’சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ பெற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் ஆற்றிய உரையின் முதன்மைப் பகுதிகள்

மே 01-15

திராவிடர் கழகத்தின் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான முனைவர் கி.வீரமணி அவர்களே, இந்த நிகழ்வை தலைமையேற்று நடத்திக்கொண்டு இருக்கும் பீகார் சட்டமன்றத் தலைவர் திரு.விஜய்குமார் சவுதிரி அவர்களே, பீகார் சட்டப்பேரவைத் தலைவர் திரு.அவிதேஷ் நாராயண்சிங் அவர்களே, முனைவர் லக்ஷ்மன் தமிழ் அவர்களே, திரு.வி.குமரேசன் அவர்களே, ஜி.கருணாநிதி அவர்களே, கம்யூனிஸ்ட் பார்டி ஆப் இந்தியா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.ராஜா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினரும், அய்க்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான மரியாதைக்குரிய திரு.கே.சி.தியாகி அவர்களே,

பீஸ் கட்சியின் தலைவரும் உத்திரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினருமான ஜனாப் முனைவர் அயூப் அவர்களே, பீகார் சட்டமன்ற முன்னாள் தலைவர் விஜய்நாராயண் சவுதிரி அவர்களே, விருது வழங்கும் குழுவை பாட்னாவில் நிர்வகிக்கும் திரு.ரவீந்திர ராம் அவர்களே, இங்கே அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களே, சட்டப்பேரவை முன்னாள் மற்றும் இன்னாள் உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, முக்கிய விருந்தினர்களே, நன்பர்களே, எனது அழைப்பை ஏற்று இந்நிகழ்வைச் சிறப்பு செய்ய வந்திருக்கும் அனைவருக்கும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களே, இங்கே அமர்ந்திருக்கும் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கங்களை  தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யம் மதிப்புமிக்க விருதான ‘கி.வீரமணி சமூகநீதி விருதி’ற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இவ்விருதை நான் மிகவும் கவுரவம்மிக்க ஒரு விருதாக கருதுகிறேன். பீகார் மக்களின் சார்பாக நான் இந்த விருதைப்பெற்றுக் கொள்கிறேன். குறிப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிட கழகத்தின் தலைவருமான திரு.கி.வீரமணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

‘நான் அவர்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல மீண்டும் மீண்டும் பெரியாரின் கருத்துக்களைச் சுமந்துகொண்டு நீங்கள் பீகார் வரவேண்டும்’ என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் இய்க்கத்தின் கருத்துக்கள் பீகார் மக்களையும் சென்றடையவேண்டும் என்பதே என் உளப்பூர்வமான ஆவலாகும்.
எப்படி நன்றி சொல்வேன்

திராவிடர் கழகம் 1925-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, அதே ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இரண்டு இயக்கங்களும் வேறு வேறு சிந்தனைகளைக் கொண்டது, இதில் எந்த சந்தேகமும் இல்லை. கி.வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தை மிகவும் செம்மையாக முன்-னெடுத்துச் செல்கின்றார். உங்கள் அனைவரையும் தலைநகர் பாட்னாவில் சந்தித்தது குறித்து உண்மையில் உளப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் என்னை இந்த விருதிற்கு தகுதியுள்ளவனாக கருதி தேர்ந்தெடுத் துள்ளீர்கள். இதற்காக நான் எவ்விதத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பது என்று தெரியாமல் திகைக்கிறேன்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒரு அறையில் வைத்து கொடுத்துவிட்டு செல்வார்கள்  என்று நினைத்தேன். பொதுவாக நான் விருது, பாராட்டு, பட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி ஓடிவிடுவேன். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். காரணம் நான் மக்கள் சேவையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அறிவார்ந்த அறிஞர்கள் கூடும் நிகழ்வுகள் நடக்கும் போது பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் ஏற்படும். இங்கே வந்திருந்த விருந்தினர்கள் பல அறிவார்ந்த கருத்துக்களை நம்மோடு பரிமாறிக் கொண்டார்கள். திரு.கி.வீரமணி அவர்கள் பல்வேறு கருத்துக்களை நம்மிடைய பகிர்ந்துள்ளார்கள்.

மதம் மாறினாலும் அதே ஒதுக்கீடு வேண்டும்

அய்தரபாத் பல்கலைக்க்ழகத்தில் சில அரசியல் தலைவர்களின் அழுத்தம் காரணமாக ரோகித் வேமுலாவின் தற்கொலை சம்பவம் நிகழ்ந்தது. ஏன் ரோகித் வேமுலாவை அவர்கள் குறிவைத்தார்கள்? காரணம் ரோகித் வேமுலா தலித் மாணவன் ஆவான். எவ்வளவு தலைசிறந்தவனாக இருந்தாலும் ஊரில் பிறப்பில் இருந்து ஜாதிய அடையாளம் இறக்கும் வரை நம்மைப் பின்தொடர்கிறது. காந்தியும் இதையே கூறினார்.
இந்தியாவில் மதம் மாறலாம், மதம் மாறினாலும் அவர்கள் மீது திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமை தொடர்கிறது. ஆகவே மதம் மாறிய தலித்துகளுக்கு தலித் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கூறினேன். மதம் மாறிய தலித்துகள் எதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

எல்லா மாநிலங்களுக்கும் 69% இடஒதுக்கீடு வேண்டும்

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு எஸ்.சி\எஸ்.டி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்போது மற்ற மாநிலங்களில் ஏன் இது நடைமுறைப் படுத்தவில்லை.  இதற்காக தெளிவான ஒரு சட்ட வரைவு வேண்டும். ஆனால் மண்டல் கமிசன் அறிக்கையின்படி உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? மதுவிலக்கை அமல்படுத்துவது மாநிலங்களின் உரிமையாகும். பலமுறை இந்தத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. பீகாரின் அரசு நிறைவேற்றியுள்ளது.

1915-ஆம் ஆண்டு மதுவிலக்கு தொடர்பான சட்டம் போதுமானதாக இல்லை என்றதும் அதையே நாங்கள் மாற்றி அமைத்தோம். இதை நான் ஏன் உங்களுக்கு கூறுகிறேன் என்றால் மக்களின் நன்மைக்காக அன்றைய சட்டத்தைத் திருத்தினோம்.

அதேபோல்தான் 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற தீர்ப்பையும் திருத்தவேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளில் மட்டும் ஏன், தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும். இப்போது கார்பரேட் மயமாகி விட்டது, எங்கும் தனியார் நுழைந்துவிட்டது, தனியார் நிறுவனங்கள் தற்போது தேவையான ஒன்றாக மாறிவருவதால் அங்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தபப்ட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தரவில்லை என்றால், சமூகநீதி என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும், கேலிப் பொருளாகிவிடும்.

பலர் என்ன கூறுகிறார்கள். தனியார் நிறுவனங்களில் எப்படி இடஒதுக்கீடு கொண்டுவர முடியும் என்கிறார்கள். ஏன்  முடியாது, நாம் குடியரசு நாட்டில் வாழ்கிறோம். மக்களாட்சி அமைப்பின் அச்சாணி சமூகநீதி, சமத்துவம், மதச்சார்பின்மை இங்கே சமூகநீதி இல்லையென்றால் மக்களாட்சி என்பது வெற்றுச் சொல்லாக இருந்துவிடும். அரசு பதவிகளில்கூட இடஒதுக்கீடு பெறவேண்டி போராட வேண்டிய நிலை இன்றும் உள்ளது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களுக்கு எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி யிருந்திருக்கும், சிறு வயது மாணவப் பருவத்தில் இருந்து தனது இறுதி மூச்சுவரை, பெரியார் சந்தித்த எதிர்ப்புகள், மகாத்மா ஜோதிபா பூலே சந்தித்த கொடுமைகள், அந்தக் கொடுமைகளை எதிர்கொண்டு இடைவிடாது போராடித்தான் இன்று நமக்கு சமூகநீதியைப் பெற்றுத்-தந்துள்ளார்கள்.  நமது பீகாரில் கற்பூரி தாக்கூர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய போது எவ்வளவு ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இது மாற்றத்திற்கான வியூகம். இந்த மாற்றத்திற்கான வியூகச் சக்கரத்தின் ஓட்டத்தை எந்த ஒரு சக்திவந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை எதிர்கொள்ள உறுதியான மனத்துணிவு வேண்டும். 1925-ஆம் ஆண்டிலிருந்து ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு மதரீதியான கொள்கைகளில் விட்டுக் கொடுக்காமல் பயணிக்கிறதோ அதேபோல் திராவிடர் கழகம் சமூகநீதிக் கொள்கையில் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பயணிக்கிறது.

வீரமணி அவர்களே, நீங்கள் மீண்டும் மீண்டும் வரவேண்டும்

1925-ஆம் ஆண்டிலிருந்து நீங்களும் சமூகநீதிக்காக களம் கண்டு வந்திருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களை நான் மூன்று நாட்களாக உங்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். நீங்கள் இங்கே உரையாற்றிய போதும் உங்கள் சமூகநீதிக்கான பயணம் குறித்து அறிந்து கொண்டோம். ஆகவே நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் இங்கே வரவேண்டும், வரவேண்டும், மீண்டும் மீண்டும் வரவேண்டும். பிகார் மக்களின் சார்பிலும் என்னுடைய சார்பிலும் கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் பிகாரையும் உங்களின் மற்றோரு ஊராக நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது உங்களின் சிந்தனையை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். பீகார் அரசின் முக்கியக் கொள்கையே சமூகநீதியோடு கலந்த வளர்ச்சிதான், குரோத் வித் ஜஸ்டீஸ் நாங்கள் வெறும் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசமாட்டோம். எங்கள் வளர்ச்சி சமூகநீதியை ஒன்று சேர்த்துக் கொண்டுசெல்லும் வளர்ச்சியாகும். அதாவது வளர்ச்சியின் லாபம் சமூகத்தில் மிகவும் ஏழ்மைப்பட்ட குடிமகனுக்கும் போய்ச்சேரவேண்டும் என்பதே ஆகும். இதுதான் எங்களின் முதன்மையான கொள்கை அரசின் மூல மந்திரமும் ஆகும்.

மக்கள் தங்களின் அரசு உதவித்தேவைக்காக சான்றிதழ் வாங்க நகரம், சிறு நகரம், கலக்டர் அலுவலகம் என்று அலையவேண்டி இருந்தது. இதைத் தவிர்க்க சட்டமியற்றி சான்றிதழ்கள் அவர்களது வீட்டிற்கே சென்று அடையும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம்.

எங்களுக்கு சமூகநீதியின் மீது நம்பிக்கை உள்ளது. அதிகாரப் பரவல் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்களது ஒவ்வோரு பணியிலும் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்கிறோம். நாங்கள் எந்த அளவு மக்களின் பங்கை அதிகரிக்கச் செய்கிறோமோ மக்களாட்சியும் அந்த அளவிற்கு உறுதியாகிக் கொண்டிருக்கும். இன்று மக்களின் வாயைப் பூட்டுப்போட முயற்சி நடக்கிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்தது அனைத்தும் இனிவரும் பேராபத்தின் சமிக்ஞைகள் ஆகும். நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசைப் பார்த்து கேட்கிறோம், எங்களது கன்னையா அப்படி என்ன தேசத்துரோக வார்த்தையைக் கூறிவிட்டார். பிரமானப்பத்திரம் கொடுங்கள், அப்படி என்னதான் கன்னைய குமார் பேசிவிட்டார் என்று. இன்றுவரை கன்னையா என்ன பேசினார் என்ற பிரமனப் பத்திரம் தரவில்லை. இன்றுவரை அவர் என்ன பேசினார் என்று போலீசுக்கும் தெரியவில்லை, அரசுக்கும் தெரியவில்லை,  ஏழ்மையிலிருந்து விடுதலை என்று கூறியது குற்றமா? ஜாதி பேதங்களில் இருந்து விடுதலை என்று கூறியது குற்றமா? பண முதலைகளிடமிருந்து விடுதலை என்று கூறியது குற்றமா?

தேர்தல் முடிவு என்ன ஆயிற்று அவர்களின் பொய்ப் பிரச்சாரம் இங்கே வேலை செய்யவில்லை. இப்போது ‘பாரத் மாதாகி ஜே!’ என்ற ஒரு பிரச்சனை கிளப்பி இருக்கிறார்கள். (இது அலையைப்போல் பிரச்சனைகளை தொடர்ந்து கிளப்பி மக்களை திசை திருப்புகிறார்கள்) நானும் கூறுகிறேன் ‘பாரத் மாதா கி ஜே!’ சிலர் ‘ஜெய் ஹிந்து’ என்கிறார்கள். சிலர் ‘வந்தே மாதரம்’ என்கிறார்கள். எல்லோரும் சொல்கிறார்கள். இதை யாரோ ஒருவர் வற்புறுத்தி சொல்லித்தான் நாங்களும் கூறவேண்டும் என்பதில்லையே, திடீரென்று ஒரு நாள் பத்திரிகையில் எல்லா பல்கலைக்கழகங்களிலும் 100 அடி தேசியக்கொடி பறக்கவிட வேண்டும் என்று ஒருவர் (ஸ்மிருதி இரானி) கூறியதாக தலைப்புச் செய்தியாக வந்தது. எனக்கு படித்த உடன் சிரிப்பு வந்தது, ஏன் தெரியுமா தேசியக் கொடியை சிலர் ஏற்றுக்கொண்டனரே என்று நினைத்தேன் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு பங்கும் இல்லை, இந்த தேசியக் கொடி உருவாகும் போது விவாதம் நடந்தது, அதில் என்ன வண்ணம் வேண்டும் என்ற ஒரு பெரிய விவாதம் நடந்தது, அதன் நடுவில் உள்ள அசோகச் சக்கரம் பாடலிபுத்திரனின் (புத்தனின்) தம்மச் சக்கரமாகும், அதே சக்கரம் தேசியக்கொடியை அழகுபடுத்துகிறது, குறைந்த பட்சம் அவர்களுக்கு தேசியக்கொடிமீது பாசம் வந்துவிட்டது. இந்த தேசத்தின் மீது உங்களுக்கு புதிதாக பாசம் வந்துள்ளது, ஆனால் எங்களுக்கோ இந்த தேசப்பற்று ரத்ததில் ஊறியது. தலைமுறை தலைமுறையாக வந்தது.

மதுவிலக்கு தொடர்பில் உங்களது ஆதரவு வேண்டும், மதுவிலக்கு தொடர்பில் நிதிச்சுமை ஏற்படும் இது உண்மைதான், ஆனால் மதுவினால் ஏற்படும் சீரழிவிற்கு ஒதுக்கப்படும் செலவும் தற்போது மிச்சமாகுமே, அந்தப் பணம்  இப்போது மக்களின் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து போன்றவற்றில் செலவிட முடியும், இதன் மூலம் மக்கள் வளம் பெறுவார்கள், பிகார் முன்னேற்றமடையும், இதனால் எங்களின் பொருளாதாரம் பெருகும், இதனால் அரசுக்கு வருவாய் பெருகும், மதுவினால் என்ன வருமானம் வருகிறதோ அது உண்மையான வருமானம் அல்ல, இந்த வருமானத்திற்கு பின்னால் மனித உழைப்பு அல்ல, இனி மேல் அரசுக்கு வரும் வருமானம் மனித உழைப்பால் வரும் வருமானமாகும்.  கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் முதியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்குமே! இனிமேல் பிகாரின் வளர்ச்சியை யாரும் நிறுத்திவிடுவார்களா? பிகார் வளர்ச்சியடையும்,  சமூகநீதியுடன் வளர்ச்சியடையும். என்னை இந்த விருதிற்கு தகுதியுள்ளவனாக நினைத்த பன்னாட்டு பெரியார் மய்ய(அமெரிக்கா)த்திற்கு என்னுடைய உள்ளப்பூர்வ நன்றி கூறுகிறேன், ஒன்றை மட்டும் நான் கூறுகிறேன்,

நமக்கு டில்லி செல்லவேண்டும், இங்கே என்னவேலை செய்கிறோமோ அதையேதான் நாட்டிற்கும் செய்யவேண்டும், உங்கள் அனைவருக்கும் நன்றி.  இந்த விருதோடு எனக்கு ஒரு லட்சம் பணமும்(செக்காக) கொடுத்தார்கள். நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் விருதை வாங்குவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை, ஆனால் நான் பணம் வாங்குவதில்லை, செக்காகவும் வாங்குவதில்லை, இருப்பினும் இவர்கள் இது உங்கள் பணிக்காக நாங்கள் கொடுக்கும் சன்மானம் என்றார்கள். ஆகையால் இந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பிகார் முதலமைச்சர் வளர்ச்சித்திட்டத்திற்கு வழங்குகிறேன், நன்றி! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *