சென்னை ஓட்டேரி குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் கே.எம்.பிளாட்னி மாறன். அறிவுத் திறன் குறைபாடுடையவரான இவர் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்,
நீளம் தாண்டுதலில் வெண்கலம் என இரட்டைப் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளார். மேலும், சிம்லாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், புதுதில்லியில் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டத்தில தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
சென்னை மாபுஷ்கான்பேட்டையில் உள்ள அன்பு மலர் சிறப்பு பள்ளியில் தொழிற்கல்வி படித்துள்ள இவர், அங்கு பாய், மெழுகுவர்த்தி, பேப்பர் கப், பேக்கரி பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.
இவரது தந்தை மாறன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். பிளாட்னியின் பாட்டி மல்லிகா, வீட்டின் அருகே உள்ள ரயில்வே காலனி அரசுப் பள்ளியில் உள்ள மய்தானத்துக்கு தனது பேரனை அழைத்துச் சென்று அங்கு விளையாடும் சிறுவர்களைக் கவனிக்க வைத்தார். அதன் பிறகுதான் பிளாட்னிக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்தது. அதற்குப் பிறகு வட்டார, மாவட்ட, மாநில, சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தேவையான பொருளாதார உதவி, ஆதரவை அளித்து அடுத்து நடைபெறுவுள்ள சர்வதேச போட்டிகளுக்கும் தனது பேரனை உற்சாகமாகத் தயார்ப்படுத்தி வருகிறார் மல்லிகா.
விளையாட்டு போட்டிகளில் பிளாட்னி சாதித்து வருவது குறித்து அவரது பெற்றோர் மாறன்_சந்தானலட்சுமி கூறியது:
“சிறுவயது முதலே பிளாட்னிக்கு முன்கோபமும், ஞாபக மறதியும் அதிகமாக இருந்தது. ஆனால், உறவினர்கள், நண்பர்களின் முகத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வான். முதல் வகுப்பிலிருந்து 4ஆம் வகுப்பு வரை பனந்தோப்பு ரயில்வே பள்ளியிலும், அதற்குப் பிறகு அனகாபுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு வரையிலும் படித்தான். படிப்பின் மீது அவனுக்கு ஈடுபாடு சற்று குறைவாக இருந்தது. அது குறித்து பிளாட்னியின் ஆசிரியர்களிடம் கேட்டோம். அப்போது தாங்கள் நடத்தும் பாடங்களை உள்வாங்கிக் கொள்ள பிளாட்னி மிகுந்த சிரமப் படுவதாகவும், அவனது நடவடிக்கைகள் மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபடுவதாகவும் தெரிவித்தனர். மேலும், அவனை உரிய மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவும் எங்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து எங்கள் மகனைப் பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு அறிவுத் திறன் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தார். அதையடுத்து அவனை சிறப்பு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தினார். அதன்பேரில் செங்குன்றம் அருகே மாபுஷ்கான்பேட்டையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அன்புமலர் சிறப்புப் பள்ளியில் பிளாட்னியைச் சேர்த்தோம்.
அந்தப் பள்ளியில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பிளாட்னி ஆர்வமுடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றான். விளையாட்டுகளின் மீது பிளாட்னிக்கு இருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அந்தப் பள்ளியின் விளையாட்டுத் துறை பயிற்சியாளர் தேவசகாயம் அவனுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து ஊக்குவித்தார். மேலும், சிறப்பு பள்ளிகளுக்கிடையே மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் தொடர் ஓட்டம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க உறுதுணையாக இருந்து வழிகாட்டினார். அந்தப் போட்டிகளில் பிளாட்னி பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளான்.
அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த 7,000 வீரர்கள் கலந்துகொண்டனர். அதன் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை ஊக்குவித்தார். அத்தகைய சிறப்பு மிகுந்த போட்டியில் தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்களைப் பெற்றான்.
எங்கள் மகன் மாற்றுத் திறனாளி என்பதற்கு அரசு வழங்கிய சான்றிதழ்கள் இருந்தும் இதுவரை அவனுக்கு எந்த ஒரு உதவித் தொகையும் கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகளிடம் கேட்டால் சீனியாரிட்டி அடிப்படையில்தான் உதவித் தொகை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக அரசு நடத்திவரும் பயிற்சி மய்யத்தில் பிளாட்னிக்கு பயிற்சி வழங்க அரசு உதவ வேண்டும்.
அரசின் உதவிகள் கிடைக்கும்பட்சத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் மேன்மேலும் பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பான். அவன் தொழிற்கல்வியில் சிறந்த முறையில் பயிற்சி பெற்றுள்ளான். அவனது தகுதிக்கு ஏற்றவாறு ஏதாவது அரசுப் பணி கிடைத்தால் அவனது எதிர்காலம் சிறப்பானதாக அமையும்’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.