ஆணாதிக்கத்தை அழித்த அடித்தட்டு பெண்கள்

மே 01-15

கென்யா நாட்டின் வடபகுதியில், சம்புரு என்ற மாவட்டத்தில் இருக்கிறது அந்தக் கிராமம்; பெயர்: உமோஜா. இந்த ஊரில் எங்கு பார்த்தாலும் பெண்கள்தான். என்ன காரணம்?

கென்யா, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலத்தில், சம்புரு மாவட்டப் பெண்கள் அடுப்புக்குச் சுள்ளிகள் பொறுக்கவும், குடிநீர் கொண்டுவரவும் பல மைல் தூரம் காட்டுக்குள் சென்று வருவார்களாம். அப்போது அங்கு சுற்றித் திரியும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் இந்தப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது சர்வசாதாரணமாக நடந்துள்ளது. பிரிட்டிஷாரை கேள்வி கேட்க முடியாத நிலை.

 

இன்னொரு பக்கம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நிற்கவில்லை என்றாலும், ஆண்களுக்குக் கீழ்தான் பெண்கள் என்ற போக்கு கிராமத்தில் இருந்துள்ளது. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டப் பெண்கள் அதன்பிறகு திருமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால், பிறக்கும் குழந்தையை மட்டும் வளர்க்க வேண்டும். அவர்கள் குரலை சொந்தக் கிராமத்து ஆண்களே கேட்கமாட்டார்கள்.

இப்படி ஆள வந்தவர்கள், சொந்த நாட்டினர் என இருதரப்பு ஆண்களின் அடிமைத்தனத்திலிருந்து மீள, பெண்களுக்கென ஒரு சமுதாயம் வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பினார் ரெபேகா லோலோசோலி என்ற பெண்.

கற்பழிக்கப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட 15 பெண்களை ஒன்றிணைத்து, ஆண்களே வேண்டாம் என முடிவு செய்த பெண்கள் மட்டுமே வாழக்கூடிய உமோஜா கிராமத்தை 1990ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார். ஆம், இந்தக் கிராமத்தின் தலைவி ரெபேகா லோலோ சோலிதான்.

நாட்கள் செல்லச் செல்ல, உமோஜா கிராமம் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கின. பிரிட்டிஷ் ராணுவத்தினரால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்-பட்டவர்கள், குழந்தைத் திருமணம் பிடிக்காமல் ஓடிவந்த பெண்கள் என ஒடுக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உமோஜா தஞ்ச பூமியானது. தற்போது இந்தக் கிராமத்தில் 47 பெண்கள் மற்றும் 200 குழந்தைகள் உள்ளனர்.

ஆண்களே இல்லாத கிராமத்தில் எப்படி குழந்தைகள்?

ஆண்களே வேண்டாம் என வெறுத்து வந்தாலும், தங்களின் வாழ்க்கைக்கு ஓர் ஆதாரம் வேண்டும் என்று நினைக்கின்றனர் உமோஜா பெண்கள். எனவே, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த ஒரு ஆணைத் தேர்வு செய்து, இரவில் மட்டும் உமோஜாவுக்குள் வந்து செல்ல அனுமதிப்பார்கள். அவர் வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது. கர்ப்பமான பெண்களிடம், யார் காரணம் என்று மற்ற பெண்கள் கேள்வி கேட்கவும் மாட்டார்கள்.

ஆனால், உமோஜா பெண்களால் அனுமதிக்கப்பட்ட ஆண்கள் மட்டுமே உள்ளே வரமுடியும். அவர்களைத் தொட முடியும். மற்றபடி கிராமத்துக்குள் நுழைய ஆண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி உமோஜா பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கும் காட்டுமிராண்டிகளைச் சமாளிக்க உமோஜா பெண் காவலாளிகள் படை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண் துணை இல்லாமல் 25 வருடங்களாக வாழ்ந்து காட்யுள்ளது மட்டுமல்லாமல், கென்யா நாட்டின் நகரங்களில் வாழும் பெண்களைவிட உமோஜா பெண்கள் கல்வியறிவிலும் முன்னேறியுள்ளனர். இதனால், உமோஜா கிராமத்திற்கு கென்யாவின் பல தொண்டு நிறுவனங்களும் உதவி வருகின்றனர். இது கென்யா நாட்டு மக்களையே வியப்படையச் செய்துள்ளது.

இது பெண்ணியவாதிகளின் கனவுக் கிராமம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *