இது ஆணுக்குரியது, இது பெண்ணுக்-குரியது என்று எப்பணியையும் ஒதுக்கீடு செய்ய இனி முடியாது. காரணம், எல்லா பணியையும் பெண்கள் செய்ய தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதைப் பெண்ணால் செய்ய முடியாது என்று எந்த வேலையையும் ஒதுக்க முடியாது. எனவே, எந்த ஒரு துறையையும் இனி ஒதுக்க முடியாது. எந்த ஆபத்தான பணியானாலும் அதையும் செய்ய பெண்கள் தயாராக உள்ளனர். இதற்கு இப்போதைய உதாரணம் பேருந்து, ரயில், விமானம் போல் முழுவதும் பெண்களே கப்பலை இயக்குகின்றனர்.
‘மாதய்’ என்கிற கப்பலின் தலைவி வர்திகாஜோஷி. விசாகப்பட்டினத்தில் உருவாக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்ட இந்தக் கப்பலில், வர்திகா தலைமையில் சுவாதி, பிரதிபா ஜம்வால், விஜய தேவி, பாயல் குப்தா, அய்ஸ்வர்யா என அய்ந்து பெண்கள் எல்லாவற்றையும் பொறுப்பாக கவனித்துக் கொள்கின்றனர். விசாகப்பட்டினம் துறைமுகத்தி-லிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் வங்காள விரிகுடாவைத் தாண்டி இந்தியப் பெருங்-கடலுக்குள் வந்துள்ளது.
ஆழ்கடலில் பயணம் செய்யும்போதும், ஆபத்துக் காலங்களிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சரியாகக் கணித்து செயல்பட்டு முதல் கட்டமாக 40 கடல் மைல் பயணத்தை சென்னையில் நிறைவு செய்திருக்-கிறார்கள் இந்தச் சாதனைப் பெண்கள்.
அடுத்து, அவர்கள் போன இடம் கேரள மாநிலம் கொச்சி. கப்பலில் இந்தியப் பெருங்கடலைக் கடந்து அலைகள் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலையும் சுற்றி வந்து வியப்பளித்திருக்கிறார்கள்.
“பயணிகள், சரக்குக் கப்பல்களுக்கு வழிகாட்டுவது, துறைமுகப் பணிகளில் ஈடுபடுவது… என பல பொறுப்புகள் இந்தக் கப்பலுக்கு உள்ளது. கடற் கொள்ளையர்களை எதிர்கொள்வது, எதிரிநாட்டுக் கப்பல்களை அடையாளம் காண்பது என பணிகள் பெரிது. தற்போது அதனை பெண்கள் மட்டுமே இயக்குவது அற்புதம்.
நாட்டிற்குள் கடல் வழியாக அந்நியர்கள் ஊடுருவாமல் தடுப்பது, வெளிநாட்டுக் கப்பல்களை கண்காணிப்பது, சரக்குகளைக் கொண்டு செல்வது என கடினமான பணிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றைத் திறமையாக செய்து முடித்து ஆற்றலை நிரூபித்திருக்கிறார்கள் இந்த வீராங்கனைகள். இவர்களின் திறமைகளை அறிந்தே மாதேய் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கு!’’ என்கிறார் கடற்படை அதிகாரி ஒருவர்.
நிமிடத்துக்கு ஒருமுறை மாறும் கடல் வானிலை, ஆக்ரோஷத்துடன் எழும்பும் அலைகள், பெருகிவரும் கப்பல் போக்குவரத்து நெரிசல், பின்தொடரும் ஆபத்துகளை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவது என பயிற்சியின்போதே பல அம்சங்களில் பாராட்டு வாங்கியிருக்கிறார்கள் கப்பலில் பணியாற்றும் பெண்கள்.
“மாதேய் எங்களுக்கு தாய்வீடு மாதிரி. அதன் மூலம் நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்கிட்ட கொடுக்கப்பட்டிருக்கு. முதல்கட்ட பயணத்தில் எங்களுக்கு வெற்றி கெடச்சிருக்கு. இந்த வெற்றி தொடரும்! இந்தக் கப்பலில் உலகத்தைச் சுற்றி வரணும். அதுதான் எங்கள் இலக்கு! சற்றே அழுத்தமான குரலில் நம்பிக்கை பளிச்சிடச் சொல்கிறார் கேப்டன் வர்திகா. பெண்களால் முடியாததும் உண்டோ!