”இமயம் முதல் குமரிவரை பிற்படுத்தப்பட்டோர் ஓரணியாய் போராட வேண்டும்” – மண்டல்

மே 01-15

மண்டல் குழு தமிழகம் வந்தது

பிற்படுத்தப்பட்டோரின் சமூக நிலையினை அறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்திலேயே கூட வைத்து விவாதிக்கப்படாத நிலையில், இரண்டாவது  பிற்படுத்தப்பட்டோர் குழு ஜனதா அரசால் அமைக்கப்பட்டது. பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிந்தோஷ் பிரசாத் மண்டல் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மகாராஷ்டிர மாநில மேனாள் தலைமை நீதிபதி போலே, ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

 

30.06.1979 அன்று சென்னை வந்த இக்குழுவினரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து கழகத்தின் சார்பிலான கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தோம்.

அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தென்னக இரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் இக்குழுவிற்கு வரவேற்பு மற்றும் கோரிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வந்த அக் கமிஷன் உறுப்பினர் சுப்பிரமணியம் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ரமணிபாய், வலம்புரிஜான் ஆகியோர் உடன் வந்தனர்.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவரான பி.பி.மண்டல், அதன் உறுப்பினர்களான ஜஸ்டிஸ் போலே, சுப்ரமணியம், ஜனதா பொதுச் செயலாளர்-களான வலம்புரி ஜான், இரமணிபாய் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் பேசிய மண்டல் கமிஷன் உறுப்பினர் சுப்ரமணியம் அவர்கள் தமது உரையில், “பிற்படுத்தப்பட்டோரின் தந்தையான பெரியார் நூற்றாண்டு விழாவில் இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதனை மனிதனாக வாழவைக்க தனது காலம் முழுவதும் புரட்சி செய்தவர் பெரியார். அந்த காலம் வந்துவிட்டது. கிராமம் கிராமமாக சென்று பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க வேண்டும். நண்பர் வீரமணி இதை செய்வார், நாங்கள் என்றென்றும் உங்களுடன் இருப்போம்’’ என்றார்.

பின்னர் பேசிய மண்டல் குழு உறுப்பினரும், மராட்டிய மாநில மேனாள் தலைமை நீதிபதியுமான போலே அவர்கள் தமது உரையில், “வடநாட்டில் பெரியார் தோன்றாத காரணத்தால்தான் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையில் உள்ளார்கள். இங்கே தந்தை பெரியாரின் உழைப்பால் ஓரளவு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

பார்ப்பனியம் இன்னும் உயிரோடு உதைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் தரப்போகும் அறிக்கையை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அதிகார வர்க்கத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் ஒழியவில்லை. நாம் ஏமாந்தால் பார்ப்பனியம் நம்மை அழித்துடும்’’ என்று கூறினார்.

நான் உரையாற்றும்போது, “பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டு பெருமிதப்படுகிறோம். நீங்கள் மூன்று பேரும் மூன்று முத்துக்களாக எங்களுக்கு கிடைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் தரப்போகும் அறிக்கை -_ குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்-பட்ட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்யப் போகிறது என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உண்டு. துணிந்து செல்லுங்கள்! உங்களுக்குப் பின்னாலே கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அணிவகுத்து நிற்கிறது _ என்றும் நிற்கும்.

நீங்கள் தரப்போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையை இந்த முறையும் அரசின் அலமாறியில் தூங்கிக் கொண்டிருக்க நாங்கள் விடமாட்டோம்! விடமாட்டோம்!’’ என்று உரையாற்றினேன்.

பின்னர் உரையாற்றிய பி.பி.மண்டல் அவர்கள், “நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களிடம் பேசுகிறேன்.
நாங்கள் தரப்போகும் அறிக்கை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அமையப் போவது உறுதி. ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையை செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும்.

அதை செயல்படுத்த செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியை பெற்றிருக்கிறீர்கள்.

இது பெரியாரின் மண் இந்த மண்ணில் நான் ஏராளமாக தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்-பட்டவர்களை, “சூத்திரர்கள்’’ என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்த சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.

மார்க்சிஸ்ட்டு கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி பிற்படுத்தப்-பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.

எங்கள் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் அவர்கள் 62% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இடஒதுக்கீடு செய்தார். அதைக்கூட உயர்ஜாதிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நாட்டில் அதிகார வர்க்கம் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்.களாகவும் அய்.பி.எஸ்.களாகவும் இருக்கும் உயர்ஜாதி வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும் கிடைத்துவிடாது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு இல்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்களையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்களுக்குள்ளே ஜாதி வேற்றுமையில் பிளவுபட்டு நிற்காதீர்கள்.

இமயம் முதல் குமரிவரை எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.
காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு-விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார். இது ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக தெரிந்தது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் என்றவுடன் உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்து விடுகின்றனர் என்ற பி.பி.மண்டல் அவர்கள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து ஏடு விஷமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தது. அதையும் மறுநாள் விடுதலை ஏடு தலையங்கம் மூலம் கண்டித்தது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினைக் 1978 செப்டம்பர் தொடங்கி ஓராண்டு காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிகவும் சிறப்பான முறையில் திராவிடர் கழகமும், தமிழக அரசும் நடத்திக்கொண்டு வந்தது. கழகத் தோழர்கள், பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கினார்கள்.

இந்த நிலையில், தமிழக அரசு திடீரென்று பிற்படுத்தப்பட்ட சமுதாய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், கல்வி ஸ்தாபனங்களிலும், தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் ஒதுக்கப்படும் இடங்களைப் பெறுவதற்கு அவர்களின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.9,000 (அதாவது மாதம் ஒன்றுக்கு 750 ரூபாய்)க்கு குறைவாக  வருமானம் இருந்தால், மட்டுமே அருகதை உண்டு. அதற்கு மேற்பட்ட வருமானம் உடைய பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்குக் கல்வி, உத்தியோகங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித்து அதனை 02.07.1979 முதல் அமுலாக்குவதாக அறிவித்திருப்பது, “பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலையில் பேரிடி விழுந்தது போன்ற மிகமிகப் பேரபாயமான ஓர் ஆணை’’ ஆகும்.

அ.இ.அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த இந்த ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் பல்வேறு களங்கண்டு அதனை வாபஸ் பெற வைத்த நிகழ்வு பின்பு விரிவாக எழுதுகிறேன். இதனைக் கண்டித்து 03, 04.07.1979 ஆகிய தேதிகளில், ‘விடுதலை’யில் இரண்டாம் பக்கத்தில் ‘ஆணைக்கு என்ன அடிப்படை என்று அரசு ஆணையைப் பற்றி விளக்கி விரிவாக அறிக்கையாக எழுதியிருந்தேன். அதில்,

“பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு உத்தியோகங்கள் முதலியவற்றை பொருளாதார அடிப்படையின் பேரில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரு.சஞ்சீவரெட்டி உள்பட பலர் கூறியுள்ள யோசனைகளைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஜாதி அடிப்படையில் தரப்படும் கல்வி உத்தியோகச் சலுகைகளை பொருளாதார அடிப்படையில் மாற்ற வேண்டும் என்றும், இதற்கு மாநில அரசுகள் இணங்கி வரவேண்டும் என்றும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி தாக்கீது மேல் தாக்கீதுகளை காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும், பக்தவத்சலனார் முதல்வராக இருந்த காலத்திலும், அண்ணா முதல்வராக இருந்த நேரத்திலும், பிறகு கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்திலும், தொடர்ந்து அனுப்பியும்-கூட, அதற்கு மேற்காட்டிய அரசுகள் ஒப்புதல் அளிக்க மறுத்து பொருளாதாரம் காரணமாக இவர்கள் பிற்படுத்தப்-படவில்லை. ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்டார்கள் என்பதை நன்கு புரிந்தும், அப்படி பொருளாதார அடிப்படையில் சலுகை என்று மாற்றினால் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக கல்வி, உத்தியோகத்தில் “கொழுத்த’’ முன்னேறிய ஜாதியினர் குறிப்பாக பார்ப்பனரே இதனால் மிகுதியாகப் பயன் அடைபவர்களாக இருப்பார்கள் என்பதை எண்ணி அதனை ஏற்க மறுத்தார்கள்.

அவர்கள் செய்யத் தயங்கிய ஒரு செயலை, படிப்படியாக (Phased Programme போல) பொருளாதார அடிப்படையாக மாற்ற தமிழக அரசு _ அதுவும் பெரியார் வழி, அண்ணா வழி, காமராசர் வழி என்று கூறிக்கொண்டே இப்படி நடப்பது மிகமிக வருத்தத்திற்கும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு மேலும் விரிவாக சலுகைகள் அளிப்பது எப்படி என்று ஆராய மத்திய அரச திரு.மண்டல் தலைமையில் ஒரு கமிஷன் போட்டு, அக்கமிஷன் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து கருத்துகளைக் கேட்டு திரும்பிடும் நிலையில் இப்படி ஒரு ஆணையை தமிழக அரசு பிறப்பித்திருப்பது ‘ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்பதுபோல விசித்திரமாக இருக்கிறது!

திராவிடர் இயக்கம் பிறந்ததே பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்ற அடிப்படையில் தான் என்பதும், தியாகராயர் பெருமான் அவர்கள் அளித்த ‘முதல் அறிக்கை’ (First Manifesto)  கல்வி, உத்தியோக வாய்ப்புகளில் பார்ப்பனர்களுக்கு இருந்த ஏகபோகத்தை உடைத்து, பார்ப்பனரல்லாத மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கு ஏற்பட்டது என்பதுதான் ‘திராவிடப் பாரம்பரியம்’. அந்த ‘திராவிடப் பாரம்பரியம் பேசும் ஓர் ஆட்சியில் இப்படி ஒரு நிலைமை உருவாகலாமா?

பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் அங்கீகாரம் பெற்ற வகுப்புகள், ஜாதிகளைச் சேர்ந்த, வருட மொத்த வருமானம் ரூ.9,000க்கு குறைவாக உள்ளவர்களை பெற்றோர்களாகக் கொண்டவர்கள் மட்டுமே, அரசியல் சாசனத்தின் 16(4) ஷரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அரசு உத்தியோகங்களில் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கான சலுகையைப் பெறமுடியும் என்று அவ்வாணை குறிப்பிடுகிறது.

வகுப்புவாரி உரிமை (கம்யூனல் ஜி.ஓ.) செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய உடனே, தந்தை பெரியார் அவர்கள் நடத்திய வகுப்புரிமை போராட்டத்தின் விளைவாகவே இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. அதன் விளைவே இந்திய அரசியல் சட்டத்தின் 15ஆவது பிரிவின் 4_ஆவது துணைப் பிரிவு ஆகும்.

அதில் (“Socially and Educationally Backward”)  என்ற சொற்றொடர்களைத்தான் சேர்த்திருக்கிறார்கள்.

Socially and Educationally “சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, “Economically” பொருளாதார ரீதியாக என்று எங்கும் குறிப்பிடப்படவே இல்லை என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய, ஆட்சியாளர் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய உண்மையாகும்.

“Socially and Educationally Backward”  என்பதுதான் நிர்ணய அளவுகோலாக இருக்க வேண்டுமே தவிர, பொருளாதார (Economically) அடிப்படை என்பது ஒப்புக் கொள்ளப்படவே இல்லை.

‘சூத்திரன்’ படிக்கக் கூடாது என்பது மனுதர்மம்.

பிச்சை எடுக்கும் பார்ப்பனர்கூட சமுதாயத்தில் உயர்ந்தவர்; கல்வியில் எழுத்தறிவு வாசனை உடையவர் என்பதை புரிந்து கொண்டால், பொருளாதார அடிப்படை என்பதை ஏன் தந்தை பெரியார் அவர்கள் கடுமையாக எதிர்த்தார் என்பது எவருக்கும் புரிந்துவிடும்.

மாதம் 750 ரூபாய் வருமானம் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாய குடிமகனுக்கு வந்து விடுவதாலேயே, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் அவன் தலைமுறை, தலை-முறையாக கல்வி, உத்தியோக வாய்ப்புக்களில் அமுக்கி வைக்கப்பட்டு இருந்தது மாறிவிடும்? மாறிவிட்டது என்று எதிர்பார்த்தால் அது நியாயமா?

இப்புதிய ஆணை ‘ஒட்டகம் மெதுவாக உள்ளே நுழைவது’ போன்றது!

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உறுப்பினர் ஒருவர் மாத வருமானம்  ரூ.750 பெறும் விவசாயியாகவோ, அல்லது உத்தியோகஸ்-தராகவோ இருந்துவிட்டால் அவரது மகனுக்கு அச்சலுகை கிடைக்கக்கூடாது என்றால், அவன் திறந்த போட்டி (Open Competition)க்குதானே போக வேண்டும்? அதில் ஏற்கனவே போட்டியிடும் பார்ப்பனர்களுடனும் முன்னேறிய ஜாதிக்காரர்களுடன் தானே இவன் போட்டியிட வேண்டும்? அது சம போட்டியாக இருக்க முடியுமா?

மாத வருமானம் 750 ரூபாய் என்பது இக்காலத்தில் சாதாரணமாக ஆசிரியர்-களுக்குக்கூட உண்டு. அவர்கள் பிள்ளைகள் கூட சலுகை பெற முடியாது.

தமிழக ஆட்சியாளர் சிந்திக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது பேரிடி போன்ற செய்தி; 1952இல் ஆச்சாரியார் ஆண்ட காலத்தில் அவர்கூட செய்யத் துணியாத அக்கிரமம் இது!

1976 _ ஜனாதிபதி ஆட்சியில் ஆர்.வி.சுப்ரமணிய அய்யரும், தவே அய்யரும் செய்யத் துணியாத ஒன்று!

மிகப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், முதல் தலைமுறையினரும் வாய்ப்புப் பெறவே இவ்வேற்பாடு என்று அரசு தரப்பில் கூறப்படுமானால் அது திசை திருப்பும் தவறான வாதமாகும்.

நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அரசியல் சட்ட அடிப்படையில் இது செல்லுபடியாகக் கூடிய ஆணையாக இருக்காது.

எனவே, “அண்ணா வழி அரசு’’ அய்யாவுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் அரசு இதுபோன்ற ஆணைகளை, கவுரவம் பார்க்காமல் மறுபரிசீலனை செய்ய முன்வரவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வாய்மூடிகளாக இருந்தால் இதுபோன்ற ஆணைகள் மூலம் அவர்கள் உரிமைகள் பறிபோகும். எனவே, இதுகுறித்து தங்கள் தங்கள் எதிர்ப்புகளை அரசுக்கு ஜனநாயக வழியில் எடுத்துக்காட்டுவது அவசரமும் _அவசியமும் ஆகும்.

இதைக் கூறுபவர்களை இந்த அரசின் விரோதிகள் என்று எண்ணாமல், இடித்துச் சொல்லும் நண்பர்கள் என்றே கருதி காழ்ப்புக்கு இடமின்றி இப்பிரச்சினையை மறுபரிசீலனை செய்து இவ்வாணையை அரசு திரும்பப் பெற்றிட வேண்டுகிறோம். மருத்துவக் கல்லூரியில் 140 மார்க் என்று ஆக்கிய வெந்த புண்ணில் இவ்வாணை மேலும் வேலைச் சொருகுவதாக அமைகிறது என்பதையும் அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

மேலும், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள்(Socially and
Educationally) என்றுதான் அரசியல் சட்டம் கூறுகிறதே தவிர, பொருளாதாரத்தில்
(Economically) என்ற சொல்லை எங்கும் பயன்படுத்தவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டினோம்.

அரசு தரப்பில், தவறான, பாமர மக்களை திசை திருப்பும் வகையில் ஒரு வாதத்தை இவ்வரசு ஆணைக்குச் சார்பாக எடுத்து வைக்கப்படக் கூடும்.

நாங்கள், ஏழை பிற்படுத்தப்பட்டவர் களுக்கு உதவிட ஆணை பிறப்பித்தால், இவர்கள் பணக்கார பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே கல்வி, உத்தியோக இடம் கிடைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே பாருங்கள் என்று கூறிடுவர்; பிற்படுத்தப்பட்ட மக்களையே பிரித்தாளும் சூழ்ச்சியே தவிர, இது வேறு சாரமுள்ள வாதமாக இருக்க முடியாது.

எப்படியெனில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு 31 சதவிகிதம் என்றால் அது அவர்களுக்குக் கட்டாயம் தரவேண்டிய குறைந்தபட்ச விகிதாச்சாரமே தவிர, அதிகபட்ச உச்சவரம்பு அல்ல.

(31% is the guranteed minimum and it is not the maximum ceiling)

திறந்த போட்டி பொதுப்பிரிவு என்ற 51 சதவிகிதம் (49 சதவிகிதம் போக) என்பதில் எவ்வளவுக் கெவ்வுளவு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பங்கு கொள்ளுகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களது முன்னேற்றம் அமைந்தது. காமராசர் ஆட்சிக் காலம், அறிஞர் அண்ணா ஆட்சிக் காலம், கலைஞர் கருணாநிதி ஆட்சி வரை அதே முறைதான் கல்வி, உத்தியோகத் தேர்வுகளில் கடை-பிடிக்கப்பட்டு வந்தது!

தந்தை பெரியார் அவர்கள் இதுகுறித்து பெருமித உணர்வுடன், “50 சதவிகிதத்திற்காக காஞ்சிபுரம் மாநாட்டில் போராடி நான் காங்கிரசைவிட்டு வெளியேறி வந்தேன்; இப்போது ரிசர்வேஷன், திறந்த போட்டி இரண்டிலும் ஒட்டுமொத்தமாக எஞ்சின பிற்பட்ட மக்கள் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் பெறக்கூடிய நிலைமை வந்துவிட்டது என்பதே நாம் பெற்ற மாபெரும் வெற்றியல்லவா?’’ என்று கூட்டங்களில் பேசி வந்துள்ளார்கள்.

புதிய ஆணையின் மூலம் என்னவாகும்? 9000 ரூபாய் வருமானம் பெறும் அரசு ஊழியர் (என்.ஜி.ஜி.ஓ.) எவரது பிள்ளையும் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய ஒதுக்கீடு சலுகையைக் கனவில்கூட இனி நினைக்க முடியாது). அத்தனை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் திறந்த போட்டியில் (Open competition) சென்று ஏற்கனவே பல தலைமுறைகளாக படித்து போட்டியிட்டு முன்னேறிய ஜாதியினரோடு, குறிப்பாக பார்ப்பனரோடு போட்டியிட வேண்டிய கட்டாயம் வருகிறது. அதன் மூலம், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மூலமும், பொதுப் போட்டியிலும் போட்டியிட்டு ஒட்டுமொத்தமாக கிடைக்க வேண்டிய, கிடைக்கக்கூடிய கணிசமான விகிதாச்சாரம் கிடைக்க வழியில்லாமல் குறையக்கூடிய வாய்ப்பே இவ்வாணையின் மூலம் ஏற்படுகிறது!

கல்வி, உத்தியோக வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, வாய்ப்பற்ற ஜாதியினர் என்று பிரிப்பது சுலபமே தவிர, ஏழை பிற்படுத்தப்-பட்டவர், பணக்கார பிற்படுத்தப்பட்டவர் என்று பிரிப்பது சலபமல்லவே. ஜாதியை மாற்றிப்போட்டு சர்டிபிகேட் வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல; வருமானத்தைக் குறைத்துக் காட்டி சர்டிபிகேட் பெறும்முறை அதிகமாகிவிடும் அபாயமும் இதனால் மறைமுகமாக ஊக்கப்படுத்தப்படக் கூடும்.

ஏழைகளாக உள்ள பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு இடம் கொடுப்பதற்காக என்ற வாதம் கூறப்படுமானால், ஏழைகளாக உள்ளவர் பிற்படுத்தப்பட்ட மாணவர்களானாலும், அவர்கள் என்ஜினியரிங், மெடிக்கல் காலேஜ்களுக்கு சேர மனு போட வேண்டும் என்றால், மனு போடத் தகுதி மார்க் 140 (அதாவது 70 சதவிகிதம்) என்று உயர்த்தப்-பட்டுவிட்டதே!

140 மார்க்கு இல்லாத “ஏழை பிற்படுத்தப்பட்ட மாணவர்கூட மனுவே போட தகுதியற்றவன் என்று அரசு அறிவித்துவிட்ட பிறகு “ஏழைகளுக்கு உதவவே இவ்வேற்பாடு’’ என்று கூறுவது எப்படி பொருந்தும்? அது மாத்திரமா?

சாதாரண தொழிலாளிகளான கொத்தனார், மர வேலை செய்யும் ஆசாரிகள், முடிதிருத்தும் தொழிலாளிகள், லாண்டரி வைத்துள்ள சலவையாளர் இவர்களுக் கெல்லாம்கூட இன்றைய நிலையில் உண்மை நிலவரப்படி மாதம் 750 ரூபாய்க்கு மொத்த வருமானம் (Gross Income)  வருகிறதே!

கொத்தனாருக்கு தினக்கூலி ரூ.20. அவருடைய மனைவி சிற்றாள் எட்டு ரூபாய் (நகரங்களில் இந்த கூலிக்கே ஆள் கிடைப்பதில்லை) அந்த ஏழைத் தொழிலாளியின் மகன், தமிழக அரசின் இந்தப் புதிய ஆணைப்படி “முன்னேறிய ஜாதியராக’’ ஆகிவிடுகிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *