ஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

மே 01-15

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன்  எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.

வேதங்களின் நேர்மையான சிறந்த பகுதிகளை நாம் உற்று நோக்கும்போது, வேதகாலத்தில் ஜாதி இருக்கவில்லை என்ற முடிவிற்கு (ஊகம்) நாம் வருவது உறுதிப்படுகின்றது.

1. ‘பார்ப்பனர்கள்’ ஒருவகைத் தொழிற் பிரிவினராகவே குறிக்கப்படுகின்றனர். தனி ஜாதியாக அல்ல. மக்களிடமிருந்து அவர்கள் பிறப்பு (தோற்றம்) வேறுபட்டது என்பதனைக் குறிக்கும் ஒரு சொல் கூட வேதங்களின் நேர்மையான பகுதிகளில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அவர்களின் மூலத்தோற்றம் (பிறப்பு) காரணமாக அவர்கள் எவ்விதச் சிறப்புச் சலுகைகளை, அல்லது உயர்தகுதிகளை அவர்கள் கேட்கவில்லை. உயிர்ப்பலி கொடுக்கும் நிகழ்வுகளிலும் பிற மதச் சடங்குகளிலும் ஏனைய அர்ச்சகர்களோடு (பூசாரிகளோடு) சேர்ந்து (புரோகிதம்) பூசாரித் தொழில் செய்பவராகவே பார்ப்பனர்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் வேதங்களில் இவ்வாறுதான் குறிப்பிடப்படுகிறார்கள்: “வேதங்களை இசையோடு ஓதுவோர், சதக்ருது! (இந்திரன்) உன்னைப் புகழ்ந்து ஓதுகிறார்கள். ரிக்குகளை இசைப்போர், உன்னைப் போற்றிப் பாடுகிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்! ஒரு மூங்கில் கழியைப் போலப் ‘பிராமணர்கள்’ உன்னை மிகமிக உயர்த்திப் புகழ்கிறார்கள்.’’ “நீ அக்னி, ஃகோத்ரியின் அலுவலகமாக, ‘போத்ரி’யின் இருப்பிடமாக, ரிட்விஜ் இடமாக, நெஷ்டிரியின் நிலையமாக நீ விளங்குகிறாய்! உன் பக்தர்களின் அக்னீதரனாக நீ விளங்குகிறாய்! பிரசாஸ்திரியின் இயக்கமாக நீ இருக்கிறாய்! நாங்கள் வாழும் இல்லத்தின் உரிமையாளனாகவும் நீ திகழ்கிறாய்!’’ _ இதில் எண்வகைப் பூசாரிகள் குறிக்கப்படுகின்றனர்.

இவர்களில் ‘பிராமணன்’ கடைசியாக இடம் பெறுகிறான். மிகப் பெரிய சடங்கு நிகழ்வுகளில் பதினாறு வகைப் ‘பூசாரிகள்’ இடம் பெறுகின்றனர் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். வேதங்களின் மிகத் தொன்மை வாய்ந்த பகுதிகளுக்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே ‘பிரம்மா’ அல்லது பிராமணன்’ என்ற சொல், ‘கடவுளின் முகத்தில் தோன்றிய அர்ச்சகன்’ (பூசாரி) என்ற தனிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பிராமணன், தனது வேதியத் தொழிலிலிருந்து ஜாதிய உயர்நிலைக்கு எவ்வாறு மாறினான் _ எவ்வாறு வளர்ச்சி பெற்றான் என்பதைக் கண்டறிவது ஒன்றும் கடினமான பணி அல்ல; உயிர்ப்பலி கொடுத்து நடத்தப்பட்ட வேதகாலச் சடங்குகளில் அவனது சிறப்புக்குரிய தகுதி ‘சடங்கு நடத்துநர்’ என்பதுதான்.

‘புரோகிதன்’ அல்லது ‘வேலை செய்பவன்’ என்பதுதான் அதன் நேர் பொருளாகும். முதலில் இந்த ‘மதிப்பினை’ (மற்றவர்களிடம்) மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டான்; பின்னர் விசுவாமித்திரனைப் போன்ற பலர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். ‘அக்னி’ நெருப்புக் கடவுள்; வானகத்துக் கடவுளர்க்கெல்லாம் அக்னியே புரோகிதன்; பிரம்மா அல்லது பிராமணனை அக்னியின் சார்பாளனாக (புரோகிதராக) இந்தப் பூவுலகில் அரசர்கள் வைத்துக்கொள்வது மிகவும் பெருமைக்-குரியதாகக் கருதப்பட்டது. இந்தப் ‘புரோகித’ முறை, பிரம்மா, (பிராமணன்) என்ற அமைப்புமுறை, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிற அமைப்பு முறையாக மாறிவிட்டது. பிராமணர்கள், பெரும் செல்வச் செழிப்புமிக்கவர்களின் இல்லங்களிலேயே தங்கி வாழ்ந்தனர். குறிப்பாக அரண்மனைகளில் அவர்கள் இடம் பிடித்துக்கொண்டு, அரசர்களைப் ‘புனிதப்படுத்தும்’ செயல்களிலும் அவர்கள் _ குதிரைகளை உயிர்ப்பலி கொடுத்து நடத்திய வேள்விகளை _ யாகங்களைப் புனிதப்படுத்தும் வேலைகளிலும் பிராமணர்கள் ஈடுபட்டு மிகுந்த செல்வாக்குப் பெற்றனர்.

அரசர்களின் வெற்றிக்காகவும் அவர்தம் கால்வழி மரபு நன்கு செழித்தோங்கவும் ‘பிராமணர்கள்’ யாகங்கள் நடத்திப் பெருஞ்செல்வத்தைச் சுரண்டிக் கொண்டார்கள்; பிராமணரின் படிப்பும், கல்வியும் அவர்களுக்குப் படிப்படியாக மிகுந்த செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்தன. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. அரசருக்கு அறிவுரை கூறுபவர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள். கடவுளரோடு இவர்கள் பெற்றிருந்ததாகக் கூறப்பட்ட சிறப்பான தொடர்பு இவர்களுக்குத் தனியானதொரு புனிதத் தன்மையைக் கொடுத்தது; பிராமணன் ஆட்சி செலுத்தும் நிலைக்கு உயர்ந்தான். இந்தத் தகுதியோடு பிராமணன், இந்த நிலவுலகில் ஒரு கடவுளாகத் தன்னை மாற்றிக் கொண்டான். பூதேவர்களாகப் பிராமணர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டார்கள். இத்தகைய உயர்வு, அதாவது கடவுள் நிலைக்கு ஒரு மனிதன் உயர்த்திக் கொண்ட உயர்வு, அல்லது கடவுளுக்கும் மக்களுக்கும் இடைத்தரகு வேலை பார்க்கும் உயர்ந்தோனாக ஏற்படுத்திக் கொண்ட உயர்வு, வேறு சில நாடுகளிலும் நடைபெற்றிருக்கிறது.

(2) வேதங்களின் ஆசிரியர்களாகக் கூறப்படுவோர் ‘ரிஷிகள்’ என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டனர். இவர்களே ஆரியச் சமூகத்தில் _ மதவழிப்பட்ட நோக்கில் _ மிக உயர்ந்தோராகக் கருதப்பட்டனர்; இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிராமணர்கள் வகித்த உயர்பதவி, செய்த தொழில் ஆகியவற்றைப் பெரிதெனக் கருதிய மக்கள் இவர்களைத் தங்களின் ஆதாரமாகவும், உயர்வுக்கு உதவுபவராகவும் கருதிப் போற்றினர். பிராமணர்கள் பார்த்துவந்த இத்தொழில்கள் பரம்பரையாக வந்தபோதிலும், இந்திய மக்களிடையே அவர்கள் ஒரு வகுப்பாராக மட்டும் இருக்கவில்லை. மக்கள் சமுதாயத்தில் இவர்கள் அரச வகுப்பினராகவும் புரோகித வகுப்பினராகவும் இருந்து வந்தனர்.

வேதங்களில் பல்வேறு இசைப் பாடல்களை இயற்றியவர் என்று கூறப்படுகின்ற விசுவாமித்திரர், விஷ்ணு புராணத்தில் குறிப்பிடுவதைப் போல மிக இன்றியமையாத பழங்கதை மரபு சார்ந்த ஏழு ரிஷிகளில் ஒருவர்; இந்து மதவாதிகளால் ராஜரிஷி என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விசுவாமித்திரர், அரசர்களில் அவர் ஒரு ரிஷியாக விளங்கியவர்; பிரம்மரிஷி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர்; அல்லது பிராமணன், அதாவது ரிஷிகளின் தரவரிசையில் முதன்மையாக இடம்பெறுபவர், அவருடைய திறமை-களுக்காகவும் கூர்த்த மதி நோக்கிற்-காகவும் அவர் இவ்வாறு போற்றப்பட்டார். (இந்து மதத்தில் விசுவாமித்திரர் குறிப்பிடத்தக்க-வராகக் கருதப்படுகிறார். வரலாற்றியல் _ பவுராணிக ஆசிரியர்களால் விசுவாமித்திரர் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்-படுகிறார். அதாவது அரசர், போர்வீரர் வகுப்பைச் சேர்ந்தவர்; சிறிது காலம் அவர் முடிமன்னராகவும் இருந்தவர். சூரிய குலத்தைச் சேர்ந்த குஷா வகுப்பினர்; பல அரசர்களின் முனிவர்களின் முன்னோராக விசுவாமித்திரர் விளங்குகிறார். அவருடைய தவ வலிமையின் ஆற்றலால், விசுவாமித்திரர் பிரம்மாவை வற்புறுத்தித் தன்னைப் பிராமண வகுப்பு வரிசையில் சேர்க்கும்படி செய்தார். வசிஷ்டருக்கு நிகராகத் தன்னை வைக்கும்படி செய்தவர்; வசிஷ்டரோடு பலமுறை வாதப் போர் புரிந்தவர் விசுவாமித்திரர்.)

வேதங்களில் குறிப்பிடப்படுகின்ற ஜமதக்னியும் ஒரு ரிஷியாவார். இவர் பிற்காலத்து இந்துப் புராணக் கதை மரபில் அவதாரா பரசுராமனின் தந்தை என்று கூறப்படுகிறார். மேலும் விசுவாமித்திரரின் மருமகனாகவும் இவர் விளங்குகிறார். விசுவாமித்திர _ ஜமதக்னி ஆகிய இருவரிடமிருந்தும் ரத்தக் கலப்புடைய பல்வேறு பிராமணப் பழங்குடியினர் தோன்றினர் என்று பழங்கதை மரபு கூறுகின்றது. வேதங்களின் பல்வேறு இசைப்பாடல்கள் அரச மரபினரால் அல்லது இவர்களிலிருந்து உயர்ந்தோராக்கப்பட்ட புரோகித வகுப்பினரால் இயற்றப்-பட்டவையாகும்.

(3) ரிஷிகளும், புரோகிதர்களும் சமுதாயத்தின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். இப்போது உள்ள ‘பிராமணர்களுக்கு’ இந்த உண்மை நன்கு தெரியும். ஆனால், பிற்காலத்திய அவர்களது சாஸ்திரங்களுக்கு நன்மதிப்புக் கொடுக்கும் வகையில் அவர்கள் ‘இத்தகைய திருமணங்கள் அவர்களது தனிச் சிறப்புரிமை’ என்று கூறி வருகின்றனர். அதாவது அவர்கள் பிராமண வகுப்பில் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், அதற்குமேலும் உயர்வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பெண்ணை அவர்கள் திருமணம் செய்துகொள்வது அவர்களது தனிச்சிறப்புரிமை என்று நிலைநாட்டினர். ஆனால், கீழ்க்காணும் கதையைப் பற்றி அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? ரிக் வேதத்தின் பல சூத்திரங்களின் ஆசிரியராகிய ‘நிதி மஞ்சாரி’யின் தாயான ‘உஷிக்’ என்பவள், ‘அங்கா’ என்னும் அரசனின் அடிமை பெற்ற புகழ்வாய்ந்த மகள் ஆவாள்! “காக்ஷிவாட்(நிதி மஞ்சாரி), தன் படிப்பை முடித்துக் கொண்டு, தன் ஆசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு வீட்டை நோக்கிப் பயணமானான்; இரவு நேரம் ஆகிவிட்டதனால், சாலை ஒரமாகப் படுத்து உறங்கினான். காலையில், ‘சானயா’ எனும் அரசன் (இவன் பாவயாவ்யா என்பவனின் மகன்) தன் பரிவாரங்களுடன் அந்த இடத்திற்கு வந்தவன், அந்தப் பிராமணனின் அயர்ந்த உறக்கத்தைக் கலைத்து அவனை எழுப்பினான். அந்த அரசன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைக் கைதட்டி அருகில் வருமாறு அழைத்தான். அந்தப் பிராமணனின் தனித் தோற்றத்தைக் கண்டு அரசன் வியப்பில் ஆழ்ந்தவனாய், அவன் தகுதிமிக்க நற்குடியில் பிறந்தவனாக இருந்தால் அவனுக்குத் தன்னுடைய பத்துப் பெண் பிள்ளைகளையும் திருமணம்  செய்து கொடுத்து விடுவதென்று முடிவுசெய்தான். அவனது தகுதியை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், ‘காக்ஷிவாட்’ எனும் அந்தப் பிராமணனைத் தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். பின்னர் தன் பத்து மகள்களையும் அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதேநேரத்தில் அந்தப் பிராமணனுக்கு ஏராளமான பொன்னையும், நூறு குதிரைகளையும், நூறு காளைகளையும் ஆயிரத்து அறுபது பசுமாடுகளையும், பதினொரு தேர்களையும் (ஒவ்வொருவருக்கும் ஒரு தேர்) ஒவ்வொரு தேரையும் இழுப்பதற்கு நான்கு குதிரைகள் எனக் கணக்கிட்டு 44 குதிரைகளையும் அவனுக்குப் பரிசளித்தான்.’’ காக்ஷிவாட், வேதத்தில், தன் மாமனாரின் பெருந்தன்மை மிக்க கொடைக் குணத்தை இவ்வாறு மகிழ்வுடன் கொண்டாடுகிறான்:-_’’ பெருந்-தன்மை வாய்ந்த எந்த அரசர் என்னை அழைத்தாரோ அந்த அரசரிடமிருந்து காக்ஷிவாட் ஆகிய நான், தயக்கமின்றி அவர் அளித்த அளவற்ற பொற்காசுகளையும் நுற்றுக்கணக்கான போர்க் குதிரைகளையும், காளைகளையும் ஏற்றுக் கொண்டேன். இதன் வாயிலாக அந்த அரசன் தனது அழியாப் புகழை வானுலகமெல்லாம் பரவுமாறு செய்து-விட்டான்!’’
இவ்வாறு அந்தப் பார்ப்பானுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் மிகைப்படுத்திக் கூறப்பட்டவையல்ல; இன்னும் நிறையக் கொடுத்திருக்கிறார்கள் நாடாண்ட மன்னர்கள்!

இதற்குப் பின்வந்த மன்னர்களும் இதே வேலையைச் செய்திருக்கிறார்கள்! பரதன் என்ற அரசன், அவனுடைய பட்டமளிப்பு விழாவின்போது, ஏழாயிரத்து நூறு கோடிக் கருப்பு யானைகளைப் பிராமணர்களுக்கு வழங்கியுள்ளான். இந்த யானைகளின் வெண்ணிறத் தந்தங்களுக்குப் பொற்கவசம் அணிவித்துக் கொடுத்திருக்கிறான். ஆயிரக்-கணக்கான பார்ப்பனர்களுக்கு லட்சக்-கணக்கிலான பசு மாடுகளைப் பரிசளித்தான் பரதன்! சொர்க்கத்தில் இருக்கும் கடவுளரை-விடப் பார்ப்பனர் நன்முறையில் வாழ்ந்தனர். அசுவமேத யாகத்திற்காக யமுனை ஆற்றின் கரையில் அவர்கள் 78 குதிரைகளை உயிரோடு பார்ப்பனர் எரித்துக் கொன்றனர்;

கங்கைக்-கரையில் 55 குதிரைகளை எரித்தார்கள். இராமாயணத்தின்படி, தசரதன் தான் நடத்திய ‘அசுவமேத’ யாகத்தின்போது, பார்ப்பனர்க்கு இந்தப் பூவுலகம் முழுவதையும் அன்பளிப்பாகக் கொடுத்தான். இந்தப் பூவுலகத்தைத் தங்களால் பாதுகாக்க முடியாது என்று அதனை மறுத்த பார்ப்பனர்கள், அதற்கு ஈடாக நூறாயிரம் பசுக்களையும் நூறு கோடிப் பொற்காசுகளையும் 40 கோடி வெள்ளிக் காசுகளையும் பெற்றுக் கொண்டனர்.

இப்போது மீண்டும் காக்ஷித் சொல்வதை நாம் கேட்போம்: “போர்க் குதிரைகள் பூட்டிய பத்துத் தேர்களிலும் என், பத்து மனைவியரும் அமர்ந்திருக்க அவை என் அருகில் வந்து நின்றன; எங்களைப் பின் தொடர்ந்து ஆயிரத்து அறுபது பசு மாடுகளும் வந்தன. நாற்பது குதிரைகள் தேர்களை இழுத்து வர ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வர ஊர்வலம் புறப்பட்டது. ‘பஜ்ராஸ்’ என்னும், காக்சிவாட்டின் உறவினர் குதிரைகளைத் தடவிக் கொடுத்துப் பொன்னாடைகளை அவற்றிற்கு அணிவித்தான்.’’

காக்ஷிவாட் தன் சொந்த (பார்ப்பன) வகுப்பில் எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளவில்லை என்று தெரிகின்றது. அந்த அரசனிட-மிருந்து பெற்றுக்கொண்ட பெண்களே அவனுடைய தேவைக்கு அதிகமாக இருந்தார்கள்!

ரிஷிகளும் புரோகிதர்களும் அரச குடும்பத்துப் பெண்களை மணந்து கொண்ட நிகழ்வுகள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. (சியாவணா சுகன்யாவையும் ஜமதக்கினி ரேணுகாவையும் மணந்து கொண்டனர்.)
(4)சட்டப் புத்தகங்களிலும் சாஸ்திரங்களிலும் குறிப்பிடப்படுகின்ற ‘சத்திரியா’ என்ற சொல் இந்து சமுதாயத்தில் இரண்டாம் படிநிலையில் உள்ள போர்வீரர்களை (வகுப்பை)க் குறிப்பதாகும். இது வேதங்களில் வலிமை வாய்ந்தவர்களைக் குறிப்பதற்கு வழங்கப்படுகின்ற பட்டப் பெயர் என்ற பொருளில் வருகின்றன. அதாவது யார் வலிமை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் சத்திரியர்கள் ஆவர். இந்தப் பொருளிலேயே இந்தச் சொல் வருணன், இந்திரன் முதலான கடவுளரைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதங்களில் ‘செத்ரோபதி’ என்ற சொல் (வயல்களின் உரிமையாளன்) நில உரிமையாளருக்குரிய பெயராகக் குறிக்கப்படுகின்றது;

‘சத்ரபதி’ என்ற பெயர் ‘அதிகாரத்தைப் பெற்றுள்ளவன்’ என்று பொருள்படும்; இவன் தன் ‘அதிகாரத்தை எதன் மீதும் எவர் மீதும் எந்த அளவும் செலுத்தக் கூடியவன். ‘சத்திரியா’ என்ற சொல் ‘சத்ரபதி’ என்ற சொல்லுக்கு இணையானதாகும். ‘சத்ர’ என்ற சொல் பேரா. லேசன் குறிப்பிடுவதைப் போல ‘செந்த்’ மொழியிலுள்ள ‘ஷத்ரா’ (இது கட்டற்ற வல்லாட்சி என்றும் பொருள் தரும்) கிரேக்க மொழியிலுள்ள ‘சதாரக்’ என்ற சொல்லுடன் பொருந்துவதாகும். இவற்றின் வேர்ச்சொற்பொருளை நோக்கினால் இவை அனைத்தும் ‘உடல் வலிமையை’க் குறித்து நிற்கின்றன என்பது விளங்கும். ‘சத்திரியா’ என்ற சொல் ‘விஷாஸ்பதி’ அல்லது விஷாம்பதி என்றும் பொருள்படும். ஓர் ஊரின் அல்லது மக்களின் தலைவன் என்று இச்சொற்கள் பொருள்படும்; ‘ராஜ்’ என்பது லத்தீன் மொழிச் சொல்லாகிய ‘ரெக்ஸ்’ (அரசன்) என்பதற்கு இணையானது; ‘ராஜன்யா’ என்பது (இளவரசன்) ‘ராஜ்’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. ஆரிய அரசர்களும் ஆரிய இனத்தின் தலைவர்களும் ரிஷிகளால் வேதங்களில் அடிக்கடி புகழ்ந்துரைக்கப் படுகிறார்கள். ஆனால், இவர்கள் தெய்வீக ஆற்றலால் கடவுளின் நெற்றியில் தோன்றியவர்கள் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை; இதைப் பற்றி ஒரு சொல்லைக் கூடக் காண முடியவில்லை. பேராசிரியர் வில்சனும் மற்றவர்களும் குறிப்பிடுவதைப் போல, ‘அக்காலத்து அரசர்கள் சடங்கு முறைகளுக்கு எதிராகத் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டி அவற்றைப் புறக்கணித்து இருக்கிறார்கள் என்பதற்கு வேதங்களிலேயே பல குறிப்புக்கள் இருக்கின்றன. ஆதலின் பார்ப்பனரைப் போர்வீரர் பட்டியலில் சேர்ப்பதற்கும் எதிர்ப்பு இருந்துள்ளது’ என்பது மாபெரும் உண்மையாகும். மகாபாரதத்தில் அரச மரபினரான குருமரபினரும் பாஞ்சாலரும்  தங்களின் அரசவைக் கூட்டத்தின் செயற்பாடுகளுக்குப் பார்ப்பனரின் அறிவுரை, கேட்காமலே சென்றார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. மனுவின் சட்ட நூற்படி அரசர்கள், பார்ப்பனரின் அறிவுரையைக் கேட்டுக்கொண்டுதான் தங்களின் அன்றாட அலுவல்களைத் தொடங்க வேண்டும். இது அரச மரபினருக்குக் கட்டாயம் தேவையான ஒன்றாகும்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *