டும். மொத்தம் 18 குழிகள். அந்தக் குழிகள் உள்ள இடம் அழகிய பட்டு மெத்தை போல நன்றாக வைக்கப் பட்டுள்ள புல் தரை. அதன் மீது நடப்பதே அவ்வளவு நன்றாக இருக்கும். மிகக் குறைவான முயற்சியில் போடுகின்றவரே வெற்றி பெற்றவர் ஆவார். ஆம், நடுக்கடலில், கப்பலில் எப்படி இதை விளையாடுவது? அங்குதான் கற்பனை வளம் பெருகியுள்ளது. வளைந்த படிக்கட்டுகளுக்கு மேலேயுள்ள மாடியிலிருந்து கீழே உள்ள வளையத்திற்குள் பந்தைப் போட வேண்டும்! சிலர் அய்ந்து ஆறு என்று போட்டுக் கொண்டிருந்தனர். ஒரு முதுவயதுப் பெண்மணி மேலேயிருந்து மெல்ல அடித்தார், அந்தப் பந்து வளைந்து வரும் படிகளில் விழுந்து உருண்டு நேரே வளையத்திற்குள் விழுந்துவிட்டது! அங்கிருந்தவர்கள் எழுப்பிய மகிழ்ச்சி ஒலி காதைப் பிளந்தது!
இன்னும் பல விதமானப் போட்டிகள் நாள் முழுதும்! சீட்டாட்டப் போட்டிகள், பலூனில் மிருகங்கள் செய்வது, பாட்டுப் போட்டி, பாட்டுகள் என்னவென்று ஓரிரு மெட்டிலேயே சொல்லும் போட்டி என்று சில நாம் அறிந்தவை, பல அவர்கள் உண்டாக்கியவை! அங்கு பணி புரிவோரின் திறமைகளைக் காட்டிய காட்சி நன்றாக இருந்தது. நமக்கு உணவு படைத்தோரும், மற்றவர்களும் மேடையில் ஏறிப் பாடியதும், ஆடியதும் மிக்க மகிழ்ச்சி அளித்தது. பாராட்டுக்கள் குவிந்தன. பெரிய பெட்டிகளை அறைக்கு வெளியே இரவே வைத்து விட வேண்டும். காலையில் சீவேர்ட் என்ற ஊரில் கப்பலை விட்டு இறங்கினோம். ஆபிரகாம் லின்ங்கனுடனும், அடுத்து வந்த ஆன்ட்ரூ சேக்சனுடனும் வெளிநாட்டுச் செயலராக இருந்தவர் சீவேர்ட். இவர்தான் ருசியாவிடமிருந்து அலாஸ்காவை வாங்கியவர். அது சிறிய ஊர். அங்கு பார்ப்பதற்கு எங்களுக்கு நேரம் இல்லை. நாங்கள் அங்கிருந்து 6 மணி பயணம் செய்து ஆங்கரேஜ் நகருக்குச் செல்ல ஏற்பாடு! அந்தப் பயணத்தின் நடுவே நிறுத்தி ஒரு மிருகக் காப்பகம் பார்க்கத் திட்டமிட்டிருந்தோம்.
ஒரு பெரிய இடத்திலே அடிபட்டவை-களையோ, அநாதையாக விடப்பட்டக் குட்டிகளையையோ வளர்க்கும் இடம். அங்கே குட்டிகளாக விடப்பட்ட கரடிகள் வளர்ந்து பெரியதாக இப்போது இருந்தன. மற்றும் அலாஸ்காவின் பல்வேறு மிருகங்களை முடிந்த அளவு அவற்றின் இயற்கையோடு இணைந்த மாதிரியான இடங்களில், ஆனால் தடுப்பு வைக்கப் பட்டுள்ளப் பூங்காவில் வைத்துப் பராமரிக்கின்றனர். மூசு எனும் பெரிய மான் போன்றவை, மான்கள், நரிகள் என்று பல மிருகங்களைப் பார்த்தோம்.
அழகான இயற்கைக் காட்சிகளை வழி முழுதும் கண்டு இன்புற்று வந்த நாங்கள் ஆங்கரேஜ் நகரை வந்தடைந்தோம். இயற்கையிலிருந்து முழுதும் வேறுபட்ட செயற்கை. மற்ற அமெரிக்க நகரங்களைப் போலவே அனைத்து வசதிகளுடனும் உள்ள பெருநகரம். அதைப் பார்த்து மகிழ்ச்சி-யடைந்தோமா? இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். என்ன செய்வது. குமார், விணையா எல்லோரும் வேலைக்குச் செல்ல வேண்டுமே! அங்கே ஒரு தாய்லாந்து உணவகத்தில் உணவருந்தினோம். பின்னர் அவர்களை வானூர்தி நிலையத்தில் இறக்கி விட்டு அங்கு ஒரு விடுதிக்குச் சென்றோம். நாங்கள் அங்கிருந்து உலகின் மிகப் பெரிய இயற்கைப் பூங்காவிற்குச் செல்லத் திட்டம்.
அங்கே பார்ப்போம்!
Leave a Reply