செய்யக் கூடாதவை

மே 01-15

அளவிற்கு அதிகமாய் பொருள் சேர்க்கக் கூடாது

பணமாயினும், நிலமாயினும், பொருட்களாயினும், தேவைக்கு அதிகமாகச் சேர்ப்பது இன்னலையும், இடையூறையும் தரும். சேர்ப்பதற்கு அடையும் முயற்சியும், தொல்லையும்போல. காப்பதிலும் ஏற்படும். பெருமை கருதியும், தன் தகுதியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் இவற்றை அளவிற்கு அதிகமாய் சேர்ப்பது அறியாமை. அளவிற்கு மிஞ்சினால் அது பாதிப்பையே தரும். தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆடம்பரத்திற்காக வாங்கி அடுக்குவது பொருளாதாரக் குற்றம். அது நமக்கும் நல்லதல்ல சமுதாய வளர்ச்சிக்கும் உகந்ததல்ல.

செயற்கைப் பொருளை உணவில் சேர்க்கக் கூடாது

உணவுப் பண்டங்களில் சமையல்சோடா, நிறத்தூள்கள், எஸென்ஸ் என்று சுவைக்காகவும், நிறத்திற்காகவும், கெடாமல் இருக்கவும் பல்வேறு இரசாயனப் பொருட்களைப் பயன்-படுத்துகின்றனர். இது உடல்நலக்கேடு. உணவு என்பது நலத்திற்காக உண்ணக் கூடியது. இதில் நிறம், அழகு என்று கண்டதைச் சேர்த்து உண்டால் குண்டாகி, நோயாளியாக வேண்டி வரும். நலக்கேடு தரும் எதையும் உணவில் சேர்ப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் வீழ்வது போன்றது. எனவே, உணவை இயன்றவரை இயற்கைச் சுவையோடு இரசாயன கலப்பின்றி உண்ண வேண்டும்.

தயிரை ஈயப் பாத்திரத்தில் வைக்கக் கூடாது

தயிரை ஈயப்பாத்திரத்தில் வைத்தால், அதன் சுவை கெட்டு, உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தயிரைக் கண்ணாடிப் பாத்திரம், பீங்கான் பாத்திரம் அல்லது மண் பாத்திரத்தில் வைப்பதே நல்லது. எந்த அளவிற்கு சமைக்கவும், சேர்த்து வைக்கவும் மண்பாண்டங்களைப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு மண்பாண்டங்களைப் பயன்படுத்துதல் நல்லது.

உணவுப் பண்டங்களில் பல இரசாயன மாற்றத்திற்கு உட்படக்கூடியவை. காரணம், உப்பு, புளி, எலுமிச்சைச்சாறு போன்றவை எளிதில் இராசயன மாற்றங்கள் அடையும். அலுமினியம் போன்ற பாத்திரங்களில் வைக்கும்போது இவை இரசாயன மாற்றம் அடைந்து நச்சுப் பொருட்களை வெளியிட்டு உடல்நலத்தைக் கெடுக்கும்.

நேர்மையென்று சொல்லி நேருக்கு நேர் மோதக் கூடாது

நான் வெளிப்படையானவன், நேருக்கு நேர் கேட்கக் கூடியவன் என்று சொல்லிக்கொண்டு, இங்கிதம் இன்றி செயல்படுவது கூடாது.

சுட்டிக்காட்ட வேண்டியவற்றை நாசூக்காக, உணரும்படி, நோகாமல், வெறுப்படையச் செய்யாமல் சொல்ல வேண்டும். இல்லை-யென்பதை, முடியாது என்பதைக்கூட பிறர் மகிழ்ந்து ஏற்கும் அளவிற்குச் சொல்ல வேண்டும்.

ஏழைக்கு உதவ உதவி கேட்ட அன்னைத்-தெரசாமீது காரி உழிழ்ந்த செல்வந்தனைப் பார்த்து, அய்யா எனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டீர்கள்; ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றார்.

காரி துப்பிய கனவான் நாணி, அன்னையிடம் மன்னிப்புக் கேட்டு ஏராளமாய் கொடுத்தான். நீயெல்லாம் மனிதனா? என்று தெரசா கேட்டிருந்தால் என்ன பயன்? இதுதான் பண்பாடு.

அடிக்கடி கடன் கேட்கக் கூடாது

உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ, அடிக்கடி கொடுத்துதவும் இயல்புடையவர்களிடமோ அடிக்கடி கடன் கேட்பதும் உதவி கேட்பதும் சரியன்று. எதற்கும் ஓர் அளவு, எல்லை வேண்டும். உதவி என்பதோ, கடன் என்பதோ தவிர்க்க முடியாத சூழலுக்குப் பயன்படுத்த வேண்டும். மாறாக தேவைப்படும் போதெல்லாம் சென்று நின்றால் உண்மையிலே தேவை ஏற்படும்போது கிடைக்காமல் போகும். நம்மீதுள்ள மதிப்பும், பிடிப்பும் குறையும்.

உண்மையிலே தவிர்க்க இயலாத சூழலில் கடனோ, உதவியோ பெறுவதில் தப்பு இல்லை. அதற்குத் தயங்குவது கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *